ரூபா! - ஶ்ரீரஞ்சனி -
எம்மவரை ஊக்குவிக்க வேண்டுமென்ற உந்துதல், எங்களின் கதை எப்படிச் சொல்லப்படுகின்றது என்பதை அறியும் ஆர்வம், நடிகர்கள் தெரிந்தவர்களாக இருத்தல், தெரிந்த இடங்களின் காட்சிப்படுத்தலைப் பார்ப்பதிலுள்ள பரபரப்பு - இப்படியான காரணங்களினால் இலங்கைத் தமிழர் பற்றிய அல்லது இலங்கைத் தமிழர் இயக்கும் படங்களை/நாடகங்களைப் பொதுவில் நான் தவறவிடுவதில்லை.
அவ்வகையிலேயே ரூபா என்ற இந்தத் திரைப்படத்தையும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். நடிகர்களின் நடிப்பு, உடல்மொழி, கமெரா யாவும் நன்றாக இருந்தன. உடல் ஆரோக்கியம் மிகவும் குன்றியிருப்பதால், குடி, புகை என்பவற்றை விட்டுவிடுவதும் ஒழுங்காக மருந்தெடுப்பதும் அவசியமென மருத்துவர் ஆலோசனை வழங்கும் ஒரு சூழலில் கதையின் நாயகனான அன்ரனி அறிமுகப்படுத்தப்படுகிறான். ஆனால், அந்த ஆலோசனையை அவன் சற்றும் பொருட்படுத்தவில்லை என்பதை அந்தக் காட்சியமைப்பும் தொடர் நிகழ்வுகளும் பார்வையாளர்களுக்கு நன்கு புலப்படுத்தின. மருத்துவர் என்ன சொன்னார் என விசாரிக்கும் மனைவியுடன் அந்த உரையாடலைப் பகிர்ந்துகொள்வதிலோ அல்லது குடி, புகை என்பவற்றை விட்டுவிடுவதிலோ, இரண்டு சிறிய பெண் பிள்ளைகளின் அப்பாவான அவனுக்கு எந்தவிதமான ஈடுபாடும் இருக்கவில்லை. அவ்வாறே குடும்பத்திலும் பெரிய ஈர்ப்பு எதையும் அவன் காட்டவில்லை. வசதியான, பெரிய வீட்டில் அவர்கள் வாழ்கிறார்கள், ஆனால் கடனால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் அவனின் barக்கு வரும் ரூபா என்ற ஓர் இளம் பெண்ணுடன் அவனுக்கு ஏற்படும் பழக்கம் காதலாகிறது. அதன்பின்பே அவள் ஒரு மாற்றுப்பாலினப் பெண் என்பது அவனுக்குத் தெரியவருகிறது (ஆனால் ரூபாவின் குரலும் தோற்றமும் அவள் ஒரு மாற்றுப்பாலினப் பெண் என்பதை அவள் படத்தில் அறிமுகம் ஆகும்போதே எங்களுக்குக் கூறிவிடுகிறது என்பது வேறுவிடயம்). முதலில் அந்த உண்மை அவளில் அவனுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. பின் அவனுக்கு அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனின் barக்குப் பொருள்கள் வாங்கவேண்டுமெனப் பொய்சொல்லி மனைவியின் கிரடிற் காட்டில் காசெடுத்து தாய்லாந்துக்குப் போய் அவள் செய்துகொள்ள விரும்பிய பால்மாற்றுச் சிகிச்சையை விரைவாகச் செய்யும்படி அவளுக்குப் பணம் வழங்கவும் அவன் முன்வருகிறான்.