வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. நாவல் 'கலிங்'கை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


2
தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்வீதிக்கு எதிர்ப்புறத்தில் தள்ளியிருந்த பழைய வீட்டு விறாந்தையில் கைவிளக்கு எரிந்துகொண்டு இருப்பதைக் கண்டாள் நிலா. கடந்த இரண்டு மூன்று நாட்களாக இல்லாதிருந்த சாமி திரும்பி வந்துவிட்டாரெனத் தெரிந்தது. ஏனோ சாமியை சிறிதுகாலப் பழக்கத்திலேயே அவளுக்குப் பிடித்துப்போய் இருந்தது. அவர் உண்மையில் சாமியல்ல என்பதிலிருந்து அந்தப் பிடிப்பு அவளில் விழுந்தது. அவர் பிரதானமாய் சொல்பவராய் அல்ல, கேட்பவராய் இருந்தது அவளை மிகவும் கவர்ந்தது. சிலமுறைகளெனினும் அவரோடு நிறையப்  பேசியிருக்கிறாள் அவள். அந்த முதல் சந்திப்பை அவளால் எப்போதும் பசுமையாக நினைவுகொள்ள முடியும். சிரித்த பழக்கத்தில் அவரோடு அவள் நிகழ்த்தியிருந்த அந்தச் சம்பாஷணையே அவரை அவளுக்கு போதுமானவளவு இனம் காட்டியிருந்தது. அதுவொரு சனிக்கிழமை மாலை. பொழுதுபடுகிற நேரம். வழக்கம்போல் வீதி அடங்கிவிட்டிருந்தது. நிலா தர்மினியிடம் சொல்லிக்கொண்டு சாமி வீடு சென்றிருந்தாள்.  அப்போது அவர் ஒரு தூர பயணத்துக்குப்போல் ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்.  கேட்டதற்கு, மறுநாள் காலை கொழும்பு போகவிருப்பதாகச் சொன்னார். அவள் ஆச்சரியமாக ஏனென வினவினாள். அதற்கு சாமி, ‘பென்சன் எடுக்கப் போறன்’ என்றார்.

‘என்ன பென்சன்? எதாவது கவர்ண்மென்ற் வேலை செய்தியளா?’ என்ற அவளது ஆச்சரியத்திற்கு தன் இடைக்காலக் கதையை பதிலாக்கினார் சாமி. ‘இதெல்லாம் நான் ஒருதருக்கும் சொல்லுறேல்ல. என்னை உமக்கும் தெரியவேணுமெல்லோ... அதால சொல்லுறன். அறுவத்திலயிருந்து எழுவத்தேழு மட்டும் சேர்வயர் டிப்பார்ட்மென்ரில உத்தியோகமாய் இருந்தன். நல்ல வேலை. நல்ல சம்பளம். கிழக்கிலயும் தெற்கிலயும் எங்கயும்… நான் வேலைசெய்தன். என்ர வேலையே உல்லாசப் பயணம் செய்யிற வேலைமாதிரி இருந்திது. அது ஒரு அருமையான காலம்!’

அவர் சொல்வதில் ஒரு நயம் கண்டாள் நிலா. சுருக்கமாக, கிராமீயன்போல் பேசினார். சில சொற்களுக்கு அவள் யோசித்தே பொருள் அறியவேண்டி இருந்தது. ஏதோ விசையில் இருந்தவர்போல், நிலாவின் நிலையைக் கவனமெடுக்காமலே சாமி சொல்லிக்கொண்டிருந்தார். அவருக்குள்ளும் ஒரு தரிசனம் இருந்திருக்க முடியும்.

அவ்வாறான நிலைமை அவருக்கு இலாகாவின் நிர்வாக இயக்குநராகப் பதவியுயர்வு கிடைத்ததோடு தலைகீழாய் மாறிப்போய்விடுகிறது. அவரது அமைச்சினாலும், நிலவளவைத் திணைக்களத்திற்கு நேரடித் தொடர்பில்லாத தேர்தல் திணைக்களத்தினாலும் அவருக்கு ஏற்பட்ட அழுத்தங்களால், உல்லாசப் பயணத்தில் பேர்ஸை தவறவிட்ட பரிதவிப்புக்கு அவர் ஆளாகிப் போனார்.

