இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]

அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில் ...

'தோர்ன்கிளிவ் பார்க்'...  'டொன் மில்ஸ்ஸுக்கும் எக்ளின்டனுக்குமிடையில், அண்மையில்  அமைந்திருந்த பகுதி. 'ஷாப்பிங் மால்' , பாடசாலை, பூங்கா, நூலகம் எனச் சகல வசதிகளுடன், 'டொராண்டோ டவுண் டவு'னிற்கும் அருகில் அமைந்திருந்த பகுதி.  அங்குள்ள தொடர்மாடியொன்றில்தான் அவன் கனடா வந்த நாளிலிருந்து வசித்து வருகின்றான்.  அவனது மாமா மகனின் 'அபார்ட்மென்ட்'. 

தனிமையான பொழுதுகளைத் துருவித் துருவி ஆராய்ந்து , புரியாத காரணங்களுக்கு அர்த்தங்களைத் தேடுவதில் தாகமெடுத்துக் கிடக்கும் மனதின் அலைச்சலில் கழிந்து கொண்டிருந்தன பொழுதுகள் ....

கடைசியாகச் செய்துகொண்டிருந்த தொழிற்சாலை வேலை 'லெய்ட் ஓஃப்' ஆனதிலிருந்து  கடந்த ஆறு மாதங்களாக 'அனெம்பிளாய்மென்ட்'டில் ஓடிக்கொன்டிருந்தது வாழ்க்கை.  கடந்த நான்கு மாதங்களாக மாலை நேரங்களில் அந்தப் 'பார்க்கி'லேயே பெரும்பாலும் அவனது பொழுது போய்க்கொண்டிருந்தது. மாமா மகன் 'போஸ்ட் ஆபிஸ்'இல் வேலை செய்து கொண்டிருந்தான். விரைவில் அவனும் திருமணம் செய்யவிருக்கிறான். அதற்குப் பிறகு வேறிடம் பார்க்க வேண்டியதுதான்.

பார்க்கில் நன்கு இருண்டு விட்டதும் அப்படியே படுத்துக் கிடப்பான். விரிந்திருக்கும் ஆகாயத்தில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, உருமாறிக் கொண்டிருக்கும் நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பான். பார்க்கில் நடமாட்டம் குறைந்து அமைதி பூரணமாகக் குடிகொன்டிருக்கும்போதும் அவன் படுத்திருக்கும் இடத்தை விட்டு அசைய மாட்டான். இடைக்கிடை 'பட்ரோலி'ற்காக வரும்  பொலிஸ்காரும் சற்றுத் தொலைவில் நோட்டம் விட்டுச் செல்லும்.

ஆனால் அது பற்றியெல்லாம் அவன் அலட்டிக்கொள்வதேயில்லை. சுற்றிவர அவனைச் சுற்றி நடப்பவைகளைப் பற்றிய நினைவுகளே ஏதுமற்ற நிலையில் விண்ணையே வெறித்துப் பார்த்தபடி இருக்கும் கண்கள்... எதைப்பற்றி அவன் சிந்தனை வலை பின்னுகிறதோ?  நடந்து விட்ட சம்பவங்களை, நிகழ்வுகளை அசை போடுவதிலா? அல்லது பிரபஞ்சத்துப் புதிரை அறியும் ஆவலிலா? சூழலில் உருவாகி விட்ட அவனது இருப்பைப் பற்றிய தேடலிலா?  எதைப் பற்றி அவனது சிந்தனை மூழ்கிக் கிடக்கிறதோ?

அங்கு வழக்கமாகப் பொழுதைக் கழிக்க வருபவர்களுக்கோ அவன் பார்க்கில் ஓரங்கமாகவே மாறி விட்டிருந்தான். அண்ணாந்து வெறித்தபடி சிலையாக உறைந்துகிடக்கும் அவனை ஒருவித வியப்புடன் , ஆவலுடன் இரசித்தபடி செல்வார்கள். இடைக்கிடை செல்லும் Go புகையிரதங்கள்.. ஒரு கணமும் உறங்காது இரையும் 'டொன்வலி பார்க்வே' (Don Valley Parkway).. எதைப்பற்றியும் கண்டுகொள்ளாத, பொருட்படுத்தாத ஒருவித மோனநிலையில் .. கனவுலகில் உறைந்தநிலையில்.. தலைக்கு இரு கைகளாலும் முண்டு கொடுத்தபடி ஒரு காலை முழங்கால்வரை உயர்த்தி அதன்மேல் குறுக்காக மற்றக் காலைப் போட்டபடி ... படுத்திருப்பான். சுட்டெறித்த சூரியனும் தொலைவில் தொலைந்து நெடுநேரமாகி விட்டிருக்கும். மெல்லிய குளிர்காற்று வீசத்தொடங்கிவிடும்.

அவன் அபார்ட்மென்ட் திரும்புகையில் இரவு பன்னிரண்டைத் தாண்டிவிட்டிருக்கும். மாமா மகன் நண்பர்களுடன் குடித்து ஓய்ந்து சோபாவில் சாய்ந்து கிடப்பான்.  தின்று முடித்த கோழிக் கால்கள்... அரைகுறை பியருடன் கிளாஸ்கள்.. ஓஃப் பண்ணாத நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் டி.வி.  எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி விட்டு, ஒரு பியரைக் குடித்துவிட்டு, இருப்பதைக் கொஞ்சம் உள்ளே தள்ளிவிட்டுப் படுக்கையில் நெடுநேரம் புரண்டு கிடப்பான்.  அப்படியே  தூங்கிவிட்டு எழும்பும்போதோ.. மாமா மகன் வேலைக்குப் போய் நெடுநேரமாகி விட்டிருக்கும்.  பகல் நேரம் பதினொன்றை நெருங்கி விட்டிருக்கும்.  பிரிட்ஜிக்குள் கிடக்கும் கோழியை ஊறவைத்து, இருப்பதை வைத்து ஏதாவது ஆக்கி வைக்கையில் பொழுது மூன்றாகிவிடும். அதன்பிறகு பழையபடி சோபாவில் சாய்ந்தபடி டி.வி.யைத் தட்டி விடுவான். 

