நூல் அறிமுகம்: கே. எஸ். சிவகுமாரன் 'ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில'

Monday, 17 October 2011 23:11 - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா - மதிப்புரை
Print

தமிழ், ஆங்கில இலக்கியவாதிகள் மத்தியில் நன்கறியப்பட்ட திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள், தனது திறனாய்வுகளிலும், விமர்சனங்களிலும் சிலதைத் தொகுப்பாக்கி வாசகர்களின் விருந்துக்காக தந்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை முன்வைத்து வாசகரின் அபிமானத்தைப் பெற்ற இவர் ஓர் ஆங்கில ஆசிரியருமாவார். பத்திரிகையாளனாக மட்டுமல்லாமல் பல்துறை கலைஞராக விளங்கும் இவர் அண்மையில் தமது பவள விழாவினை யாழ் நகரில் கொண்டாடினார். கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் மாலைதீவு, அமெரிக்கா, ஓமான் போன்ற இடங்களில் ஆங்கில இலக்கிய பாடங்களுக்கு உயர்நிலைப் பாடசாலைகளின் விரிவுரையாளராக இருந்துள்ளார். இவரது நூல்கள் வடகிழக்கு மாகாண இலக்கிய விருது, கனடாவின் தமிழர் தகவல் ஏட்டின் விருது என்பவற்றைப் பெற்றுள்ளதுடன் இவர் வடகிழக்கு மாகாண ஆளுனர் விருதையும்; பெற்றிருக்கிறார்.தமிழ், ஆங்கில இலக்கியவாதிகள் மத்தியில் நன்கறியப்பட்ட திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள், தனது திறனாய்வுகளிலும், விமர்சனங்களிலும் சிலதைத் தொகுப்பாக்கி வாசகர்களின் விருந்துக்காக தந்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை முன்வைத்து வாசகரின் அபிமானத்தைப் பெற்ற இவர் ஓர் ஆங்கில ஆசிரியருமாவார். பத்திரிகையாளனாக மட்டுமல்லாமல் பல்துறை கலைஞராக விளங்கும் இவர் அண்மையில் தமது பவள விழாவினை யாழ் நகரில் கொண்டாடினார். கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் மாலைதீவு, அமெரிக்கா, ஓமான் போன்ற இடங்களில் ஆங்கில இலக்கிய பாடங்களுக்கு உயர்நிலைப் பாடசாலைகளின் விரிவுரையாளராக இருந்துள்ளார். இவரது நூல்கள் வடகிழக்கு மாகாண இலக்கிய விருது, கனடாவின் தமிழர் தகவல் ஏட்டின் விருது என்பவற்றைப் பெற்றுள்ளதுடன் இவர் வடகிழக்கு மாகாண ஆளுனர் விருதையும்; பெற்றிருக்கிறார்.

சொல்லப்போனால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடரும் இவரது இந்த இலக்கிய ஊழியம், கலை இலக்கியவாதிகளுக்கு காத்திரமான ஊக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர் தம் ஆக்கங்களுக்கும் விசாலமான பரம்பலை ஏற்படுத்தும். எழுத்தாளர்கள் தமது எழுத்துருக்களை முதற்கட்டமாக அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலமாக வாசகரை சென்றடையச் செய்வது சகலரும் அறிந்ததே. சில சந்தர்ப்பங்களில் இரண்டாவது முறையாக அதே ஆக்கங்கள் நூல்களாக வாசகர் பார்வைக்கு வருவதுமுண்டு. கே.எஸ். சிவகுமாரன் வெளியீட்டாளர்கள் மூலம் அல்லது தன் சொந்த தேடலாகவோ இந்நூல்களைப் படித்து தன் கண்ணோட்டத்தைப் பிரசித்தப்படுத்துவதுண்டு. இம்மார்க்கமாக படைப்பாளிக்கும், படைப்புக்கும் மூன்றாவது வாசகர் பார்வை அமையும். அடுத்த கட்டமானது கே.எஸ். சிவகுமாரன் தன் கண்ணோட்டத்தை அடக்கிய  தனது நூலுருக்களை தொகுப்பு நூலாக்கல்...  என திரு. கே.எஸ். சிவகுமாரனைப் பற்றிய அவதானத்தை கிழக்கு மண் இணையத்தளம் தந்திருக்கின்றது.

சோமகாந்தனின் பத்தி எழுத்து என்ற மகுடத்தில் சோமகாந்தனைப் பற்றி இந்நூல் எமக்கு அறியத்தருகின்றது. தினகரன் வார மஞ்சரியில் காந்தனின் கண்ணோட்டம் என்ற தலைப்பில் வாராவாரம் சோமகாந்தனின் பத்தி எழுத்துக்கள் வெளி வந்திருக்கின்றன. சோமகாந்தனின் எழுத்துக்களை ரசித்ததாகக் கூறும் நூலாசிரியர் அதற்கான சில காரணங்களாக பின்வருவனவற்றை கூறியிருக்கின்றார்.

