சிறுகதை: ஈழத்தில் ஒரு தாய்

Saturday, 21 February 2015 20:25 --பேராசிரியர் கோபன் மகாதேவா-- சிறுகதை
Print

-பேராசிரியர் கோபன் மகாதேவா -மங்காமல் ஒளிவீசும் மணிகள்போன்று
எங்கள், தொல் தமிழீழ மானிப்பாயின்
தங்கரத்தினம் என்னும் குணத்தின் குன்று
தாய்க்குலத்தார் பலர்போற்றும் தலைமைமாது
அங்காங்கு பந்துக்கள் அகதிகளாய்
அலைக்கழிந்து வாய்க்கரிசி போடுதற்கும்
பங்காகப் பாடையினைச் சுமப்பதற்கும்
பக்கத்தில் இல்லாமல் தனித்துச் சென்றாள்.

ஊரில் எவருக்குமே அவள் தங்கமாமி. எனக்கும் தான். நான் அவளின் ஒரே மகளை மணம் முடித்தேன். எப்போதும் பகிடியுடன் சிரித்த முகம்.  ஒரு மாதிரியான வஞ்சகமில்லாத கேலிச்சிரிப்பு என்றும் சொல்லலாம். தங்கமும் குடும்பத்தில், நான்கு சகோதரர்களுடன் ஒரே மகள். அவருக்கும், என்னுடைய மனையாளுடன் நான்கு ஆண்பிள்ளைகள்.

மானிப்பாயில் மரியாதையாக வாழ்ந்துவந்த குடும்பம். மாமிக்கு, எட்டு வாரங்களின் முன் பிறந்த குழந்தையிலிருந்து எண்பது தொண்ணூறு வயதினர் வரையில் எல்லோரும் நண்பர்களே. இப்படியான ஒரு ஆத்மா, குடும்பத்தினர் ஒருவருமே கிட்டடியில் இல்லாமல், அநாதை போல, நோயினில் நினைவின்றிப் பிரிந்துசென்றது. ஏன்?  எப்படி?  வாழ்வெல்லாம் எல்லோரிடமும் அந்த அசாதாரணத் தாயார் நல்லெண்ணமும் நற்பெயரும் தேடியது இதற்காகத்தானா?

மகனொருவர் வங்கியிலே முகாமையாளர்,
முன்சென்றார் மாரடைப்பால் மோட்சத்துக்கு.
மகள் ஒன்றே.  திருமணத்தால் நாடுவிட்டு
மணாளனுடன் சீமையிலே, வைத்தியச் சேவை.
பகம் போற்றும் மற்ற மகன் மான்செஸ்டரில்
மனத்துயரால் கண்ணீரைக் கொட்டி நிற்கச்
சகமக்கள் மற்றிருவர் இலங்கைத் தீவில்
சண்டையினால் தாயிருந்து பிரிக்கப்பட்டார்.

தங்கமாமியின் மூத்த மகன், தனது மனைவியுடனும் இரு மகள் மாருடனும் கொக்குவிலில் வசித்தார். யாழ் நகரத்தின் வங்கி ஒன்றில் வேலை. அப்போ 1980களின் நடுப்பகுதி. அடக்கு முறையினரின் அட்டகாசங்களும் கொள்ளைக்காரரின் பயமும் வாடிக்கையாளரின் பணமாற்று நெருக்கல்கள்களும் சேர்ந்து அவரின் வேலைப் பழுவைக் கூட்டி, 1986இல், 56 வயதிலே மாரடைப்பில் தாய் முன்னர் உயிரிழக்கச் செய்தன. எப்படி இருந்திருக்கும் பெற்றெடுத்து வளர்த்த தாயாருக்கு?  நான்கு ஆண்டுகளின் பின் அத் தாயின் கணவனாரும் இறந்தார்.  ஒரே ஒரு மகளும், ஒரு மகனும் இங்கிலாந்தில். மற்ற இரு மக்களில் ஒருவர் கொழும்பில், சுகவீனத்துடன். கெதியில் இந்தியப் பட்டாளம் யாழின் குடாநாட்டை ஆட்டிப் படைத்துக் கொக்கரித்தது. சுகதேகியாயிருந்த தங்கத்துக்கு, மூத்தமகனும் கணவனும்மறைய, முதுமையின் பிணி பிடித்தது.
கூட வாழ்ந்த கடைசிமகனும் அயலாரும் அவளைப் பார்த்துவர, 1992இல் யாழ் ஈழச் சமர் மூண்டது.             
                                               
