“ வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. “
சங்கரலிங்கம், சகல கலா வல்லி மாலையை மெய்யுருக பாடிக்கொண்டிருந்தார். ஊரில் பாடசாலையில் முதலாம் வகுப்பில் அவர் படிக்கும்போது, பண்டிதர் நமசிவாயம் ஒரு நவராத்திரி காலத்தில் சொல்லிக்கொடுத்தது.
சங்கரலிங்கத்திற்கு தற்போது எழுபத்தியைந்து வயதும் கடந்துவிட்டது. அவுஸ்திரேலியாவுக்கு அவர் வந்து நாற்பது வருடங்களும் விரைந்து ஓடிவிட்டன. ஆனால், ஐந்து வயதில் பண்டிதர் சொல்லித்தந்த சகலகலா வல்லி மாலை அவரைவிட்டு ஓடிவிடவில்லை.
புகலிடத்திற்கு வந்த காலம் முதல் நவராத்திரியின்போது மட்டுமல்ல, நல்லூர் கந்தனுக்கு கொடியேறினாலும் சிவன்ராத்திரி காலம் வந்தாலும், ஊரில் சித்திவிநாயகர் ஆலயத்தில் சதூர்த்தி உற்சவம் தொடங்கினாலும், சங்கரலிங்கம் விரதம் அனுட்டிப்பவர்.
வருடாந்தம் இலங்கையிலிருந்து மறக்காமல் பஞ்சாங்கமும் தருவித்துவிடுவார். இலங்கையில் ரயில்வே திணைக்களத்தில் அவர் பணியாற்றிய காலத்திலும் நவராத்திரி வரும்போது, அவர்தான் அலுவலகத்தில் கலைமகள் விழாவை ஏற்பாடு செய்வார். ஒரு தடவை போக்குவரத்து அமைச்சரையும் அழைத்தார். அவர் பெளத்த சிங்களவர். பிள்ளையாரை கணதெய்யோ எனவும், சிவனை ஈஸ்வர தெய்யோ எனவும், முருகனை கதரகம தெய்யோ எனவும் சரஸ்வதியை அதே பெயரில் சரஸ்வதி தெய்யோ எனவும் அழைக்கத்தெரிந்த அமைச்சர்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும், இங்கே தேடிக்கொண்ட நண்பர்களிடமும், தான் போக்குவரத்து அமைச்சரை கலைமகள் விழாவுக்கு அழைத்த கதையை விஸ்தாரமாக எடுத்துச்சொல்லிவிடுவார்.
அந்த பழங்கதையை கேட்டுக்கேட்டு அவரது மனைவி சுகுணேஸ்வரிக்கு அலுத்துவிட்டது.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள், காலையில் வீட்டை சுத்தம் செய்து இரவு சரஸ்வதி பூசைக்கு தயாராகும்போதும் மனைவியிடம் தனது பதவிக்காலத்தில் ஒரு சரஸ்வதி பூசை நாளன்று போக்குவரத்து அமைச்சரை அழைத்த கதையை மீண்டும் சொல்வதற்கு தயாரானபோது, “ அந்த அமைச்சரும் செத்துப்போய் பல வருடமாகிவிட்டது. நீங்கதான் இன்னமும் அந்த ஆளை நினைச்சுக்கொண்டிருக்கிறீங்க… “ என்றாள் சுகுணா.