வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் நான்கு

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்வரும் வழியெங்கும் அவர்களுக்குள் பேச்சு குறைந்திருந்தது. தன் விஷயம் தெரிந்த தங்கைக்கு, இடறிய கல்லே சிவலிங்கமாகியதுபோல் தன் அழிவிலிருந்தும் விரிந்துள்ள தன் எதிர்கால மனோரதங்ளை தெளிவாக எடுத்துக் கூறிவிட்டதில், வித்தியாவிடத்தில் விழுந்திருந்த திருப்தி அவளது உரையாடலுக்கான எழுச்சியை அமுக்கிவிட்டிருந்தது. நிலாவினது மனநிலை வேறொன்றாகவிருந்தது. அதுவரையிருந்த அக்காவாக இல்லாமல் வித்தியா ஒரு பிரமாண்டமான வடிவத்தை அவளுள் எடுத்திருந்தாள். அக்காவிடம் அப்போதுள்ள அந்த பொறுமை, நிதானம், தீர ஆலோசித்தலெல்லாம் அந்தவொரு சனிக்கிழமைச் சம்பவத்தின் பின்னால் உருவானவையென்பதை நினைக்க அவளுக்கு ஆச்சரியமாகவிருந்தது. அவ்வளவொரு சிதைப்பின் பின்னால் தன்னை அழித்துக்கொள்பவர்களாய், தன் சித்தத்தை கலங்க விடுபவர்களாகத்தான் அதிகமானவர்கள் இருந்திருக்கிறார்கள். வித்தியாவோ ஒரு புதிய அவதாரம் எடுத்திருந்தாள்.

வித்தியா முன்னர் எப்பொழுதும் அவ்வாறு இருந்தவளேயில்லை. அவள் அவசரக்காரியாக இருந்தாள். எப்போதும் சிடுசிடுவென்ற முசுறுக் குணமுள்ளவளாய் இருந்தாள். தன்னைத் தவிர பிறரெவரிலும் அவள் பற்றோ பாசமோ கொண்டிராதவளாயும், சுயநலமியாயும் இருந்தாள். நிலா அக்காவை ஒருமையிலும் பெயர்சொல்லியும் விளிப்பது சின்ன வயதுக் காலத்திலிருந்தே தொடங்கியிருந்தது. அவர்கள் எது காரணம் கொண்டாவது கைச் சண்டைகளில் ஈடுபட்டபோது, உயரமும் ஆகிருதியுமுள்ள வித்தியாவிடம் அடிபட்ட நிலா, அவளை போடீ… மூதேவி… குண்டுவள்ளி... என்றெல்லாம் திட்டுவாள். அதற்கும் வித்தியா அடிப்பாள். அவள் லேசுவில் அடங்குவதில்லை. அவர்கள் தகராறு பட்டபோதும் குசுகுசுவென்று அம்மாவுக்கோ அப்பாவுக்கோ கேட்காமல் சத்தமடக்கியே வாதிட்டார்கள், திட்டினார்கள், அடிபட்டார்கள். அப்பா அப்போதுதான் அவ்வளவு சாந்தம். வாத்தியார் வேலை செய்யும்போது தேவையாயிருந்த சாந்தம், ஓய்வெடுத்த பிறகுதான் வந்திருக்கிறதென்று அம்மா சிரித்துக்கொண்டே சொல்வாள். முன்பானால் அசுரன்மாதிரித்தான் அப்பா. அம்மாவும் அடிபட்டவள். முகம், மூக்கு என்று பார்க்காது கண்மூடித்தனமாக விளாசுவார். அந்தப் பயம் அவர்கள் எல்லோருக்குமே இருந்தது.