‘ஏன், சாமிஐயா, அப்பிடி வந்திது?’

நகர விருத்திகள் மலைப்புறத்திலும் வனப்புறத்திலும் உள்ள கிராமங்களை எவ்வாறு அழிக்கிறதென்றும், அப்போது அந்த வெறிதாகும் நிலப்பரப்பில் உண்டாகும் புதிய திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம் இனவாரியான புதிய தொகுதிகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதையும் விளக்கிய சாமி, ‘அதை ஒப்புகொள்ளவும் மறுக்கவுமான அதிகாரம் அப்ப என்னிட்ட இருந்திது. எனக்கு அரசியல் இல்லாட்டியும், நேர்மை சம்பந்தப்பட்ட விஷயமாய் இதை நான் பாத்தன். என்ர டிப்பார்ட்மென்ரே எனக்கு எதிரா நிண்டிது. எண்டாலும் என்னை உடனடியாய் ஒண்டுஞ்செய்ய அவையால முடியேல்ல. அந்த நேரம் பாத்து 77க் கலம்பகம் துவங்கிச்சிது. இனக்கலவரமொண்டு துவங்கிறதுக்கான சம்பவமேயில்லை அது. ஆனா சிங்கள இனவாதியள் அதை ஒரு இனக்கலவரமாய் மாத்தினாங்கள். நடந்தது என்னெண்டு தெரியுமோ உமக்கு? உமக்கெங்க தெரியப்போகுது? மிஞ்சி மிஞ்சிப் போனா எண்பதில பிறந்திருப்பிர்.’

‘நான் பிறந்தது எண்பத்தொண்டில, சாமிஐயா. எண்டாலும் நாப்பத்தேழிலயிருந்து, அதுக்கு முந்தியிலயிருந்தும் நடந்த அரசியல் விஷயங்கள், வரலாறுகள் எனக்குத் தெரியும். வாசிச்சிருக்கிறன்.’

‘நல்ல விஷயம். சரியாய் 1977 ஆவணி மாசம் பதினாறாம் தேதி, எனக்கு நல்ல ஞாபகம் அது. யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸில அண்டைக்கு விளையாட்டுப் போட்டி.  முந்தி கார்ணிவல் சமயத்துப் பழைய கறளுகளால பார்வையாளருக்கும் பொலிசுக்கும் தகராறொண்டு கிளம்பியிட்டுது. பிறகு அடுத்தடுத்த நாள் பொலிசுக்கு சூடும் விழுந்திருக்கு. இந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைத்தான் சிங்கள இனவாதியள் இலங்கை முழுக்க கலவரமாய் மூட்டிவிட்டாங்கள்.’

ரயிலிலும் பஸ்ஸிலும் லொறியிலுமாக கொழும்புத் தமிழ் சனமெல்லாம் பெட்டியளோடும், பெட்டிகள் இல்லாமல் உடுத்த துணியோடு மட்டுமாய் யாழ்ப்பாணம் ஓடிற்று. பலபேர் கொல்லப்பட்டார்கள். பலபேர் கைகால்கள் அடித்து முறிக்கப்பட்டார்கள். நிறைய பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். ஊரடங்கு உத்தரவு எழுப்பப்பட்டு நிலைமை கட்டுக்குள்ளாவதற்கு நாட்களாயின. ஊழிக்கூத்துப்போல எல்லாம் நடந்து முடிந்தது. அரசியல் வரலாற்றின் பக்கங்கள் சாமியின் மனத்தில் விரிந்துகொண்டிருந்தன.

‘இந்தக் கலவரச் சாக்கில என்னையும் போட்டுத்தள்ளுறதுக்கு ஆக்கள் வந்தாங்கள். எப்பிடியோ நல்ல ஒரு சிங்களத்தியால தப்பி கடைசியில நானும் யாழ்ப்பாணம் வந்து சேந்தன்.’

சாமியின் பதற்றத்திற்கு நிகராயிருந்தது நிலாவினது. ‘பிறகு…?’

