1. சுயநலம்

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -பிறந்தது முதலே ஒட்டிப்பிறந்ததாய்
அந்த அழுக்கு அரைப்பாண்ட்டை அணிந்திருக்கும் மனிதனுக்கு இருநூறுக்கு
மேல் வயதிருக்குமோ என்னவோ.
அந்த வயிறு இதற்குமேல் உள்ளொடுங்கியிருக்கவியலாது.
’பணம் வேண்டாம், டீ வாங்கித்தா’ என்ற குரல் வானத்தின்
எந்த உயரத்திலிருந்து என்னை வந்தடைந்தது?
நான் வாங்கித்தந்த முழுக்கோப்பை என்ற பெயரிலான காலே
அரைக்கோப்பை தண்ணித்தேனீர்
அந்த நடுங்கும் கைகளில் குலுங்கும் நெகிழிக்கோப்பையிலிருந்து
அந்த மனிதனின் உதடுகளுக்குள் நுழையும்
எத்தனத்தில்
என் கண்களில் நீராகிக் குத்துகிறது,
நிறையவே வலிக்கிறது…..


பிச்சையெடுக்கும் தாயுடன் நடந்துவரும் சிறுவன்
என்னைப் பொறுத்தருளட்டும்.
’அவனுடைய அவல எதிர்காலத்திற்கு நானும்தான் பொறுப்பேற்கவேண்டும்’
என்று திரும்பத்திரும்பச் சுட்டிக்காட்டும் இந்த மனசாட்சியை எந்த
முதுமக்கட்தாழியிலடைத்து எங்குபுதைக்க?
பத்து குடும்பங்கள் மேஸ்திரியால் கைவிடப்பட்டு பட்டினி கிடப்பதாய்
பேரோலத்தை முணுமுணுப்பாய் வெளியிடும் அந்தத் தாயிடம்
முதலில் என்னிடமிருந்த நூறு ரூபாயைத் தருகிறேன்.
பின், மனசாட்சி வறுத்தெடுக்க ஒரு ஐந்நூறு ரூபாயைத் தருகிறேன்,
கூனிக்குறுகிக் கும்பிட்டு தளர்ந்த நடையுடன் அப்பால் செல்லும் அந்தச்
சகோதரியின் முதுகு என் கண்களிலிருந்து மறைய மறைய வேகமாய் என்
கால்கள் தன்னிச்சையாகப் பின்தொடர்ந்து செல்ல, எஞ்சியிருந்த இன்னொரு
ஐந்நூறு ரூபாய்த்தாளையும் அவர் கைகளில் தருகிறேன்,
பத்து குடும்பங்களுக்கு ஒருவேளை சாப்பாட்டுக்காவது போதுமானதாகட்டும்
என்ற பிரார்த்தனையோடு….

 

இரவு எட்டுமணிக்கு கடைகளெல்லாம் அரைமூடியிருக்க
முப்பது ரூபாய் முழத்தை பத்து ரூபாய்க்குத் தருவதாய் களைத்த குரலில்
கூவுகிறார் பூக்காரம்மா.
அவருடைய பின்புறத்திலிருந்து மாயமாய் முளைத்த சிறுமி
ஒரு ராஜகுமாரியின் தோரணையுடன்
செருப்பு வாங்கித்தரச்சொல்லிக் கேட்கும்போது
நான் எப்படி மாட்டேன் என்று சொல்வது?
ஒரு பார்வையில் தனக்குவேண்டியதை எடுத்துக்கொண்டு
‘தாங்க்ஸ் அக்கா’ என்று சொல்லி சடுதியில் மறைந்துவிடுகிறாள் கம்பீரமாய்.
நாளை அவளது கால்களைப் பொசுக்கமுடியாமல்
நன்றாக ஏமாறும் கதிரோனைப் பார்த்து கண்சிமிட்டக்கூடும்.
அந்த ஏழைச்சிறுமி
இளவரசியாகட்டும் எதிர்கால சாம்ராஜ்யத்தில்;
ஏழையென்றெவருமில்லாமல்
புரந்துகாக்கட்டும் குடிகளை.


என் ஒரு வார செலவுக்கான பணத்தைத் தந்து
எனக்கான பாவமன்னிப்பைப் பெறமுடியுமா தெரியவில்லை.
இந்த ஊரடங்கு காலத்தில்
அலாவுதீனின் அற்புதவிளக்கு
எங்கேனும் மலிவுவிலைக்குக் கிடைத்தால்
எத்தனை நன்றாயிருக்கும்……



