இலங்கையின் முதலாவது பெண் கட்டடக்கலைஞர் மினட் டி சில்வா (Minnette de Silva): அவரது வாழ்வும் , பணியும் பற்றியொரு நோக்கு!
இலங்கையின் பயிற்றுவிக்கப்பட்ட முதலாவது பெண் கட்டடக்கலைஞர் மின்னட் டி சில்வா உலகின் கவனத்துக்குள்ளாகிய முக்கியமான பெண் கட்டடக்கலைஞர். சுதந்திரமடைந்த இலங்கையின் கட்டடக்கலையின் முன்னோடியாகவும் கருதப்படுபவர். 1948இல் முடிக்குரிய பிரித்தானிய கட்டடக்கலை நிறுவனத்தின் (Royal Institute of British Architects - RIBA)(தோழராகத் (Associate) தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய நாட்டுப் பெண் என்னும் பெருமையும் இவருக்குண்டு. உலகக் கட்டடக்கலைத் துறையில் இவரது முன்னோடிப்பங்களிப்பு 'வெப்பமண்டலப் பிரதேச நவீனத்துவம்' ('regional modernism for the tropics') என்னும் கட்டடக்கலைப்போக்கிலாகும்.
பெப்ருவரி 1, 1918இல் கண்டியில் பெளத்தச் சிங்களத் தந்தைக்கும் (ஜோர்ஜ் ஈ.டி,சில்வா), கிறித்தவ பேர்கர் தாய்க்கும் (ஆக்னெஸ் நெல்) பிறந்த கலப்பினக் குழந்தை இவர். தந்தையார் பிரபல்யமான கண்டிய அரசியல்வாதி. இலங்கைத் தேசியக் காங்கிரஸின் தலைவராகவும், அரசில் உடல்நலத்துறை அமைச்சராகவும் விளங்கியவர். இவரத குடும்பத்தில் மூன்று குழந்தைகள். மின்னட் டி சில்வாவே கடைசிக்குழந்தை. இவரது சகோதரி அனில் டி சில்வா ஒரு கலை விமர்சகரும் , வரலாற்றாய்வாளராகவும் விளங்கியவர். சகோதரரான ஃப்ரெடெரிக் டி சில்வா வழக்கறிஞர். கண்டியின் முதல்வராகவும் விளங்கியவர். பின்னர் இலங்கைப்பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அவர் பிரான்சுக்கான இலங்கைத்தூதுவராகவும் பின்னாளில் பதவி வகித்தார்.
மின்னட் டி சில்வாவின் முக்கியமான பங்களிப்புகளாகக் கட்டடக்கலைத்துறைப்பங்களிப்பு, கட்டடக்கலை வரலாற்று ஆய்வுப்பங்களிப்பு, இதழியற் பங்களிப்பு , சமூக, அரசியற் பங்களிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இங்கிலாந்தில் புனித மேரிக் கல்லூரியில் படிப்பை முடித்துக்கொண்டு திரும்பிய மின்னட் டி சில்வா கொழும்பில் கட்டடக்கலைத்துறையில் பயிற்சியைப்பெற முடியாததால் , பம்பாயிலுள்ள 'Sir Jamsetjee Jeejebhoy' கலைக்கல்லூரியில் தன் கல்வியைத் தொடர்வதற்காகச் சென்றார். ஆனால் அவர் மெட்ரிகுலேசன் சித்தியடையாததால் அவர் ஆரம்பத்தில் பம்பாயை மையமாகக்கொண்டியங்கிய மிஸ்ட்ரி & பெட்வர் (Mistri and Bhedwar) என்னும் நிறுவனத்தில் கலைத்துறையில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அங்கு பயிற்சி பெறுகையில் பெரின் மிஸ்ட்ரி (Perin Mistry) மற்றும் அவரது நண்பரான மினூவுடன் (Minoo) நட்பையேற்படுத்தி கட்டடக்கலையினைப் போதிக்கும் கல்வி நிறுவனமொன்றில் பிரத்தியேக வகுப்புகளைக் கட்டடக்கலைத்துறையிலெடுத்தார். இதன் பின்னரே 'Sir Jamsetjee Jeejebhoy' கலைக்கல்லூரியில் தன் கல்வியைத்தொடர்ந்தார்.