Percy Bysshe Shelley

கவிஞர் ஷெல்லியின் புகழ்பெற்ற கவிதைகளிலொன்று 'காதல் தத்துவம்' .இதனைத் தழுவி இதே பெயரில் இரு கவிஞர்கள் கவிதைளை எழுதியிருக்கின்றனர். ஒருவர் அ.ந.கந்தசாமி. இவரது கவிதை தேன்மொழி (1955) சஞ்சிகையில் வெளியானது. இன்னுமொரு தழுவல் கவிதையை எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகம் எழுதியிருக்கின்றார். அது ஈழநாட்டில் வெளியானது. மேலும் பலர் தழுவியோ அல்லது மொழிபெயர்த்தோ எழுதியிருக்கக்கூடும். இங்கு நான் இதே தலைப்பில் ஷெல்லியின் கவிதையை மொழிபெயர்த்திருக்கின்றேன். ஷெல்லியின் கவிதை மரபுக்கவிதை. ஆனால் அதனை அதன் கருத்தின் அடிப்படையில் தமிழாக்கம் செய்துள்ளேன். ஓரிரு மரபுக்கவிதையின் அம்சங்களிலிருந்தாலும் இது மரபுக்கவிதையல்ல.  அறிஞர் அ.ந.கந்தசாமி, எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகம் ஆகியோர் தழுவி மொழிபெயர்த்த கவிதைகளையும் கீழே தந்துள்ளேன். அவற்றில் ஷெல்லியின் கவிதையிலுள்ள ஆத்மீக வெளிப்பாடு இல்லாதிருப்பதை அவதானிக்கலாம். அவர்கள்தம் கொள்கைகளுக்கேற்ப அதனை அவர்கள் தவிர்த்திருக்கக்கூடும். அதன் காரணமாகவே அதனைத்தவிர்த்து முழுமையான மொழிபெயர்ப்பாக இல்லாமல் தழுவித் தம் கவிதைகளைப்படைத்திருக்க வேண்டும்.

காதல் தத்துவம்

- பேர்ஸி பிஷ் ஷெல்லி | தமிழில்: வ.ந.கிரிதரன்

ஊற்றுகள் ஆற்றுடன் கலந்துவிடும்.
ஆறுகளோ ஆழியில் கலந்துவிடும்.
சொர்க்கக் காற்று எப்போதும்
சேர்ந்தே கலந்து விடுமின் உணர்வுடனே.
இங்கு எவையும் தனித்தில்லை;
இறைவிதி வழியனைத்து மிங்கோர்
ஆன்மா ஆகியிணைந்தே கலந்துவிடும்..
அடியேனிலையே அவ்விதமுன்னுடன் ஏன்?

மலைகள் *உயர்சொர்க்கம் தழுவுதலைப் பார்!.
அலைகளும் தமக்குள்  தழுவி நிற்கும்.
மலர் எதற்கும் மன்னிப்பில்லையம்
மலர் மலரை இகழ்ந்து விடின்.
கதிரொளியும் ககனம் தழுவி நிற்கும்.
மதிகிரணங்க ளாழியை முத்தமிடும்.
நீயெனை முத்தமிடவில்லை யென்றால்
நிகழுமின் செயலனைத்தின் அர்த்தமென்ன?


* உயர் சொர்க்கம் என்னும் சொல்லைக் கவிஞர் வானுக்குப் பாவித்துள்ளார். வான் தழுவும் மலைகள். உயரத்திலுள்ள வானத்தைத்தழுவும் உயர்ந்த மலைகள். அதனை அவர் வானம் என்று பாவிக்காமல் உயர் சொர்க்கம் என்று பாவித்துள்ளார்.  அதற்குக் காரணம் அவர் இக்கவிதையை உணர்வு ரீதியில், ஆன்மீக ரீதியில் &   உடல்ரீதியில் அணுகியிருக்கின்றார். அதனால்தான் நேரடியான தழுவுதல், உணர்வுகள் போன்ற சொற்களுடன் , அவ்வப்போது சொர்க்கக்காற்று, உயர் சொர்க்கம், இறைவிதிவழி, ஆன்மா என ஆன்மீகச் சொற்களையும் கலந்திருக்கின்றார் என்றெண்ணுகின்றேன். அதனாலேயே உயர்சொர்க்கமென்ற சொல்லையே நானும் பாவிக்க விரும்புகின்றேன். காதல் தத்துவம் என்னும் இக்கவிதையில் கவிஞர் ஷெல்லி காதலை  மூன்று தளங்களில் (உடல்ரீதியாகம் உணர்வுரீதியாக & ஆத்மார்த்தரீதியாக) அணுகியிருப்பதால் இதனை அணுகுவதற்கு ஆழமான அணுகுமுறை அவசியம்.

