தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலையம்) அமைப்பின் சமூக, அரசியல், கலை இலக்கியப்பங்களிப்புகள் பற்றிய சுருக்கமான அறிமுகப் பதிவு! - வ.ந.கிரிதரன் -
கனடாத் தமிழ்க் கலை, இலக்கிய உலகில் , சமூக,அரசியற் செயற்பாடுகளில் ஓர் அமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால் இதுவரை இவ்வமைப்பு பற்றிய ,விரிவான , பூரணமானதோர் ஆய்வெதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்காக இவ்வமைப்புக்கு விருதுகள் எவையும் கொடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. இருந்தாலும் இவ்வமைப்பு, எவ்விதப் பயன்களையும் கருதாமல் , இன்னும் இயங்கிக்கொண்டுதானுள்ளது. காலத்துக்குக் காலம் இவ்வமைப்புடன் இணைந்து இயங்கியவர்கள் பலர் ஒதுங்கி விட்டாலும், இன்னும் சிலர் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டுதானுள்ளார்கள். இவ்வமைப்பு பற்றிய விரிவான ஆய்வில் இதுவரை இவ்வமைப்புடன் இணைந்து இயங்கியவர்கள் பற்றிய விபரங்களும் ஆவணப்படுத்தப்படுவது அவசியம். இப்பொழுது இந்த அமைப்பு எதுவென்னும் கேள்வி உங்கள் உள்ளங்களில் எழும்பத்தொடங்கியிருக்கும். இந்த அமைப்பு தேடகம் என்று அறியப்பட்ட தமிழர் வகைதுறை வளநிலையம்.
தேடகம் அமைப்பின் இதுவரை காலப் பல்வகைப் பங்களிப்புகளையும் நோக்கினால் பின்வரும் வகைகளில் அவற்றைப் பிரித்துப்பார்க்கலாம்:
1. நூலகப் பங்களிப்பு.
2. சமூக, அரசியற் செயற்பாட்டுப் பங்களிப்பு.
3. நாடகத்துறைப் பங்களிப்பு.
4. பதிப்புத்துறைப் பங்களிப்பு.
5. சஞ்சிகைப் பங்களிப்பு.
6. பல்வகை இலக்கிய நிகழ்வுகளை (நூல் வெளியீடு உட்பட) ஏற்பாடு செய்து நடத்தும் பங்களிப்பு.
1. நூலகம்
எண்பதுகளில், தொண்ணூறுகளில் பார்ளிமெண்ட் & வெலஸ்லி பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த தேடகம் அமைப்பினரின் நூலகம் கனடாத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான நூலகம். அங்கு தமிழப்பத்திரிகைகள், சஞ்சிகைகளை வாசிப்பதற்காகவும், நூல்களை இரவல் பெறுவதற்காகவும் சென்றவர் பலர். தேடகம் நூலக எரிக்கப்பட்டதானது கனடாத் தமிழர் மத்தியில் ஒரு கரும்புள்ளியாக எப்போதுமிருக்கும்.