குரு அரவிந்தன்‘நிலா, நிலா..!’ வாசலில் நின்று குரல் கொடுத்தாள் ரதி.

குரல் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்த நிலா, பக்கத்து தெருவில் வசிக்கும் ரதி வாசலில் நிற்பதைக் கண்டாள். இரண்டோ மூன்று முறை கோயிலில் சந்தித்ததால் சினேகிதமாகியிருந்தாள்.

‘என்ன ரதியக்கா? உள்ளே வாங்கோ!’

‘நாய் குரைக்குது, கடிக்குமா?’

‘இல்லையக்கா, கட்டியிருக்குது, தெரியாதவையைக் கண்டால் குரைக்கும், அவ்வளவுதான்!’ ரதி கேற்ரைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள். ‘குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்லுவினம்..!’
‘நீங்கள் இதை சொல்லுறீங்க, போனகிழமை அவர் பயணத்தால வீட்டை வரேக்கையும் அவரை வாசல்ல கண்டிட்டு, யாரோ என்று நினைத்துக் குரைக்கத் தொடங்கி விட்டுது..!’

பெரிய காணியின் நடுவே கட்டப்பட்ட பெரியகல்வீடு பார்ப்தற்கு அழகாக இருந்தது. வீட்டின் இரு பக்கமும் சோலை போல வாழை, மா, பலா என்று பழமரங்களால் நிறைந்திருந்தது. முன்பக்கத்தில் பல வர்ணங்களில் அழகான ரோஜாக்கள், செவ்வரத்தைகள், நந்தியாவட்டை என்று பூச்செடிகள் அழகாகப் பூத்திருந்தன. குழாய்க் கிணற்றுத் தண்ணீர்த்தாங்கியும் உயரமாகத் தெரிந்தது.

நாயைக் கட்டிப் போட்டிருந்ததால், பயமில்லாமல் அணில்கள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. தேனருந்தத் தேனீக்கள் ரீங்காரமிட்டுப் பொருத்தமான பூக்களைத் தேடிக்கொண்டிருந்தன. பழங்களைத் தேடிக் குருவிகள் கிளைகளில் தாவிக்கொண்டிருந்தன. ஆளிருந்தும் ஆளரவம் இல்லாத வீடுபோல காட்சி தந்தது.

பத்து பன்னிரண்டு வயதிருக்கும், ஒரு பையன் கட்டைக் காற்சட்டையோடு பூச்செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான். அப்பகுதியில் கொஞ்சம் படித்தவர்கள் ‘துபாய்வீடு’ என்று இதற்குப் பெயர் வைத்திருந்தார்கள், வசதியற்றவர்கள் ‘வட்டிக்கார அம்மாவீடு’ என்று அழைத்தார்கள். அவசரமாகக் கொஞ்சப் பணம் தேவைப்பட்டதால், நகையை அடைவு வைத்துப் பணம் வாங்கவே ரதியும் வீடு தேடி வந்திருந்தாள். நகையைக் கொடுத்துப் பணத்தை வாங்கிக் கவனமாகக் கைப்பையில் வைத்துக் கொண்டாள் ரதி.

‘அக்கா, மாசாமாசம் வட்டிக்காசைக் கட்ட மறந்திடாதையுங்கோ..!’ நினைவூட்டினாள் நிலா.

‘வட்டிக்கார அம்மா’ என்று நிலாவைச் சொன்னாலும், அவளுக்குத் திருமணமாகி மூன்று வருடங்கள்தான் ஆகியிருந்தன. இளமையாகவும், அழகாகவும் இருந்தாள். அவள் அணிந்திருந்த சுடிதார் அவளது அழகுக்கு அழகு சேர்த்தது. பணம், பணம் என்று அலையும் அவளது கணவன் துபாயில் தொழில் பார்த்தான். திருமணமான கையோடு துபாய்க்குப் போனவன்தான், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள நினைத்ததால் கிடைத்த வேலையை அப்படியே விட்டுட்டு வர விரும்பவில்லை. இந்தா அந்தா என்று மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. எல்லா வசதிகளும் கிடைத்தாலும் வெளியே யாருக்கும் சொல்முடியாத சில குறைகள் நிலாவின் அந்தரங்கத்தில் இருந்தன.

