சிறுகதை வாசிப்போம்~ வாருங்கள்!இதுவரை அவன் நூறு வாழ்ந்து முடிந்த உடல்களை புதைத்து எரித்திருப்பான். இந்த கணக்கில் கூட பிழையிருக்கலாம். அடிக்கடி சில அநாதைப் பிணங்கள் உடல் குத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான பணங்களுடன் அவன் வேலையிழக்காமல் வாழ்க்கையில்லாமல்  இருக்க வந்திருக்கும். அவன் தந்தையை கூட கண்ணீர் ததும்ப புதைத்திருக்கிறான் . அவன் தாய் அவன் பிறந்த போதே மயானத்திற்கு சென்றுவிட்டாள். தன் தாயை தந்தை புதைக்கும்போது சுடுகாட்டு மண்ணில் ஒரு நாளிதழின் மீது முழு கடவுளாக தவழ்ந்திருக்கிறான்.

அப்படி ஆரம்பித்தது மயானத்திற்கும் அவனுக்கும் ஆன உறவு. இப்போது அவன் தன்னுடைய தந்தை வயதில் தன் குலத்தொழிலை தொடர்ந்து கொண்டிருக்கிறான்.இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அவனால் ஏதோ மற்றவர்களை போல வாழ முடியவில்லை. அவனிடம் பணம் அடிக்கடி புரளும் ஆனாலும் இன்று தான் உண்டு தன் நிழல் உண்டு என இருக்கும் அவனால் இன்றுவரை ஆண்-பெண் உறவின் ரகசியங்களை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அவனுக்கு அவ்வளவு வயதாகியும் அந்த வாய்ப்பு வாய்க்கவில்லை. அவன் தனியாக இருக்கும் போது அவனுக்கு இருக்கும் ஒரே பேச்சுத்துணை ராசி என பெயர் வைக்கப்பட்ட அந்த முரட்டு கறுப்பு நிற நாயும், என்னை யார் அடக்க என இருநூறு கைகளுடன் பரந்துவிரிந்து ஆகாயத்தில் எதையோ தேடும் மனித பிணச்சாம்பல்கள் ஊறிய சத்து மணலில் முளைத்து தன் வயதுடைய பெரிய வேப்பமரமும் தான்.

வேலையுள்ள நேரங்களில் ராசி அவனுடன் வந்துவிடும் . அவன் வந்திருக்கும் வாழ்ந்து முடித்தவரின் உறவினர்களிடம் எதுவுமே பேசுவதில்லை . அந்த சமயங்களில் அவன் பேசுவதெல்லாம் நான்கு கால் ராசியுடன் தான்.வேலை முடிந்தபின் நான்கு கால் ராசி மயானத்தை விட்டு ஓடிவிடும் .அது எங்கு போகும் என்று யாருக்கும் தெரியாது .இரவு நேரங்களில் அந்த வேப்பமரத்திற்கு கீழே ஒரு மரக்கட்டில் போட்டு படுத்துக்கொள்வான். இப்படி அவனுடைய வாழ்க்கை ரயில் போல போய்கொண்டிருந்தது. அன்றைய நாளும் வழக்கம் போலத்தான் விடிந்தது. ஆனால் ஒரு இனம்புரியாத சிந்தனைகள் அவனை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தன. தன்னை அறியாமல் கண் கலங்கியது அடிக்கடி.  வழக்கம் போல அவனால் நடந்து கொள்ள முடியவில்லை. என்றுமில்லாமல் அன்று இரண்டு வேலைகள் வந்தும் அவனது நெருங்கிய நான்கு கால் ராசி வரவில்லை. ஏதோ இது அவனை மேலும் குழப்பமடைய செய்தது. எல்லா வேலையும் முடிந்து சாப்பிட்டுவிட்டு வந்து தூங்கலாம் என முடிவெடுத்து கட்டிலை வேப்பமர நிழலில் தலைகீழாக்கியவனுக்கு ஒரு அதிர்ச்சி. ஏதோ ஒரு குரல்.ஒரு கேள்வி அவனை நோக்கி வந்தது. இது அவனை மேலும் குழப்பமடைய செய்தது. கண்களால் எல்லா திசைகளையும் கிளறிப் பார்த்தான். யாரும் இல்லை. ஏன் யாருமே இல்லை.

அந்த குரல் போய் மறைந்து சில வினாடிகள் கழித்து மற்றுமொரு குரல். இது முந்தைய குரலை விட வித்தியாசமானதாக இருந்தது.