அவரது விவரணைகளுக்குள் ஊடு இருந்தது. அதை அவள் கண்டுகொள்ளவில்லையென்பதை அவளது ஆர்வக் கேள்வி வேறொரு கோணத்திலிருந்து பிறந்ததைக்கொண்டு அறிந்தார் சாமி. இப்போது அவரால் விவரங்களுக்குள் சென்றுவிட முடியாது. ‘பிறகென்ன? திரும்ப நான் வேலைக்குப் போகேல்ல. இவங்களிட்ட இனியும் வேலைசெய்ய வேணுமோவெண்டு எனக்குச் சரியான வெறுப்பாப்போச்சு. கணக்குப் பாத்ததில பென்சன் எடுக்கிறதுக்கான என்ர அடிப்படைச் சேவைக் காலம் முடிஞ்சிருந்திது. என்ன நினைச்சனோ, அப்பிடியே றிசைய்ன் லெட்டர் அனுப்பியிட்டு நிண்டிட்டன். எழுதிப்போட்ட ரண்டாம் மாசம் பென்சன் காசு என்ர பாங்க் எக்கவுண்டுக்கு கூவிக்கொண்டு வந்திது. நான் உப்பிடியே துலைஞ்சாப் போதுமெண்டு நினைச்சிருப்பாங்கள்போல. அதை எடுக்க பாதை திறக்கிற காலத்தில கொழும்புக்குப் போய்வருவன். இப்ப ஏ9 திறந்திட்டுதெல்லோ, அதுதான் ஒருக்கா போய் வந்திடலாமெண்டு வெளிக்கிடுறன்.’

அவள் திகைத்துப்போனாள். அந்தளவு உயர்ந்த பதவியில் இருந்த ஒரு மனிதரின் கோலமும் இப்படி இருக்கமுடியுமா? என்ன இது? எப்படி நடந்தது? அந்த பென்சன் பணத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு சிறப்பாக அந்த ஒற்றை மனிதரால் வாழ்ந்துவிட முடியும்! அவள் அதை அவரிடமே கேட்டாள்.

அதற்கு சாமி, ‘காலம்… வினை… விதி… எப்பிடியும் வைச்சுக்கொள்ளும். இதுக்கு மேல என்னிட்ட விளக்கமில்லை’ என்றார்.
நிலா ஆச்சரியப்பட்டாள். காலத்தின் கையில் அப்படியே தன்னை ஒப்படைத்துவிட்டு நிர்விகற்பனாய் சாமி இருக்கிறாரெனில், அவர் பட்ட துன்பங்களும், துயரங்களும், மனவீறல்களும் எவ்வளவு கொடூரமானவையாய் இருந்திருக்கவேண்டும்?
துன்ப துயரங்களை அடையும் சாதாரணர்களும்  அவற்றிலிருந்து விடுபட ஒரு இடையறாப் போராட்டத்தை நடத்துகின்றனர். நழுவியோடும் வாழ்க்கையை வலிந்து பிடித்திழுத்து கொஞ்சமேனும் வாழ முயற்சிக்கிறார்கள். ஆனால் சாமி…?
அவளால் அடக்கமுடியவில்லை. தன் அபிப்பிராயத்தை அவள் சொன்னாள்.

‘இப்ப சொன்னது நான் வேலையை விட்ட கதையை மட்டும்தான். என்ர பூர்வீகக் கதையெண்டு ஒண்டிருக்கு. இதுகளுக்குப் பிறகு என்ர நல்ல இன சனத்தால வந்த சூழ்வினைக் கதையொண்டிருக்கு. இந்த எல்லாக் கதையளும்தான் இந்த நானை உருவாக்கிச்சுது’ என்றார்.

‘சொல்லுங்கோ, கேப்பம். நேரமிருக்குத்தான?’

‘அந்தக் காலத்தை திறந்து பாக்கவே விருப்பமில்லாமல் பூட்டி வைச்சிருக்கிறன், பிள்ளை. என்னோட சேந்து இந்தக் கதையளும் அழிஞ்சு போகவேணுமெண்டதுதான் என்ர விருப்பம். இதெல்லாம் ஃபார் மீ ஒன்லி ஃபார் மை லாஸ்ற் டேய்ஸ்.’

