பகுதி 2
வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் மூன்று கட்டங்களாக பிரிபடலாம்.
ஒன்று, காந்தியாலும் தாகூராலும் கவரப்பட்ட நிலையில், அவர் இளைஞனாய் இருந்த போது, தோன்றிய மனக்கசிவுகள்.
மற்றது, நேருவின் ஆசிர்வாதத்துடன், இலங்கை இந்திய காங்கிரஸ், ஸ்தாபனமுற்ற நிலையில் வேலுப்பிள்ளை, தொழிலாள சாரியுடனும் தொழிற்சங்கத்துடனும் இணைந்த ஓர் காலப்பகுதி.
மூன்றாவது, திருமணம் முடிந்து, ஓர் குடும்ப மனிதனாகிவிட்ட ஒரு காலப்பகுதி.
தொழிற்சங்கத்தில் இணைந்து தொழிலாளர் அணியுடன் கட்டிப் புரண்ட காலப்பகுதியில் (போலிஸ் வேனிலும் அடைப்பட்ட போது) முகிழ்த்து கிளம்பியதே ‘தேயிலை தோட்டத்திலே’ எனும் இந்நெடுங்கவிதை.
இந்த மாற்றங்கள் குறித்தே, அதாவது, இம்மாற்றங்கள் எப்படி ஏற்பட்டன – முக்கியமாக – ‘தாகூரின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த இவ் இளைஞன்’ என வேலுப்பிள்ளையை, வியக்கின்றார், ஜெக் மோகன்.
இப்பின்னணியில் வேலுப்பிள்ளையின் குடும்பமும் (Phழவழ)இ அனேக விடயங்களை எமக்கு எடுத்துரைப்பது.
கோபமுற்று, கைக்கட்டி இருக்கும் தாத்தாவின், பின்னால் நிற்கும் ஓர் இளைஞனாய் வேலுப்பிள்ளை தோன்றுகின்றார். தனது செல்லப்பேரன், கோட்-சூட்டு சகிதம், ஒரு துரை போன்று காட்சியளிக்க கூடும் என தாத்தா எதிர்ப்பார்த்திருந்தால், அது இயல்பானதாகவே இருந்திருக்க கூடும். ஆனால் இவ் இளைஞனோ, காந்திய குல்லாயும், கதிராடையும் அணிந்து, காலனித்துவத்துக்கு எதிராய் கோபம் கொண்டவனாய், இந்திய விடுதலை இயக்கத்தின் ஓர் சிறு பிழம்பாய் காட்சி தருகின்றான். இவனது பார்வை, தீவிரமான தீட்சண்யம், இவை யாவுமே, இவ் இளைஞனின் வருங்கால எழுத்துக்களுக்கு கட்டியம் கூறுவதாக அமைகின்றது. இருந்தாலும், இவ் இளைஞன் இன்னமும் தாகூரின் இளைஞனாகவே இருக்கின்றான் - பிற்காலத்தில், காலம் அவனை தொழிலாளர் அணியினர் மத்தியில் வீசி எறியும் மட்டும். அப்படி வீசி எறிந்த போது உருவானவையே இந் நெடுங்கவிதை. ஜெக்மோகன் வார்த்தையில்: ‘முற்றாக மர்மம் நிறைந்தது – இத் தாவல்’. இத்’தாவலின்’ முக்கியத்துவம், மனிதனையே புரட்டி எடுக்க தக்கதுதான் - வரலாற்றில்.