சினேகிதி என்ற முறையில் பேசிக் கொண்டிருக்கும் போது, கதையோடு கதையாக, ‘எப்படி நிலா உனக்குப் பொழுது போகிறது?’ என்று விசாரித்தாள் ரதி. ‘எனக்கென்ன குறை, விடுமுறைக்கு வந்து பத்துநாள் நின்று, போன வாரம்தான் திரும்பி துபாய்க்குப் போனாரு. அதுக்குத்தான் பொழுதுபோக்க எனக்குப் பெரிய கலர் ரிவி வாங்கித் தந்திருக்கிறாரே, போதாதா?’ என்றாள். அவளது பேச்சில் எதையோ இழந்து விட்டுத் தவிக்கும் தனிமையின் விரக்தி தெரிந்தது. ‘தனிய இந்த வீட்ல பேச்சுத்துணை இல்லாமல் காலம் கழிப்பது உங்களுக்குக் கொஞ்சம் ‘போறிங்கா’ இல்லையா?’ என்றாள் ரதி ‘நான் என்ன செய்ய, ஓடியோடி உழைச்சது போதும், எங்களுக்கு இருக்கிற பணமே போதும், வேலையை விட்டிட்டு வாங்க, தனிய என்னாலே முடியல்ல, என்று ஜாடைமாடையாய் அவரிட்ட சொல்லியும் பார்த்திட்டேன்.’

‘அதுக்கு என்ன சொன்னாரு?’ ‘தனியாயிருக்க கொஞ்சம் கஷ்டமாய்த்தானிருக்கும் என்று சொல்லி, தொட்டாட்டு வேலைக்கு, தூரத்து உறவாம், பையனுக்கு அம்மா இல்லையாம், கஷ்டப்படுறாங்க என்று சொல்லி இந்தப் பையனை இங்கே கொண்டு வந்து விட்டிட்டுப் போயிட்டார்.’ ‘நீங்க அதிஸ்டசாலிதான் நிலா. எல்லா வசதிகளும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை, கொடுத்துவெச்சனீங்க, எல்லாருக்கும் இந்த அதிஸ்டம் கிடைக்காது’ என்றாள் ரதி.

‘அதிஸ்டக்காரியா, நானா? என்ன சொல்றீங்க, வருசத்தில இரண்டு தடவை தான் வருவார், துணிமணி, நகை என்று எல்லாம் கொண்டு வந்து திருப்திதானே என்று கேட்பாரு, பத்து நாள் கழிச்சு ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி திரும்பிப் போயிடுவாரு.’

‘இவ்வளவு வசதிகள் கிடைத்தும் உங்களுக்குத் திருப்தி இல்லையா?’ ‘நான் என்ன ஜடமா?’ சட்டென்று சொல்லத்தான் நினைத்தாள். ஆனாலும் மரியாதை கருதிச் சிறிது நேரம் எதுவும் பேசாது மௌனமாக இருந்தாள். அவளது மனசுக்குள் வெளியே சொல்ல முடியாத பல போராட்டங்கள் நடப்பதை அவளது முகம் காட்டிக் கொடுத்தது.

‘அவர் நிற்கும்போது கொண்டாட்டமாயும், நல்ல சந்தோசமாயும் இருக்கிறது, அந்த சந்தோசம் நிலைக்காதா என்று எப்போதும் ஏக்கத்தோடு வேண்டிப்பேன். ஆனால் இப்போ ஏக்கம்தான் மிஞ்சியிருக்கு, அவர் போனதும் வீடே வெறிச்சுக் கிடக்குது, நான் தனிய என்ன செய்ய, இந்த அணில்களையும், குருவிகளையும் பார்த்துக் கொண்டே வாசல்ல காத்திருக்க வேண்டியிருக்கு, இன்னும் எத்தனை வருசத்திற்கு இப்படியே..?’ அவள் தனது மனக்குறையை எதிரே இருப்பது யார் என்றுகூடப் பார்க்காமல் கொட்டித் தீர்த்தாள்.

நிலாவின் நிலையைப்பார்க்க பரிதாபமாக இருந்தது. அழகான, இளமையான தேவதை ஒன்றின் சிறகுகளை உடைத்து, சமூகக் கட்டுப்பாடு என்ற சிறைக்குள் அடைத்து வைத்து வேடிக்கை பார்க்கும் நிலையில் நிலா இருப்பதையும், கொழுகொம்பு இருந்தும், அதைப்பற்றிப் பிடிக்க முடியாமல் அவள் தவிப்பதையும் ரதி புரிந்து கொண்டாள்.

