- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -மானுட சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் தகவமைப்பும் தற்காப்பும் அடிப்படையான கூறுகளாகும். உயிரிகளின் உடலில் இயற்கையாக கட்டமைந்துள்ள தற்காப்புக் கூறுகளுள் நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் இன்றியமையானதாகும். இது மரபு மற்றும் தகவமைப்பு நிலையோடு நெருங்கிய தொடர்புடையது. தொடக்கத்தில் வீரியத்துடனும் வயது ஏற வீரியம் குறைந்தும் வரும் தன்மையுடைய நோய் எதிர்ப்பாற்றல் பல்வேறு கிருமிகளிலிருந்து உயிரை பாதுகாக்கும் தன்மைக் கொண்டதாகும். கொடிய கொரோனா கிருமி உலகை உலுக்கி நிற்கும் இன்றைய நிலையில் தற்காப்பின், நோய் எதிர்ப்பாற்றலின் இன்றியமையாமையை உலகம் உணரத் தொடங்கியுள்ளது குறிப்பிடத் தகுந்ததாகும்.

உடல் மூப்புறும்போது இயற்கையாக நலியும் உடல் எதிர்ப்பாற்றலின் தன்மையானது, இயற்கைக்கும் தகவமைப்பிற்கும் ஒவ்வாத சில, பல நடத்தைகளாலும் மனிதர்களுக்குக் குறையநேர்கின்றது. எனவே உணவு மற்றும் ஆரோக்கியமான நடத்தைக் கூறுகளே இந்தக் காப்பு அமைப்பிற்கு அடிப்படையாக விளங்குகின்றன. உடல்நலம் பேணும் இந்தக் கூறின் அவசியத்தை சான்றுரைத்து வருகின்றது "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" எனும் திரு மூலரின் வாக்கு. மனித சமூகம் கற்ற இயற்கை படிப்பினைகளில் பெரும்பான்மையானவைத் தற்காப்பு குறித்தவையே ஆகும். அக மற்றும் புற காரணிகளால் உடலின் சமச்சீர்மை குறையும் போதெல்லாம் உடல் உற்ற நோவினை போக்க இந்த எதிர்ப்பாற்றலின் வலுவூட்டம் தேவயானதாகும். தன்னைத்தானே வலுப்படுத்தும் ஆற்றலை உடலின் நோய் எதிர்பாற்றல் அமைப்பு பெற்றிருந்தாலும் அச் செயல்பாட்டிற்குத் துணைநல்க உருவானதுதான் மருத்துவம்.

'தமக்குத் தாமே மருத்துவர்' (பழமொழி நானூறு) என்பதைப் போல, உடலினைப் பேணிக்காக்க மானுட சமுதாயம் மரபார்ந்து சேகரித்து வைத்திருக்கும் வாழ்வில் மற்றும் மருத்துவக் கூறுகள் ஏராளம். அகிலத்தையே அச்சுறுத்தும் கொரொனாவின் தாக்கம் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் கணிசமாக குறைந்திருப்பதற்கும், குணமடைபவர்களின் எண்ணிக்கை பெருகி இருப்பதற்கும், நோய்எதிர்ப்பாற்றல் சார்ந்த, அதை மேம்படுத்துவதார்ந்த மரபார்ந்த நம் வாழ்க்கை வழக்காறுகளே காரணம் என்றால் அது மிகையல்ல. நீலகிரியில் வாழ்கின்ற படகர் இன மக்கள் தம் நிலத்திற்கும், உடல் தகவமைப்பிற்கும் ஏற்பக் கட்டமைத்த தற்காப்பு கூறுகள் அக மற்றும் புற நிலையில் இரு நிலைப்படும். அவை முறையே உடல் மற்றும் மனதோடு தொடர்புடையன. தற்காப்பு சார்ந்த இவர்களில் பெரும்பான்மையான வழக்காறுகள் உடலுக்கும் மனதிற்கும் தொடர்புடையதாக அமைந்துள்ளன.

