சீர்மியத்தொண்டராகவும் இயங்கும் இலக்கியவாதி கோகிலா மகேந்திரன்! நவம்பர் 17 அவரது பிறந்ததினம்! - முருகபூபதி -
இம்மாதம் 17 ஆம் திகதி தனது பிறந்த தினத்தை கொண்டாடும் எழுத்தாளர், சீர்மியத் தொண்டர், திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களை நான் முதல் முதலில் சந்தித்த ஆண்டு 1984. அவரது எழுத்துக்களை ஊடகங்களில் படித்திருந்தாலும் நேருக்கு நேர் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் அதற்கு முன்னர் கிட்டவில்லை. கோகிலாவின் இரண்டாவது கதைத் தொகுதி முரண்பாடுகளின் அறுவடை நூலுக்கு முகப்பு ஓவியம் வரைந்தவரான பொன்னரி ( இயற்பெயர் கனகசிங்கம் ) வீரகேசரியில் எனது சமகால ஊழியர். அந்த நூலுக்கு தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் அதன் அதிபர் எழுத்தாளர் த. சண்முகசுந்தரம் ( தசம் ) அவர்களின் தலைமையில் வெளியீட்டு அரங்கினை ஒழுங்குசெய்துவிட்டு, என்னை உரையாற்ற வருமாறு கோகிலா கடிதம் எழுதி அழைத்திருந்தார்.
அக்காலப்பகுதியில் வீரகேசரி வாரவெளியீட்டில் ரஸஞானி என்ற புனைபெயரில் வாரந்தோறும் இலக்கியப்பலகணி எனும் பத்தி எழுத்தை எழுதிவந்தேன். அக்காலப்பகுதியில் கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருந்த எழுத்தாளர் புலோலியூர் இரத்தினவேலோன் ஊடாக நான்தான் அந்த ரஸஞானி என அறிந்துகொண்டு, என்னை உரையாற்ற வருமாறு அழைத்ததுடன், எனது பொருளாதார நிலையறிந்தோ என்னவோ, எனது பயணப்போக்குவரத்துச்செலவுக்கும் பணம் அனுப்பியிருந்தார். அத்தகைய விந்தையான ஆளுமை கோகிலா மகேந்திரனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கூறியவறே இந்தப்பத்தியை எழுதுகின்றேன்.