கடல்புத்திரன் (ந.பாலமுரளி) -யார் இவர்கள் ? , உறவுச் சங்கியில் இருப்பவர்கள் என்று தெரியும்.அவனுக்கு அடுத்த கீழ் வகுப்பில் படித்தவர்வர்கள்.ஆனந்தி ,விதுரன்.இருவருமே இரட்டையர்களாக இருப்பார்களோ ?, உருவ ஒற்றுமையில் அச்சாகவிருந்தார்கள் ,தவிர ஒரே வகுப்பிலே வேற‌ படிக்கிறார்கள்.பள்ளிக்கூடத்திலே, சின்ன வகுப்பு மாணவர்கள் எல்லாரையுமே திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டு தானிருந்தார்கள். மாநிறத்தில் கூடிக் குறையிற ,ஓரிருவர் கறுப்பாகக் கூட திகழ்கிற நிலையிலே பால் போல வெள்ளைப் பிள்ளைகளாக அவர்கள் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏன் பார்க்க மாட்டார்கள்? பிஸ்கட் பிரேக் நேரத்தில்,மணி அடிக்கிற வரைக்கும் எல்லாரும் ஓடியாடி விளையாடிக் கொண்டே இருப்பார்கள்.அண்ணா, அக்கா படித்த வகுப்புகளையும் அச்சயத்தில் எட்டிப் பார்த்து விட்டு வருபவன் முருகவேல் . மற்ற சிறுவர்களிற்கும் அந்த பையித்தியம் இருந்ததுவெள்ளி பார்க்கிறது, விடுப்பு கேட்கிறதெல்லாம் சின்ன வயசிலிருந்தே முளை விடுற சமாச்சாரங்கள் தான். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.அதுவும், பெண்கள் முகம் துலக்கமாகவே பளிச்செனக் காட்டிக் கொடுத்து விடும்.சந்தோசம்,அழுகை எல்லாம் அவர்களிடமிருந்து பிரவாகிப்பதால் பெரியவர், சிறியவர் எல்லோரும் அவர்களுடனே அன்புடன் பேசுறது,சொக்கிலேற்றுகள் ...கொண்டு வந்தால் முதலில் கொடுப்பதெல்லாம் நிகழ்கிறது.பெடியள் முகம் ,கடும் போக்கான சிங்களத் தலைவர்களைப் போல இல்லா விட்டாலும் அமுத்தலாத் தனம் போன்ற மாசுகள் இருக்கவேச் செய்கின்றது. முருகுவே,தங்கச்சியின் தலையில் குட்டி விட்டு,கையிலிருக்கிறதை பறித்துக் கொண்டு ஓடி இருக்கிறான்.பிறகு ,அவள் விக்கி,விக்கி அழுகிறதைப் பார்க்கப் பொறுக்க முடியாமல் கொடுத்தும் விட்டிருக்கிறான். ஆனால்,அந்த குணங்கள் இவர்கள் மத்தில் இருக்கின்றன.

வவுனியா மகாவித்தியாலக் கட்டிடங்கள் ஒவ்வொரு கோணத்தில் நீள‌ப்பாட்டுக்கு, கிடைப்பாட்டுக்கு,என கட்டப்பட்டிருந்தன.கோணப்பாட்டிலே இல்லை. ஆனால், ஒவ்வொன்றுமே நீள,நீள கட்டிடங்கள்.அதிபரின் கட்டிடத்திலிருந்து வாறவர்கள் , ஆய்வுக்கூடக் கட்டிட மூலையால் திரும்பி கீழே இருக்கிற ஒன்றிலே இருந்து நாலு வரைக்கும் வகுப்புகள் இருக்கிற கிடையாக விருக்கிற கட்டிடத்திற்கு வருவார்கள்.

இவன் மேல் பகுதியிலிருந்து இருந்து மணி அடிச்ச சத்தத்தில் கீழே இருந்த வகுப்பிற்கு கண்மண் தெரியாமல் ஓடி வந்தான். ஆனந்தி மேலே எதற்கோ போறதுக்காக வேகமாக ஓடி வந்தாள். என்ன நடந்தது ?...  என அவனுக்கு கொஞ்ச நேரம் தெரியவில்லை . மண்டைகள் இரண்டும் 'நொங்'அடிபட்ட இருவரும் நிலத்தில் விழுந்திருந்தார்கள். அந்தப் பக்கமாக வந்த தமிழ் வாத்தியார் "என்ன அப்படி அவசரம்.  நல்ல காலம் காயம் ஏற்படவில்லை. எழும்பி வகுப்புகளிற்குப் போங்கள்" என சொல்லி ஆனந்தியைப் பிடித்து எழும்ப உதவி செய்தார். இப்ப தான் தலை, சிறிது நோகத் தொடங்கியது. அவளும் ... வந்த நோக்கத்தை விட்டு அவனோட வகுப்பிற்குப் போனாள். பிறகு தான் தெரிந்தது. அவளுடைய அழி றபர் துலைந்து விட்டிருக்கிறது. சோதி மாமா மேல் வகுப்பில் படிக்கிறவர். அவரிடம் இரவலாக வாங்க ஓடியிருக்கிறாள் அவளுக்கும் நொந்திருக்கும். ஆனால்,வீரிகள் எல்லாம் ‘நோ’வை ஒரு பொருட்டாக எடுப்பவர்கள் இல்லை ! இப்படி ஓட்டத்தில் குருவி,படிப்பில் சூரிகள் எல்லாரும் மற்றையவை போன்றவர்கள் இல்லை. முருகுவிற்கு,வளர்ந்த பிறகும் கூட இப்படியான பலர் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள்; ஏணி வைத்தால் கூட இவர்களோட பறக்க முடியாது என தனக்குள் சிரித்துமிருக்கிறான்.