ஆய்வு: படகர் இன மக்களின் தற்காப்பில் கண்ணேறு கழித்தல்

கண்ணேறு கழித்தல் -

கண்ணேறு பற்றிய நம்பிக்கை தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களிடையே வழக்கில் உள்ளது. நம் மீது படும் பொறாமை கலந்த பார்வையே கண்ணேறு எனப்படும். படகர்கள் இதை 'கண்ணு', 'கண்ணாலு', 'கண்ணாளு' என்று மூன்று பெயர்களில் அழைக்கின்றனர். இங்கு 'கண்ணு' என்ற படக மொழியில் கண்களைக் குறிக்கும் சொல் இச்செயலிற்கு ஆகுபெயராய் வருகின்றது. கண் + நாலு என்று பகுபடும் 'கண்ணாலு' என்ற சொல்லின் நிலைமொழியான 'நாலு' எனும் படகச்சொல்லிற்கு நிழல் என்று பொருள். நிழலைப்போல படர்ந்த கண்ணேறு என்று இப்பதம் பொருள் தருகின்றது. அதேபோல கண்+ஆளு என்று பிரிபடும் 'கண்ணாளு' எனும் சொல்லின் 'ஆளு' என்ற படகச் சொல்லிற்குப் பாழ் என்று பொருள். கண்ணேறால் உண்டான அழிவுநிலையை (பாழ்) இது உணர்த்துகின்றது.

படகர்களின் வாழ்வியல் அறத்தின்படி ஒன்றினை பொறாமைக் கண்ணோட்டத்தோடுப் பார்ப்பது பெரும் பாவமாக கருதப்படுகின்றது. "கறவ எம்மமெய கண்ணெத்தி நோடிதது பாப்ப" (பால் கறக்கும் எருமையைக் கண்ணெடுத்து பொறாமையோடு பார்ப்பது பாவம்), "பேத ஒலக பெரல தோறிதது பாப்ப" (விளைச்சல் நிறைந்துள்ள விளை நிலத்தினை நோக்கி பொறாமையுற்று விரல்களால் சுட்டியது பாவம்) போன்ற வாய்மொழி வழக்காறுகள் இதை உணர்த்தி நிற்கின்றன.

உணர்வுகளால் நிரம்பிய மனிதன் பொறாமைக் கலந்த பார்வையினை முற்றிலும் தவிர்ப்பது என்பது சற்று கடினமான செயலாகும். 'குழந்தைகளின் மீது படும், தாய் மற்றும் தந்தையின் கண்ணேறு மிகவும் பொல்லாதது' என்ற வழக்கொன்றும் படகர்களிடம் உண்டு. தங்கள் குழந்தையின் மீது உறும் பெற்றோர்களின் கண்ணேறினையே தவிர்க்கவியலாத நிலையில், பிறரின் மீது உறும் கண்ணேற்றினைத் தவிர்க்கும்நிலை கேள்விக்குரியதே. கண்ணேற்றினை உறுவதற்கு முன்பே காப்பிடுவது, உற்றபிறகு போக்குவது எனும் இருநிலைகளில் படகர்கள் கண்ணேற்றினைக் கையாளுகின்றனர்.

கண்ணேறும் பாதிப்பும்

எருமைகள் படகர்களின் முதன்மையான சொத்தாகும். அதன்மீது கண்ணேறு படும் நிலையில் அதன் பால்வரத்து குறையுமென்றும், விளை நிலங்களின் மீது கண்ணேறு படும் போது அதன் விளைச்சல் குறையுமென்றும், குழந்தைகளைத் தாக்கும்போது உறக்கமின்மை, ஓயாத அழுகை, செரிமான கோளாறு உள்ளிட்டவையும், சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்படும்போது பசியின்மை, உறக்கமின்மை, முகம் கருத்தல், உடல் சோர்வு மற்றும் சிறு உடல் உபாதைகளும் ஏற்படுமென்றும் படகர்கள் கண்ணேற்றிற்கான அறிகுறிகளை வரையறுத்துள்ளனர். குழந்தைகட்குக் கண்ணேறு தொடர்பாக பெருங்கவனம் கொள்கின்றனர். தற்காப்பை முதன்மைப் படுத்துகின்றனர்.

