நூல் அறிமுகம்: 37ம் நம்பர் வீடு (நாவல்)

Sunday, 16 October 2011 22:07 தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா மதிப்புரை
Print

நூல் அறிமுகம்: 37ம் நம்பர் வீடு (நாவல்)இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் எமது மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்கள் தமது ஈமானை இழந்து பலவீனப்பட்டுப் போய் கிடக்கிறார்கள். அல்லாஹ் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை உலக வஸ்துக்களின் மீது வைத்து அல்லல் படுவதை அவதானிக்க முடிகிறது. சூனியம் என்ற வார்த்தையில் தமது சொத்து சுகங்களை இழந்து தவிக்கின்றவர்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருப்பது கவலைக்குரிய விடயமாகவே காணப்படுகிறது. இத்தகையவற்றிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை மீட்டெடுக்க இன்று பலர் தன்னாலான முயற்சிகளை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். இஸ்லாமிய ஊடகங்களும் தமது பங்களிப்பை பல்வகைப்பட்ட தன்மைகளில் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலக்கியத் துறையினூடாகவும் ஓர் இஸ்லாமிய புரட்;சியை நிகழ்த்தி வருகின்றார் எழுத்தாளர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள். ஒரு அபலையின் டயறி, இது ஒரு ராட்சஷியின் கதை, ரோஜாக்கூட்டம் ஆகிய நூல்களையும் இவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். சமூகம் சார்ந்த விடயங்களை, இஸ்லாமிய விழுமியங்களை தனது நாவல்களினூடாக வெளிப்டுத்தும் இவர், சிங்கள மொழியில் கல்வி பயின்று தமிழில் புத்தக வெளியீடுகளை மேற்கொள்பர் என்பது வியக்கத்தகது.

37ம் நம்பர் வீடு என்ற இவரது மூன்றாவது நாவல் சூனியத்திற்காக தனது பணத்தை, ஈமானை இழந்தவர்களின் நிலையை கருவாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இது எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 19 அத்தியாயங்களைக் கொண்டு 88 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. அஸ்வர் அலி - கதீஜா உம்மா இருவரினதும் பிள்ளைகளான ருஷைத், ருஷ்தா. ருஷைதின் மனைவி ஸஹ்ரா, ருஷ்தாவின் கணவன் ஹிமாஸ். அத்துடன் அந்த வீட்டில் வேலைகளைச் செய்யும் ஹம்ஸியா. இவர்களை வைத்துத்தான் கதையம்சம் பின்னப்பட்டிருக்கிறது. இந்நாவலில், குறிப்பிட்ட ஒரு பாத்திரத்துக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அனைத்து பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் வாசகர் மனதில் பதிந்து விடுகின்றன. 

கதீஜாவுக்கு வயதாகிவிட்டதால் அவளுக்கு நுவரெலியாவின் குளிர்நிலை ஒத்துக்கொள்வதில்லை. அஸ்வர் அலியும் கொழும்பில் வீடு வாங்க வேண்டும் என்ற ருஷைதின் ஆசைக்கு இணங்கிவிட அனைவரும் தலைநகருக்கு அண்மித்த ஒர் இடத்தில் வீடு வாங்க முடிவு செய்கின்றனர். புரோக்கர் பல வீடுகளின் விபரங்களைச் சொன்னாலும் குறிப்பிட்டதொரு வீட்டை மாத்திரம் ருஷைதுக்கு பிடித்துவிடுகிறது. காரணம் அழகிய சூழலுடன் கூடிய வாகன தரிப்பிட வசதி கொண்டு அந்த வீடு அமைந்திருப்பதாகும். எனினும் அதை பலரும் பேய் வீடு என்று சொல்வதாக தன் நேர்மையை புரோக்கர் ஒப்பிக்கிறார். பேய், பிசாசு ஆகியவற்றில் நம்பிக்கை அற்ற ருஷைத் வீட்டாரிடம் இது பற்றி எதுவும் கூற வேண்டாம் என்ற கண்டிஷனுடன் அந்த வீட்டை வாங்கும் ஒழுங்குகளை கவனிக்குமாறு கூறுகிறான். தனது பிழைப்பில் மண்ணள்ளிப்போட விரும்பாத புரோக்கரும் எதைப்பற்றியும் வீட்டாரிடம் கூறாதிருக்க, வெகு சீக்கிரமாக வீடு வாங்கி அதில் அனைவரும் குடிபுகுந்து விடுகின்றார்கள். தனது தங்கையின் மகன் சுஹைல், தனது கைக்குழந்தை ஸீனத் ஆகியவர்களின் சுகாதாரத்தை எண்ணி வீட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கிறான் ருஷைத்.