2. இருத்தலியல்

வருடக்கணக்காக அந்தக் காரை ஓட்டிக்கொண்டிருந்தான் அவன்.
மறுபடியும் மறுபடியும் அதை தலைமுதல் கால்வரை துடைத்து மெருகேற்றுவான்.
அதன் கண்ணாடிப் பளபளப்பில் தன் முகம்
அதி கம்பீரமாகத் தெரிவதாகத் தோன்றும் அவனுக்கு.
நகரின் வீதிகளில் வழுக்கிக்கொண்டுசெல்லும்போது
கார் தேராக மாறி அவனை அரியணையில் அமர்த்தும்.
அப்போதெல்லாம் மாதம் மும்மாரி பொழியும்
அவன் திருநாட்டில்
உணவு உடை உறையுள் இல்லாத யாருமே இருக்கமாட்டார்கள்.
அப்படியே போர்வீரர்களும் போருக்கான தேவையும்.
இனிவரக்கூடிய எதிரிகளை வீழ்த்தும் வியூகங்கள் கார்ச்சக்கரங்களில்
பொறிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஒரு நாள் அவன் கனவில் சித்தர் சுவடி
வாசித்தார்.
தூங்குவதற்கு முன் அவன் பார்த்த தொலைக்காட்சி மெகாத்தொடரில்
ஒரு பெண்சித்தர் பாத்திரம் இடம்பெற்றிருந்தது காரணமா, தெரியவில்லை..
முதலாளி ஷாப்பிங் மாலுக்குள் சுற்றிக்கொண்டிருக்க
காரின் பின்னிருக்கையில் அரைவிழிப்போடு குட்டித்தூக்கம் போடுபவன்
இல்லாள் மடியில் கிடப்பதாக நெகிழ்ந்துபோவான்.
காரின் கதவுகளை யாரேனும் அதிரத் திறந்தாலோ அறைந்து மூடினாலோ
யாருமறியாமல் அவர்களுக்கு அவன் அளிக்கும் சாபங்கள்
அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து என்னென்ன இன்னல்களை ஏற்படுத்தினவோ – யாருக்குத் தெரியும்.
தெரியும் அவனுக்கு காரின் பெட்ரோல் பசி.
ஒருபோதும் காரைப் பட்டினி கிடக்க விடமாட்டான்.
காரின் கலங்கிய கண்களை, கடும்பசியால் வாடிய வதனத்தைக் காணப்பொறாத அவன்
முதலாளி தர மறந்துவிடும் சமயங்களில் தன் கைக்காசை போட்டு அல்லது
கடன் வாங்கியாவது காரில் பெட்ரோல் நிரப்பிடுவான். பிறகே பணம்
வாங்கிக்கொள்வான்.
காரின் மீது சூரியக்கதிரொளி படரும் நேரத்தையும், சூரியக்கதிரின்
நீளத்தையும், அடர்த்தியையும் பார்த்தாலே சரியான நேரம் தெரிந்துவிடும்
அவனுக்கு.
அதன் வெளியுறுப்புகளும் மறைவுறுப்புகளும் அவனுக்கு அத்துப்படி.
ஒரு கட்டத்தில் அதைத் தனதாகவே பாவிக்கத் தொடங்கினான்.
முதலாளிக்கு பதவி உயர்வோடு மும்பைக்கு மாற்றலாக,
மூன்றுமாதச் சம்பளத்தொகையோடு வீடுதிரும்பிய வனின் கனவில்
‘என்னை ஏன் உன்னோடு கூட்டிச்செல்லவில்லை?’ என்று திரும்பத்திரும்பக் கேட்டபடி
அவன் காலடியில் கேவிக்கொண்டிருந்தது கார்.

3. நடுநிலையாளர்கள்

வேண்டிய செய்திச்சேனல்களுக்கு ஒரு பொத்தானை சிறகுத்தட்டு தட்டி
வெகுஎளிதாகப் போய்ச்சேர்ந்துவிடுகிறோம்..
அங்கே நமக்குவேண்டிய செய்திகளையே திரும்பத்திரும்பக் கேட்டு
விகசித்துப்போகிறோம்
துக்கித்துப்போகிறோம்
ஆத்திரமடைகிறோம்
அக்கிரமம் அநியாயம் அட்டூழியம் என்று
புருவங்களை நெரித்து உதடுகளைக் கடித்து
உறுமுகிறோம்;
நமக்கு ‘வேண்டப்பட்ட’ சேனலில் நமக்குப் பிடிக்காத அரசு தூற்றப்படுவதைப்
போற்றிப்பாடுகிறோம்.
நமக்கு வேண்டாத அரசைப் பாராட்டும் சேனல் பாரபட்சமானதென்று
பட்டம் கட்டிவிடுகிறோம்.
கட்டங்களிலான காய்கள் ஒன்றையொன்று வெட்டக் குறிபார்ப்பதுதானே
இயல்பு என்று
தத்துவம் பேசுகிறோம் சமயங்களில்.
தாயம் விழுந்தால்தானே வெட்ட என்று
அங்கலாய்த்துத் தீரவில்லை நமக்கு.
வெட்ட வெட்டத் துளிர்க்கும் தருக்களாய்
சில சேனல்கள் உண்மையை மட்டும் உரைத்துக்கொண்டிருப்பதை
சகித்துக்கொள்ள முடியாமல்
சிலர் அவசர அவசரமாய் அதை மாற்றுவதை ஆட்சேபிப்பதாய்
அவ்வப்போது சில ரிமோட்கள் அறவே பழுதாகிவிடுகின்றன!