கண்ணேறும் காப்பும்

கண்ணேறு சார்ந்த முதல்கட்ட நடவடிக்கையாக அதற்கு காப்பிடுதல் திகழ்கின்றது. குழந்தைகளுக்குக் கண்ணேறு ஏற்படாவண்ணம் பெரும் காப்பாக அடுப்புக் கரியைத் திலகமாக இடுகின்றனர். குழந்தையைக் குளிப்பாட்டியவுடன் வெளியில் கொண்டு செல்வதற்கு முன்பு அடுப்புக் கரியினையோ, சாம்பலினையோ கண்ணேறுக்குக் காப்பாக இடுகின்றனர். சில மாதங்களுக்குப் பிறகு வசம்பினைக் கொண்டு காப்பிடுகின்றனர். வலது கரத்தில் 5 மற்றும் இடது கரத்தில் 4 என்ற முறையில் வசம்பின் மணிகளைக் கோர்த்துக் கரங்களில் கட்டும்போது குழந்தைக்குக் கண்ணேறு அண்டாது என நம்புகின்றனர். மேலும் முக்கியமானதாக இவர்கள் 'பாத்தி கிடு', 'பாத்தி சொப்பு' என்று அழைக்கின்ற 'அறுபதாம் தழை' குழந்தைகளுக்குப் பல்வேறு பிணிகள் மற்றும் கண்ணேறினைத் தவிர்க்கின்றது என்பதும் இவர்களின் நம்பிக்கைக்குரிய ஒன்றாகும். 'பாத்தி' என்ற படகச் சொல்லிற்குக் குழந்தை என்று பொருள். இம் மூலிகைச் செடியின் பெயரே இதன் இருப்பை உணர்த்துகின்றது.

கலவிக்குப் பிறகு இணையர்கள் குழந்தையைக் காண்டால் கண்ணேறு தோன்றும் என்று இவர்கள் நம்புகின்றனர். இரவில் கலவியில் இருந்தவர்கள் குறிப்பாக, புதுமண இணையர்கள் அதிகாலையில் எழுந்ததும் தாய்ப்பால் குடிக்கும் நிலையில் உள்ள குழந்தையைப் பார்ப்பதால் தோன்றும் கண்ணேறு பெரும் விளைவை உண்டாக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். எனவே இதை முற்றிலும் தவிர்க்கின்றனர். இது ஒருவகையில் தொற்றிலிருந்து குழந்தையைக் காக்கும் வழிமுறையாகவும் திகழ்கின்றது.

குழந்தைக்குப் பாலூட்டும் தாய்மார்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க நேரினும் அப்பார்வை கண்ணேறினை உண்டாகும் திறன் கொண்டது என்பதும், அதன் விளைவாக குழந்தைக்குத் தீராத வயிற்றுப்போக்குத் தோன்றும் என்பதும் படகர்களின் நம்பிக்கையாகும். ஒருவேளை பாலூட்டும் தாய்மார்கள் சந்திக்க நேர்கையில் சந்திக்கச் சென்றவர் தான் அணிந்திருக்கும் முண்டு எனும் மேற்போர்வையின் முனைப் பகுதியைத் தன் ஆட்காட்டி விரலில் சுற்றிக்கொள்வதன் மூலம் இவ்வகைக் கண்ணேறினைத் தவிர்க்கலாம் என்று இவர்கள் நம்புகின்றனர். இது ஒரு வகையில் கண்ணேறிற்கான கவனத்தினை மடைமாற்றம் செய்யும் செயல்பாடாகவும் திகழ்கின்றது.