அனைவருக்கும் வீடு மிகவும் பிடித்துப்போகிறது. எனினும் அந்த வீட்டில் அடிக்கடி சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. இரவு பன்னிரண்டு மணிக்கு ஹம்ஸியா முற்றம் கூட்டுவதாகவும் அதை நிறுத்தும்படி சொல்லச் சொல்லியும் மேல்மாடியில் இருக்கும் மனைவி ருஷ்தாவிடமிருந்து ஹிமாஸூக்கு தொலைபேசி வருகிறது. அவன் வெளியில் சென்று பார்க்க ஹம்ஸியா சமையலைக்குள் புகுந்து விடுகிறாள். மீண்டும் உடனே தனது அறைக்குள் சென்று விடுகிறாள். அவளது அறையருகே நிற்பது பெருந்தப்பு என்பதை உணர்ந்து ஹிமாஸ் நகர எத்தனிக்கையில் மாமா அஸ்வர் கோபப் பார்வையால் சுட்டெரிக்கிறார். அவமானம் தாங்காமல் ருஷ்தாவின் விளையாட்டுத்தனத்துக்கு அளவில்லை என்று கர்ஜித்தவாறு மாடியை அடைந்தவனுக்கு மனைவி தூங்கிக்கொண்டிருப்பது மிகுந்த ஆச்சரியமளிக்கிறது. கடைசியாக தனக்கு வந்த அழைப்பு இலக்கங்களை பார்த்தவனுக்கு இரத்தம் உறைகிறது. பத்தரை மணிக்கு தனது நண்பன் பேசிய இலக்கம் தான் தொலைபேசியில் பதிவாகியிருக்கிறது. எனினும் மாமா தன்னை அடிக்கடி சந்தேகிப்பது அவனளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அடுத்தாக ருஷ்தா, வீட்டிலிருக்கும் ஜன்னலருகில் யாரோ இருப்பதைக் காணுகிறாள். வெளியே வந்து பார்த்தால் ஒரு பெண் மழைக்கு ஒதுங்கியிருக்கிறாள். அவளை வீட்டுக்குள் அழைத்து வந்த ருஷ்தாவை அந்தப்பெண் தீட்சண்யமான பார்வை பார்க்க ருஷ்தாவுக்கு சர்வ நாடியும் அடங்கி மயக்கம் ஏற்பட்டு விடுகிறது. கண்கள் சொருகி, பேச்சு மூச்சற்று உணர்விழக்கிறாள். வைத்தியத் தரப்பில் அவள் மனநோயாளி என்ற கட்டத்திலிருந்து பைத்தியக்காரி என்ற பட்டம் பெறுமளவுக்கு அவளது செயற்பாடுகள் அமைந்துவிடுகிறது. அடிக்கடி இரவில் ருஷ்தா பயங்கரமாகச் சிரிப்பதைக் கண்டு ஹிமாஸ் அலறுகிறான். வீட்டிலுள்ளவர்கள் வந்து பார்த்த போது ருஷ்தா அயர்ந்து தூங்கியிருக்கிறாள். எதிர்பாராத விதமாக மீண்டும் ருஷ்தா கட்டில் நகருமளவுக்கு சிரித்த விதம் வீட்டிலுள்ள அனைவரையும் பீதியடையச் செய்கிறது. ஹம்சியாவினதும் நிலை அதே கதியாக இருக்கிறது. தனியறையில் தூங்கும் போது அவளை யாரோ கழுத்தை நெரிப்பதாகவும், சமையலறையில் யாரோ தன்னை ஊடுறுவிப் பார்ப்பதாகவும் கூறி அவள் கதறுகிறாள். ஸஹ்ராவுக்கும் இடைக்கிடையே பயங்கரமானதொரு சிரிப்புச் சத்தம் கேட்கிறது. ஆனால் இது எதையுமே நம்பாதவனாக ருஷைத் இருப்பது அவனது ஈமானை வலியுறுத்துகிறது. எனினும் ஷைத்தான் தனது விளையாட்டை ருஷைதிடமும் காட்டிவிடுகின்றான்.

அதாவது ருஷைத் ஓர் நாள் கனவு காணுகிறான். அதில் ருஷ்தாவின் மகன் சுஹைல், ருஷைதிடம் வந்து ஷமாமா ருசியா இருக்குது| என்கிறான். எது என ருஷைத் கேட்டதற்கு ஸீனத்துட ரத்தம் என்கிறான். சுஹைல் விரலை வாயில் வைத்து உறிஞ்சிக்கொண்டிருக்கிறான். அவன் வாயில் இரத்தம். ருஷைத் ஸீனத்தைப் பார்க்க அவளது குரல்வளை துண்டிக்கப்பட்டு இரத்தம் வருகிறது. அதிர்ச்சியடைந்தவன் ஷஏன்ட தங்கமே ஸீனத்| என கனவில் கத்த ஸஹ்ரா அவனைத் தட்டி எழுப்புகிறாள். இந்த கனவுதான் ருஷைதின் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்திவிடுகிறது. அனைவரும் பரிசாரிகளை அழைத்து வந்து பூஜைகளை செய்கின்றனர். ருஷைதுக்கு இது உறுத்தலாக இருந்தாலும் கனவின் தாக்கம் வாயடைக்கச் செய்கிறது. ஹஜ் கடமைக்காக அஸ்வர் அலி சேர்த்து வைத்திருந்த பணம் கொஞ்ச கொஞ்சமாக பரிசாரியிடம் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் எந்த வித நலவுகளும் ஏற்படவில்லை.