இந்த குரல் முந்தைய குரலின் கேள்விக்கு பதிலாக இருந்தது. இந்த உரையாடல்கள் அரூபமாக அந்த மயானத்தில் தொடர்ந்தது. அவன் கேள்விக்குரலின் திசையை பார்ப்பதும் பதில் குரலின் திசை பார்ப்பதுமாக இருந்தான். ஆகாயம் வேறு இந்த உரையாடல் தொடர வழி செய்வது போல கருமேக சட்டை அணிந்திருந்தது. மதியான மயானம் இரவுக்கு முந்திய இருண்ட காட்சி கொடுத்தது.அதற்கிடையே உரையாடல் அவன் பயத்தின் பின்னணியில் இப்படி தொடர்ந்தது.

கேள்விக்குரல் : சொல்லு. சாவு இங்கு வராது என சொல்லு.

பதில்க்குரல் : சொல்லாதே வாழ்க்கை இலவசபரிசு என.சொல்லாதே சாவு விடுதலை என.

கேள்விக்குரல் :சொல்லு சாவு எனும் வார்த்தையை கண்டு மனிதர்கள் பயந்து ஓடியதை பற்றி. சொல்லு தற்கொலைக்கு முந்தைய கடைசி நொடியை பற்றி.

பதில்க்குரல் : சொல்லாதே மதுவால் கல்லீரல் செயலிழந்து மூச்சிழந்த கூட்டத்தை பற்றி. சொல்லாதே கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து மண்டை பிளந்த கூட்டத்தை பற்றி.

கேள்விக்குரல் : சொல்லு கடல் தரைக்கு வந்த வரலாற்றை. சொல்லு பீரங்கிகள் வீழ்த்திய கட்டிடங்களை பற்றி.

பதில்க்குரல் : சொல்லாதே கருவுக்குள்ளே குழந்தை தாயை கொன்ற கதையை. சொல்லாதே அரசாங்கம் மக்களின் பிறப்புறுப்பை கட்டுப்படுத்த நினைத்து மீறியவர்களை சுட்டுக்கொன்றதை பற்றி.

கேள்விக்குரல் : சொல்லு விபச்சார விடுதியில் அதிரப்புணர்ந்து யோனி கிழிந்து மரித்து போன பெண்களை பற்றி. சொல்லு வாகனங்களின் சக்கரங்களுக்கு இடைவெளியில் சிக்கி உயிரிழந்தவர்களை பற்றி.

பதில்க்குரல் : சொல்லாதே அணுவை பிளந்து நடுநகரத்தில் வெடிக்க வைத்து செத்து போனவர்களை பற்றி. சொல்லாதே தாவரங்களின் நிலபரப்புக்களை உரங்கள் தூவி கொன்றதைப் பற்றி.

கேள்விக்குரல் : சொல்லு மரங்கள் வெட்டி எரிக்கப்பட்ட கதையை. சொல்லு நட்சத்திரங்களை தேடி போக வரிப்பணத்தை தின்ற கதையை.

பதில்க்குரல் : சொல்லாதே சிறையில் அதிகாரத்தால் அடித்து நொறுக்கப்பட்டு மரணமடைந்தவர்களை பற்றி. சொல்லாதே புலிகளின் இடத்தை ஆக்கிரமிக்க போய் போரில் மரித்து போன கதையை.

கேள்விக்குரல் :  சொல்லு முலைப்பாலில்லாமல் மடிந்து போன புது உயிர்களின் கதையை. சொல்லு உழைத்து உழைத்து முதுகெழும்பு நொறுங்கி உயிரிழந்த தொழிலாளர்களின் கதையை.

பதில்க்குரல் : சொல்லாதே நிலத்திற்காக சண்டையிட்டு மரித்து போன பெரு முதலாளிகளின் கதையை. சொல்லாதே தாயை புணர்ந்து கொன்ற மகனின் வாழ்க்கை கதையை.

கேள்விக்குரல் : ஏதாவது சொல்லு.

பதில்க்குரல் : எதுவுமே சொல்லாதே.

கேள்விக்குரல் : உரிமை.அதிகாரம்.சாவு எல்லோருக்கும் உண்டு. ஏதாவது சொல்லு.

இதற்கிடையே அவன் பேச ஆரம்பித்தான். அங்கே ஒரு மாபெரும் விவாதமே நடக்க ஆரம்பித்திருந்தது.
"பேய்களா ?"

"பிசாசுகளா ?"

"என்னை கொன்றுவிடுவீர்களா ? "

அதன்பிறகு அங்கு ஒரே அமைதி.அந்த இரு குரல்களை காணவில்லை.அதற்கிடையே அவனை சாலையில் கிடந்த மலத்தை மொய்க்கும் ஈக்கள் போல சாவு, மரணம், விடுதலை என்ற சிந்தனைகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தன.

