எழுத்தாளர்  முருகபூபதி- எழுத்தாளர்களே! இவ்விதழில் எழுத்தாளர் முருகபூபதி அவரது பிறந்த ஊரான நீர்கொழும்பு பற்றி எழுதுகின்றார். ஏன் நீங்களும் உங்கள் ஊர்களைப்பற்றி எழுதக்கூடாது. எழுதுங்கள்! 'பதிவுகள்' உங்கள் மண்ணைப்பற்றி, அம்மண் எவ்விதம் உங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு உதவியது என்பது பற்றியெல்லாம் அறிய ஆவலாகவுள்ளோம். அதே சமயம் உங்கள் ஊர்களைப்பற்றிய முக்கிய தகவல்களையும் உங்கள் கட்டுரைகளில் உள்ளடக்குங்கள். உங்கள் ஊர் பற்றிய உங்கள் எண்ணங்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். - ஆசிரியர், பதிவுகள்.காம் -


இந்து இளைஞர் மன்றத்தில் இயங்கிய நூல் நிலையத்தில் பெரும்பாலும் சமயம் சார்ந்த நூல்களே இருந்தமையினால் நண்பர்கள் இணைந்து வளர்மதி நூலகம் அமைத்தார்கள். மிகவும் குறைந்த கட்டணத்தில் உறுப்பினர்கள் இணைந்தார்கள். மாதம் 25 சதம்தான் அறவிட்டனர். செல்வரத்தினம் தன்னிடமிருந்த ராணிமுத்து நாவல்களையெல்லாம் தந்தார். இந்நிலையில் இலக்கிய ஆர்வம் மிக்கவர்களின் படைப்புகளுடன் வளர்மதி என்ற கையெழுத்து சஞ்சிகையை வெளியிட்டோம். தற்பொழுது ஜெர்மனியில் வதியும் தேவாவின் கையெழுத்து அழகானது. அவரே பல பக்கங்களையும் எழுதினார். படங்கள் வரைந்தும் ஒட்டியும் முதலாவது இதழை வெளியிட்டோம். அதில் சிறுகதை, கட்டுரை, கவிதை என்பன வெளியாகின. அப்பொழுது நீர்கொழும்பு பிரதேசத்திலிருந்து நீர்கொழும்பூர் முத்துலிங்கம், மு.பஷீர் ஆகியோர் பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தனர். இவர்களே நீர்கொழும்பின் மூத்த எழுத்தாளர்கள். வளர்மதி நூலகத்தின் உறுப்பினர்களின் முதலாவது ஒன்றுகூடல் சந்திப்பில் நீர்கொழும்பூர் முத்துலிங்கமும் மு. பஷீரும் கலந்துகொண்டனர்.

எமது இலக்கிய நண்பர்களின் வட்டம் பெருகியது. வளர்மதியின் இரண்டாவது இதழை முத்துலிங்கம் வடிவமைத்தார். அவர் சிறந்த ஓவியருமாவார். கேலிச்சித்தரங்களும் இடம்பெற்றன. 1971 இல் இலங்கையில் ஏப்ரில் கிளர்ச்சியினால் நாடெங்கும் உரடங்கு உத்தரவு இரவுவேளைகளில் பிறப்பிக்கப்பட்டது. அதனால் வீட்டிலிருந்தவாறே பல படைப்பிலக்கிய நூல்களை படித்தோம்.

ஒருநாள் மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா நீர்கொழும்புக்கு வருகைதந்தார். முத்துலிங்கம் வீட்டில் அவரை இலக்கிய நண்பர்கள் சந்தித்தபொழுது மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழ் வெளியிடும் யோசனை முன்வைக்கப்பட்டது.
1972 பெப்ரவரி மாதம் குறிப்பிட்ட சிறப்பிதழ் வெளியிடப்பட்டு நீர்கொழும்பில் 20 ஆம் இலக்கம் சூரியவீதியில் அமைந்த எமது வீட்டில் அதன் வெளியீட்டு நிகழ்வு நடந்தது. அதில் மல்லிகை ஆசிரியரை வரவேற்றோம். அவருடன் மூத்த எழுத்தாளர் மு.கனகராஜனும் வருகைதந்தார். மல்லிகையின் வரவு நீர்கொழும்பில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

செல்வரத்தினம், முருகபூபதி, சந்திரமோகன், தருமலிங்கம், மு. பஷீர், முத்துலிங்கம், சிவம், பவாணிராஜா, நிலாம் ( பின்னாளில் கொழும்பு தமிழ் பத்திரிகை ஊடகங்களில் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்) க. ரட்ணராஜ், மினுவாங்கொடை வண. ரத்தனவன்ஸ தேரோ, உட்பட பலர் இணைந்து இலக்கிய இயக்கமே நடத்தினோம்.