அவளுக்கு அவரின் நிலைமையை விளங்க அப்போது கஷ்ரமாய் இருக்கவில்லை. பிறகு கேட்டாள்: ‘அப்ப உங்களுக்கு சிங்களம்…?’

பன்னிரண்டு வயதிலிருந்து கொழும்பிலிருந்து கல்வி கற்ற அவருக்கு சிங்களவரைப்போல சிங்களம் தெரிந்திருந்தது. 1958 கலவர காலத்தில் தியத்தலாவ நிலஅளவை மற்றும் வரைபடவாக்க கல்வி நிறுவனத்தின் மாணவனாயிருந்த கே.பி.எம்.முதலி என்கிற சாமி, கலவரத்தால் பாதிக்கப்படாதது மட்டுமில்லை, அக்காலப் பகுதியில் ஒரு சிங்களவராகவே உணர்ந்ததோடு, தமிழுணர்ச்சியால் நாட்டின் அமைதி கெடுவதாக தமிழ்த் துவேஷத்தோடும் வாழ்ந்துகொண்டிருந்தார். அவர் ஊர் மறந்திருந்த கதை அங்கிருந்து தொடங்குகிறது. அவரே அதைப் புரியாமல்தான் இருந்திருந்தார். ஆனால் எழுபத்தேழின் கலம்பகம் அவரை தன்னிலை உணரச் செய்தது. அன்றிலிருந்து ஏறக்குறைய இருபத்தைந்து வருஷங்களாக அவர் எங்கெங்கும் வாழ்ந்திருக்கிறார். ஆனால் ஒரு சிறுபான்மையினத் தமிழனாயே உணர்ந்திருக்கிறார். கிடைக்கிற எந்த மொழிப் பத்திரிகையையும் தேடி வாசிக்கிற ஒரே சாதாரண மனிதராக அன்றளவும் அவர் இருக்கிறார். தென்னிலங்கை கொடுத்த செல்வமது. அந்த உணர்வோடேயே நிலாவின் கேள்விக்கு அவர் பதில் சொன்னார். ‘தெரியும்.’

‘இவ்வளவு படிச்சிருந்தாலும் நீங்கள் பேசுற பேச்சு பழைய கிராமப் புற பேச்சாய் இருக்கே, எப்பிடி, சாமிஐயா?’
‘இதென்ன கேள்வி, பிள்ளை? நான் இஞ்சத்திய ஆள்தான? கிராமத்தான்தான? இப்பிடிப் பேசாம நான் வேற எப்பிடிப் பேசேலும்?’
சாமி சிரித்தார். அவளும் சிரித்தாள்.

அவர் தன் காலத்தை உடம்பினில் பொதுக்கி வைத்திருக்கிறார். முப்பதுகளின், நாற்பதுகளின் கதைகளை அவர் சொல்கிறார். ஆயினும் ஆண்டுகள் அவரைத் தாங்குகின்றனவில்லை. அவர் அதிகம் பேசவும் முனைவதில்லை. பேச்செடுத்தாலும் விலகிப்போகும் மனிதராக இருந்தார். அவரே பேச விரும்பினால்தான் பேச்சு. இல்லையேல் மௌனம். தனிமையை அதனால்தான் அவர் வாலாயமாக்கியிருக்கிறார். அவரை அவள் ஆழ அறிய அந்த மௌனத்தை உடைத்தாகவேண்டும். முடியுமா அவளால்? காலம் இடமளிக்குமா? எப்போதும் எங்கேயும் ஓடிக்கொண்டிருக்கிற சாமி, இனி எப்போது அங்கிருந்து ஓடுவாரோ? ஒருநாள் நிரந்தரமாக இருள் பற்றிவிடப்போகும் யாரோவின் அந்த வீட்டின் ஒட்டுத் திண்ணை அவர் போய்விட்டாரென்பதைச் சொல்லப்போகிறது.

சாமியைப்பற்றி ஒருநாள் ரேவதியிடம் சொன்னாள் நிலா.