அந்த அக்காதான் தன்னில் விழுந்த ஓர் அவமானத்தை தனக்குள்ளான ஒரு சமரில் வென்றுகொண்டிருக்கிறாள். தன்மேல் புரியப்படவிருந்த பலாத்காரத்தையே ஒரு முன்னறிவிப்பில்லாத காமக் கூட்டமாய் அவள் மாற்றியது, தன்னைக் காத்தலின் உபாயமாகவே இருந்திருக்கிறது. பாலியல் வல்லுறவிலுள்ள சிதைப்பு, மானம் சார்ந்த பிரக்ஞையைவிட பலபேரிடத்தில் வலி சார்ந்ததுதான். ஶ்ரீமல்லுடனான வித்தியாவின் உறவிலுள்ள சில கூறுகள் நிலாவுக்கு ஒப்பில்லையெனினும், அவளது மனநிலையின் அந்தப் புத்துருவாக்கத்தில் பெருமையும் மகிழ்ச்சியுமே பட்டாள். அவ்வாறான நினைவுகளால் நிலாவிடத்திலும் பேச்சு அடங்கியிருந்தது.

அவர்கள் வீடு வந்தபோது வாசலிலே கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்பாவும், மாமாவும் வெளிக்கிட்டு விறாந்தையில் அமர்ந்திருந்தனர். கஜந்தன் அறைக்குள் வெளிக்கிட்டுகொண்டு இருந்தானென தெரிந்தது.

சமையலறை போனபோது அம்மா சொன்னாள், இன்னும் இரண்டு நாட்களில் மாமாவும் கஜந்தனும் கொழும்பு பயணமாகிறார்களென்று. ஒரு வாரம் நிற்பார்களென அவள் சொன்னாளே என்றதற்கு, கஜந்தனுக்கு மேலெல்லாம் வெகிர்ப் பருக்கள் போட்டு கஷ்ரப்படுகிறான், அதைவிட அம்மை, சின்னம்மையென்று வந்துவிடுமோவென்று அச்சமாயிருக்கிறான், அதனால் அந்த முடிவென்று அம்மா விளக்கினாள்.

மாமாவைப் பார்த்தாகிவிட்டது. கஜந்தனோடுதான் நிலாவுக்கு பேசவிருந்தது. இங்கிலாந்தில் அவன் வயதொத்த தமிழ்ப் பிள்ளைகள் இலங்கைப் போராட்டத்தைப்பற்றி என்ன நினைத்திருக்கிறார்களென அவனோடு நேரில் பேசி அறிய அவளுக்கு ஆவலிருந்தது. சன்னதி, மாவிட்டபுரமென்று போகிறவர்கள் மாலையில் திரும்பி வந்துவிடுவார்களென்று அறிந்ததில், தான் மறுநாள் மதியம் புறப்படுவதற்குள் அவனோடு பேச வாய்ப்பு வருமென நிலா எண்ணினாள்.

மூவரும் காரில் புறப்பட்டுச் சென்ற பின் வித்தியாவும் நிலாவும் காலையுணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த வேளையில் ஒரு பெண் திடீரென வாசலில் வந்து தோன்றினாள். அவலத்தின் ஓருருவமாய் இருந்தாள் அவள். எந்தநேரத்திலும் வாய்விட்டு அழுது புலம்பிவிடுவாள்போன்ற திமிறலொன்று அவளுள் இருக்கக் காணப்பட்டது.

கணபதிப்பிள்ளை மாஸ்ரர் நிக்கிறாரோ என்றபடி உள்ளே வந்தாள். அம்மாதான் முன்னே வந்து வெளியே போயிருப்பதாகச் சொல்லி, அவள் வந்த விஷயம் விசாரித்தாள். அவரோடு படிப்பித்த சுப்பிரமணியம் மாஸ்ரர் அனுப்பியதாகக் கூறியபடியே படியோடு விறாந்தையில் அமர்ந்தாள். “நிலத்ததில ஏன் இருக்கிறியள்? மேல கதிரையில வந்திருங்கோ” என்று அம்மா சொல்ல, முகத்தைப் பார்த்துப் பேச அதுதான் வசதியென்றுவிட்டு அந்தப்படியே இருந்தாள்.