குழந்தைக்கு உணவு ஊட்டிய பிறகு உணவு உண்ட வகையில் ஏற்பட்ட கண்ணேறினைப் போக்க,

"காடு கொய் (காட்டுக்கோழி)
கல்லரங்க (உண்ட கனமான உணவு செரிக்கட்டும்)
ஊட்டுக் கொய் (வீட்டுக்கோழி அல்லது தாய்க்கோழி)
மேசெரங்க (உண்ட உணவு செரிக்கட்டும்)
தம்மன (ஆண் குழந்தையாக இருந்தால் - 'தம்மா' என்றால் ஆண் குழந்தை )
அம்மெய (பெண் குழந்தையாக இருந்தால் - 'அம்மெ' என்றால் பெண் குழந்தை)
ஓட்டெய (வயிற்றின்)
கூ அரங்க (உணவு செரிக்கட்டும்)"


என்று உண்ட உணவு செரிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, மேலதை சொல்லிக் கொண்டே வலது கையினால் குழந்தையின் வயிற்றைத் தொட்டு தரையைத் தொடுவதுமாக மூன்று முறை செய்கின்றனர். உண்ட உணவு செரித்து எஞ்சுபவை கழிவாக கழியட்டும் என்ற குறியீட்டு நிலையினையும் இவ்வழக்கு காட்டுகின்றது.

விளைநிலத்தில் விதைப்பு முடிந்ததும் நிலத்தின்மீது கண்ணேறுபடாது இருக்க அதன் நடுவில் பச்சை செடியை நடுகின்றனர். குறிப்பாக 'பூசுண்டெ' எனும் செடியினையே பெரும்பான்மையாக நடுகின்றனர். நீலகிரியில் இருக்கின்ற பெரும்பான்மையான தாவரங்கள் மூலிகை தன்மைக் கொண்டவை. இந்தப் 'பூசுண்டெ' என்ற தாவரம் மட்டும் இவர்களின் எவ்விதமான மருத்துவச் செயலிலும் பயன்படுவதில்லை. "சுண்டெ" எனும் படகச் சொல்லிற்கு பயனற்றது என்று பொருளாகும்.

கண்ணேறு கழித்தல்

ஏற்பட்ட கண்ணேறினைக் கழிப்பதற்காக அதனோடு எதிர்வினையாற்றும் தன்மைகொண்ட கூறுகளைப் படகர்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக நெருப்பு, முட்கள், நெருப்புடன் வினைபுரிந்து ஒலி உண்டாக்கும் பொருட்கள் போன்றவை. ஆநிரைகளுக்குக் கண்ணேறு ஏற்பட்டு அதன் பால் வரத்து குறையும் நிலையில் 'துரசெ முள்ளு' என்கிற ஒருவகையான முட்செடியினைக் கொண்டு மாட்டின் மடியில் லேசாக மூன்று முறை அடிக்கின்றனர். முள்பட்டு கண்ணேறு கழியும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்கின்

தும்பை மலரினையும் அல்லது 'திருஷ்டிகிடு' என்ற செடியினையும் பறித்து, பால்கறக்கும் பாத்திரத்தில் இட்டு அதன் மீது பால் கறக்கின்றனர். சுத்தத்தின் குறியீடாக அவர்கள் கொள்ளும், பாலின் வெண்மை நிறத்தை ஒத்த இந்தத் தாவரங்களைப் பால் கறக்கும் பாத்திரத்தில் இடும்போது அது பால் பாத்திரத்தின் உள்ளே செல்வதை போல கண்ணேறு கழிந்து பால்பெருகும் என்ற, குறியீடு மற்றும் வளமை சார்ந்து இவ்வழக்கை மேற்கொள்கின்றனர். மேலும் அவர்கள் தூய்மையின் குறியீடாக கொள்ளும் 'மீனிங்கெ எலெ', 'தூடெ எலெ', 'நேரி சொப்பு' போன்ற செடி மற்றும் இலைகளைக் கொண்டும் ஆநிரைகளின் கண்ணேறினைக் கழிக்கின்றனர். மேற்கண்ட தாவரங்கள் அனைத்துமே மூலிகைத்தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