‘எப்பவும் அவரைப்பற்றியே பேசிறியே, நீயும் சாமியாகப் போறியா?’ என்றாள் அவள்.

‘சாமியோடயெண்டா சாமியாப் போவன். அது ஒரு பாக்கியமாயிருக்கும்.’

‘அப்ப… இயக்கம்?’

‘சண்டை இருக்கிறவரைதான இயக்கம்.’

‘சண்டை முடிஞ்சிடுமெண்டு நீ நினைக்கிறமாதிரி இருக்கு?’

‘சண்டையை முடிக்கத்தான இந்த யுத்த நிறுத்தம்… சமாதானப் பேச்சுவார்த்தை... எல்லாம். சண்டை முடியாதெண்டா பின்னை எதுக்கு இதுகள்?’

‘அப்ப… சண்டை முடிஞ்சிடும்?’

‘சண்டை முடிஞ்சிடவேணுமெண்டதுதான் என்ர விருப்பம். ஆனா இயக்கமும், அரசாங்கமும் என்ன முடிவெடுக்குமெண்டு எனக்குத் தெரியாதப்பா.’

‘இப்ப கனபேர் வன்னியில கலியாணம்செய்ய ஆரம்பிச்சிட்டினம். உனக்கும் அந்தமாதிரி வாழ ஆசை வந்திட்டுதெண்டு சொல்லு.’
‘வாழ ஆசையில்லாட்டி நான் போராடவே வந்திருக்கமாட்டன், ரேவதி. வாழுறதுக்காகத்தான் இந்தப் போராட்டம்.’
ரேவதிக்கு அதற்குமேல் பேச இல்லை.

விடுமுறை எடுத்திருந்த நாளில் நிலா காலையிலேயே வீட்டுக்குப் புறப்பட்டிருந்தாள். யாழ்ப்பாணம் போய் அங்கிருந்து நாவற்குழிக்கு மினிபஸ் எடுக்கவேண்டும். நாவற்குழிச் சந்தியிலிருந்து மறவன்புலவு நடந்துபோகிற தூரத்திலதான் இருந்தது.
அது பங்குனி மாதத் துவக்கம். உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்துகொண்டிருந்தது. அவள் வீட்டை அடைந்தபோது நட்டநடு மத்தியானம்.

மாமாவும், கஜந்தனும் வீட்டில் இருந்திருந்தார்கள். அக்கா வேலைக்குப் போயிருந்தாள். அன்று சனிக்கிழமையா என்று திடீரென எண்ணமொன்று ஓடியது அவளில். அன்று வியாழக்கிழமையாக இருந்து அவளது இறுக்கத்தைத் தளர்த்தியது.
மாமா அதிசயமாய் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் இங்கிலாந்து சென்றபோது அவள் உடும்பு பிடிக்கிற… தவழ்கிற... குழந்தையாக இருந்திருப்பாள்.

கஜந்தன் கறுப்பாக இருந்தான். மினுங்குகிற ஒரு கறுப்பு. கட்டையாகவும், குண்டாகவும் இருந்தான். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவனும் அவ்வாறு இருக்க முடியுமோவென நிலா வேடிக்கையாக நினைத்தாள்.

‘ஹாய்…!’ என்று சிரித்தான் அவளைக் கண்டதும். பளீரென்றிருந்தன அவன் பற்கள். அப்போது அழகாகவும் தோன்றினான். அவளுக்கு கைகுலுக்க வேண்டுமோவென ஒரு எண்ணமெழுந்தது. அவன் முனையாததில் அவள் சிரித்து அந்த அறிமுகத்தை ஏற்றாள்.

மாலையில் வித்தியா வந்தாள். அக்கா கொஞ்சம் தெளிந்திருப்பதாய்ப் பட்டது. அவளோடு நிறைய பேச நிலாவுக்கு இருந்தது.
இரவு கூடத்துள்ளேயே படுப்பதாகச் சொன்னாள் நிலா.