மிகுந்த ஏழையாக இருப்பாளென்று தெரிந்தது. பலஹீனத்தைவிட பல வழிகளிலும் பட்ட அலைச்சல்களின் களைப்பே அவளில் அதிகமும் காணப்பட்டது. உயிர்க்கொடி அறுந்ததுபோல் ஒரு தவிப்புடனும் இருந்திருந்தாள். வியர்த்து வழியும் முகத்தை சேலைத் தலைப்பால் துடைத்தபடி, களைப்பின் எந்தச் சுதாரிப்புமின்றி தன் அவலத்தை எடுத்துரைத்தாள்.

நிலா கேட்டிருக்கிறாள் அதுபோன்ற நூற்றுக் கணக்கான தாயரின் அவலக் கதைகளை. அவைபோல் ஒன்றான அவலமாயினும் இது வேறொரு வகை. குலக்கொடி இழந்த தவிப்பு அவள் பிரலாபத்தில் இடைவெளியற நிறைந்திருந்தது. அவளது கதை இப்படியாக இருந்தது:

விவசாயம் செய்கிற குடும்பம் அது. எண்பத்தேழாம் ஆண்டு இலங்கை ராணுவத்தின் படையெடுப்பில் அவள் கணவனை இழந்தாள். எண்பத்தெட்டாம் ஆண்டு இந்தியன் ஆமிக் காலத்தில் மூத்த மகனை அவள் கண் முன்னாலேயே குடிசையிலிருந்து வெளியே இழுத்துப்போட்டு சுட்டுக் கொன்றார்கள். இரண்டாம் மகன் உடலாகவும் அவளுக்குக் கிடைக்கவில்லை. கூட்டுச் சிதையில் எரிக்கப்பட்டான். தொண்ணூற்றைந்தின் இலங்கை ராணுவ வலிகாமம் யுத்தத்தில் அது நடந்தது. பொலிகண்டியைச் சுற்றி வளைத்த ராணுவம் இளைஞர்கள், நடுத்தர வயது ஆண்களென அறுபதுக்கும் மேலானவர்களை நூல்நிலையமொன்றினுள் அடைத்துவைத்து வெடிகுண்டு வீசித் தகர்த்துக் கொன்றது. அவளுக்கென்று மிஞ்சியிருந்தது அவளது மூன்றாம் மகன் மட்டுமே. அவனையும் சென்ற வருஷம் இயக்கத்துக்கு பிடித்துப்போய் விட்டார்கள். பள்ளிக்கூடம் சென்றவன் பொழுதுபடுகிற நேரமாகியும் வீடு திரும்பவில்லையென்று தேடி பள்ளிக்குப் போனாள். விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள் சிலர் அவனது வகுப்பில் போய்ப் பார்த்து, அவனது புத்தகங்கள் மட்டும் மேசைமேல் இருக்கக் கண்டு எடுத்துவந்து கொடுத்தார்கள்.  மகனைக் காணவில்லையென்று யார் யாரிடமோ ஓடினாள். எங்கெங்கோ விசாரித்தாள். கடைசியாக ஏ9 பாதை திறந்ததும் கிளிநொச்சிக்குப் போனாள். செல்வராசா சிறீதரன் என்ற பெயரில் யாருமே அங்கில்லையென்று கூறிவிட்டார்கள். அப்படியானால் அவர்கள் பிடித்துவந்த தனது மகன் எங்கேயென்று அங்கேயே தலைவிரி கோலத்தில் நின்று ஆர்ப்பரித்தாள். நாலு பெண் போராளிகள் வந்து அவளை அமைதிப்படுத்தி வெளியே அனுப்பினார்கள். சுப்பிரமணிய மாஸ்ரரின் வீட்டுக்குக் கிட்டேதான் அவளது குடிசை இருந்தது. அவர்தான் தனது சிநேகிதரின் மகள் இயக்கத்திலிருந்து விடுமுறைக்கு வீடு வந்திருக்கிறாள், அவளிடம் விசாரித்தால் தகவலேதும் கிடைக்குமென்று அவளை அங்கே அனுப்பிவைத்திருக்கிறார். சொல்லி முடிய, “இதில இயக்கத்திலயிருக்கிற பிள்ளை ஆர்?” என்றாள்.

