எழுத்தாளர் குரு அரவிந்தனிடமிருந்து "சிறுகதை எழுதுவது எப்படி?" பயிற்சிப்பட்டறை! -பவானி தர்மகுலசிங்கம் -
எமது கனடா கவிஞர் கழகமானது ஒவ்வொரு மாதத்தின் கடைசிக் கிழமையிலும் தமிழறிஞர்கள், படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை அழைத்து மெய்நிகர் வழியாகச் சிறப்புரைகளையும், கலந்துரையாடல் களையும் நடத்தி வருகின்றது. அதன்படி, சென்ற செப்ரெம்பர் மாதம் இருபத்தைந்தாம் திகதி சனிக்கிழமை எமது கழகத்தின் இணைய வழிக் கலந்துரையாடல் காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரபல எழுத்தாளரும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவருமான குரு அரவிந்தன் அவர்களின் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்ற பயிற்சிப்பட்டறை இடம் பெற்றது. முதலில் கழகத்தின் தலைவர் திரு. கந்த ஸ்ரீ பஞ்சநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து பொருளாளர் திரு. குமரகுரு. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுத்தாளர் குரு அரவிந்தனை அறிமுகம் செய்து வைத்தார்.
அடுத்து ‘கவிஞர்களும் எழுத்தாளராகலாம்’ என்ற தலைப்பில் குரு அரவிந்தன் சிறுகதை எழுவது எப்படி என்பது பற்றியும், ஏன் அதிக மக்களால் சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன என்பது பற்றியும் விளக்கங்களைத் தந்தார். சிறுகதையின் தொடக்கம், அதன் வளர்ச்சி, இன்றைய நவீன சிறுகதைகள் பற்றி உதாரணங்களையும் இலகு நடையில் எடுத்துச் சொன்னார். மேலும் அவர் தனது உரையில் சிறுகதைகள் எவ்வாறு எழுதப்படவேண்டும் எனவும், அவை எவ்வாறு வாசகர் உள்ளங்களைச் சென்றடையும் என்னும் பொருளிலும் பின்வரும் வழி முறைகளை எடுத்துச் சொன்னார்.