ரத்னவன்ஸ தேரோ அவர்களை எமக்கு அறிமுகப்படுத்தியவர் நிலாம். இவர் ஈழத்து நூன் என்ற புனைபெயரில் கவிதைகளும் எழுதியிருப்பவர். ரத்தனவன்ஸ தேரோ சிறந்த தமிழ் அபிமானி. அவர்குறித்த விரிவான பதிவை முருகபூபதி ஏற்கனவே எழுதியுள்ளார். அவர் மினுவாங்கொடையிலிருந்து நீர்கொழும்புக்கு வருகைதந்து இலக்கியச்சந்திப்புகளில் கலந்துகொள்வார்.

சில வருடங்களுக்கு முன்னர் அவர் மறைந்தார். அவருக்கான நினைவரங்கு நிகழ்வை நீர்கொழும்பு அன்பர்கள் மினுவாங்கொடையில் அவர் பிரதம குருவாகவிருந்த கொரஸ கிராமத்தில் ஸ்ரீ சுதர்மாணந்த விஹாரையில் நடத்தினார்கள். அவருடைய உருவப்படம் மல்லிகையிலும் வெளியாகியிருக்கிறது.

நீர்கொழும்பு இலக்கிய வட்டம் உருவானதும் பல இலக்கிய விழாக்கள் நூல் இலக்கிய இதழ் வெளியீடுகள் சந்திப்புகள் நடத்தினோம். இவற்றில் கலந்துகொண்ட நீர்கொழும்பூர் முத்துலிங்கம், சந்திரமோகன், ரட்ணராஜ், பவாணிராஜா, வண.ரத்னவன்ஸ தேரோ ஆகியோர் தற்பொழுது எம்மத்தியில் இல்லை. முருகபூபதி, தருமலிங்கம், தேவா, செல்வரத்தினம் ஆகியோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துவிட்டனர். பின்னாளில் கவிஞராக அறியப்பட்ட விக்னேஸ்வரன் ( கவிஞர் காவியன் முத்துதாசன் ) பத்திரிகையாளரான சூரியகுமாரி பஞ்சநாதன் ஶ்ரீதரன் ஆகியோர் தொழில் நிமித்தம் சிங்கப்பூர், துபாய் சென்றனர்.

விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழையமாணவர் மன்றமும் நாமகள் விழாக்களை வருடாந்தம் நடத்தியபொழுது பட்டிமன்றம், கவியரங்கு, இலக்கியச்சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தது. இந்து இளைஞர் மன்றமும் கலை, இலக்கிய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை வழங்கியது.

நீர்கொழும்பு சாந்தி அச்சகத்தை அதன் உரிமையாளர் மயில்வாகனன் அவர்களிடமிருந்து குத்தகை அடிப்படையில் எடுத்து நடத்திய நண்பர்கள் நவரத்தினராசா, யோகநாதன் ஆகியோர் அச்சகத்தில் நூல்கள் இதழ்கள் முதலானவற்றை சலுகை கட்டணத்தில் அச்சிட்டுக்கொடுத்தனர்.

இவ்வாறு நீர்கொழும்பு இலங்கையின் கலை இலக்கியப்பரப்பில் கவனத்திற்குள்ளானது. பின்னாட்களில் வளர்மதி நூலகம், இலக்கிய வட்டம் ஆகியன இயங்காதுபோனாலும் இந்து இளைஞர் மன்றம் அந்த வெற்றிடத்தையும் இடைவெளியையும் தவிர்த்திருப்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.

திரைப்படத்துறையில் நீர்கொழும்பு

நீர்கொழும்பு - திரைப்படக்கலைஞர்களின் வரலாற்றையும் பதிவுசெய்துள்ளது. ஆரம்பகால சிங்களத்திரைப்படங்களில் நடித்த ருக்மணிதேவி, விஜித்தா மல்லிகா, எடி ஜயமான்ன, ஹியூகோ மாஸ்டர் ஆகியோர் நீர்கொழும்பைச்சேர்ந்தவர்கள்.