அங்கேயோ அந்தத் தாய் முதுமையினால்
அங்கமெலாம் சோர்வடைந்து வாடிநிற்க...
இங்கே நாம் இரவிரவாய் அவர் நிலையைத்
துன்பம்சேர் கனவுகளில் கண்டு ஏங்கித்
திங்கள்கள் பல, வாடித்  திக்கு மாறித்
தவித்துக் கண்ணீர் இறைக்கவைத்த, முன்னாள்
எங்களது ஊழ்வினையே, காலதேவா!
உயிர்குடிக்கும் அரசினரின் கொடுமை ஏனோ?                     
                                        
எங்கள் உடல்களுக்கிடையே ஆறாயிரம்மைல் இடைத்தூரம்.  ஆனால் எம் உள்ளங்களுள் அவளே வசித்து வந்தாள். எனது நற்-பாதியான மனையாளைப் பெற்றெடுத்து ஆளாக்கிய, எம்மை நினைத்து உயிர் வாழும் தாய்! ஒருதாய் தன்னுடைய ஒரே மகளிடம் கொண்டிருக்கும் பாசம் விசேடமானது. இதை அனுபவித்தோர் நன்று அறிவர்.இரு துணைகளை இழந்த வயோதிபத் தாய்.  நாம் பாஸ்போற் அனுப்பியும் தாய்நாட்டையும், பிறந்த மண்ணையும், பரம்பரை வீட்டையும், மனை-துறந்த இளவலையும் விட்டுவர விரும்பாத அன்புத் தாய். அசாதாரணியான வீரத் தாய்.இங்கும் அங்கும் நாங்கள் கனவிலும் நினைவிலும் அழுது அங்கலாய்த்து அல்லல்பட்டுக் கொண்டே வாழ்ந்தோம். பணவசதி இருந்தும், அளவில்லா அன்பும் ஆசையும் இருந்தும் அடிப்படை மனிதப் பண்புகளையே பேணமுடியாமல் நாங்கள் தவித்தோம். அந்  நிலைக்கு எமைத் தள்ளி விட்ட இலங்கை அரசினரைத் திட்டினோம்.                    
கொடுப்பதற்கோ மக்களுக்கு மருந்தும் இல்லை
குடிநீர், ஒளி பெறுவதற்கு மின்சாரம் இல்லை
சடுதியாய்ச் சிகிச்சை பெற வசதியில்லை
போசணை சேர் தாதுள்ள உணவுமில்லை
அடுப்பு எரிக்கப் பொருளில்லை. அரசாங்கத்தின்
வங்கிகளில் பணவோட்டம் நேர்சீர் இல்லை.
கடு-கெதியாம் விமானமடல் கூடக், கேட்பீர்,
காலாண்டு கழிந்த பின்னே சென்றதையா!

திட்டினோம். அரசியல் அதிகாரமும் ஆயுதங்களும், கோடிக் கணக்கில் பொதுசனத்திடம் வரிகளென அறவிட்ட பணமும் அளித்த தைரியத்தால் தமிழ்மக்களின் வாழ்க்கையுடன் விளையாடிய சுயநலப் பழங்குடிக் காரப் போலிகளையும் இனத் துவேசிகளையும் திட்டினோம். திட்டிக் கொண்டே இருந்தோம்.  எம் தாயாருக்கு வேண்டிய மருந்துகள் கடைகளில் இல்லை. சத்துள்ள உணவோ பானங்களோ அவள் பெறமுடியாத நிலை. வீட்டில் மின்சார ஒளியில்லை. விளக்கேற்ற மண்ணெண்ணை இல்லை. நாம் அனுப்பிய பணத்தை, வங்கிகள் நேரத்துக்குக் கொடுப்பதில்லை. அந்த நோயாளியின் சடுதியான வலிகளுக்கு வைத்தியர்களை அழைக்கவோ ஆஸ்பத்திரிக்கு உடன்கொண்டு சென்றுகாட்டவோ முடியவில்லை. நாளாந்தம் அவளின் நிலையை அறியத் தொலை பேசிகள் சேவை செய்யவில்லை. நவீனயுகத்தில் நாம் வாழ்ந்தும் கூட விமானத்தபால்கள் நூறுமணிகளல்ல நூறுதினங்களின் பின்னரே கிடைத்து, எம் நாளாந்த வாழ்க்கையை நரக வேதனைக்கு இழுத்துச் சென்றிருக்கின்றன.  தீபாவளியன்று எம் தாய் சத்தியெடுத்தார் எனும் செய்தியை நாம் அடுத்தவருடம் பொங்கல் தினத்திலன்றே அறிய முடிந்ததைப் போல!    
             
