என்னுரை! - வ.ந.கிரிதரன் -
இம்மாத இறுதிக்குள் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எனது சிறுகதைத் தொகுப்பான 'கட்டக்கா(கூ)ட்டு முயல்கள்' தொகுப்புக்காக நான் எழுதிய என்னுரையினைக் கீழே தருகின்றேன்.
"இத்தொகுப்பிலுள்ள சிறகதைகளில் இறுதியிலமைந்துள்ள சுமணதாஸ் பாஸ் குறுநாவலைத் தவிர ஏனையவை கனடாவிலுள்ள 'டொராண்டோ' மாநகரில் வாழும் இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் பல்வேறு வகையான புகலிட அனுபவங்களை மையமாகக் கொண்டவை. உண்மையில் சுமணதாஸ் பாஸ் குறுநாவல் கூடப் புகலிடத் தமிழ் அகதி ஒருவனின் நனவிடை தோய்தலாகத்தானமைந்துள்ளது. அவ்வகையில் அது கூடப் புகலிட அனுபவத்தின் வெளிப்பாடு என்றும் ஒருவகையில் கூறலாம். ஏனென்றால் இழந்த மண்ணில் கழித்த நினைவுகளின் நனவிடை தோய்தல் கூட புகலிடத் தமிழ் அகதி ஒருவரின் அனுபவங்களில் உள்ளடங்கிய ஒன்றுதான். மேற்கு நாடுகளை நோக்கிப் புகலிடம் நாடிச் சென்ற இலங்கைத்தமிழ் அகதிகளின் முதலாவது தலைமுறையினரின் அனுபவங்கள் அடுத்தடுத்து வரும் தலைமுறைகளின் அனுபவங்களிலிருந்து நிச்சயம் வேறானவை. ஏனெனில் சொந்த மண்ணையிழந்து, உறவுகளை இழந்து, நண்பர்களை இழந்து, தம்மையே , தம் உழைப்பையே நம்பிப் புகலிடம் நாடி, புதிய நாடொன்றில் காலூன்ற முயற்சி செய்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்பல. அப்பொழுது ஏற்படும் அனுபவங்களும் அடுத்தடுத்து வரும் தலைமுறையினரின் அனுபவங்களிலிருந்து வேறுபட்டவை. தனித்துவம் மிக்கவை. அவ்வகையில் அவை பதிவு செய்யப்பட வேண்டியவை. அதனைத்தான் இத்தொகுப்புக் கதைகள் செய்கின்றன.
இங்குள்ள கதைகள் அனைத்துமே என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில், அல்லது நான் நேரில் பார்த்தறிந்த அனுபவங்களின் அடிப்படையில் உருவானவை. உண்மையில் கதைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், வாசித்தால் இலங்கைத் தமிழ் அகதியொருவனின் வாழ்க்கையை விபரிக்கும் அனுபவங்களை உள்ளடக்கிய நாவலொன்றினை வாசித்த உணர்வினை நீங்கள் அடைவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்.
எழுத்தாளர் ஒருவரின் படைப்பு உருவாகுவதற்குப் பல அடிப்படைக்காரணங்களுள்ளன. அப்படைப்பானது அதனைப் படைத்தவரின் கற்பனையாகவிருக்கலாம். அல்லது நடைபெற்ற சம்பவங்கள் ஏதாவது ஏற்படுத்திய பாதிப்புகளின் விளைவாக இருக்கலாம். அல்லது பத்திரிகை , சஞ்சிகைகளில் வெளிவந்த செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவாகவிருக்கலாம். இவ்விதம் பல்வேறு காரணங்களிருக்கலாம். புகழ்பெற்ற எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான 'கிழவனும், கடலும்' நாவல் தோன்றியது ஒரு பத்திரிகைச்செய்தியின் விளைவாகவென்று ஹெமிங்வேயே ஒருமுறை கூறியிருக்கின்றார். பத்திரிகையொன்றில் வெளியான 'புளூ மார்லின்' மீனொன்றால் கடலில் பல நூறு மைல்கள் இழுத்துச் செல்லப்பட்ட போர்த்துக்கேய மீனவன் ஒருவன் பற்றி வெளியான செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவே அவரது 'கிழவனும், கடலும்' நாவலின் அடிப்படை.