அறிஞர் அ.ந.கந்தசாமியின் மலையக இலக்கியப் பங்களிப்பு பற்றிய குறிப்புகள்! - வ.ந.கி -
எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மலையக மக்கள் பற்றிய இலக்கியப் பங்களிப்பு பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அ.ந.க பற்றித் தினகரனில் எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
1. "கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார்."