நெருப்பும் கண்ணேறு கழித்தலும்

கண்ணேறு கழிப்பதற்கான படகர்களின் மரபார்ந்த கூறாக நெருப்பு திகழ்கின்றது. நெருப்புடன் இடைவினைப் புரியும் சில பொருட்களை எரியும் நெருப்பில் இட்டு கண்ணேறு கழிப்பதே படகர்களின் பெரும்பான்மையான வழக்காகும். கண்ணேறு கழிக்க நெருப்பில் இடும் இடுபொருட்கள் காலமாற்றத்தில் மாறியுள்ளதே தவிர இச்செயல்முறை மரபார்ந்து தொடர்ந்து வருகின்றது. திடீரென்று பால்வரத்து குறைந்த கால்நடைகளுக்கு 'ஆலு சொரவகிடு' என்ற மூலிகைச் செடியினையும், ஐந்து வறமிளகாய்களையும் சேர்த்து இடது கையில் எடுத்துக்கொண்டு பாதிப்புற்ற ஆநிரையின் தலைமுதல் வால்வரை மூன்று முறை சுற்றி, எரியும் நெருப்பில் இடுகின்றனர். இதே நிலையில் மனிதர்களுக்கு மண், கடுகு, உப்பு, வறமிளகாய், துடைப்பத்தின் நார் ஆகியவற்றை இம்முறையில் கூட்டுப்பொருளாக சேர்க்கின்றனர்.

வாரத்தின் தொடர்ச் செயல்பாடாகவோ அல்லது ஏதேனும் ஒரு நாளிலோ, பாதிப்பின் தன்மையைப் பொறுத்து இம்முறையை மேற்கொள்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகள் கண்ணேறு கழிப்பதற்கான உகந்த நாட்களாக படகர்கள் வரையறுத்துள்ளனர். வீட்டின் மூத்த பெண்ணோ, ஆணோ இதனை மேற்கொள்வார். பொதுவாக பெண்களே அதிகமாக இதனை மேற்கொள்கின்றனர்.

சமையலறையில் பாதிக்கப்பட்டவர் உட்பட அனைவரையும் அமர வைத்து, வீட்டின் முற்றத்திலிருந்து எடுக்கப்பட்ட சிறிதளவு மண், கடுகு, உப்பு, துடைப்ப நார் மற்றும் ஐந்து வறமிளகாய்கள் ஆகியவற்றை சேர்த்து தன் வலது கரத்தில் எடுத்துக்கொண்டு கொண்டு, அக்கரத்தால் முதலில் அமர்ந்திருப்பவர்களின் தலை, இடுப்பு, தரை ஆகியவற்றை மூன்று முறை தொட்டு, வலதிலிருந்து இடதுபுறமாக

அட்டிக் கண்ணு (ஊரரின் கண்ணேறு)

காடு கண்ணு (காட்டில் உள்ளவர்களின் கண்ணேறு மற்றும் 'காடு' என்பதற்கு படக மொழியில் தூரம் என்ற பொருள் ஒன்றும் உண்டு. அதன்படி தூரத்து உறவினரின் கண்ணேறு என்றும் பொருள் கொள்ளலாம்)

சீமெ கண்ணு ('சீமெ' என்பது படர்களின் வாழ்களத்தின் பெரும் பிரிவாகும்)

ஒலித்திக் கண்ணு ('ஒல' என்றால் தூரம் என்று பொருள். ஒலித்தி என்றால் தூரத்திலிருந்து வந்த பிறத்தியாள் என்று பொருள்)

பொட்டலி (ஒலியுடன் வெந்து எரியட்டும்)

குறுமத்திக் கண்ணு பொட்டலி (குறும்பர் இனப் பெண்ணின் கண்ணேறு)

காடு, நாடுன இப்பவக்கர கண்ணு (காட்டிலும், நாட்டிலும் இருப்பவர்களின் கண்ணேறு)

கடுகு பொட்டிதங்கே பொட்டலி (நெருப்பில் இட்ட கடுகு வெடித்து தெறிப்பது போல வெடித்து தெறிக்கட்டும்)

