நூல் மதிப்புரை: இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

Wednesday, 28 September 2011 17:24 - வெலிகம ரிம்ஸா முஹம்மத் - மதிப்புரை
Print

இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்புடென்மார்க்கில் டெனிஷ் மொழியில் திருமதி கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை (காவிய) த் தொகுதியை விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக 163 பக்கங்களில் திரு வி. ஜீவகுமாரன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. திரு வி. ஜீவகுமாரன் அவர்கள் தனது பதிப்புரையில் ''விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக இப்படிக்கு அன்புள்ள அம்மா வெளிவருதல் பற்றி மனம் மகிழ்ச்சி அடைகிறது. காரணம் இதில் வரும் அம்மாவுடனும், அவரின் மகன் ஹரியுடனும் பதிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த ஆறு மாதகாலமாக நான் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். பிரிவு! வாழ்வின் முதல் அத்தியாயத்தில் உலகத்தை விட்டுப் பிரியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்கிறார்.

"இலக்கியம் மனிதனின் சிக்கலைக் கலைத்துவப் பாணியில் எடுத்தியம்புவது ஆகும். இப்பொழுது நாம் வாசிக்க எடுக்கின்ற புத்தகம் எளிமையான கவி நடையில் புதுக்கவிதை நடையில், வயோதிக மாது ஒருவரின் மனக்குமுறலை பதிவு செய்கிறது. முதுமை என்பது ஒரு பெரும் நூல் நிலையத்திற்கு சமமானது என ஒரு அமெரிக்க வாய்மொழி ஒன்று உண்டு. எமது நாட்டினுடைய ஈழத்து மக்களின் சமகால வாழ்வு உலகமெங்கும் சிதறிய வாழ்வாக, முதுமையான பெற்றார்களை ஆதரிக்க முடியாத ஒரு வாழ்வாக அமைந்திருப்பது எமது சாபக்கேடுதான். புலப்பெயர்வுகளால் குடும்பங்கள் குலைந்துபோக, பெற்றோர்களை விட்டுப் பிள்ளைகளும், பிள்ளைகளை விட்டுப் பெற்றோரும் வாழ்கின்ற நிலைமை.

இப்படிக்கு அன்புள்ள அம்மாவுக்கு என்கிற கவிநடையில் அமைந்த திருமதி. கலாநிதி ஜீவகுமாரனின் இலக்கியப் படைப்பின் நாயகியும் ஒரு வயதான அம்மா. இந்த மூதாட்டி ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து டென்டார்க்கில் வாழும் நாயகி. இம் மூதாட்டியின் மிகப்பெரும் அவலம் தனது மகனை ஈழத்தில் இழந்ததுதான். அவரின் இறப்புக் காலம் நெருங்க நெருங்க அந்தப் பிள்ளையின் நினைவுகள் இம் மூதாட்டியை அல்லல்படுத்துகின்றது.  அவர் அதனை தன் மனக்குமுறல்ளை கொட்டும் ஒரு வடிகாலாக, துயரங்களைக் கடிதங்களாக எழுதி தன்னை ஆற்றுப்படுத்துகின்ற ஒரு ஓட்டமாகத்தான் இந்த இலக்கிய வடிவத்தை அச்சில் கொண்டுவந்துள்ளார்.

மூதாட்டி தன் வாழ்வை கடிதம் மூலம் மகனுடன் பகிர்ந்துகொள்வதினூடாக டென்மார்க் தேசத்து வசதியான வாழ்வும், மருத்துவ வசதிகளும், மனித உறவுகளின் தொடர்புகளும் பங்களிப்புக்களும் இந்த இலக்கியத்தில் பதிவாகின்றன. திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் தாங்கள் கண்டு கொண்ட வாழ்க்கையை கூடிப்பழகிய மனிதர்களின் உறவுகளை இங்கு நன்கு பதிவுசெய்கிறார்" என்று கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் குறிப்பிடுகின்றார்.

திருமதி கலாநிதி ஜீவகுமாரன் அவர்கள் நுழைவாயிலில் என்ற தனதுரையில் "யுத்தத்திற்கு பிள்ளைகளைக் காவு கொடுத்த ஆயிரம் ஆயிரம் என் அம்மாக்கள். இவர்கள் வரிசையில் இந்த யசோ அம்மா -  இப்படிக்கு அன்புள்ள அம்மாவின் கதை நாயகி. ... புத்திர சோகம்! இது நம் தேசத்தின் சாபம்!! இந்த வலி - என் அப்பா அம்மா பட்ட வலி. என் மாமா மாமி பட்ட வலி. இது என்னையும் துரத்திய போது என்னுள் எழுந்ததுதான் இப்படிக்கு அன்புள்ள அம்மா. இது டென்னிஷ் மொழியில் கருவானது" என்கிறார்.