இறுதியில் ஒரு பிச்சைக்காரியின் கூற்றுக்கிணங்க கதீஜா, அஸ்வர் அலி, ருஷைத் மூவரும் 37ம் நம்பர் வீட்டிலுள்ள ஒரு பெண்மணியை சந்திக்கிறார்கள். அந்த மூதாட்டி மிகவும் பக்தி உடையவர். அதிகம் படிப்பறிவில்லாவிட்டாலும் படைத்தவன் மீது அபார நம்பிக்கை வைத்திருப்பவர். இவர்களின் வீட்டு நிலைமைகளை அறிந்து தனது கதையை அவர்களிடம் விபரிக்கிறார். அவருக்கும் இதை விட பலமடங்கு பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும் அவர் அல்லாஹ்வைத் தவிர வேறெதனையும் நாடிப் போகவில்லை. நோயைக் உருவாக்கியவன் மருந்தைப் படைத்திருக்கிறான். அது போலவே பிரச்சனைகளுக்கும் தீர்வை வல்ல அல்லாஹ்வே தர வேண்டுமென்று சதாவும் திக்ரிலும், ஓதலிலும் (இறை தியானம்) தனது காலத்தை கடத்தி வந்திருக்கிறார். அநாதைப் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். தனது மகன்மாருக்கும் அநாதைக் குமர்களையே மணமுடித்துக் கொடுத்திருக்கிறார். பாடசாலை செல்லாத அந்த மூதாட்டி பலரிடம் கெஞ்சி தமிழ் எழுத்துக்களைப் படித்து அதன் பிறகு பல சன்மார்க்க புத்தகங்களை வாசித்தாகக் கூறி இராக்கைகளைக் காட்டுகிறார். காட்டிய இராக்கையில் ஒரு பக்க சுவர் மறையுமளவுக்கு புத்தகங்கள் இருக்கின்றன. அதைக் கண்ட ருஷைத் உட்பட ருஷைதின் பெற்றோரும் புதினப்படுகின்றனர்.

பல வீடுகளில் இன்று திக்ரு, ஸலவாத்து மழுங்கடிக்கப்பட்டுள்ளது. காரணம் தொலைக்காட்சி. அதில் வரும் உருவங்களும், இசையும் ஷைத்தானுக்கு மிகப் பிரியமானவை. அதனால் பல உள்ளங்கள் இன்று சீர்கெட்டு அலைகின்றன. எந்த கஷ்டம் என்றாலும் அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும். நாம் நமது கோரிக்கையை விடுக்கும்போது அதை நிறைவேற்றித்தர அல்லாஹ் காத்திருக்கிறான். அவன் கருணையுள்ள ரஹ்மான். எந்தத் தீங்கும் அவனை மிஞ்சி நடந்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் என்றவாறு அந்த மூதாட்டி அறிவுரை சொல்ல அனைவரும் மன நிம்மதி அடைந்தவர்களாக வீடு செல்கிறார்கள். இனிமேல் அவர்கள் எதற்காகவும் அல்லாஹ்வைத் தவிர பிற வஸ்துக்களிடம் பாதுகாப்பு தேடப் போவதில்லை. மறுமை வாழ்வுக்காக தமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள ஆயத்தமாகிறார்கள் என்பதுடன் நிறைவடைகிறது நாவல்.

ஈமான் வற்றிய இதயங்களுக்கு இந்நாவல் மழையாக இருக்கிறது. அல்லல் படும் மனங்களுக்கு ஒத்தடமாக இருக்கிறது. ஆகவே அனைவரும் இவ்விதமான புத்தகங்களை வாசித்து பயனடைய வேண்டும். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் -  37ம் நம்பர் வீடு

நூலாசிரியர் - ஏ.சீ. ஜரீனா முஸ்தபா
வெளியீடு – எக்மி பதிப்பகம்
முகவரி – 120 H, Bogahawatta Road, Welivita.  
தொலைNசி– 011 5020936
விலை - 250/=
 
 
- This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
www.riznapoem.tk
http://www.poemrizna.blogspot.com
Last Updated on Sunday, 16 October 2011 22:22