அப்போது அவன் தன்னால் தனது இரண்டாம் நண்பனான வேப்பமரத்துடன் பேச ஆரம்பித்தான் கட்டில் மீது படுத்துக்கொண்டே.
"சாவு என் அப்பாவுக்கு வந்தது;அம்மாவுக்கு வந்தது;ஆனால் எனக்கு ஏன் இன்னும் வரவில்லை ? .அதற்கு என்னை பிடிக்கவில்லையா ? "

அவன் மனமே அவனுக்கு பதிலும் சொல்ல ஆரம்பித்தது.

"சாவுக்கு உன்னை பிடிக்காமல் இல்லை. அது காத்திருக்கிறது."

"அப்படியெனில் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் ? நான் பிறந்தது எதற்காக ? "

"நீயும் காத்துக்கொண்டிருக்கிறாய் அந்த சந்திப்பிற்காக. முடிந்து போவதற்காக.நீட்டித்து துயரப்படாதே."

"இந்த தொழில் ? இந்த பணம் ? "

"தொழில் எல்லாம் சாவின்  திருப்திக்காக. பணம் வெறும் பனிக்கட்டிகள். "

"ஏன் இந்த திடீர் சிந்தனைகள் ? எனக்கு ஏன் அரூப உரையாடல்கள் கேட்க வேண்டும் ? "

"நீ காத்திருந்து காத்திருந்து சந்திப்பை உணர படைக்க பட்டவன். உன்னை சந்திக்க உனது சற்றைக்கு பிந்தைய பிணம் ஆர்வமாக உள்ளது.உடனே இந்த சற்றைக்கு பிந்தைய மற்ற பிணங்கள் வசிக்கும் இடத்தை வீட்டு வெளியே போ."

"நான் ஏன் போக வேண்டும் ? இது என் தொழில் ? அப்படியே நான் போனாலும் இந்த சமூகம் எப்படி என்னை ஏற்றுக்கொள்ளும் ? நான் தனிமையில் ஊறிய பாசி."

"நீயே சொன்னால் எப்படி. வார்த்தைகளை நம்பாதே.அதுவும் உன்னிடம் இருந்து உனக்கே வரும் வார்த்தைகளை நம்பாதே.நான் சொல்வதைக் கேள்.நானே நீ. நான் உன் சாவில்  உற்பத்தியாகும் கடல்.என் அலைகளில் உன் உயிரை நனை."


"சாவில் தான் நான் . என்னை நிரப்புமா இந்த சாவு ? "

"இதில் என்ன சந்தேகம். உன்னை மூழ்க வைக்கும்." என்ற பதில் வந்தவுடன் அவனுக்கு என்னவோ ஒரு மாதிரியாக இருந்தது.

அவன் தனக்கு தானே சொல்லிக்கொண்டான் "நான் இந்த இடத்தை விட்டு போகிறேன்." என. அதற்குள் தன் கட்டிலில் மேல் ஒரு மதுக்குப்பி முழுவதும் காலியாக இருந்தது.நடந்தது எல்லாம் கனவு போல இருந்தது அவனுக்கு. அவன் கண்களை கண்ட பூச்சிகள் அறியும் அவனுடைய அதிர்ச்சியை. அப்படி உறைந்துபோய் நின்றான். இப்போது அவன் கண்கள் நகரத்துக்கு செல்லும் பிணங்கள் வரும் பாதையை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தது.

அங்கே போகலாமா வேண்டாமா என தராசுக்கோல் ஏறி இறங்குவது போல மன அலைச்சல் கொண்டிருந்தான்.

சரி போவோம் என முடிவெடுத்து முதல் காலடியை எடுத்து வைத்தான். ஏதோ நிலாவில் முதல் கால் பதித்தவன் போல தன்மீது தானே சந்தோஷப்பட்டுக் கொண்டான்.
அவன் போகும் பாதையெங்கும் பிணத்திற்கு போடப்படும் பூ சிதறிக் கிடந்தது.இது அவனுக்கு தன்னை இந்த நகரத்தார்கள் வரவேற்கிறார்கள் என நினைக்க தோன்றி தன்னளவில் நெஞ்சம் நிமிர்த்திக் கொண்டான்.இவன் அந்த பாதை வழியே முன்னேற முன்னேற நிசப்தம் மாயமான் போல பின்னால் ஓடிக்கொண்டேயிருந்தது.பதிலுக்கு எதிர்வினையாக தொழில்நுட்பங்கள் போடும் சப்தம் அவன் காதை துளைத்து மூளையின் இடது புறத்தில் புதுபோதையை அறுவடை செய்ய ஆரம்பித்திருந்தது.

