அஞ்சலி: சமூக,அரசியற் செயற்பாட்டாளர் நவரஞ்சன் (கோண்டாவில்) மறைவு! - வ.ந.கிரிதரன் -
இன்று ஒரு துயரம் நிறைந்த நாள். எதிர்பாராத தகவலொன்றினை நண்பர் சிவா கந்தையா 'மெசஞ்சர்' வாயிலாக அனுப்பியிருந்தார். நண்பர் குணபாலனும் தொலைபேசியெடுத்து அறியத்தந்திருந்தார். அவருடன் தொடர்பிலிருந்த நண்பர் கிருஷ்ணாவும் அறியத்தந்திருந்தார். நண்பர் நவரஞ்சனின் (கோண்டாவில்) மறைவு பற்றிய செய்தி. நம்ப முடியவில்லை. நேற்றிரவு கூட எட்டு மணியளவில் முகநூலில் பதிவிட்டிருக்கின்றார். செய்தியைக் கேட்டபோது மன அழுத்தம், கொரோனாத் தொற்று நோய்த்தனிமை இவையெல்லாம் இன்னும் எத்தனைபேரை நம்மிடமிருந்து பிரிக்கப்போகின்றதோ என்ற எண்ணமே மேலெழுந்தது. கூடவே அவரை முதன் முதலில் சந்தித்த காலகட்ட நினைவுகள் எழுந்தன. நாட்டை விட்டு நீங்கி, அமெரிக்காவில் ஒரு வருடம் அலைந்து திரிந்து, 'கல்வியங்காடு கண்ணன்' என்னும் நண்பருடன் மொன்ரியால் வழியாகக் கனடாவுக்குள் வந்தபோது கண்ணன் மூலம் தற்காலிகமாக மொன்ரியாலில் கோண்டாவில் சுந்தரி (சிவா ஸ்டோர்ஸ் சுந்தரலிங்கம்) , ரஞ்சன் போன்றோர் வசித்து வந்த அபார்ட்மெண்டில் தங்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளைக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள் சுந்தரியும் அவரது நண்பர்களும். சுந்தரி, நவரஞ்சன், குணபாலன், ஜெயந்தி (உரும்பிராய்), கஜன் , குகன் என்று இளைஞர்கள் பலர் உத்தியோகபூர்வமாகக் கழகத்துக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
அக்காலகட்டத்தில் மொன்ரியாலிலிருந்து 'புரட்சிப்பாதை' என்னும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். நவரஞ்சன் அச்சஞ்சிகை வெளிவருவதற்காகக் கடுமையாக உழைத்தவர்களிலொருவர். இலட்சியக் கனவுகளுடன், எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இயங்கிக்கொண்டிருந்த நவரஞ்சனின் முகம் இப்பொழுதும் நினைவில் பசுமையாக காட்சியளிக்கின்றது.