சிறுகதை: ஒரு வாய் சோறு! - இணுவையூர் சக்திதாசன், டென்மார்க் -
அவன் கன்னங்கள் இரண்டிலும் வழிந்த கண்ணீர் உதட்டில் விழுந்து உப்பு கரித்த போதுதான் அது கண்ணீர் என்பதை, உணர்ந்தான் ஏகாம்பரம்.
அவன் நினைவுகள் உணர்வுகளற்று உதிரியாக ஆங்காங்கே திட்டுதிட்டாய் நிற்கும், மேகக்கூட்டங்கள் போல திசைமாறி நின்ற இடத்தில் நின்றன. அப்பப்ப உணர்ச்சிகள் உரசப்படும்போது. மேகம் கறுத்து மழை பொழிவதுபோலத்தான் அவன் கண்களும் .
வாழ்வின் நீள அகலங்களை அளந்தவன் ஏகாம்பரம். ஆனாலும், எதிலும் மனம் ஒட்டிக் கொள்ளாமல் வாழை இலையில் விழும் தண்ணீரைப் போல எந்த சந்தோசத்தையும் ஏற்க மறந்தவனாய் விரக்தியின் விளிம்பில் நின்று வாழ்வைக் கடந்து கொண்டிருந்தான்.
வேளாவேளைக்குசாப்பாடு, நேரம்தவறாமல் தண்ணிவண்ணி , கூல்றிங்க்ஸ்.. சாப்பாட்டுக்குப் பிறகு, நொட்டு நொறுக்குகள், பழங்களென ... எந்தக் குறையுமில்லாத வாழ்வுதான் ஏகாம்பரத்தினுடையது.
இதை விட பணிவிடை செய்ய பணியாட்கள் .. வெளியேசென்றுவர வாகன வசதிகள் என, எல்லாம் இருந்தும் எதுவுமில்லாத உணர்வுடன் தான் ஏகாம்பரத்தின் வாழ்வு கரைந்து கொண்டிருந்தது.
எப்பவும், முப்பது நாற்பது பேர் அவனைச் சுற்றியிருந்தாலும், யாருடனும் அனாவசியமாகப்பேச விரும்பமில்லாமல். புன்னகை ஒன்றை மட்டும் வீசிவிட்டு, கடந்து சென்று விடுவான். அவனுக்கென்று இருக்கின்ற பிரத்தியேக அறையில் தானும் தன்பாடுமாய் தனிமையில் இருப்பதையே அவன் விரும்புவான்.