‘பணமிருந்தென்ன, பணத்துக்கு மதிப்புக் கொடுக்கும் ஒருவன் தனது மனைவியின் உணர்வுகளுக்கு, தேவைகளுக்கு மதிப்பளிக்கத் தெரியாவிட்டால் எப்படி நல்லதொரு கணவனாக இருக்க முடியும்? கூழோ, கஞ்சியோ, ஓலைக்குடிசையோ நாங்கள் சந்தோசமாக இருப்பது போல இவளால் இருக்க முடியவில்;லையே’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு விடைபெற்றாள் ரதி.

நிலாவுடைய புன்சிரிப்பிற்குப் பின்னால் இருக்கும் ஏக்கத்தையோ, அவளுடைய கோபத்திற்குப் பின்னால் இருக்கும் உணர்வு பூர்வமான காதலையோ, அவளுடைய மௌனத்திற்கான காரணத்தையோ புரிந்து கொள்ளும் நிலையில் அவளைத் தொட்டுத் தாலிகட்டியவனே இல்லை என்றான போது, வேறுயார்தான் அவளைப் புரிந்து கொள்வார்கள்..!

சாயந்தரம் மப்பும் மந்தாரமாயும் இருந்த வானம் இருட்டும் நேரம் பார்த்து மழையைப் பொழியத் தொடங்கியது. அதுவே மெல்ல மெல்ல அதிகரித்துச் சாமத்தில் இடி முழக்கத்தோடு காற்றும் சேர்ந்து பெருமழையாக மாறியது. மின்னல் ஒன்று மின்ன, அதைத் தொடர்ந்து வீட்டுக் கூரையில் வந்து விழுந்தது போன்று இடியோசை கேட்டது.

இடியோசைச் சத்தத்தில் அவள் திடீரெனத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள். நெஞ்சு படபடத்தது. சின்ன வயதில் இருந்தே மின்னல், இடி என்றால் பயப்படுவாள். பிறந்த வீடாயிருந்தால் ஓடிப்போய்த் தாயைத்தான் கட்டிப் பிடிப்பாள். இங்கே என்ன செய்வது, அரைகுறை இரவாடையோடு இருந்தவள், தூக்கக் கலக்கத்தில் கட்டிலில் எழுந்திருந்தாள். யாரோ விக்கி விக்கி அழும் சத்தம் கேட்டது. காது கொடுத்துக் கேட்டாள், படுக்கைஅறை வாசலில் படுத்திருந்த பையனிடம் இருந்துதான் அழும் ஓசை கேட்டது. எழுந்து அருகே சென்று பார்த்தாள். போர்த்து மூடியபடி போர்வைக்குள் குடங்கியபடி அழுதுகொண்டிருந்தவனைத் தட்டி  எழுப்பினாள்.

‘என்னாச்சு?’
‘பயமாயிருக்கு’ என்றான்.
‘கனாக்கண்டியா?’
‘இல்லை..!’
‘அப்போ..?’

மறுபடியும் மின்னலடித்து இடி முழங்கியது. ‘பயமாயிருக்கம்மா’ ஒரு குழந்தைபோல, கைகளை மார்புக்குக் குறுக்கே இறுகக் கட்டிக் கொண்டு, பாசத்திற்கு ஏங்கும் குழந்தைபோல நடுங்கிக் கொண்டே அவன் அழுதான்.

அவளுக்குத் தனது சின்னவயது நினைவு வந்ததில், மனசு பரிதவித்தது. தண்ணீர்ச் செம்பை எடுத்து வந்து அவனுக்கு அருகே உட்கார்ந்து, ‘இந்தா தண்ணியை குடி..!’ என்றாள்.

எஜமானி அம்மா தனக்கருகே உட்கார்ந்து ஆதரவாய்த் தண்ணீர் கொடுத்ததை நம்பமுடியாமல், இது கனவா என்பதுபோல, அவன் திகைப்போடு அவளைப் பார்த்துக் கொண்டே தண்ணீரைக் குடித்தான்.