பிட்டிபன சொய்சா என்ற திரைக்கதை வசன கர்த்தா மற்றும் சிங்கள திரைப்பட இயக்குநர் அன்டன் கிரகரி ஆகியோரும் எங்கள் ஊரைச்சேர்ந்தவர்தான். பல சிங்களப்படங்களைத் தயாரித்தவரும் நீர்கொழும்பு - கொழும்பு வீதியில் கந்தானை என்னும் இடத்தில் SPM Sound Studio என்ற பெரிய திரைப்பட நிறுவனத்தையும் நடத்திய எஸ்.பி. முத்தையாவும் நீர்கொழும்பைச்சேர்ந்தவரே.

கொழும்பு வீதியில் மருத்துவமனை நடத்திய டொக்டர் லீனஸ் திஸநாயக்காவும் திரைப்படத்தயாரிப்பாளர்தான். இவர் சத் சமுத்திர முதலான படங்களை தயாரித்தவர். நீர்கொழும்பின் பல பகுதிகள் திரைப்படங்களிலும் இடம்பெற்றுள்ளன. நீர்கொழும்பில் தயாரிக்கப்பட்ட பல சிங்களத்திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகளைப்பெற்றுள்ளன.

எதிர்பாராதவிதமாக நீர்கொழும்பு - கொழும்பு வீதியில் நடந்த வாகனவிபத்தில் நடிகை ருக்மணிதேவி பரிதாபகரமாக இறந்தார். அவரது பூதவுடல் கலையுலகத்தின் மரியாதையுடன் நீர்கொழும்பு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமரும் ஜனாதிபதியுமான பிரேமதாஸ ருக்மணிதேவிக்காக டவர் பவுண்டேசன் சார்பில் நீர்கொழும்பு இராஜபக்ஷ பூங்காவுக்கு அருகில் நினைவில்லம் அமைத்துள்ளார்.

இதேவேளை நீர்கொழும்பு தமிழ்க்கலைஞர்களும் திரைப்பட தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டாலும் அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பது கவலைக்குரியது. நீர்கொழும்பூர் முத்துலிங்கம் மற்றும் அவரது சகோதரர் மாணிக்கம் கதிர்காமம் ஆகியோர் ஏழுவீரர்கள் என்ற தமிழ்த்திரைப்படத்தை எடுக்க முயன்று கைவிட்டனர். குடாப்பாடு என்னுமிடத்தில் வசித்த ஒருவரும் 16 மில்லி மீற்றரில் ஒரு படத்தை எடுத்து இடையில் கைவிட்டார்.

நீர்கொழும்பில் முன்னர் மீபுர, கிங்ஸ், ராஜ், அசோக்கமாலா ஆகிய திரையரங்குகள் இருந்தன. இதில் அசோக்கமாலா என்ற பெயரில் நீண்ட காலம் இயங்கிய திரையரங்கு சிலோன் தியேட்டர் ஸ்தாபனத்தின் ரீகல் படமாளிகையாகியது. ராஜ் சினிமா சினிமாஸ் லிமிட்டட்டிற்கு சொந்தமான அழகிய திரையரங்காகும். இதனை 1983 கலவரத்தின்பொழுது தீயசகத்திகள் அழித்து நிர்மூலம் செய்தவிட்ட சோகமும் நீர்கொழும்பு வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. மீபுர – கிங்ஸ் – ரீகல் திரையரங்குகள் திரைப்பட வீடியோ வருகையுடன் மூடப்பட்டுவிட்டன. கடற்கரையோரத்தில் ஆயிரக்கணக்கான பல மொழிப்படங்களையும் காண்பித்து நீர்கொழும்பு ரசிகர்களை கவர்ந்த மீபுர திரையரங்கு இருந்த சுவடே மறைந்துவிட்டது. கிங்ஸ் திரையரங்கு இடிந்த சிதைவுகளுடன் சோகமாக காட்சியளிக்கிறது. தற்பொழுது நீர்கொழும்பில் இயங்குவது அன்ரூ என்ற திரையரங்கு மாத்திரமே.

தொலைக்காட்சியின் வருகை வீட்டினுள்ளே சினிமாவை அழைத்து வந்துவிட்டதனால் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் பாரிய சரிவு தோன்றிவிட்டது. நவீன தொழில் நுட்பம் பலரது தொழிலுக்கு உலைவைத்துவிட்ட சோகம் தொடர்ந்தாலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. முன்னைய தலைமுறை கண்ட காட்சிகள் இன்று நீர்கொழும்பில் இல்லை. இன்றைய தலைமுறையினர் காணும் காட்சிகளை நாளைய தலைமுறை காணப்போவதும் இல்லை. உலக வளர்ச்சிப்போக்கில் மனித மனங்களிடம் எஞ்சியிருக்கப்போவது பசுமையான நினைவுகள் மாத்திரமே.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R