ஊராரமன கண்ணு உப்பு சிடிகிதங்கெ சிடிகிலி (ஊராரின், அண்டை அயலாரின் கண்ணேறு நெருப்பில் இட்ட உப்பு ஒலியுடன் எரிந்து கரைவதைப்போல கரையட்டும்)

மனெயமன கண்ணு மாசு பொட்டிதங்கெ பொட்டலி (வீட்டாரின் கண்ணேறு நெருப்பிலிட்ட வறமிளகு வெடித்து எரிவதைப் போல எரியட்டும்)

அவ்வெ அப்பன கண்ணு அத்தலாட்ட மிடிக ஓகலி (தாய் தந்தையின் கண்ணேறு அப்பக்கத்து பின்னங்காலிற்குச் சென்று முடியட்டும்)

ஹெத்தெ அய்யன கண்ணு இத்தலாட்ட மிடிக ஓகலி (பாட்டி, தாத்தாவின் கண்ணேறு இப்பக்கத்து பின்னங்காலுக்குச் சென்று சேர்ந்து முடியட்டும்)

என்று சொல்லியபடியே அடுப்பில் எரியும் நெருப்பில் இடுகின்றார். அப்போது அவருக்கு அருகில் அனைவரும் எழுந்து நிற்க ஒவ்வொருவருக்கும், அடுப்பில் இட்ட அப்பொருட்கள் முழுவதும் எரிந்து முடிந்தப்பின் அடுப்பிலிருந்து கரியினை எடுத்து திலகமிடுகின்றார்.

அடுப்பிலிருந்து எழும் கடுகு மற்றும் வற மிளகின் நெடியின் தன்மையைப் பொறுத்து கண்ணேறு கழிந்ததை கணிக்கின்றனர். ஒருவேளை கடுகு மற்றும் வற மிளகின் நெடி எழாமல் இருந்தால் கண்ணேறு கழியவில்லை என்று கொள்கின்றனர். அந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று ஏழு வறமிளகாயுடனும், வெள்ளிக்கிழமை அன்று ஒன்பது வற மிளகாயுடனும் இம் முறையின்படி தொடர்ந்து கண்ணேறு கழிக்கின்றனர். குறைந்தது வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக இம்முறையை மேற்கொள்கின்றனர்.

இம்முறையினை மேற்கொண்டப் பிறகு வீட்டிலிருந்து வெளியேறக் கூடாது. கை, கால்களைக் கழுவக்கூடாது. குறிப்பாக கண்ணேறு கழித்தவர் இம்முறையினை மேற்கொண்டப் பின் எதையும் உண்ணக்கூடாது, ஏன் நீர் கூட பருகக்கூடாது போன்ற சில கட்டுப்பாடுகளையும் இம்முறையில் பின்பற்றுகின்றனர். எனவே அனைவரும் உணவு உண்ட பிறகே இதனை மேற்கொள்கின்றனர். மேலும் இதில் சொல்லப்படுகின்ற கண்ணேறு கழிக்கும் சொற்களைப் பிறழ்வின்றி கவனமுடன் சொல்ல வேண்டும் என்ற விதியினையும் கடைப்பிடிக்கின்றனர். சிலர் இதை வெளியில் சொன்னால் பலிக்காது என்று அதை மனதிற்குள் சொல்லும் கட்டுப்பாட்டுடனும் திகழ்கின்றனர்.

