(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள் (8): குளக்கரை - எல்.ஜோதிகுமார் -
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
அமைதியாக கிடந்தது குளம்.
பூம்பாறை செல்லும் வழியில், ஒரு சாலையோர தேநீர் கடைக்காரர் என்னை எச்சரித்திருந்தார், காடுகளின் ரம்மியங்கள் குறித்து பேசும் போது:
“நேரே மண்ணனூர் போயிருங்க சார்… காடு… அப்படி ஒரு காடு… ஆனா நீங்க யாராவது ஒரு ஃபாரஸ்ட் ஆப்பிசரோடத்தான் உள்ள போகனும்… ஏன்னா வனத்து தேவதைக வாசம் செய்ற காடு அது… அடிக்கிற காத்துலேயே வசியம் கலந்து இருக்கு… ஆள மயக்கி, புத்திய பேதலிக்க வச்சு அப்படியே சர்ருன்னு உள்ளுக்கு இழுத்துக்கும்…”
இலக்கியங்களும், மனிதர்களை காடுகள் எப்படி எப்படி ஆகர~pப்பதாய் இருக்கின்றன என்பதை நன்கு பதிவு செய்தே உள்ளன. இதுபோலவே இக்குளமும் சிற்சில மனிதர்களை தன்வசம் இழுத்து உள்ளே வைத்து கொள்கின்றதோ என்ற சந்தேகம் இப்போது என்னிடம் பெரிதாய் எழுந்தது.
இக்கேள்விகள் எல்லாவற்றிற்கும், காரணமே பெரியவர்தான்.
அவரது வார்த்தைகளில் கூறுவதானால், “எங்கோ பிறந்து, எங்கோ அலைந்து”, பின் போராடி, ஸ்தாபித்து, அலைகளால் எத்துண்டு வாழ்வால் அலைக்கழிக்கபட்டு போன ஒரு நாராய் இப்புல்வெளியில் வந்து சாய்ந்த அவரை, இக்குளமே அரவணைத்து ஆசுவாசப்படுத்தியிருக்க கூடும். பெருந்தன்மையும், வாழ்வில் தன் சக மனிதனை முடிந்தவரை உய்விக்க முயன்று அவனுக்காய் அனுதாபங்கள் கொண்டு விசனிக்க தலைப்பட்டவர் அவர். அவரின் அகத்திடை தோய்தலுக்கான ஓர் வெளியையும் இக்குளமே அவருக்கு ஏற்படுத்தி தந்திருக்கவும் கூடும். “மூளையில சிக்கினிச்சோ, அப்புறம்…” என்று சமயங்களில் மனிதர்களின் எச்சரிப்புகளுக்குள்ளாகும் இக்குளம் சிலரது வாழ்வில், பனிபடர் பர்வத சாரல்களின் குகை தவங்களா என்பதும் புரியவில்லை.