முக்கியமான ஒரு விசயம், இந்த‌ தங்கச்சியும், அண்ணனும் நெழுக்குளத்திலிருந்து தனித்தனியே அரைச் சைக்கிள்களில் சோதி அண்ணனுடன் சேர வாரவர்கள்.குருமண்காடே பள்ளிக்கூடத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது.அவர்களுடைய நெழுக்குளத்திற்கு மன்னார் வீதிச் சந்தியிலிருந்து இன்னும் ஒரு மைல் தூரம் போக வேண்டும். எப்படி இவ்வளவு விசயங்கள் தெரியும் எனப் பார்க்கிறீர்களா?

குணவதி, ஆசிரியை வவுனியா மகாவித்தியாலத்திற்கு மாற்றம் பெற்று வந்த மூட்டம், மேல் வகுப்பில் தன்னை "நான் திருமதி சதாசிவம் ,உங்களிற்கு சுகாதாரம் பாடம் எடுக்க வந்திருக்கிறேன்"என்று அறுமுகம் செய்தார்."ரீச்சர் ,உங்களுடைய பெயர் என்ன ?"என்று சோதி முந்திரிக் கொட்டையாகக் கேட்டிருக்கிறான். "குணவதி "எனச் சிரித்துக் கொண்டு கூறினார்.வகுப்புகள் எல்லாம் முடிந்து அந்த நாள் நல்லாவே கழிந்திருந்து. அவரின் கதைச் சொல்லி பாடம் நடத்துற விதம் மாணவர்களிற்கு நன்றாக‌ பிடித்து விட்டிருந்தது.

அடுத்த நாளே, "ரீச்சர் ,நீங்கள் எங்களுக்கு உறவுக்காரர் "என சோதி கண்டு பிடித்துக் கூறி விட்டான்."எப்படி?"என்று ஆச்சரியமாக கேட்டார்.அவருக்கு அறியும் ஆவல் இருந்தது."அப்பாட்ட உங்கட பெயரைச் சொன்ன போது ...". என்று பயல், சதாசிவத்தின் வரலாறையே கூறத் தொடங்கி விட்டான்.

அம்மாவிற்கு அப்பாவைப் பற்றிய ஆழமான விபரங்கள் அவ்வளவாகத் தெரியாது.சிறுவயதிலே அப்பா, அம்மாவை இழந்தவர். அப்பாவும்,அப்பாட தம்பியும் தங்கச்சியும் அப்பம்மாவின் தங்கச்சி குடும்பத்தோடு சேர்ந்து ஒரே பிள்ளைகளாக வளர்ந்தவர்கள்.படித்து ஆளாக்கி கல்யாணம் கட்டி வைத்தவர்கள் எல்லாம் அவர்கள் தான்.சோதியின் அப்பா ,பாட்டிக்கு ஒன்றைவிட்ட அண்ணரின் மகன் . அவருக்கு அப்பாவை சின்ன வயதிலிருந்தே நல்லாய்த் தெரியும்.உறவுச் சங்கிலி கொஞ்சம் விலத்தியல்லவா ஓடுகிறது.அம்மாட கல்யாணவீட்டுக்கு கூட‌ வந்திருக்கிறார்.அம்மாவிற்கு தான் அவரைத் தெரியவில்லை.

சோதிக்கு தன்னுடைய‌ உறவினர் என்பதில் நிறைய புளுகம்.அவன் வீடு திரும்புற போது ,முருகவேலை அல்லது அவனின் அண்ணரை சைக்கிள்ளை ஏற்றி வந்து குருமண்காட்டுச் சந்தியில் இறக்கி விட்டுப் அப்படியே வீட்டுக்குப் போவான். சந்தியிலிருந்து ஐந்நூறு மீற்றர் தூரத்தில் தான் இவர்கள் வீடு இருந்தது. நீள‌ நடையில் மற்றவர்கள் வார போது, வீட்டிலே இவன் குசாலாக இருப்பான்.

