இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை! - முருகபூபதி -
”கிழக்கு வானில் சூரியன் தங்கப்பாளமாக ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான். சூரியோதயத்தை நான் முன்னர் கடற்கரையோரங்களில் நின்று பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால், உயரத்தில், பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து, புதிய கோணத்தில் வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும் மேகங்களினூடாக அந்த அழகிய காட்சியைப்பார்த்தபோது நான் மெய்மறந்துபோனேன். ஆதவனின் ஒளிப்பிழம்புகள் கணத்துக்குக்கணம் புதிது புதிதாய் கொள்ளை அழகை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன.”
இலங்கையிலிருந்து சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வானத்தில் பறந்து வரும்பொழுது அவுஸ்திரேலியா சிட்னியில் இறங்கும் தருணத்தில் விமானம் தரைதட்டுவதற்கு முன்னர் அந்த அதிகாலைப்பொழுதின் உள்ளங்கவர் காட்சியை தரிசித்த இலக்கியப்படைப்பாளி ஞானசேகரனின் அன்றைய வர்ணிப்புத்தான் அந்த சூரிய உதயக்காட்சி. அன்று காலை அவருக்கு அவுஸ்திரேலியாவில் விடிந்தது. அன்றைய அவரது வருகையே பின்னாளில் இலக்கியவானில் ஞானம் கலை, இலக்கிய மாத இதழின் பரிமாணத்துடன் அவருக்கு பேருதயமாகியது என்பதற்கு ஒரு நேரடி சாட்சியாகி, இன்று ஏப்ரில் 15 ஆம் திகதி தமது எண்பது வயது பிறந்த தினத்தை கொண்டாடும் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களை வாழ்த்துகின்றேன்.
இலங்கையில் 1999 வரையில் நான் இவரை சந்தித்திருக்கவில்லை. 1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வதியும் தமது புதல்வரிடம் இவர் தமது துணைவியாருடன் புறப்படுவதற்கு முன்னர் மல்லிகை ஜீவாவிடம் எனது தொடர்பிலக்கம் பெற்றுள்ளார். ஒருநாள் சிட்னியிலிருந்து ஞானசேகரன் தொலைபேசியில் அழைத்தபோது, மெல்பனுக்கு அழைத்தேன். எமது இல்லத்தில் ஒரு மாலைவேளையில் இலக்கியச்சந்திப்பும் இரவு இராப்போசன விருந்தும் ஒழுங்குசெய்தபொழுது , மெல்பன் இலக்கிய ஆர்வலர்கள் செல்வத்துரை ரவீந்திரன் , டாக்டர் சத்தியநாதன், நடேசன், புவனா ராஜரட்ணம், அருண். விஜயராணி, பாடும்மீன் சிறிகந்தராசா ஆகியோர் கலந்துகொண்டனர். மெல்பனில் பாலம் லக்ஷ்மணன் அவர்களின் இல்லத்திற்கும் மாவை நித்தியானந்தனின் பாரதி பள்ளிக்கும் வேறு சில இடங்களுக்கும் அழைத்துச்சென்றேன். காரில் அமர்ந்தவாறே குறிப்புகள் எடுத்துக்கொண்டார். பயணக்கதைக்கு அவர் தயாராகிவிட்டார். இலங்கை திரும்பியதும் தினக்குரல் வார இதழில் அவுஸ்திரேலியப்பயணக்கதையை சில வாரங்கள் தொடர்ந்து எழுதி – இறுதியில் அந்தத்தொடரையே நூலாக்கினார். பேராசிரியர் சி. தில்லைநாதனின் அணிந்துரையுடனும் எனது முன்னுரையுடனும் அந்த நூல் வெளியாகியது. அவ்வேளையில் ஞானசேகரன் தமது மருத்துவப்பணி நிமித்தம் கண்டியில் வசித்தார். கண்டி முகவரியிலிருந்து ஞானம் பதிப்பகத்தினால் 1999 மார்கழியில் அந்த நூல் வெளியானது. அவுஸ்திரேலியா வந்தவர், இந்தக்கங்காரு நாட்டைப்பற்றி மாத்திரம் தகவல் சேகரிக்கவில்லை. இங்கிருந்த எஸ்.பொ, மாத்தளை சோமு, முருகபூபதி, அருண் . விஜயராணி முதலான படைப்பாளிகள், நாடகக்கலைஞர் சி. மனோகரன் ஆகியோருடனான நேர்காணலையும் பதிவுசெய்துகொண்டு, சிட்னியில் 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் வானொலி இயக்குநர் பாலசிங்கம் பிரபாகரனுக்கும் நேர்காணல் வழங்கிவிட்டு தாயகம் திரும்பினார்.