அதோ நகரம் என நெருங்கிய நேரம் வானளவில் உயர்ந்த கட்டிடம் அதன் அருகில் இருக்கும் உணவு விற்பனைச்சாலை அதைத்தொடர்ந்த மதுபான விடுதி என சங்கிலித்தொடராய் தொழில்நுட்ப முன்னேற்றம் கொடுத்த முன்னேற்றங்கள் கோயில் சிலை போல காட்சி கொடுக்க ஆரம்பித்தது.அவன் தன் போன்ற மனிதர்களை தேடினான் கூடியமட்டும். அவனால் தன் உருவத்தை ஒத்தவர்களாக பிச்சைக்காரர்களை மட்டுமே காண முடிந்தது.அப்படியே அவன் ஒவ்வொருவராக பார்த்துவிட்டு நடக்க ஆரம்பித்தான். ஒவ்வொருவரும் காதில் ஏதோ கயிறுகளை மாட்டிக்கொண்டும் ஒரு சதுரம் அல்லது செவ்வகம் வடிவ பெட்டிகளை வைத்துவிட்டு வேகமாக போவதை கண்டு அவன் கண்கள் விரிந்து வியந்துகொண்டான்.

அப்போது தான் அவன் கண்ணுக்கு அதிசயமாக தென்படும் அபூர்வ தோற்றம் தென்பட்டது.

"ஓ பெண்கள் ! ஓ பெண்கள் !" என கத்தினான். அவனை மனித மந்தைகள் எல்லோரும் வித்தியாசமாக பார்த்தார்கள் .சிலர் இவன் பைத்தியக்காரன் என முனகினார்கள். ஆனால் அவனோ அங்கு நடந்து போய் கொண்டிருந்த சிவப்பு நிற உடையணிந்த பெண்ணை நோக்கி ஒடினான் திடீரென்று. ஓடிப்போய் அவளை பலவந்தமாக கட்டியணைத்தான் தன் மார்பை அழுத்திக் கொண்டு. அந்த ஒரு நொடியில் "சாவு சாவு"  என்று மட்டுமே முனக முடிந்தது. அதற்குள் பயங்கர கூட்டம் கூடிவிட்டது அங்கு . அவனை கூட்டமாக சேர்ந்து எல்லோரும் அடித்து தரையில் வீழ்த்தி உதைத்தார்கள்.

அவன் "சாவை கட்டியணைத்தேன்" என திரும்ப திரும்ப வழியுடன் கத்தினான். அதற்குள் அங்கிருந்த ஒருவன் "குடித்திருக்கிறான்." என்கிறான். அதற்குபின் இன்னொருவன் "இவன் பைத்தியம் ,மனநல மருத்துவமனைக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தால் அவர்களே இவனை பார்த்துக்கொள்வார்கள் " என்கிறார்.
அப்படியே அவர்கள் செய்கிறார்கள். மனநல மருத்துவமனை வாகனம் வந்து அவனை தூக்கிச்செல்கிறது.

அப்போது தன்னை தூக்கி செல்லும் ஊழியரிடம் சொல்கிறான் " உனக்குள்ளும் சாவு.அணுக்குள்ளும் சாவு.இடைவெளிக்குள்ளும் சாவு.சாமி சிலைக்குள்ளும் சாவு.இந்த இரும்பு படுக்கைக்குள்ளும் சாவு.நட்சத்திரத்திற்குள்ளும் சாவு.காற்றுக்குள்ளும் சாவு." என.பதிலுக்கு அந்த ஊழியர் சிரித்து கொண்டே சொல்கிறான் "நீ வந்துவிட்டாய் அல்லவா. எங்களுக்கு எங்கள் தலைமை மருத்துவர் கையால் தான் சாவு உன்னால்." என்று. அந்த வண்டிக்குள் இருந்த மற்றொரு ஊழியர் "நமக்கு என்று வருகிறது பாருங்கள். செத்து தொலைய வேண்டிய தானே." என்று சலித்துக் கொள்ளும்போது அவன் "ஆம், சாவு,சாவு,சாவு" என முனகினான்.அந்த மருத்துவ வாகனம் புறப்பட தயாரானது.
அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் "அவன் சரியாகத் தான் பேசுகிறான். நீங்கள் எல்லோரும் தான் பைத்தியம்" என்று கூட்டத்தாரிடம் சொல்லிவிட்டு போங்கடா டேய் என கையில் தடியை வைத்துக்கொண்டு நகர்ந்தார்.கூட்டம் ஒரு கணம் திகைத்து கலைந்தது.வானம் தன் கருமேக சட்டையில் இருந்து வியர்வையை சாரலாக ஊற்ற தொடங்கியிருந்தது.எல்லோரும் ஒடிக்கொண்டிருந்தனர். ஆனால் அந்த தடியுடன் செல்லும் முதியவர் பொறுமையுடன் சென்று கொண்டிருந்தார் எந்த பயமும் இல்லாமல்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.