நிலா தான்தான் எனச் சொல்ல, “என்ர பிள்ளைக்கு பதினாறுகூட வடிவாய் முடியேல்ல இயக்கம் பிடிச்சுக்கொண்டு போகேக்க. நீர் ஒண்டும் செய்யவேண்டாம். இயக்கத்தில இல்லையெண்டு சொல்லுகினம். அவனை என்னெண்டு நான் கண்டுபிடிக்கிறதெண்ட வழியைமட்டும் சொல்லும், எந்தப்பாடு பட்டெண்டாலும் நான் என்ர பிள்ளையை மீட்டிடுவன்” என்று துடித்தாள்.மண்ணும், மக்களும், மொழியுமான போராட்டத்தின் மூலங்களெல்லாம் சிதறிக்கொண்டிருந்தன அவள் பாசத்தில். அவளுக்கேன் அவை? அவளுக்கு அவளது மகன் போதும். ஒன்றன் பின் ஒன்றாக நடந்த வடக்கின் ஒவ்வொரு பாரிய ராணுவ நடவடிக்கையிலும் அவள் தன் குடும்ப அங்கத்தவர்களை ஒவ்வொன்றாய் இழந்திருக்கிறாள். பொலிகண்டியிலிருந்து அந்தளவு தூரத்தை அவள் கடந்து வந்தது அவளது மகனின் இருப்பை அறியமட்டுமே. கர்ப்பம் சுமந்து, கைம்பெண்ணாய் வளர்த்தெடுத்து, குலத்துக்கு ஒருவனாய் காபந்து செய்துவந்த அவளது கடைசி மகன் அவன். அவளுக்கு மட்டுமில்லை, அவளது குலத்துக்கே அவன் உயிர்க் கொடி. அவனைத்தான் எங்கேயென்று கண்டுபிடிக்க உபாயம்கேட்டு வந்திருக்கிறாள்.

நிலாவால் என்ன சொல்ல முடியும்?

ஆறுதல் சொல்லி அனுப்புகிற விவகாரமா இது?

ஆனாலும் வேறு வழியில்லை.

தன்னால் அதைக் கண்டுபிடித்துவிட முடியாதென்றும், இருந்தால் அவனது போட்டோவுடன்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தில் சென்று முறையிடும்படியும் சொல்லினாள். மேலும் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏழு பிரதேச யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகங்கள் இருப்பதாகவும், சமாதான பேச்சுவார்த்தைக் காலத்தில் போருக்கு ஆட்களைச் சேர்த்தல் ஆயுத கொள்வனவு போன்றவை யுத்த நிறுத்த மீறலாகவே கணிக்கப்படுமாதலால் அங்கேகூட முறைப்பாடு செய்யலாமெனவும் தெரிவித்தாள்.

“அவனை உயிரோட வைச்சிருங்கிறாங்களோ இல்லையோ எண்டதே எனக்கு தெரியாமக் கிடக்கே. அதை நான் முதலில அறியவேணும்.”

“ஏன் அப்பிடி நினைக்கிறியள்? இயக்கத்துக்கெண்டு போனா அங்கதான இருப்பார்.”

“அங்க இல்லையெண்டு செல்லுகினமே!”

“உங்கட மோனுக்கு வயசு குறைவாயிருந்து, உங்களுக்கும் விருப்பமில்லையெண்டா… திரும்ப உங்கட பிள்ளையை உங்களிட்டத் தருவினம். நீங்கள் கிளிநொச்சியில புலியளின்ர அலுவலகத்தில போய்ச் சொல்லுங்கோ.”

அந்தப் பெண் நிதானமாக அவளை நிமிர்ந்து பார்த்தாள். “அவ்வளவுதான் செய்யேலுமோ?”

