முருகபூபதியின் கதைத்தொகுப்பின் கதை ! சிறுகதைத் தொகுப்பில் பெண்கள் ! ஒரு கண்ணோட்டம்! - சி.ரஞ்சிதா -
எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்கு அறிமுக பாமாலை அவசியமற்றது. எழுத்துலகம் நன்கு அறிந்த ஒரு படைப்பாளி. புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் இவர் இன்றுவரை எழுத்து துறைக்குள் பயணித்துக்கொண்டு தொடர்ந்து இலக்கியப் பணி ஆற்றிவருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. அவரால் இந்த ( 2021) ஆண்டு படைக்கப்பட்ட கதைத்தொகுப்பின் கதை என்னும் சிறுகதைத்தொகுதி அண்மையில் ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. 15 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் இடம்பெறும் “அம்மம்மாவின் காதல்”, “அவள் அப்படிதான்”, “ஏலம்”, “கணங்கள்”, “நேர்காணல்” ஆகிய ஐந்து சிறுகதைகளிலும் பரந்து விரிந்து இடம்பிடித்துநிற்கும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பெண்கள் தொடர்பான சமூகப் பார்வை, அவர்கள் மீதான கரிசனை – மேலைநாட்டார் வருகையோடு தமிழ்ச்சூழலுக்குள் வேரூன்றியது. பெண் கல்வி, பெண்களுக்கு தொழில், வாக்குரிமை என அவர்களது சமூக அந்தஸ்து உயரவே மேலைநாட்டுப் பெண்ணியச் சிந்தனைகளும் வலுப்பெற ஆரம்பித்தன. அரசியல், பொருளாதாரம், கலை, கலாசாரம் - பெண்களுக்கான அங்கீகாரத்தை வழங்கவே இலக்கியங்கள் வாயிலாகவும் பெண்ணியம் பல எழுத்தாளர்களால் பேசப்பட்டன. பெண்களின் பிரச்சினைகளைப் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தமது படைப்பிலக்கியங்களில் ஆழமாக பேசியுள்ளனர். முற்போக்குச் சிந்தனையுடைய பல பெண்ணிய படைப்புக்களை தமிழ்ச்சூழலில் இன்றுவரை நாம் தரிசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.