தமிழ் மொழியின் சொல் வளம் பத்தி எழுத்தாளரின் கை வண்ணத்தில் பல பரிமாணங்கள் எடுப்பதை அனுபவித்து புளங்காகிதம் அடைந்தமை, தெரியாத சில விபரங்களைக் கோர்த்து அவர் தரும் பாங்கு என் அறிவை விருத்தி செய்ய உதவியமை, சோமகாந்தனின் சிந்தனைகள் செயற்பாட்டுத்தன்மை கொண்டவையாதலால் அவருடைய பத்திகளைப் படிக்கும் நான் செயலூக்கம் பெற்றமை.

எழுத்து, சமயம், முகாமைத்துவம் போன்ற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர்தர அரசாங்க உத்தியோகத்தரான சோமகாந்தனைப் பற்றி இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்களோ என்ன வோ? திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் புத்தகங்களில் படித்து அறியக்கூடிய சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது எனலாம்.

பத்தி எழுத்தும் சண் அங்கிளும் என்ற பார்வையில் பொ. சண்முகநாதனைப் பற்றி அறியத் தந்திருக்கிறார். உதயன் நாளிதழில் நினைக்க.. சிரிக்க.. சிந்திக்க என்ற தலைப்பில் எழுதி வந்த பொ. சண்முகநாதன் தனது சொந்தப் பெயரிலும் நீண்ட நாட்களாக ஜனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும் எழுதி வந்த ஒரு படைப்பாளி. தான் சொல்ல வந்த விடயத்தை எளிமையாகவும், தெளிவாகவும் சொல்லி முடிக்கும் பாங்கு பலரிடம் இல்லை. எனினும் பத்தி எழுத்துக்கள் மூலமாக பொ. சண்முகநாதன் அவர்கள் கூறும் பாங்கு தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிடுகிறார் நூலாசிரியர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். 

பல முக்கிய செய்திகளையும், அதனுடன் தொடர்புடைய கிளைச் செய்திகளையும் சுருக்கமாகத் தந்த பின்னர் சிந்திக்கத்தக்க கருத்துக்களையும் பலவந்தமாகத் திணிக்காமல் எடுத்துக்கொண்ட பொருளுடன் ஒட்டியதாக அவர் எழுதும் முறை ஆசிரியரின் முதிர்ச்சியையும், அறிவு வளர்ச்சியையும் காட்டி நிற்கிறது என தனது பாராட்டை தெளித்திருக்கிறார் திரு. சிவகுமாரன் அவர்கள்.

1958 – 1966 காலப் பகுதியில் சிற்பி சிவசரவணபவன் வெளியிட்ட ஷகலைச்செல்வி| நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்பது பலரின் கணிப்பு. சிற்பி அவர்கள் தீபம் என்ற தமிழ்நாட்டுச் சஞ்சிகையில் இவர் எழுதிய இலங்கைக் கடிதத்தொடரால் எமது நாட்டு இலக்கிய முயற்சிகளை இந்தியர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பை அளித்தது. இவர் சத்திய தரிசனம், உனக்காக கண்ணே, ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

ஸ்ரீஸ்கந்தராஜா ஞானமேரி என்ற பெண்பாற்புலவரைப் பற்றியும் இத்தொகுப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. திருகோணமலையைச் சேர்ந்த இவர் மரபு சார்ந்த கவிதைகளையும், பாடல்களையும் எழுதி வருகிறார். இவரது பாடல்களில் லயம், ஓசை என்பன காணப்படுவதையும், சொல்லாட்சியிருப்பதையும் குறிப்பிட்டிருக்கும் நூலாசிரியர் ஞானமேரி அவர்களின் இந்த நூல் இந்து சமயம் போதிக்கப்படும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் விதைந்துரைக்கப்பட்ட பாடநூலாக இருப்பது அவசியம் கூறுகின்றார்.