1. முதியோர் இல்லம் 2. ஹரி என் கனவில் வந்தான் 3. அந்த சிவத்த ரங்குப்பெட்டி 4. எனது பேரப்பிள்ளை 5. அனைத்தும் இழந்தோம் 6. அகதி முகாமில் எங்கள் வாழ்வு 7. என் உதய சூரியனே 8. பாசத்தின் போராட்டம் 9. எண்பது வயதில் ஒரு பிள்ளையைத் தத்தெடுத்தேன் 10. போய் வருகிறேன் மகனே ஆகிய தலைப்புக்களில் இப்படிக்கு அன்புள்ள அம்மா என்கின்ற காவியக் கவிதை நூல் விரிந்து செல்வதை அவதானிக்கலாம்.

டென்மார்க்கில் தனியாக காலம் கழிக்கும் அந்த மூதாட்டிக்கு இயற்கையின் அன்றாட நிகழ்வுகள் கூட தன் நிலையை உணர்த்துவதாய் கற்பனைகள் எழுந்து வதைக்கின்றன. வழமையாக நிகழும் சூரிய அஸ்தமனத்தைக்கூட தனது மகனின் பிரிவுத் துயருடன் ஒப்பிட்டு கீழுள்ளவாறு வருந்துகிறார் அவர்.

கடைசிக் காலம் எனக்கு வந்திட்டுதா? கண் கலங்குது - என் கண்மணியைக் காணாது போகப் போறன் எண்டு... அந்த சிவத்த ரோஜாக்கள் மீண்டும் என்னைப் பார்த்து சிரிக்கின்றன.. அந்திமச் சூரியன் எனக்கு கைகாட்டி விட்டுப் போவது போல இருக்குது.. அவனும் தன் தாயிடம் தான் போகின்றானா? என் மகனும் இந்த அந்திமத் தாயிடம் வருவானா? (பக்கம் 20)


தனயனின் அருகாமை இல்லாத இரவுகள் அவளுக்கு வேதனையை அள்ளித் தெளிக்கின்றன. ஆனாலும் அவள் அமைதியைத் தேட முற்படுகின்றாள். ஆழ்மனதில் கணவனின் நினைவுகள் ஊசலாடுகின்றன. மூதாட்டிக்கு தற்போது ஊன்றுகோலைத் தவிர துணைக்கென யாருமில்லை. ஊன்றுகோலையே தனது உற்ற நண்பனாக கருதும் அவள், தன்னை ஆறுதல் படுத்துவாக கீழுள்ள வரிகளில் தன்னையே ஆசுவாசப்படுத்தும் பாங்கை அவதானிக்க முடிகின்றது.

அழகிய அந்த யன்னலுக்கு வெளியே தெரியும் தெளிந்த வானமும்... கண் சிமிட்டும் நட்சத்திரங்களும் என் வீட்டுக்காரரை எனக்கு காட்டுகின்றன.. என் ஆன்மா அரவணைக்கப்படுகின்றது. ஷஷநிம்மதியாக தூங்கு யசோதா||
அமைதியாக சொல்லுகின்றார் - என் கண்கள் அவருள் ஐக்கியமாகின்றன! நானும் தூங்கப் போறன். நாளை தொடர்கின்றேன். (பக்கம் 24)

மகனே! அதிகாலை ஐந்து மணி அவசரப்பட்டு விழித்த கண்கள் மூட மறுக்கின்றன.. இரண்டு கால்களிலும் வலி இடது முழங்காலில் இன்னும் வலி.. கைத்தடியை எடுத்துக்கொள்கிறேன். என் புதிய நண்பன் அவன்! அவனின் துணை இனி எனக்கு எப்பவுமே வேண்டும். கைத்தடி இல்லாமல் இனி என்னால் நடக்க முடியாது (பக்கம் 37)

மகனை யுத்தத்தில் தொலைத்தது போல் அல்லாமல் அவனது ரங்குப் பெட்டியை ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும் அவள் தன்னுடனேயே கொண்டு வந்து விடுகின்றாள். மகனைத்தான் காணவில்லை. சிறுவயதில் அவனது பிஞ்சுக் கரங்கள் தொட்டு விளையாடிய அந்த விளையாட்டுப் பொருட்களாவது அந்தக் கிழவியை ஆறுதல்படுத்துமா? கீழுள்ள வரிகளின் அந்த ஏக்கம் துளிர்ப்பதைக் காணலாம்.