“இயக்கத்தில இருந்தாலும் எல்லா விஷயத்தையும் நாங்கள் அறிஞ்சிடேலாது, அன்ரி…”

அவளுடைய கண்கள் சிவந்து வந்துகொண்டிருந்தன.

அப்படியே இருக்கையோடு நிலாவை வைத்துப் பின்னிய பார்வை அது.

பிறகு எழுந்தாள். “ம்…! அப்பிடியோ?” என்றாள். போய்வருவதாகக்கூட சொல்லாமல் நடந்தாள். கேற்றடியில் நின்று மறுபடி நிலாவை திரும்பிப் பார்த்தாள். “நல்லாய் இருக்கமாட்டுது உங்கட இயக்கம். சின்னன் பெரிசெண்டு பாக்காமல் எல்லாத்தையும் பொதுக்கிவைச்சு, கடைசியில எல்லாரையும் ஒருநாளைக்கு பலி குடுக்கப்போறியள், இருந்து பாருங்கோ. இஸ்ரேல் வரப்போகுது… பலியெடுப்பு துவங்கப் போகுது… பலி முடிஞ்சாத்தான் என்ர வயிறு குளிரும்.”

அவள் விறுவிறுவென போய்விட்டாள்.

அதிர்ந்தபடி நிலா, வித்தியா, செம்பவளம் மூவரும் விறாந்தையில் இருந்திருந்தனர்.

மாலையில் அப்பாவும் மாமாவும் வெளியே போயும், அம்மாவும் அக்காவும் கிணற்றடியில் நின்றுமிருந்த நேரத்தில் கஜந்தனோடு கதைக்க நிலாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அன்று அவர்கள் சென்றுவந்த இடங்களைப்பற்றிய விசாரிப்போடு அந்த உரையாடலைத் தொடங்கினாள் நிலா. தான் பிறந்த மண் அதுவில்லையென்றாலும், அந்த மண்ணில் மிதித்தபோது தானடைந்த பரவசத்தையும், உணர்வுக் கொந்தளிப்பையும் விஸ்தாரமாய்ச் சொன்னான் கஜந்தன். பிறகு, “சண்டை துவங்கிறதுக்கு முந்தி இந்த இடங்களையெல்லாம் நான் பாத்திருக்கவேணும் என்டு எனக்கு விருப்பம். அப்பதான் இந்த ஊரை நல்லாத் தெரியும்” என்றான்.

“நீ பிறந்ததே யுத்தம் துவங்கின பிறகுதான். அதால அதுகின்ர நிறைவான தோற்றத்தை உன்னால எப்பவும் பாத்திருக்கேலாது, கஜன். ஆனா, பிறந்திராட்டியும் உன்ர ஜீவ வேருள்ள மண்ணில காலடி வைச்சவுடன நீ அடைஞ்ச உணர்ச்சியைச் சொன்னியே, அது எனக்கு நல்லாய்ப் பிடிச்சிருந்திது.”

“சென்ரல் காலேஜ்சுக்குப் பின்னால மூன்டாம் நாலாம் குறுக்கு வீதியள்ல இடிஞ்சு கன வீடு கண்டன். காலேஜ்சுக்கு முன்னால எரிஞ்சுபோய் லைப்ரரி இன்னும் இருக்கு. யுத்தமெண்டது, இஞ்ச மட்டுமில்லய், எங்கயும்தான் வேண்டாமென்டு இருந்திது. லண்டன்ல கனபேர் இலங்கை யுத்தத்திற்கு ஆதரவாயிருக்கினம். அவைக்கு உண்மை என்னெண்டு தெரிய இல்லய்.”

“ஏன், தமிழீழம்தான் வேணுமெண்டு கேக்கினமோ?”

“அப்பிடித்தான்.”

“உனக்கு அந்தமாதிரி விருப்பமில்லையோ, கஜன்?”