அவன் மடமடவென்று தண்ணீர் குடிப்பதை வாஞ்சையோடு பார்த்தாள் நிலா. ‘சரி, எழுந்துவா..!’ அவனது கையைப்பற்றிப் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள். கதவைச் சாத்திவிட்டு தன்னோடு படுக்கையில் படுக்கவைத்தாள். மின்னலும் இடியும் விட்டு விட்டுத் தொடர்ந்தது. அரைகுறைத் தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த அவள், பெரிதாக இடி முழங்கிய போது, பயத்தில் தன்னை மறந்து, அருகே படுத்திருந்த அவனை இறுக அணைத்துக் கொண்டாள். தாய்மையின் உணர்வு பீறிட்டு எழுந்ததில், ஒரு குழந்தையை அணைப்பது போல அவனைத் தனக்குள் இழுத்து அணைத்தபடி, அப்படியே தூங்கிப் போனாள். உறக்;கத்தில் ஒரு தாயின் இதமான அரவணைப்பைப் பையனும் அனுபவித்தான்.

காலையில் அவன் கண் விழித்த போது, எஜமானி அருகே நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது தூக்கத்தைக் கலைக்காமல், கைகளை மெதுவாக விலத்திவிட்டு, மெல்ல எழுந்து, அறையை விட்டு வெளியே வந்தான். விடிந்து மழை விட்டிருந்தாலும், வானம் மப்பாய் இருந்தது. வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தவனது கண்ணில் சரிந்து கிடந்த அந்த ரோஜாக்கொடி கண்ணில் பட்டது. செழித்து வளர்ந்து அழகாகப் பூத்திருந்த கொடி ரோஜா ஒன்று இரவு மழையோடு அடித்த காற்றில் சரிந்து போயிருந்தது. அம்மாவுக்கு ரொம்பப்பிடிச்ச ரோஜாக் கொடியாச்சே, ரோஜாவுக்கு அருகே கம்பு ஒன்றை எடுத்து ஊன்றி, முட்கள் குத்தாமல் மிகக் கவனமாக அந்தச் கொடியை நிமிர்த்தி அதனோடு சேர்த்துக் கட்டி விட்டான். அவசரத்திற்குப் பற்றிக் கொள்ள ஒரு கொழுகொம்பாவது கிடைத்த மகிழ்ச்சியில் கொடிரோஜா குளிர்ந்து போயிருந்தது.

நீண்ட நாட்களின்பின் நன்றாகத் தூங்கி நிம்மதியாக எழுந்ததில் அன்று முழுவதும் மனதில் மகிழ்ச்சியையும், முகத்தில் தாய்மையின் பூரிப்பையும் நிலா உணர்ந்தாள். ‘அம்மா காபி..!’ குரல்கேட்டு சிந்தனை கலைந்தாள். எதிரே காப்பியோடு அவன் நின்றான். இதுவரை இல்லாத பாசவுணர்வு ‘அம்மா’ என்ற அந்த சிறுவனின் குரலில் கேட்டதை உணர்ந்தாள்.

அன்று பகல் முழுவதும் ஓய்ந்திருந்த வானம் இரவானதும் மீண்டும் அழத்தொடங்கியது. தொலைக்காட்சியில் ஏதேதோ நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தாலும், அதில் ஈடுபட மனம் மறுத்தது.

அதை நிறுத்திவிட்டுப் படுக்கை அறை நோக்கி வந்தாள் நிலா. படுக்கை அறைவாசலில் வழமைபோலப் பாய்விரித்து படுத்திருந்தான் சிறுவன். நின்று, நிதானமாக அவனைப் பார்த்தாள். தூங்குவது போலக் கண் மூடிப் பாசாங்கு செய்தாலும், அவன் தூங்கவில்லை என்பது தெரிந்தது.

படுக்கை அறைக்குள் வந்து படுக்கை அறைவிளக்கை அணைத்துவிட்டுக் கட்டிலில் சாய்ந்தாள். அறைக்கதவு சாத்தாமல் திறந்தபடியே இருந்தது.

தூக்கம்வர மறுக்கவே, புரண்டு, புரண்டு படுத்தாள். நேற்று இரவுபோல, இன்றைக்கும் மின்னலோடு இடி இடித்தால் எவ்வளவோ நல்லாயிருக்கும் என்று இருவரின் மனதிலும் ஒரே நேரத்தில் சிந்தனை ஓடியது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.