ஞாபகமிருக்கா ஹரி உன் விளையாட்டுப் பெட்டியை? சிவப்பு நிற ரங்குப் பெட்டி உன் விளையாட்டுப் பொருள்கள் அத்தனையும் அதனுள்ளே! அவற்றுடனேயே விளையாடிக்கொண்டிருப்பாய்.. அதனுடனேயே அயர்ந்து தூங்கிவிடுவாய்.. அம்மா என்னுடனே அதை எடுத்து வந்துவிட்டேன் இந்த பனிபடரும் தேசத்திற்கு! ஒவ்வொரு இடப்பெயர்விலும் அதனை மட்டும் என் கையில் எடுத்துவிடுவேன் உன்னைத் தொலையவிட்ட மாதிரி அல்லாது! (பக்கம் 38)

என் நாடிகளிலும் நாளத்திலும் இரத்தம் ஓடும் வரை.. இதயத்தின் சுவர்கள் சந்தம் மாறாமல் அடிக்கும் வரை..
சுவாசப்பைகள் இரண்டும் விரிந்து மூடும் வரை.. காதுகள் உன் குரலைக் கேட்கும் வரை.. கண்கள் உன்னைக் காணும் வரை.. உன் ரங்குப் பெட்டியுடன் இந்தத் தாய் காத்திருப்பாள்! (பக்கம் 44)

போரின் வடுக்களைப் பற்றி அந்த மூதாட்டி சொல்லும் கதைகள் வாசக உள்ளங்களையும் கவலையில் மூழ்கடித்து விடுவதை மறுக்க முடியாது. யதார்த்தமாக கதையின் பாங்கு நகர்த்தப்பட்டிருப்பதினூடாக அந்த சமூகத்தின் அவலம் எமக்கு நன்கு புலப்படுகின்றது.

ஆகாயத்தில் இருந்து தரையை நோக்கி வான வேடிக்கை தொடங்கியது.. இல்லை உயிர்வேட்டை தொடங்கியது!
எங்கள் கிராமம் உழப்பட்டது! எங்கள் வீடு எரிந்துவிட்டது! மரண பயத்தை கையால் தொட்டுப் பார்த்த முதல் கொடிய இரவு அது! நடுங்கின கைகள்.. உதறிய உடம்பு.. தடுமாறின சொற்கள்.. வேறு வழியில்லை இடம்பெயர்ந்தோம்! இரண்டாம் தடவை என் தொப்புள் கொடி அறுந்தது.. குண்டுவீச்சு தந்த இரத்த வெள்ள மரணத்தில் நெளிந்தோம். விடியலில்லாத இரவை சந்தித்த வாழ்வின் முதல் நாள் அது (பக்கம் 63)

தனது அந்திம காலத்தின் தான் ஓடியாடி விளையாடிய ஊரை ஒருமுறையாவது காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு யசோதா கிழவிக்கு ஏற்படுகின்றது. எனினும் அது சாத்தியப்படக்கூடிய விடயமில்லை. ஆதலால் அவளது உள்ளம் இவ்வாறு மௌனமாக கதறி அழுகின்றது.

ஹரி! எனக்கு பறக்கும் கம்பளம் ஒன்று அனுப்பி வைப்பாயா? சிவத்த பறக்கும் கம்பளம்! அதில் பறந்து என் தாயகத்திற்குப் போக வேண்டும். கிளித்தட்டும் எட்டுக் கோடும் விளையாடிய மண்ணில் என் சிறு கை அளாவ வேண்டும். கைகளை விரித்தபடி மழை பெய்யும் பொழுது.. வானத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும். வெள்ளம் மூடிய வயல் காணிகளில் நடந்து நடந்து போக வேண்டும். நெல்லின் கதிர்கள் என் கால்களுடன் கதை பேச வேண்டும். பள்ளிக்குச் செல்லும் பின் வளவு ஒழுங்கையூடே கைகளினால் கார் விட்டபடி ஓட வேண்டும். நான் சின்னப் பெண்ணாக வேண்டும். என் தாய் மண்ணில் விளையாட வேண்டும். பாழாய்ப் போன போர் எல்லாத்தையுமே பந்தாடிவிட்டது. பஞ்சாக்கிவிட்டது. (பக்கம் 90)

இன்று எல்லோரையும் தொற்றிக்கொண்டு விட்ட சமூக வலையமைப்பான பேஸ்புக்கிலும் தனது மகனைத் தேடியதாய் சொல்லியிருக்கிறார் அந்த மூதாட்டி. என்றாவது மகன் அதனைக் காணக்கூடும். கண்டால் அவளைத்தேடி வரக்கூடும் என்ற அந்த தாயின் எதிர்பார்ப்பு மனதை கனக்கச் செய்கின்றது.