“எனக்கு சண்டையே விருப்பமில்லை.”

“உன்னைமாதிரி லண்டன்ல கனக்கப்பேர் இருப்பினம்போல?”

“சண்டை வேன்டாமின்டு அங்க கொஞ்சம்தான் ஆக்கள்.”

“அந்தமாதிரி ஒரு சண்டை இல்லாம உரிமை கிடைச்சதா சரித்திரத்தில நான் கேள்விப்படேல்லை. உனக்குத் தெரிஞ்சா சொல்லன், கேக்கிறன்.”

“அதுக்கு முன்னுதாரணம் தேவையில்லய். நாங்களே ஒரு உதாரணமா வரவேணும். காலத்துக்கேத்த ஒரு யுத்தமுறையை துவங்கிறதில என்ன பிளை? சண்டையை அரசிலாய் செய்யவேணும். அது ஒரு பாஸிரிவான முடிவை கொண்டுவந்து தரும். அதால கனக்க அளிவு வராது.”

“எனக்கு சண்டையும் பிடிக்கும். சமாதானமும் பிடிக்கும், கஜன். இதுகின்ர அர்த்தம் என்னெண்டா, உரிமை கிடைக்காட்டி சண்டையும், உரிமை வாறதாயிருந்தா பேச்சுவார்த்தையும் பிடிக்குமெண்டதுதான்.”

“அதுதான் நான் சொல்லுறதும். இந்தளவு சின்ன ஒரு நாட்டில நீங்கள் அடைஞ்சது பெரிய உயிரிளப்பு. தெரியுமா உனக்கு? கிட்டடியிலதான் எங்கயோ பாத்தன், அறுபதாயிரம் பேர் இஞ்ச செத்திருக்கு மொத்தமா.”

“தெரியும், கஜன். எங்களில இந்த விதி கனகாலமாய் எழுதியிருக்கு. இதுக்கான மூலவேர் ஒண்டிருக்கு. அது அறவேணும். அப்ப பேச்சு வார்த்தையாலயும் நாங்கள் உரிமையைப் பெறலாம்.”

“எது அந்த மூலவேர்?”

“தெரியேல்லை. உடன்படிக்கை வருகுது, கிழிச்செறியினம். பிறகொரு உடன்படிக்கை வருகுது. அதையும் கிழிச்செறியினம். அப்ப… அதையெல்லாம் செய்விக்கிற ஒரு சக்தி இருக்கெண்டுதான அர்த்தம்? ஆனா அது என்னெண்டுதான் தெரியாம இருக்கு.”

“அதைக் கண்டுபிடிச்சு அளிக்க கனக்க காலமாகும். அதுக்கிடையில வாற மனித அளிவு எனக்கு பெரிய விஷயமாயிருக்கு.”

“எனக்கும்தான். ஆனா என்ன செய்யிறது? போராட்டத்தில எதிரிதான எங்கட ஆயுதத்தையும் தீர்மானிச்சான்? அஹிம்சைப் போராட்டமும் செய்து பாத்தமே. அதால முடியாட்டி, வேற எந்தப் போராட்டத்தாலதான் நாங்கள் உரிமையை எடுக்கிறது?”

கஜன் பேசாமலிருந்தான்.

கஜன்மூலம் இங்கிலாந்திலுள்ள அவனது தலைமுறையைச் சேர்ந்த ஒரு பகுதியினரின் எண்ணத்தை அறிந்தளவில் நிலாவிடத்தில் ஒரு திருப்தி வந்து விழுந்தது. கஜனுடைய அரசியல் அழிவின் பரிதாபத்திலிருந்து துவங்கியிருப்பதை அவள் கண்டாள். யுத்த அழிவுகளில் கலங்குபவன், யுத்தத்தில் இறந்த மாவீரர்களை அறிகையில் என்ன எண்ணுவானெனத் தெரிய அவளுக்கு ஆவல் வந்தது.