இத்தியாதி இன்னல்கள் பல இடையே
ஈன்றெடுத்த தன்தாயைக் குழந்தைபோலப்
பத்திரமாய் மூன்றாண்டு பார்த்து வந்தார்,
பாசமுள்ள கடைசிமகன் உவந்து, நல்லாய்.
முத்துக்குமார சாமி என்னும் பிதாவை, முன்னர்
பிரிந்திருந்து பறிகொடுத்த குடும்பத்தார் இவ்
உத்தமியை இழப்பதற்கு விருப்பமின்றி
ஊக்கமுடன் அன்னவரைப் பேணி வந்தார்.

அந்நாளில் அவ்வீட்டில் இருவரே வசித்தது. கட்டிலில் எலும்பும் தோலுமாக நாள் முழுதும் படுத்திருந்து, பேசும் சக்தியையே இழந்திருந்த எம் தாய்.  அவரைத் தூக்கிச் சென்று காலைக் கடன்கள் செய்ய விட்டுத் துடைத்துக் குளிப்பாட்டித் தாங்கி இருத்தி உணவூட்டி, இரவு பகல் விழித்திருந்து, கண்ணை இமை காப்பதைப் போல் மூன்று ஆண்டுகளாய்க் காத்துவந்த, படித்திருந்தும் ஒரு வேலை செய்ய முடியாதிருந்த, மணந்தும் மணவாழ்க்கையை நடத்த முடியாத நிலையிலிருந்த கடைசி, அந்தத் தாயின் ஆசைமகன். இங்கிலாந்திலிருந்த நாம், மேற்கூறிய சேவைகள் ஒன்றிலுமே பங்கு கொள்ளவில்லை. பங்கெடுக்க முடியவே இல்லை.  அது, உண்மையே.  ஆனால், எமது திடமான நினைவிலும் கனவிலும் மணிக்கொரு தடவையாவது அந்தத் தாயாருக்கு  அப்படியான ஏதாவது ஒரு சேவையைச் செய்தோம் என்பதும் உண்மை.  அதற்கு இறைவனே சாட்சி! 1995 விடிந்தது.  யாழ்ப்பாணக் குடாநாடு இருண்டது. தமிழருக்கு ஏற்பட்ட அநீதிகளை, நேரடியாகப் பேசியே தீர்ப்பேன் என்று பதவியேற்ற அதே சனாதிபதிகூட தமிழரை அடக்கப் போரை முடுக்கினார்.                                    
அத்துணையும் பார்த்திருந்த காலதேவன்,
அனுருத்த எனும் அம்பை ஏவிவிட்டான்:
புத்தியொன்று படிப்பிப்போம் பண்டைக்கால
வித்தகர், விற்பன்னர் யாழ்ப்பாணத்தார்க்கு!
யுத்தத்தில் பிடித்திடுவோம், அவர் அகத்தை!
யூதரைப்போல் சிதறடிப்போம் அவரினத்தை!
சொத்துகளாம்! சுகவாழ்வாம்! சுதந்திரமாம்!
அரசினரின் எம்படைகள் சில்லறையாம்!

சனாதிபதியாகப் பதவி ஏற்ற வியாங்கடைப் பெருங் குடியின் இரு-பிரதமர்களின் விதவை மகளானவர் தனது மாமனாராகிய அனுருத்த என்பவரைப் போர் மந்திரியாக நியமித்து, தம் அரசாங்க படைகளின் முழுச் சக்தியையும் பாவித்து, தமிழ்ப் பொதுச் சனங்களுக்கு அவலங்கள் ஏற்பட்டாலும், ஏதோ ஒரு வழியில் தமிழரின் உரிமைப் போரை முன் நின்று நடத்திவரும் வீரப் படைகளை அழித்து அல்லது துரத்தித் துரத்தியடித்து யாழ்ப்பாண நகரை எப்படியாவது கைப்பற்றுமாறு உத்தரவுகள் பிறப்பித்திருந்தார். இது வரலாற்று உண்மை. எமது ஈழத்துத் தாயாரின் கதைக்கு இது அத்தாவசியமான பின்னணியே. அரசியலன்று! இப்படியான சூழ்நிலையால் குழப்பமடைந்த பொது மக்கள், வீட்டிலுள்ள வயோதிப நோயாளிகளை என்ன முடியும்?
                                              