 


ஆங்கில  மூலக் கவிதை கீழே:

 Percy Bysshe Shelley

Love’s Philosophy

By Percy Bysshe Shelley


The fountains mingle with the river
And the rivers with the ocean,
The winds of heaven mix for ever
With a sweet emotion;
Nothing in the world is single;
All things by a law divine
In one spirit meet and mingle.
Why not I with thine?—

See the mountains kiss high heaven
And the waves clasp one another;
No sister-flower would be forgiven
If it disdained its brother;
And the sunlight clasps the earth
And the moonbeams kiss the sea:
What is all this sweet work worth
If thou kiss not me?


தழுவி எழுதப்பட்ட கவிதைகள்!

அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்)  தமிழாக்கம்.

கவீந்திரன் (அ.ந.கந்தசாமி) -

1. காதல் தத்துவம் - அ.ந.கந்தசாமி

சிற்றாறு பேராற்றிற் கலக்க வந்தச்
சீறுமொலிப் பேராறு கடலிற் சென்று
வற்றாத அதன் நீலப் பரப்பி னுள்ளே
வடிவழியும்.  உலகினிலே தனிமையாக
நிற்காது பொருளொன்றும். மேலேயுள்ள
நீள்விசும்பில் அலைகாற்றில் கந்தம் சேரும்.
சுற்றாடல் முற்றாயிச் சேதி தானே;
சுந்தரி, நீ மட்டுமென்ன விலக்கோ?  அன்றே.

வானகத்தை வளர்மலை தான் தழுவி நிற்கும்.
வாருதியின் அலைகளெலாம் தழுவி நிற்கும்.
தேனகப்பூ மெல்லிதழைச் சுவைத்து நிற்கும்
சிறைவண்டு. பூமிதனை முத்தமிட்டு
வானரசன் கதிர்நீண்டு மகிழும். இந்த
வளர்முத்த வகையெல்லாம் கண்டுமென்ன ,
கானகத்து மடமானே, நீயு மென்னைக்
கரங்கொண்டு அன்புடனே தழுவாவிட்டால்?


* ஆங்கிலக் கவி ஷெல்லியின் கருத்தினைத் தழுவியது. தேன்மொழி 4, 1955 மார்கழி.


 

எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகத்தின் தமிழாக்கம்:

குப்பிளான் ஐ. சண்முகம்

2. காதல் தத்துவம் - குப்பிளான் ஐ. சண்முகம்

ஊற்றின் சங்கமம் உத்தம நதியாம்;
நதியின் கலப்பு நந்திடும் கடலாம்;
காற்றின் அணைப்பு தண்ணிய சுகமாம்;
கவிதை உணர்வில் காவியப்பிறப்பாம்;
வாழ்வில் தனிமை உலகில் வேண்டாம்;
வாஞ்சை கலந்த உணர்வில் ஒன்றாய்
தனிமை தனிமை தவிப்பு எனக்கு
சார்வோம் அன்பே இணையாய் இன்று.

மலை  முகட்டைக் கொஞ்சும் மேகம்
அலை அணைந் தணைந்தே துள்ளும்;
மலர் அசைந்து மற்றதைப் புல்லி
மகிழ்ந்து சிரிக்கும் மன்பதை வாழ்வில்,
நிலத்தைச் சேரத் துடிக்கும் கதிர்கள்
நீந்திக் கடலுல் திளைக்கும் மதியும்;
விரைந்து வந்தே என்னை அணைத்தே
விரும்பித் தாராய் முத்தம் அன்பே!


* ஈழநாடு ( 18.7.70 ) வாரமலரில் வெளியானது.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R