உண்மையை உரைப்பேன்! - நந்தினி சேவியர் -
- தற்போது முகநூலில், பதிவுகளில் இடம் பெறும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் இடம் பெறும் கருத்துகளையிட்டு , எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது கருத்துகளை அனுப்பி வைத்துள்ளார். அவற்றையும் இங்கு பகிர்கின்றோம். - பதிவுகள் -
1966 அக். 21 ல் சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும் எனும் கோசத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆர்த்தெழுந்த மக்கள் பேரணி தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமாக சகல விளிம்பு நிலை மக்களுடைய இயக்கமாக பரிணமித்தது. அதன் பின்னணியில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி. சாதி ஆணவத்திற்கு எதிரராக நின்றமையால் ஆதிக்க சாதிவெறியர்களாலும், அவர்களது காவல் நாய்களாலும் தாக்கப்பட்ட, அடைக்கப் பட்ட எண்ணிறைந்தவர்களை என்னால் அடையாளப்படுத்தப்பட முடியும். நான் மு.தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த இதனை எழுதவில்லை அவரது பணியை வரவேற்கிறேன். ஆனால் அவரை அவரது செயலை விதந்து பேசுவோர்களது அரசியல் உள் நோக்கம் என்ன.? நான் கூறப்போகும் இரண்டு விசயங்கள் உங்களுக்கு தெரியாதது என சாட்டுச் சொன்னாலும். மு.தளையசிங்கம் இதனை கண்டு கொள்ளவில்லை என்பது எனது குற்றச்சாட்டு.
1. நிச்சாமப் போராட்டம் பற்றி உலகமே அறியும். மாவிட்டபுரம், பன்றித்தலைச்சி ஆலயப்பிரவேசப் போராட்டம் பற்றி மட்டுவில், மந்துவில், கன்பொல்லை சாதி எதிர்ப்பு நடவடிக்கைககள்பற்றி தளையசிங்கம் அறியாததல்ல. அதுபற்றி அவர் ஏன் எழுதவில்லை..?
2. மான் முத்தையா எனும் சங்கானையைச் சேர்ந்தவர். ஒருகாலம் சங்கானை நகரசபைச் சேர்மனாக இருந்தவர். பஞ்சமர் சமுகத்தைச் சேராதவர். நிச்சாம. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்றமையால் தனது சமுகத்தவர்களால் பொலிசில் காட்டிக்கொடுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, சிறுநீர் பருக்கப்பட்டு கொடூரத்தை அனுபவித்த வரலாறு உண்டு. இதனை இந்தப் பிரபஞ்சயதார்த்தவாதியை சிலாகிக்கும் பிரமுகர்கள் அறியவில்லையா, மு.த கூட அறியவில்லையா.?