நேர்காணல் (பகுதி ஒன்று): ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
இலங்கை மலையகத்தின் டிக்கோயாவைச் சேர்ந்த ஓவியர் வீரப்பன் சதானந்தன் இலங்கையின் முக்கியமான நவீன ஓவியர்களிலொருவர். அண்மையில் இவரைப்பற்றியும், இவரது ஓவியங்கள் பற்றியும் எழுத்தாளர் ஜோதிகுமார் மூலம் அறிந்து கொண்டேன். இவரைப்பற்றியும், இவரது ஓவியங்கள் பற்றியுமான சுருக்கமான அறிமுகக்குறிப்பொன்றினை அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தோம். தற்போது இவருடனான நேர் காணலினைப் பிரசுரிக்கின்றோம். இவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு இந்நேர்காணல் உதவும். 'பதிவுகள்' சார்பில் இந்நேர்காணலைக் கண்டவர் எழுத்தாளர் ஜோதிகுமார். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -
கேள்வி: உங்கள் சிறு வயது குறித்தும், உங்களுக்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட ஓவிய நாட்டங்கள் குறித்தும் கூற முடியுமா?
பதில்: நான் ஆரம்ப கல்வியை கற்றது சென்ஜோன் பொஸ்கோ கல்லூரியில். எனது தந்தை மு.சு.வீரப்பா, ஹட்டன் நீதிமன்றத்தில் ஒரு மொழிப்பெயர்ப்பாளராக (முதலியாராக) இருந்தார். அவர், 1940 களில் இருந்தே நீதிமன்ற அலுவலராக இருந்து வந்துள்ளார். ஓர் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தை பெற்ற அவர் பொதுவில் வாசிப்பதில் அதிக அக்கறை கொண்டவர். அவரும் எனது சென்ஜோன் பொஸ்கோ கல்லூரியில் அதிபராக பணியாற்றிய வணக்கத்துக்குரிய பிரதர் தோமஸ{மே என்னை முதன் முதலாக இனங்கண்டு என்னை ஓவியத்திற்கான தூண்டுதலை தந்தவர்கள்.
கேள்வி: அப்படியென்றால் உங்கள் தந்தையைப் பற்றியும், பிரதர் தோமஸை பற்றியும் அவர்கள் எவ்வகையில் ஓவியங்கள் தொடர்பில் உங்களுக்கு உதவினார்கள் என்று கூற முடியுமா?
பதில்: முதலில் எனது தந்தையாரை பற்றி கூறுவது பொருத்தமானதாக இருக்கும். எனக்கு பத்து வயதாக இருக்கும் போதே எனது தந்தையாரானவர் நான் ஓவியத்தில் ஈடுபாடு கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வரைவதற்கான ஓவிய தாள்களையும் வர்ணப்ப10ச்சிகள் செய்வதற்கான வண்ணங்களையும் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார். அதுமாத்திரமல்லாமல் பண்டிகைகள் வரும் போதெல்லாம் அஞ்சல் அட்டைகளை வாங்கி அவற்றில் என்னை ஓவியங்கள் தீட்ட வைத்து அவற்றை தனது நண்பர்களுக்கு அனுப்பி மகிழும் வழக்கமும் அவரிடம் இருந்தது. போதாதற்கு மாலை வேளைகளில், வேலை பளுக்கள் மிகுதியான நாட்களில், ஓரளவு மது அருந்திவிட்டு தன்னிடமிருந்த கலைக்களஞ்சிய தொகுதிகள் (encyclopedia) பதினொன்றில் அவர் விரும்பியதை தேர்ந்து வாசித்துக் கொண்டிருப்பார். அச்சமயங்களில் ஓவியர்களை பற்றி அவர் வாசிக்க நேரும் போதெல்லாம் என்னையும் அழைத்து அவ் ஓவியர்களை பற்றி கூறி அவர்களின் ஓவியங்களையும் காட்டி என்னிடம் விவரிப்பதில் இன்பமடைவார்.