அன்று அவர்கள் ஏவுகணை, தாங்கி, கொண்டு
சுட்டபடி முன்னேறி வந்த காலை,
சென்றிடுவோம் தாயுடனே சாவச்சேரி,
என்றெண்ணிக் கார் பிடிக்க மகனார் ஓட...    
இன்றிருந்து சென்றவர்கள் திரும்பவேண்டாம்
ஈசன்வழி, தங்கியுள்ள வயோதிபர்கள்
என்று, தமிழ்வீரர், மற்றையோரைக் கூட்டிக்
குடாநாட்டை விட்டு வெளியேறிச் சென்றார்.

1995 முடியும் தறுவாயில் பொதுமக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் ஏற்படக் கூடிய நட்ட அளவுகளைக் குறைப்பதற்கும் தம் போராளிகளின் அனாவசிய இழப்புகளைத் தடுப்பதற்கும் தமிழரின் படைகள் தற்காலிகமாக வன்னிக்கு, பெரும்பகுதி மக்களினுடன் இடம்பெயர்வதென முடிவு செய்ய, நாலே நாலுநாட்களில், உலகு முன்னென்றும் கண்டிராத ஐந்து இலட்சம் தமிழ் மக்களின் வரலாற்று நகர்வு வெற்றியாக நடந்தேறியது.
இக்கட்டத்தில், வீட்டிலே அக்கத்துப் பக்கத்து வயோதிபர்களின் பொறுப்பில் தாயாரை விட்ட மகன், சில நாள் வெளியேற்றம் செய்து தாயாரைக் கார் ஒன்றில் கூட்டிச்செல்ல எடுத்தமுயற்சி தோல்வியடைந்தது. அந்த மகன், தன்னைப் பெற்ற ஆசை அன்னையை விட்டு நிரந்தரமாகப் பிரிவதைஅறியாதே, பிரிந்தார்.

தனித்துவிட்ட தாயாரைச் சொந்தவீட்டில்
துணையிருந்த பக்கத்து முதியோர் பார்த்தும்
இனித் தாங்க முடியாது, இன்னல், என்று...
ஈஸ்வரனை நாடி அவள் வேண்டிக்கொள்ள
கனிந்துவிட்ட எண்பத்தெட்டாம் வயதில்...
காலன், அவ் உத்தமியின் உயிரைக்கொண்டு
பனிமலையில் பரமபிரான் பாதம் வைத்தான்.
வாழ்ந்திடுறோம், நாம், அவரின் நாமம் போற்றி!                 

இக்கட்டத்தில்கூட  தபால், தொடர்புச் சாதனங்கள் அற்ற நிலை எமக்குத் திரும்பவும் எமனாக வந்தது.தனித்து இறந்த தாயாரை, முதிய நண்பர்கள், தகனஞ்செய்ய முடியாது,  தமக்கு இயலுமான வழிகளிலே தூக்கிச் சென்று அடுத்த வீட்டுக் காணி ஒன்றில் விதைத்தனர். சாவகச்சேரியில் இருந்த அன்பு மகன் கூட, அன்னையாரின் சுகமோ செய்தியோ வாரங்களாக அறிய முடியவில்லை. 1996 தைமாதம்தான் அவர் எங்களுக்கு எழுதினார். அதில், எமது தாயார் மார்கழி 20ந் திகதி சிவபதம் அடைந்தாரென அறிவித்தார். நாங்கள் உடனே இலண்டனில் தாயாரின் ஈமக் கிரியைகளை, எம்முடைய கிட்டிய இனத்தார்களின் சமுகத்தில் நடத்தினோம். எம் தாயார் 27-12-1995 அன்றே இறந்துவிட்ட நிசச் செய்தியை 1997இலேயே, அதாவது அடுத்தடுத்த வருடமே அறிந்தோம்!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 21 February 2015 20:31