ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (1) - ஜோதிகுமார் -
இந்தியாவில் சிப்பாய் கலகம் முடிந்து, 15 வருடங்கள் ஆகாத ஒரு சூழலில், 1878 ஐ, பின்புலமாகக் கொண்டு, St.George.Fort அருகே உள்ள ஐஸ் தொழிற்சாலையை மையமாகக் கொண்டு, அக்காலத்தைய சமூக நிகழ்வுகள் எனக் கூறப்படுபவற்றைத் தன் பார்வையில், பரிசீலனைக்கு எடுத்து கொள்வதாய் ஜெயமோகன், தன் நாவலான வெள்ளையானையை அமைத்துள்ளார். இங்கே ‘காலத்தின் தேர்வும்’, ‘தன் பார்வையில்’ என்ற விடயமும் மிக முக்கிய அம்சங்களாகின்றன. வேறு விதமாய் கூறினால், ஜெயமோகன் தன் பார்வையில் ஓர் வரலாற்றைத் தன் வாசகர் முன் நிறுத்திட தெண்டித்துள்ளார் எனலாம். இக்காரணத்தினாலேயே, இதனை ஓர் வரலாற்று நாவல் என நாம் கறாரான மொழியில் வரையறுக்க முடியாதிருக்கின்றது.
முதலாவது, வரலாற்று நாவல் எனின் குறித்த வரலாறு – அதன் நிகழ்வுகள் – விருப்பு வெறுப்பற்ற சரியான முறையில் பதிவு செய்தாகப்பட வேண்டும். கூடவே அது எழுதுபவனின் பிரித்தியேக அரசியல் அபிலாசைகளை முடிந்தளவில் தள்ளி வைத்துவிட்டு, நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்வதில் அக்கறை காட்டுவதாக இருக்க வேண்டும். இங்கே, இந்நாவலில் மேற்படி இரண்டு அம்சங்களும் சற்றே தள்ளாடுவதாகவே இருக்கின்றன. நாவலின் மையக் கதாப்பாத்திரமான, ஏய்டன் எனப்படும் ஓர் அயர்லாந்து இளைஞன், ராணுவப் பள்ளியில் தனது படிப்பை முடித்துவிட்டு மதராஸ்ஸில், காலனித்துவ ஆட்சியில், ஓர் அதிகாரியாக வந்து சேர்கின்றான். ராணுவ அதிகாரியாக அவன் இருந்த போதிலும்கூட ஷெல்லி அவனுக்கு அத்துப்படி. இதன் காரணத்தினாலோ என்னவோ அவன் ஓரளவு சமூக நீதிக்கான உணர்வினையும் கொண்டவனாக படைத்து காட்டப்பட்டுள்ளான். அவ்வப்போது எழும் இவனது சமூக நீதிக்கான, வாஞ்சைக்கான வேறு காரணம் நாவலில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த அவனது தந்தைக்கு இவன் அயர்லாந்து ராணுவத்தில் பணிபுரிய செல்வது–அல்லது ஓர் ஆங்கிலேய அரசுக்காக பணிபுரிய செல்வது அவ்வளவு பிடித்தமானதாக இல்லை. மேலும் அவர், அவரளவிலேயே ஓரளவு தனித்து போன ஓர் ஆசாமித்தான். வேட்டையும் பண்ணையுமாக, தன் குடும்பத்தாரின் மத்தியிலேயே ஓர் தனித்த கட்டையாகத்தான் உலவுகின்றார். இந்தத் தனிமையின் பாதிப்பு ஏய்டனுக்கும் ஒரு வகையில் தொற்றிக் கொண்டுள்ளது என்பதனை நாவல் நாசூக்காக வெளிப்படுத்துகின்றது. இதனுடன், ஷெல்லியும் சேர்ந்து கொள்ள, ஏய்டன் ஏனைய ஆங்கிலேய அதிகாரிகளிடமிருந்து, சற்றே வித்தியாசப்பட்டவனாக தோற்றம் தருகின்றான். ஆக இப்பாத்திரப் படைப்பின் தர்க்கம் இப்படியாகத்தான் முன்வைக்கப்படுகின்றது.