சிறுகதை: 'ஹாக்' செய்யப்பட்ட சித்ரகுப்தனின் கணக்கு!

Friday, 18 August 2017 15:01 - பல்லக்கு - சிறுகதை
Print

சிறுகதை: சித்ரகுப்தனின் கணக்கு களவாடப்பட்டது.எம தர்ம ராஜனின் வாகனமான எருமையின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் திடீரென்று சிகப்பு வெளிச்சத்துடன்  எச்சரிக்கை  சமிக்கைச் செய்தது. அசவர வேலையாக  போய்க் கொண்டிருந்த எம தர்மன்  “என்ன !? யாரது ,என்னாயிற்று ” எனப் பதட்டமாக கேட்டார்.

அம்மணிகள் பேசவும், கேட்கவும் ,அவசர சமிக்கைச் செய்யவும் வடிவமைக்கப் பட்டிருந்தது.

மறுமுனையில் ,சித்ரகுப்தன் “தலைவா! நம் கணிணி நிலயத்தை எவரோ 'ஹாக்' செய்துவிட்டார்கள்! ”

“'ஹாக்' ..!? அப்படி என்றால் ? ,விவரமாக சொல்லுங்கள்” எனக் கேட்டார்

“எவரோ நம் கணிணியில் இருந்த சில கணக்கு பையில்களை களவாண்டு விட்டார்கள்!”

“அப்படியா! எந்த கணக்கு !!  ” என அதிர்ந்துக் கேட்டார்.

“பாவ புண்ணிய கணக்கு பையில் களவாடப்பட்டது. இந்தந்த செயலுக்கு இவ்வளவு புண்ணியம், பாவம் என அளவு கணக்கு இருந்தது அல்லவா!? அது..”

“ஓ..ஓ !! அது முக்கியமான கணக்கு ஆயிற்றே ! அதை கொண்டு தானே  ஒவ்வொரு மானிடருக்குமான  மொத்த கணக்கு ரிப்போர்ட் ,மும்மூர்த்திகளுக்கும் நாம் அனுப்புகிறோம். இதை திரும்பப் பெற வழி இருக்கிறதா என கணிணி துறையினரிடம் கேட்டீர்களா?”

“நம் கணிணி துறை ,அசட்டு நம்பிக்கையில் அதற்கு 'பேக்-அப்' எடுக்கவில்லையாம் ..ஆகையால் 'ரி-கவர்' செய்ய முடியாது எனச் சொல்லி விட்டார்கள் !”

“சரி , அப்படியானால் இதை மூம்மூர்த்திகளுக்கும் உடனே தெரியப் படுத்துங்கள் ,சித்ரகுப்தன்..”

உடனே மூம்மூர்த்திகளோடு அசவர கூட்டம் கூட்டப்பட்டது.

மூம்மூர்த்திகளில், பிரம்ம தேவன் மிகவும் அதிகம் துணுக்குற்று “எதைக் கொண்டு அவர்கள் தலை எழுத்தை எழுத, நான். !! ” என வருத்தபட்டார்.

“சரி அந்த கணக்கு பதிவில் என்னதான் இருந்தது ? ” எனக் கேட்டார் விஷ்ணு.

“உதாரணத்துக்கு ..புண்ணியம் எனக் கொண்டால் ,  தெய்வ இருப்பிடம் எனக் கொள்கிற அமைப்புகளுக்கு நன்கொடை செய்வது ,  பிறந்த நாள் எனில் அனாதை ஆசிரமங்களுக்கு தலைக் காட்டுவது. குறிப்பிட்ட தினத்தன்று குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ,குறிப்பிட்ட பொருளை வைத்துக் கொடுப்பது,  உங்கள் பெயர்களில் ஏதோ ஒரு பெயரை மட்டும் கொண்டு வழிப்பட்டால்  ,அவர்களுக்கு கல்வியில் சலுகைச் செய்வது ..  ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட புண்ணிய பலன்கள்  ... இப்படி பல அளவீட்டுக் கணக்குகள் அதில் இருந்தது ” என்று விளக்கம் சொன்னார் சித்ரகுப்தன்.

'ஹும்'.. என்றனர் கேட்டவர்கள்.

இப்போது இதைச் சொன்னால் தான் உண்டு ..என்பதுப் போல நாரதர் , லேசாக தம்பூராவை மீட்டியப் படியே.. “இதற்கு கொடுமையான பக்கவிளைவுகளும் இருக்கிறது. உங்களுக்கு படைக்க வைத்திருந்த  இனிப்பை, சிறு குழந்தை ,படைப்பதற்கு முன்பே எடுக்கப் போனால் பட்டென்று கையிலும் வாயிலும் அடிப்பதிலிருந்து ஆரம்பித்து
உங்கள் பெயரில் ஏதோ ஒரு பெயரை இழிவுப் படுத்தியதாக புரளி வந்தாலும், கொலை செய்கிற வரை .. பல கொடுமைகள் .பாவ புண்ணிய  நம்பிக்கையை ஒட்டி  நடந்துக் கொண்டுத் தான் இருக்கிறது....” என்று இழுத்தார்.

“என்னது... !” என சிவபெருமான் இதைக் கேட்டதும் கோபமாக அதிர்ந்துக் கேட்டார்

அந்த அதிர்வில், அவர் கையில் சுற்றியிருந்த சின்ன  பாம்பு ஒன்று துள்ளி கீழே விழுந்தது . பயந்து திரும்பி பார்த்தது.. அதைக் கண்டு சிவபெருமான் “நான் உன்னை சொல்லவில்லை ..நீ வந்து ஏறிக் கொள் ” என்றதும் செல்லமாக, மறுபடியும் வந்து சிவபெருமானின்  காலில்  சுற்றிக் கொண்டது.