உனக்குத் தெரியுமா? ஃபேஸ் புக்கில் உனக்கொரு பக்கம் ஒதுக்கி உன்னைத் தேடினேன். ஒரு நாள் நீ அதைக் காண்பாய். என்னிடம் வருவாய். இது கதையல்ல என் கண்ணா.. இது நிஜம்! (பக்கம் 97)

கதையின் இறுதியில் கலாநிதி ஜீவகுமாரன் வாசகர் மனதை அப்படியே கவலையால் துடிக்க வைக்கின்றார். காரணம் உலகத்தில் பரவி வரும் புற்றுநோய் மூதாட்டிக்கும் ஏற்பட்டுவிட்டது என்று மாத்திரம் கூறாமல் அது நோயாளிகளின் புறத்தோற்றத்தை எவ்வாறெல்லாம் மாற்றிவிடுகிறது. அந்த மாற்றத்தை யசோதாக் கிழவி எந்தப் பாங்கில் வெளிப்படுத்துகிறாள் என்பதை வாசிக்கும் போது கதாசிரியர் வெற்றி பெறுகின்றார் என்றே கூற வேண்டும். அந்தக் கொடுமையை விபரித்து இருக்கும் விதம் இப்படி வருகிறது.

ஹரி! நான் சொல்வதைக் கேட்டு நீ கலங்காதே. வைத்தியசாலையிடம் இருந்து இறுதி முடிவு வந்தது. உன் அம்மாவுக்கு புற்று நோயாம். மரணத்தின் வாசலுக்கு மெது மெதுவாய் அழைத்துச் செல்லும் புற்று நோயாம்!! (பக்கம் 140) 

உனக்குத் தெரியுமா ஹரி! இங்கு ஒரு ஒற்றுமை. இந்த வார்டில் ஒருவருக்கும் தலையில் முடியில்லை. கண்ணில் இமையில்லை. கான்சர் பேசண்ட் சங்கத்தின் முத்திரை இது. ஊதாக் கதிரின் வெப்பத்தில் இந்த ஊளைச் சதையில் தொங்கி நிற்கும் அத்தனை மயிர்களும் கொட்டிவிடும். நீ அம்மாவைப் பார்த்திருந்தால் பயந்திருப்பாய். இங்குள்ள அனைவருக்கும் இருட்டும் ஒன்றே. வேதனையும் ஒன்றே!! வலிகளும் ஒன்றே!!! (பக்கம் 145)

யசோதாவின் இறுதிக் காலங்கள் ஹெஸ்பிக் என்ற ஆசிரமத்திலேயே கழிகிறது. அன்னையர் தினமொன்றில் அவளது மற்ற பிள்ளைகள் ரோஜாக்களை அன்பளிப்பாக வழங்குகின்றார்கள். ஆனால் அந்த ரோஜாக்களிலும் கிழவி தனது இறுதி நாட்களையே காணுகிறாள். ஹரியின் குரலையாவது கேட்காமல் தனது இதயம் செயலிலழந்து விடக்கூடாது என கடவுளிடம் மன்றாடுகிறாள்.

ஆனாலும் என்ன ஹரியின் குரலையும் கேட்காமல், அவனையும் பார்க்காமல் பிரிவுத்துயரிலே கழிந்து வந்த அவளின் வாழ்க்கைப் பயணம் காலனின் கைகளுக்குள் அமிழ்த்தப்படுகின்றது. ஆம் யசோதா இறந்துவிடுகிறாள்! புத்தகத்தை வாசிக்கும் தொடக்கத்திலிருந்து கிழவி மகனைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் புத்தகத்தை படிக்கும் எங்களுக்கும் தொற்றிவிடுகிறது. எனினும் ஹரியைக் காணாமலேயே கிழவி இறந்த பிறகு எங்கள் மனசும் விம்மி அடங்குகிறது.

திரு. ஜீவகுமாரன், திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் ஆகிய இலக்கிய தம்பதியரின் இலக்கிய முயற்சி இன்னும் தொடர எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூல் - இப்படிக்கு அன்புள்ள அம்மா (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கலாநிதி ஜீவகுமாரன்
தமிழில் - வி. ஜீவகுமாரன்
வெளியீடு - விஸ்வசேது இலக்கியப் பாலம்
தொடர்புகளுக்கு - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 28 September 2011 17:36