4. பத்தரைமாற்று முத்திரைக்கவி

அடிக்கடி காணக்கிடைக்கின்றன அவருடைய புகைப்படங்கள்
அங்கிங்கெனாதபடி.
அனைத்திலும் யாரோவொரு பிரமுகருடன் தனக்கிருக்கும்
பரிச்சயத்தை நெருக்கத்தைப் பறைசாற்றுவதாய்
புன்னகைத்தவாறு.
நேற்றைய இன்றைய நாளைய அரசியல்வாதிகள்,
நடிகர்கள்;
நியூஜிலாந்து அயர்லாந்து மெக்ஸிகோ மாலத்தீவு என
ஒன்று பாக்கியில்லாமல்
அயல்நாடுகளைச் சேர்ந்த படைப்பாளிகள்….
வழுவழு பக்கங்களாலேயே உயர்தரமானதாக்கப்பட்ட
அறுவை இலக்கிய ஆங்கில இதழ்;
முடிவற்று வெறுப்புமிழ்வதே புரட்சியென
உருவேற்றிக்கொண்டிருக்கும்
மாதமொருமுறை இதழ் _
எல்லாவற்றிலும் அவர்
சிலவற்றில் கோபமாய்
சிலவற்றில் சோகமாய்
சிலவற்றில் சாந்தமாய்
சிலவற்றில் ஆவேசமாய்
சிலவற்றில்
தலையை சிலுப்பிக்கொண்டு
சிலவற்றில்
(அட்டை)மலையை உலுக்கிக்கொண்டு
பத்தரைமாற்று முத்திரைக்கவியின் படங்கள்
எத்தனையெத்தனையோ……
எதிலுமேயில்லை
சத்தமில்லாமல் மொத்தமாய்
அவரைப் பிரிந்துவிட்ட கவிதை.


5. இறக்கைகளை இனங்காணல்

தெரியும், பட்டாம்பூச்சி என்பது உங்களுக்கு ஒரு பொதுப்பெயர்.
எனக்கு அது தனிப்பெயர்.
என் வண்ணங்களை நீங்கள் பொதுவாக்கினாலும்
எனக்கு அவை தனியானவைதான்.
என் ஊதாநிறம் எப்படி இன்னொரு பட்டாம்பூச்சியின் ஊதாநிறமாகும்.
ஒத்திருத்தலும் ஒன்றாதலும் ஒன்றா?
நான் பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சிகள் அல்ல.
பட்டாம்பூச்சிகள் என்று அடையாளமழிப்பதில் உள்ள
வஞ்சப்புகழ்ச்சியை நான் அறிவேன்.
‘லதா’ என்பதற்கும் ‘லதாக்கள்’ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை
நீங்கள் அறியாதவரல்ல.
என் வாசகசாலையும் சர்வகலாசாலையும் உங்களுக்குத் தெரியாதென்பதால்
அவை இல்லையென்றாகிவிடாது.
ஒரு விரிபரப்பைக் கடக்கும் கால்கள் உண்மையில்
அந்த விரிபரப்பின் ஒரு பகுதியையே கடக்கின்றன பெரும்பாலும்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சம்பந்தமில்லாமல் ஒரு
பழமொழியை உதிர்ப்பதற்கு முன்பு பட்டாம்பூச்சிக்குப் பல்லிருக்கிறதா
என்று தெரிந்துகொள்வது நலம்.
பட்டாம் பூச்சியாகிய எனக்கு வண்ணத்துப்பூச்சி என்ற பெயரும் இருக்கிறது
என்று எனக்குத் தெரியும்.
ஆனால் ’வண்ணாத்தி’ என்று ஒரு கவி அன்பொழுகப் பாடியபோது
துணிவெளுப்பவளை என்றல்லவா தவறாக எண்ணிவிட்டேன்.
’சலவைத்தொழிலில் எதுவும் இழிவில்லை
என் மொழியறிவுப்போதாமையைத்தான் பழிக்கிறேன்’
என்று சுயவிமர்சனம் செய்யும் பட்டுப்பூச்சியாகிய என்
இறக்கைகள் சன்னமாக இருந்தால்தான் என்ன?
எனக்குப் பறக்கமுடிகிறதே – அதைவிட வேறென்னவேண்டும்?
அவரவர் பட்டாம்பூச்சிகளுக்கு அவரவரிடம் செல்லப்பெயர்களும் உண்டு.
நானாகிய என் பட்டாம்பூச்சியின் செல்லப்பெயர்(கள்)
அநாமிகா ரிஷி.
சொல்லும்போதே சரேலென விரியும் என் சிறகுகள்
அதோ உயரே!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R