படுத்திருந்தபோது, மாமாவும் கஜந்தனும் இருந்த அறையிலிருந்து உரையாடல் கேட்டது. கஜந்தனும், மாமாவும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாய்ப் பேசினார்கள். அன்று மாலை வெளியே போய் வந்திருந்ததுபற்றியதாக அது இருந்தது.
‘சண்டை இல்லாட்டியும் ஒரு ரென்ஷன் ஆக்களிட்ட இருக்கிறமாதிரி இருக்கு, அப்பா. இது ஒரு… ஒருமாதிரி… எப்பிடிச் சொல்றது… ஒரு அப்சேர்டாய் இருக்கு பாக்க எனக்கு.’

அதற்கு மாமா சொன்னார்: ‘இது முடிவான யுத்த நிறுத்தமில்லை, கஜன். நீ யுத்தத்தை சினிமாவில பாத்திருப்பாய். அதால யுத்தம் எப்பிடி நடக்குமெண்டு உனக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனா அதுகின்ர வலி, அவலம் உனக்குத் தெரியா. இடப்பெயர்வு என்னெண்டு உனக்குத் தெரியும். பிபிசி நியூஸில பாத்திருப்பாய். ஆனா அதிலயிருக்கிற கஷ்ரம், துன்பம், அவதி, பயம் உனக்குத் தெரியா. இந்த யுத்த நிறுத்த காலத்திலயே சனம் இவ்வளவு ரென்ஷனாய் இருக்குமெண்டா, யுத்தம் நடந்த காலத்தில எப்பிடி இருந்திருக்குமெண்டத யோசிச்சுப் பார்.’

‘ஐ அன்டஸ்ராண்ட், அப்பா. சண்டை வந்திருக்காட்டி இன்னும் நல்லா இருக்குமென்டு படுகிது எனக்கு.’
‘அப்பிடியெல்லாம் சொல்லியிடேலாது. இனி பொறுக்க ஏலாதெண்டதாலதான் சண்டை துவங்கினது.’
‘அது தெரியும் எனக்கு. கூடக்கூட அழிவு. கூடக்கூட கஷ்ரம். அதனாலதான் சொல்லுறன்.’

‘இப்பிடியே இந்த பேச்சுவார்த்தையில ஒரு தீர்வை எட்டியிட்டா... எல்லாருக்கும் நல்லம், எல்லாருக்கும் சந்தோஷம்.’
‘தமிழாக்களுக்கு நல்லமென்டு சொல்லுங்கோ.’

‘சிங்கள ஆக்களுக்கும்தான் நல்லது. அவங்களிலயும் மரணம், வறுமை, துன்பம், துயரம் எல்லாம் இருக்குதுதான? இஞ்ச சண்டையில சாகிற ஆமிக்காறரை வீட்டை கொண்டுபோகேக்க அவங்கட குடும்பம் வீரமரணம் அடைஞ்சானெண்டு சந்தோஷப்படாது, கஜன். மரணம் எல்லாரையும் கதறவைக்கும், துடிக்க வைக்கும். சண்டைக் காலத்தில ஆமியை விட்டுட்டு எத்தினை ஆயிரம் பேர் ஓடி ஒழிஞ்சிருக்கிறாங்களெண்டு தெரியுமோ உனக்கு? அவையின்ர குடும்பத்தை யோசிச்சுப்பார். சண்டை முடியிறது எல்லாற்றை வாழ்க்கையையும் மாத்தியிடும்.’

‘ம்.’

கதவு திறந்திருந்த அறைக்குள் கிடந்து அவர்கள் பேசிக்கொண்டதெல்லாம் நிலா கேட்டாள். கஜந்தன் பேசிய தமிழ்தான் அவன் பேசிய ஆங்கிலத்தைவிட புரிய கஷ்டமாக அவளுக்கிருந்தது. மாமா போராட்டம் தொடங்கியதை ஞாயப்படுத்திய நேரத்தில், கஜந்தனுக்கு அது அவ்வளவு உவப்பில்லாததாய் தோன்றியிருந்ததை நிலா கண்டாள். லண்டனில் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த  அவனோடு தனியாக அதுபற்றி பேச அவளுக்கு ஆர்வமொன்று தோன்றிக்கொண்டு இருந்தது.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R