“கஜன், நீ போறதுக்குள்ள முடிஞ்சா மாவீரர் துயிலும் இல்லத்தை ஒருக்கா பாத்திட்டுப் போ. கன தூரமில்லை. இஞ்ச கொடிகாமத்தில ஒண்டு இருக்கு.”

“என்ன அது?”

“சண்டையில வீரமரணம் அடைஞ்ச போராளியள அடக்கம் செய்யிற இடம். வரிசை வரிசையாய் வெண் நடுகல்லுகள் நீள நீளத்துக்கு இருக்கும். அதில அந்தப் போராளியின்ர பேரும், பிறந்த இறந்த காலம் எல்லாம் இருக்கும். அது வெறும் கல்லறை மட்டுமில்லை, கஜன். அந்தந்த மாவீரர்களின் ஆவிகள் துயில் கொள்ளுகிற மாளிகையும். அவையெல்லாம் தங்கட லட்சியத்தின்ர விடியல் காண அங்க காத்திருக்குதுகள். ரண்டு நாளில கொழும்பு போறியா, பாத்திட்டுப் போ. இல்லாட்டி, இங்கிலாந்து போனாப்பிறகு ஆவியள் வந்து நித்திரையைக் குழப்புமெண்டு பாக்காமல் விட்டிடுவியோ?”

“இல்லய்… அப்பிடி எனக்கு பயமில்லய்.”

“அதைப் பாக்கேக்க என்ன நினைச்சாயெண்டு லண்டன் போனாப் பிறகு எனக்கு எழுது. என்ன, எழுதுவியா?”
சிறிதுநேரம் கஜன் யோசித்தான். பிறகு,

“போன் பண்ணுறன்” என்றான்.

“என்னிட்ட செல்போன் இல்லை.”

“அப்ப… எளுதுறன். இங்கிலிஷ்லதான் எழுதுவன்.”

“என்னத்திலயெண்டான்ன எழுது.”

மறுநாள் மதியம் சாப்பிட்டானதும் புறப்பட ஆயத்தமானாள் நிலா. தானும் வெளியே செல்லவேண்டுமென்று வித்தியாவும் வெளிக்கிட்டாள். அப்பாவிடம், மாமாவிடம், கஜந்தனிடம் சொல்லி விடைபெற்றாயிற்று. அம்மா விறாந்தைக்கும் வராமல் சமையறையிலேயே நின்றுகொண்டிருந்தாள். உள்ளே செல்ல நிலாவுக்கு அச்சமாக இருந்தது. அவள் அழுது தன்னையும் அழவைத்துவிடுவாள் என்ற பயம். ஆனாலும் உள்ளே சென்றாள். அப்படியே கட்டியணைத்துக்கொண்டாள் அம்மா. அவளது உடல் குலுங்கிக்கொண்டிருந்தது. அவள் அழுகையை அடக்க எடுக்கும் பிரயத்தனமே அதுவென்று நிலா கண்டாள். அவளது பிடியின் இறுக்கம், உன்னைப் போகவிட மாட்டேன் என்பதுபோல் அத்தனை திடமாகவிருந்தது. அம்மாவின் அழுகையில் நிலாவுக்கும் அழுகை வந்தது. அப்பா வந்து,

“இந்த யுத்த நிறுத்தம் இப்பிடியே நிரந்தரமான சமாதானமாய் வரவேணுமெண்டு எல்லாரும் நேர்த்தி வைப்பம்.  இஞ்ச கிட்டத்தான இருக்கப்போறா. போய்ப் பாப்பம், இல்லாட்டி வந்து பாக்கச் சொல்லுவம். விடும், பவளம்” என்று அம்மாவைச் சமாதானப்படுத்தி பிடியைத் தளர்ப்பித்தார்.

“நான் கவனமாயிருப்பன், அம்மா. கவலைப்படாதயுங்கோ. இப்ப சண்டைக் காலமும் இல்லைத்தான” என்றுவிட்டு நிலா பாய்க்கை எடுத்தாள்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R