திரு. கௌசிகன் நடாத்திய ஓவியப் பயிற்சி கண்காட்சியின் நிகழ்வொன்றையும் இந்த புத்தகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. கொழும்பு வாழ் பல பெண்கள் இந்த பயிற்சிக் கல்லூரியின் மாணவிகளாவர்.  இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் திரு. திருமதி. கௌசிகன் இருவரும் நவீனத்தவமும், இயற் பண்பும் கொண்ட ஓவியங்களை கற்றுக் கொடுக்கின்றனர். இளைஞர், யுவதிகளின் இந்த திறமையை வெளியுலகுக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஓர் ஓவியக் கண்காட்சி பெப்ரவரி மாதம் கொழும்பு லயனல் வெண்ட்ற் மண்பத்தில் இடம் பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இஸ்லாமியப் பெண்ணின் எழுத்தாற்றல் என்ற வகையில் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் தென்றலின் வேகம் என்ற கவிதைத் தொகுப்பையும் தனது ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நூலாசிரியர் அது பற்றி தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

கிழக்கிலங்கை இஸ்லாமியரும், யாழ்ப்பாண நகரின் இஸ்லாமியரும் தமிழைத் தம் வசமாக்கி தனித்துவமான படைப்பக்களை இப்பொழுது தந்துகொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆயினும் சிங்கள மக்கள் அதிகம் வாழும் வெலிகம என்ற ஊரைச் சேர்ந்த ரிம்ஸா முஹம்மத் தமிழை ஆள்வது எனக்கு வியப்பைத் தந்தது. புதுக்கவிதை என்ற பெயரில் வழமையாக பலர் எழுதும் செயற்கைத் தன்மையான கேள்விகளும், சூளுரைத்தல்களும் போன்று நமது கவிஞரும் எழுதி விடுவாரோ என்ற எனது எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் அமைதி கண்டு யதார்த்த அனுபவத்தை அவர் பதிவு செய்வது எனக்கு திருப்தியளித்தது'. என்றவாறு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தன் மனவோட்டத்தைக் கூறியிருக்கின்றார்.

எல்லாக் கலைகளுமே களிப்பூட்டுவன என்றாலும் பெரும்பாலானவை பெருவாரியான பொது மக்களின் ரசனை மட்டத்தை திருப்திப்படுத்துவன. அந்த வகையில் சினிமாவும் பெரும்பாலும் வணிக நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகின்றமை வேதனையளிக்கின்றது. இத்தகைய திரைப்படங்கள் ஜனரஞ்சகமானவை என்கிறார்கள். சில நேரங்களில் ஜனரஞ்சகமானவை கலைத் தரமுடையiவாக அமையும் சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.

வியாபார நோக்கத்திற்காக திரைப்படம் தயாரிப்பவர்கள் ரசிகர்களின் ரசனையை மதிப்பவர்களாக பெரும்பாலும் இல்லை. முதலீட்டை கைப்பற்றவே அவர்களது மூளை சிந்தித்துக் கொண்டிருக்கும். அதாவது தமிழ்நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருப்பதனால் அவர்களைத் திருப்திப்படுத்தவும், சம்பவங்களைக் கூட வசனத்தில் மீண்டும் எடுத்துரைக்கும் விதத்திலும் பெரும்பாலான படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆகவே வணிகப்படங்கள் கைத்தொழில் முயற்சிகளின் விளைவுகள் எனலாம். கலைநயமான படங்கள் உயர் மட்ட ரசனை உடையவர்களின் ஆய்வறிவுக்கு விருந்தளிப்பன. மக்கள் ரசனை உயரும்போது ஆக்கபூர்வமான கலைப்படங்கள் தாராளமாக நமது பார்வைக்கு வரும் என்று கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

தான் எழுதிய விடிவு கால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள், அன்னையின் நிழல் ஆகிய நூல்களுடன் அண்மையில் பலே பலே வைத்தியர் என்ற சிறுவர் நூலையும் எழுதி பலரது பாராட்டுக்களையும் பெற்ற கே.விஜயன் அவர்களைப் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாவல், கவிதை, சிறுகதை, விமர்சனம், நாடகம் போன்ற துறைகளில் ஆர்வம் காட்டி வரும் இவர், இதழியலாளராக இருந்தவராவார். மார்க்சிய சிந்தனை உடைய இவர் மலையாளக் கதைகள் சிலவற்றையும் தமிழில் தந்திருக்கின்றார். சிறுவர்களைக் கவரக் கூடியதும், பெரியவர்களை திருப்திபடுத்தக்கூடியதுமான கே. விஜயன் அவர்களின் பலே பலே வைத்தியர் என்ற நூல் 98 பக்கங்களில் 20 கதைகளுடன் வெளிவந்திருக்கிறது.

தனது எழுத்துக்களாலும், தன் நிகரற்ற பண்பினாலும் பல இலக்கிய நெஞ்சங்களின் அன்பை வென்றெடுத்த மாமேதை திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் நூலுக்கு எனது இரசனைக்குறிப்பை எழுதியதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதுடன் அவரைப் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இன்னுமின்னும் சாதனைப் படைக்கவும் வாழ்த்துகிறேன்!!!

நூல் - கே.எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சிலள
ஆசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
முகவரி - 21, முருகன் பிளேஸ், கொழும்பு - 06
விலை - 200 ரூபாய்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 17 October 2011 23:20