“தெய்வ நம்பிக்கைகளின் பெயரில் ஆரம்பித்த இக்கணக்கு ,இப்போது பல மாறான ,அபத்தமான ஆபத்துகளை உருவாக்குமானால் ,இக்கணக்கை நாம் மறு பரீசீலனை செய்ய வேண்டும் ” என்றார் சிவபெருமான்

“இதற்கு எல்லாம் காரணம் என்ன ? .. எல்லாவற்றையும் சேர்த்தே பழகிய மனிதர்கள் புண்ணியங்களையும்  சேர்ப்பதில் மும்முரமாகி, இதைச் செய்தால் புண்ணியம் ,அதைச் செய்தால் புண்ணியம் என கிளம்பி விட்டார்கள் ..அடிப்படையான அன்பை அனுபவிப்பதில் கவனம் தவறி விட்டது.  அவர்கள் அன்பை பரிபூரணமாக உணர வேண்டும். அதை மீண்டும் இவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்கு  இந்த கணக்கு தொலைந்தது தொலைந்ததாக இருக்கட்டும்.” என்றார் விஷ்ணு.

“அப்படியானால் .. அதை பூமிக்கு சென்று மனிதர்களுக்கு புரிய வைக்க,  மறுபடியும் நீங்கள்  அவதாரம் எடுக்க வேண்டியிருக்குமோ ! ” எனக் கேட்டார் நாரதர்.

“என் கால கணக்குப் படி மானிடர்கள் முன் விடலைப் பருவத்தில் இருக்கிறார்கள் . எதைச் சொன்னாலும் தப்பாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. நாம்  பார்த்துப் புரிய வைக்க முயற்சி பண்ணுவோம்.”  என்று யோசிக்கலானார் விஷ்ணு.

அவரே தொடர்ந்தார்.. “அப்படியே அவதாரம் எடுத்து போயோ ,தெய்வ தூதுவனாக அனுப்பியோ சொன்னாலும் மீண்டும் அதை வைத்துக் கொண்டு வேறு ஒரு பஞ்சாய்த்து பண்ணுவார்களே! அந்த இம்சை இருக்கிறதே...”

“ஓ! 'ப்ரீ-டீன் ஏஜ் பிராப்ளம்' என்கிறீர்களா.. ” எனக் கேட்டார் நாரதர்.

விஷ்ணுவிற்கு ஏதோ ஒன்று பிடிப்பட்டதுப் போல, “சரி , என்னச் சொன்னீர்கள் !...கணினியை 'ஹாக்' செய்து விட்டார்கள் என்றுத் தானே.. பூமியிலும் ,மனிதர்கள் கணினி இணையங்கள் வைத்திருப்பார்கள் அல்லவா? 'ஹாக்' செய்யும் போது ,நாம்   கணிணி நிலயத்தை வசப்படுத்தி நமக்கு தேவையானவற்றை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும் அல்லவா?  ” எனக் கேட்டார் 

“ஆமாம் , செய்யலாம் ! ” என்றனர் தேவ லோகத்து கணிணி துறையினர்.

“அப்படியானால் நான் எழுதித் தருகிற செய்தியை,பூமியின் எல்லா  கணிணி நிலையங்களுக்கும் சுவர் செய்தியாக வரும் படியாக செய்யுங்கள்.”


`கடவுளாகிய நான் , பாவ புண்ணிய அளவு கணக்கீட்டில் ஒரு மாற்றத்தை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். எவ்வாறு சூட்டை உணரவும், குளிரை உணரவும் இன்னோரு மன கணக்கு தேவையில்லையோ..தொடுகிறீர்கள் உணருகிறீர்கள். அவ்வளவே... அதே போல் மற்றவர் துன்பத்தை பார்க்கிறீர்கள் .. உணர்வீர்கள். அதற்கேற்ப செயல் படுவீர்கள். எதைச் செய்தால் புண்ணியம் என கணக்கு வைத்து, அன்பை முழுமையாக உணரும் வாய்ப்பை இழந்து விட்டீர்கள். பாவ புண்ணிய அளவு கணக்கு என ஒன்று இருப்பதாக நீங்கள் கொள்வதினாலேயே ,உங்களுக்குள்  தன்னிச்சையாக இரக்கம் ஏற்படுவதை சரியாக உணரும் முன்பே, மனம் இக்கணக்கு பக்கம் திரும்பி திசை திருப்பி விட்டு இருக்கிறது.  இக்கணக்கின் இடையுறு இல்லாமல் , யார்  வாஞ்சையை மனதில் உணருகிறார்களோ, , அவர்களுக்கு அது மறுபடியும்  தொலைந்து போகவே முடியாது

எனவே, என் பெயரைச் சொல்லியோ ,எனக்குச் செய்வதாக நினைத்தோ, நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்கிற  அளவீட்டுக்காக மட்டும் செய்கிற  செயல்கள் புண்ணிய கணக்கில் வராது. பயப்பட வேண்டாம். எல்லோரையும் அன்பின் ஊற்றோடு தான் அமைத்தோம்.  வாஞ்சையின் ஊற்றை உணர்ந்தவர்கள் , உணராதவர்கள் என்ற பிரிவு மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். இந்த மாற்றம் ,இந்த அறிவிப்பை நீங்கள் அறிந்ததிலிருந்து அமலுக்கு வருகிறது.

வழக்கம் போல் ஆசீர்வதிக்கிறேன் ! ’  

-  பூமியிலுள்ள எல்லா பிரதான வலை தளங்களிலும் , மேற்கண்ட  அறிவிப்பு ,சுவர் செய்தியாக   அனைவரின் கணிணியிலும் பளீரென்று காட்சியிடப்பட்டது.


This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 22 August 2017 04:26