இலங்கை அரசியல்: முஸ்லீம் இனவாதமும் - இலங்கையில் தேர்தலும் - மன்சூரின் எடுகோள்களை முன்வைத்து ...! (இறுதிப் பகுதி) - ஜோதிகுமார் -
7
ரணில் விக்ரமசிங்க அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதலாய், முஸ்லீம் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் யாவும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்துள்ளதாகவே பார்க்கப்படுகின்றது. உதாரணமாக, முஸ்லீம் தீவிரவாதத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைதான பலரும் இன்று விடுவிக்கபட்டே உள்ளனர்.
அர்ணாப்ஜெசிம் முதல் (579 நாட்கள் சிறையில்), சஹ்ரானின் மனைவி வரை கிட்டத்தட்ட கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று விடுதலைப்பெற்று உள்ளனர் (16.03.2023). இது போலவே, இஸ்புல்லா பல்கலைக்கழகம் முதல் அடிப்படைவாத பிரசுரங்களாக கருதப்பட ஜெசீமினது மடிகணனி, மற்றும் நூற்றைம்பது புத்தகங்கள் போன்றவையும் விடுவிக்கப்பட்டுள்ளன என்பது போக, இதுவரை பதிவுசெய்யப்படாத பள்ளிவாசல்களை பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும,; ஏற்கனவே பதிவுக்கோரி விண்ணப்பித்திருந்த நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களை பதிவு செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வெளியாகியுள்ள செய்திகளின் முக்கியத்துவம் இலகுவில் புறந்தள்ள முடியாதது. (விடிவெள்ளி:14.02.2023). (இச்சூழலில் தமிழ் அரசியல் கைதிகளின் வழமையான துர்பாக்கிய நிலைக்குறித்த கேள்விகளை அவரவர் எழுப்பிக்கொள்வது அவரவர் விடயமாகின்றது.)
மேலும் சில மதங்களின் முன், ரணில் விக்ரமசிங்க அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளதையும் இதனுடனேயே, நாம் இணைத்து பார்த்தாக வேண்டியுள்ளது. “முஸ்லீம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும்’. (வீரகேசரி:23.10.2023).