முருக வழிபாடும் வெறியாட்டும்! - முனைவர் ஜெ.காவேரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். -
தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுபவர். முருகவழிபாடு தமிழகத்தைப் பொறுத்தவரை தொல்காப்பியர் காலத்திலேயே குறிக்கப்பட்டதாய் உள்ளது. மலைநாட்டுக் கடவுளாக முருகப்பெருமான் சங்க இலகக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளார். சங்க காலத்தை சேர்ந்த மலைப்பகுதிகளில் வசித்து வந்த குறவ இனத்தவர் தங்களது கன்னிப் பெண்களைக் தொல்லைப்படுத்திய அணங்கில் இருந்து அவர்களை வெளியில் கொண்டுவர வெறியாட்டு என்ற நிகழ்ச்சி அல்லது விழா என்பதைக் கொண்டாடினார்கள். இதைப் பற்றியக் குறிப்பு அணங்குடை முருகன் (புறநானூறு : 299:6); அணங்கு பெண்கள் , நெடுவேல் அணங்குறு மகளிர் (குறிஞ்சிப்பாட்டு: 174-175) போன்ற பல இலக்கியங்களில் உள்ளன. முருகனை வேண்டி செய்யப்படும் அப்படிப்பட்ட வழிபாடுகளை முருகு ஆற்றுப்படுத்தல் (அகநானுறு. 22:11); முருகு அயர்தல் (குறிஞ்சிப்பாட்டு: 362:1); வெறி (நற்றிணை. 273:4-5; பரிபாடல்i. 5:15); வெறியயாடல் (அகநானூறு 182:17-18); வெறியாட்டு என்பார்கள். ஐந்குறுநூறு என்பதில் நூறு செய்யுட் பத்திகளில் பத்து செய்யுட் பத்திகளில் வெறியாடல் குறித்து கூறப்பட்டு உள்ளது.
வெறியாடு – சொல் விளக்கம்
‘வெறி“ என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் பெரும்பாலும் ஆவேசம் என்று பொருள் கூறுகின்றன. லிப்கோ அகராதி வெறி என்ற சொல்லுக்கு முருகன் பூசை என்று கூட இன்னும் ஒரு பொருளையும் காட்டுகிறது. பழங்காலத்தில் வெறி என்பதற்கு மணம் என்னும் பொருளை வழங்கி வந்தனர். ’வெறிகமழ் பொழில்’ ‘வெறிமலர்’ என்றெல்லாம் பழைய செய்யுள்களில் காண முடிகிறது. ஒரு குறியையே நோக்கிச் செல்லும் உறுதியான மனப்போக்கும் அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் தன் இயல்பு மாறுதலும் வெறி எனப்படும். அது தன்னை மறந்த நிலையாகும். அந்த நிலையில் இருப்பவர்க்குப் அப்போது தான் செய்யும் செயல்கள் எதுவுமே நினைவில் தங்குவதில்லை. இதையே பித்துப் பிடித்தவர்கள், பைத்தியம் பிடித்தவர்கள், மனநிலைம் பிறழ்ந்தவர்கள் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.
பழந்தமிழ் மக்களிடத்தே வெறியாடல் அல்லது வெறியயர்தல் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் நிலவி வந்திருக்கிறது. வாழ்வில் தம்மால் புரிந்துகொள்ள முடியாத, தீர்வு காண முடியாத சிக்கல்கள் தோன்றும் போது அதைத் தீர்த்தருளுமாறு தாங்கள் வழிபடும் கடவுளுக்குச் செய்யும் பூசையாக இதனை நிகழ்த்தி இருக்கிறார்கள்.