வறமிளகாய் மற்றும் உப்பு ஆகியவை நீலகிரி மாவட்டத்திற்குச் சமவெளியிலிருந்து வந்த பொருட்கள் ஆகும். வேற்று நிலத்திலிருந்து நீலகிரிக்கு வந்த முதல் பண்டமாற்று பொருட்கள் இவைகளாகும். அதிலும் குறிப்பாக உப்பே நீலகிரியின் முதல் பண்டமாற்று பொருளாகும். இவை வருவதற்கு முன்னர் கடுகினைக் கொண்டு இக் கண்ணேறு கழித்தல் முறை மேற்கொள்ளப்பட்டது. நெருப்பு மற்றும் நெருப்புடன் இடைவினைப் புரியும் பொருட்கள், அப்பொருளின் இடைவினைத் தன்மையைக் குறிக்கும் குறியீட்டுச் சொற்கள் போன்ற பல கூறுகளை உள்ளடக்கிய இம்முறை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்க்கும், வலுப்படுத்தும் சிறந்த தற்காப்பு மற்றும் மருத்துவச் செயல்பாடாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நெருப்பில் இடப்படும் கடுகு, மிளகு, உப்பு, துடைப்பமாக பயன்படுத்தும் கடுகுச்செடியின் நார் போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவையாகும். கடுகுச் செடியினைக் கோட்டைக்குப் பாதுகாப்பாக கோட்டைக் கதவில் இட்டதையும் (பதிற்றுப்பத்து), விழுப்புண் பெற்ற வீரர்களின் இல்லத்தில் கடுகைப் புகைத்ததையும் (புறநானூறு) சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. கண்ணேறு கழிக்க இடப்பட்ட பொருட்கள் நெருப்போடு வினைபுரிந்து வெளிவரும் புகையை நுகர்வது எதிர்ப்பாற்றலை பெருக்கும் செயல்முறையாகும். மேலும் திலகமிட்டு நெற்றியின் புருவ மையம் தூண்டப்படுவதும், இதை மேற்கொண்டப்பிறகு வீட்டிலிருந்து வெளியேறாமல் உடலில் வெப்பநிலையைத் தக்கவைத்தலும், சுகாதாரம் பேணலும், இரவு விரைவில் உறங்குவதற்கான சூழலை கட்டமைத்தலும் போன்ற பல்வேறு மருத்துவ மற்றும் தற்காப்பு குணங்களை இம்முறை உள்ளடக்கியுள்ளது.

இதில் முற்றத்தின் மண்ணினைச் சேர்த்து இடுவது இம் மண்ணில் வாழும் அனைவரின் கண்ணேறும் நீங்க வேண்டும் என்பதின் குறியீடாகும். 'மண்', இடும் பொருட்கள் ஆவியாகி அடையும் 'விண்', எரிக்கும், எடுத்து செல்லும் 'காற்று', 'நெருப்பு', நெருப்பில் நீர்த்து கருகும் உப்பாக 'நீர்' என்று ஐம்பூதங்களுடனும் ஒருங்கு சேர்கின்றது இம்முறை. வெளியேறாமல் வீட்டில் இருக்கும் சுய கட்டுப்பாட்டின் கூறும் இவ்வழக்கில் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும். இன்றைய ஊராடங்கில் சொந்த ஊரினை வந்தடைந்த வெளி ஊர் மற்றும் நாடுகளில் பணியாற்றும் உறவுகள், உடல் தகவமைப்பு மற்றும் சூழலால் உற்ற சளி போன்ற சிறு உபாதைகள் கண்ணேறு கழித்தலின் மூலம் நீக்கி அவர்கள் நலமடைந்ததைப் பற்றி பல தகவலாளர்கள் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும். கண்ணேறு கழித்தல், நோய் எதிர்ப்பாற்றலைப் பெருக்குதல் உள்ளிட்ட செயல் பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் படகர்களின் இம்முறையானது சிறந்த இனவரைவியல் கூறாகவும் விளங்குகின்றது.

துணைநின்ற நூல்கள்

1. திருமூலர், திருமந்திரம்
2. புறநானூறு
3. பதிற்றுப்பத்து
4.கோ.சுனில்ஜோகி, நீலகிரி பெறங்காடு சீமை படகர் இன மக்களின் மூலிகை மருத்துவம், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2012
5. கோ.சுனில்ஜோகி, நீலகிரி படகரின மக்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்கு பொருட்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2015
6. ஆ.இரமகிருஷ்ணன், பொறங்காடு சீமை வழிபாட்டு மரபுகள், முனைவர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 1992
7. குப்பியம்மாள், ஒரசோலை, வயது 80, நேர்க்காணல்
8. இலட்சுமியம்மாள், தாந்தநாடு, வயது 75, நேர்க்காணல்

*   - முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R