காலமும் கணங்களும்: வெள்ளிச்சிறகடிக்கும் வெண்புறாவை வானலையில் பரவச்செய்த கவிஞன் ! - முருகபூபதி -
* ஜூலை 15 எழுத்தாளர் எம்.எச்.எம்.ஷம்ஸ் பிறந்த தினம். இதனையொட்டி இக்கட்டுரை வெளியாகின்றது. - பதிவுகள்.காம் -
மல்லிகை இதழ் ஊடாக அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவா இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய தென்னிலங்கை ‘திக்குவல்லை’ யை ஒரு கணம் நினைத்தவுடன் அடுத்தடுத்து பல படைப்பாளிகளின் பெயர்கள்தான் எமது நினைவுக்கு வரும். இவர்களில் முதன்மையானவர் எம். எச். எம். ஷம்ஸ். மல்லிகை எனக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் திக்குவல்லை கமால், எனக்கு அறிமுகப்படுத்தியவர்தான் ஷம்ஸ். எனது இலக்கியப் பிரவேசத்தையடுத்து, திக்குவல்லையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின் ‘பூ’ என்ற புதுக்கவிதைத் தொகுதியை அச்சிடுவதற்காக கமால், நீர்கொழும்புக்கு வந்தார். அவருடன் வந்தவர் ஷம்ஸ். இது நிகழ்ந்து நான்கு தசாப்தங்கள் கடந்திருக்கலாம். அப்பொழுது எனது அக்கா, பிரசவத்திற்காக வீட்டுக்கு வந்திருந்தார். பிள்ளை இன்றோ – நாளையோ பிறக்கவிருக்கும் பரபரப்பான சூழ்நிலை வீட்டிலே. கமாலையும் ஷம்ஸையும் எமது மாமா மயில்வாகனன் அவர்களின் சாந்தி அச்சகத்தில் இரவு தங்க வைத்தேன். நானும் அவர்களுடன் தரையில் பாய் விரித்து உறங்கினேன். இந்த அச்சகத்திலிருந்து 1966 ஆம் ஆண்டில் அண்ணி என்ற இலக்கிய இதழும் வெளியானது. எனது முதல் கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள், எழுத்தாளர் ஐ. சாந்தனின் ஒரே ஒரு ஊரிலே கதைத்தொகுதி மற்றும் புத்தளம் கவிஞர் தில்லையடிச்செல்வனின் விடிவெள்ளி , கவிஞர் ஈழவாணனின் அக்னி இதழ் என்பனவும் வெளியாகியிருக்கின்றன. அன்று இரவு நாம் எங்கே உறங்கினோம்? விடிவிடிய இலக்கியச் சமாதான். ஷம்ஸ் பலதரப்பட்ட இலக்கியப் புதினங்களையும் மிகுந்த நகைச்சுவை உணர்வோடு சொல்லிச் சொல்லி எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.
‘நஸ்ருல் இஸ்லாம்’ என்ற இலக்கியமேதையை ஷம்ஸிடமிருந்தே கேட்டுத் தெரிந்து கொண்டேன். மறுநாள் மதியம் ஷம்ஸுடன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்றவரும் - எனது பாடசாலை ஆசிரியருமான ரஸாக் மாஸ்டர், எங்கள் மூவரையும் தமது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். நீர்கொழும்பு கடற்கரைவீதியில் அம்மன் கோயிலுக்கு சமீபமாக எழுந்திருக்கும் பிரபலமான டொலர் ஸ்ரூடியோவின் ஸ்தாபகர் இந்த ரஸாக் மாஸ்டர் என்ற ஒளிப்படக் கலைஞர். இப்பொழுது அவரும் இல்லை. ஷம்ஸ் மேல் உலகம் புறப்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பு அவரும் போய்விட்டார். எனினும் இன்றும் அவர் நினைவாக நீர்கொழும்பில் டொலர் ஸ்ரூடியோ. அந்தக்கட்டிடம் அமைந்த இடத்தில் இருந்த சிறிய வீட்டில்தான் எமக்கு மதிய விருந்து.