எப்போதாவது அவனுடன் பழகிய சிலர் போன் பண்ணுவார்கள். மற்றும்படி அதே மோனநிலையில் சோபாவில் உறைந்து கிடப்பான்.

மாமா மகன் நான்கு மணிக்குப் பிறகுதான் வருவான். ஆறு மணிக்கெல்லாம் இவன் இறங்கி விடுவான் பார்க்கை நோக்கி. பிறகு வழக்கமான அதே மோனநிலை. அதே கைகளைத் தலைக்கு முண்டு கொடுத்தபடி, ஒரு காலை முழங்கால்வரை உயர்த்தி, அதன்மேல் மறுகாலைக் குறுக்காகப் போட்டு... விரிந்து கிடக்கும் ஆகாயத்தை, கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்தபடி .. உறைந்து கிடக்கும் அதே மோனநிலை. சுற்றுச் சூழலில் நிகழ்வுகளை... மாற்றங்களை... இயக்கங்களைப் பற்றிய எவ்விதப் பாதிப்புகளுமேயற்ற , ஒருவித மோனநிலை. நோக்கத்தை, காரணத்தை அறிந்துவிட வேண்டும் போலொரு ஆவலில் நிலைத்து வெறித்து நிற்கும் பார்வை.

அவ்விதம் மோனநிலையில் உறைந்து கிடக்கும் நேரங்களில் அவன் முகம் பெரும்பாலும் எவ்வித சலனங்களுமேயற்ற நிலையில்தான் இருக்கும்.  எப்போதாவது இருந்திருந்துவிட்டு சில வேளைகளில் மெல்லியதொரு புன்னகை இழையோடி ஒரு கணப்பொழுதிலோடியொழியும். எதைப்பற்றி அவன் சிந்தித்தானோ?

அவனுக்கு என்ன நடந்தது? வழிமாறி வந்துவிட்டானா என்ன? சுற்றியிருக்கும் யதார்த்தத்தை, நிகழ்வுகளை அவனால் உணர முடியவில்லையா? அல்லது அவனாகவே அவற்றிலிருந்து விலகியோடுகின்றானா?

இப்படிப்பட்டதொரு நாளில்தான் அவள் அவனைச் சந்தித்தாள். அவனது நிலை, தோற்றம், பார்வை ... அவளுக்கு அவன் ஒரு புதிராகத் தென்பட்டான். அவனை ஆரம்பத்தில் ஒருவித ஆச்சரியத்துடன் பார்த்த அவள் அவனைப் பார்ப்பதற்காகவே தொடர்ந்து வரத் தொடங்கினாள்.

சற்றுத் தொலைவில் இருந்த அவனை நோக்கத் தொடங்கினாள். அவனோ இதுபற்றியெல்லாம் கவனித்ததாகவே தெரியவில்லை. ஆனால் அவனைப் போல் அவளால் நெடுநேரம் தங்கி நிற்க முடியாது. பார்க்கில் மெல்ல மெல்ல சனநடமாட்டம் குறையத் தொடங்குகையில் அவளும் புறப்பட்டு விடுவாள். போகும்போது ஒருமுறை கடைசியாக அவனை விழுங்குவதுபோல் பார்த்துவிட்டுத்தான் செல்வாள்.

இவ்விதமாக ஓடிக்கொண்டிருந்த கணங்களில் இருவரும் முதன்முதலாகப் பேசிக் கொண்டதே ஓர் அபூர்வமான செயல்தான். ஒரு தடத்தில் சென்று கொண்டிருந்த வாழ்வை மாற்றி வைத்து விட்ட சந்திப்பு; தொடக்கம்.

நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும். இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்

ஆரம்பத்தில் அவனைப் பார்ப்பதுடன் மட்டும் நிறுத்திக்கொன்ட அவளால் நாளடைவில் அவள் மனதினுள் ஏற்பட்ட குறுகுறுப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை.  தனிமையில் ஒருவித மோனநிலையில் படுத்துக்கிடக்கும் அவனை விட்டுப் பிரிகையில் முதன் முறையாக ஒருவித தவிப்பை, இழப்பை மனம் உணர்ந்துகொண்டு அடித்துக் கொண்டது. அவனது அந்தத் தனிமையைச் சிறிதளவாவது பகிர்ந்து கொள்ள வேண்டும்போல் பட்டது. அவனது தலைமயிரைக் கோதிவிட்டு ஆறுதல் கூற வேண்டும் போலிருந்தது. அந்த மனதினுள் அலைபாயும்  எண்ணங்களுக்குள் குளிக்க வேண்டும் போலொரு ஆவல்...

ஆரம்பத்தில் சிறு பொறியாக மலர்ந்த அந்தக் குறுகுறுப்பு விரைவிலேயே பெரும் தீயாகச் செறிந்து படர்ந்தது.

அன்று ஒரு பெளர்ணமி தினம். முழுமதியின் தழுவலில் இரவு மயங்கத் தொடங்கியிருந்த சமயம். அவளால் வழக்கம்போல் போக முடியவில்லை. தனக்குள்ளேயே முடிவு செய்தவளாக நெடுநேரமாக  அவனையே பார்த்தபடி அவளும் சற்றுத் தொலைவில் தன்னை மறந்த நிலையில் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தாள்.

[ தொடரும் ]


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R