தர்க்கம் செய்வோம் வாருங்கள்: தனித்தமிழ் பற்றி முகநூலில் ஒரு தர்க்கம்! - வ.ந.கிரிதரன் -
- அண்மையில் முகநூலில் நானிட்ட தனித்தமிழ் பற்றியதொரு பதிவும், அதற்கான எதிர்வினைகளும் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. தர்க்கம் ஆக்கபூர்வமாக இருந்ததால் இந்த முடிவு. -
எனது முகநூற் பதிவு: தனித்தமிழ் பற்றி..
தனித்தமிழ் என்பதில் எனக்குப் பூரண உடன்பாடில்லை. பல் திசைகளிலிருந்தும் வரும் மொழிகளிலிருந்து புதிய சொற்களை உள்வாங்குதலென்பது மொழியொன்றின் தவிர்க்க முடியாத அம்சங்களிலொன்று. அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்தும். இவ்விதம் ஏனைய மொழிச் சொற்களை உள்வாங்குவதால் மொழியானது வளமடைகின்றது என்பதை நம்புவன் நான். எவ்விதம் பிறநாட்டுத் தொழில்நுட்பங்களை, அறிவியலை எல்லாம் உள்வாங்குகின்றோமோ , எவ்விதம் அவ்விதம் உள்வாங்குவதால் நாம் பெரும்பயன் அடைகின்றோமோ அவ்விதமே மொழி விடயத்திலும் பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டுமென்று நினைப்பவன் நான். இதனையுணர்ந்ததால்தான் நம் முன்னோர்கள் தமிழ் இலக்கணத்தில் திசைச்சொற்கள் என்னும் பிரிவையே ஏற்படுத்தி வைத்தார்கள்.