வவுனியா வெய்யிலே, நாலு வருசங்கள் ஓடி விட்டதே தெரியவில்லை. தெரிந்திருந்தால் தான் அங்கே ஆச்சரியம்.வயிரப்புளியம் குளம்,பட்டாணிச்சுப் புளியம்குளம் எல்லாம் வற்றி ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் பாளம்,பாளமாக அடி மண் வெடித்து பார்த்து விட்டான் . வயிரப்புளியம் குளத்தில் நடந்து செல்ல குளம் முடிந்த பிறகு இருக்கிற சிறிய காட்டு நிலத்துண்டில் மங்குஸ்தான் மரமொன்றை பெடியளோடக் கண்டிருக்கிறான்.சாப்பிடக்கூடிய பழத்தை ஏறி பறித்து சாப்பிட்டிருக்கிறான்.முரலிப்பழ மரமும் இருப்பதாக கூறினார்கள்.அவன் காணவில்லை.பள்ளிகூடத்து வாசலில் மத்தியான நேரத்தில் பாலப்பழம்,முரலிப்பழம் விற்கிற கிழவியிடமிருந்து வாங்கிச் சாப்பிட்டிருக்கிறான்.

மழைக்குப் பிறகு தண்ணீர் நிரம்பி வான்பகுதியில் வழியும். அதிலிருந்து வாய்க்கால்கள் தொடங்கி வயல்வெளிகளிற்குள் செல்லும் நீரை நெற் செய்கைக்கு,தோட்டச் செய்கைக்கு பாவிக்கிறார்கள்.யாழ்ப்பாணத்தில் அந்த மாதிரி பெருங்குளங்கள் இல்லை தான்.வான் அமைப்பும் இல்லை.மழை நீர் வந்து சேர்ற வாய்க்கால்கள் மட்டுமே இருக்கின்றன.ஒப்பிடுகையில் இவை சிறுகுளங்கள் என்றே சொல்லலாம்.பராமரித்து இவற்றையும் நல்ல முறையில் பயன்படுத்தலாம் என்றே படுகிறது.முதலில் யாழ்ப்பாணத்தில் மத்திய அரசின் நிர்வாகக் கட்டமைப்பை அறவே இல்லாமல் ஒழித்து மாகாணவரசின் கையில் திருத்தச் சொல்லி அறிக்கை அனுப்புற குறைந்தப்பட்ச ஜனநாயகம் நிலவுமானால்....இலங்கை ஒரு வருசத்திலேயே சிங்கபூராகி விடும்.சிங்கள ஜனநாயகம் நல்லதில்லை என்பதை என்று தான் ஏற்றுக் கொள்வார்களோ?தமிழ் தரப்பு வெளிநாடுகளிலே ஏக்கங்களுடன் உதிர்வது தான் கர்ம‌ விதியா?

வயிரப்புளிக குளத்திற்கு அருகில் இடிந்திருக்கிற பழைய வீட்டொன்றில் கலர்கலரான மணிமாலைகள் கழுத்தில் தொங்க மெல்லிய பெண்களும் ஆண்களும் குழந்தைக் குட்டியும் என சதா வெத்திலைச் சப்பி சிவந்த வாய்களுடன் குரவர் கூட்டம் நெடுக இருப்பதையும் பார்த்திருக்கிறான்.அவர்கள் தான் அந்த மங்குஸ்தான் மரங்களை வைத்திருக்கி வேண்டும். சாத்திரம் சொல்றேன்"என ஊர்மனைக்குள் வந்து இடும்பில் இருக்கிற துணியில் அரிசி,பருப்புகளையும் வாங்கிக் கொண்டு செல்வார்கள்.பாம்புகளை பெட்டியில் கொண்டு வந்தும் மகுடி ஊதி ஆட வைத்தும் பணம் சம்பாதிப்பார்கள்.கயிற்றில் கட்டி தோளில் வீற்றிருக்கிற சிறிய குரங்கும் "அடியடா தம்பி குத்துக் கரணம்" என்றால் மூன்றாம் பிறையிலே கமல் குத்துக் க‌ரணம் அடிக்கிறது போல ஜோராக அடிக்கும்.

அவன் வவுனியாவில் இருந்த காலம் முழுதும் அந்த குரவர் கூட்டம் அங்கே தான் திரிந்தன ; இருந்தன ! சிலர் அவர்களை ‘கள்ளர் கூட்டம்’ என்றார்கள். ஆனால் , பெருப்பாலும் களவெடுக்கவில்லை.நரிவேட்டைக்கு பாளமாக‌ வெடித்திருக்கிற குளம் வழியே திரிந்திருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் மக்களை விரட்டுற அரசாங்கமாயிற்றே.மலையகத்தவர்களை,ஈழத்தமிழர்களை எல்லாம் விரட்டியவர்கள் , இவர்களையும் இந்திய வம்சாவழியில் சேர்த்து விரட்டி இருப்பார்கள். இன்று ,பாழடைந்த இலங்கையில் இவர்களையும் காண முடிவதில்லை. இந்தியாவிலிருந்த வந்த தெலுங்கர்கள் இவர்கள் என்பார்கள்.ஒரு காலத்தில், இலங்கை வந்தாரை வாழ வைத்த தீவு !

குருமண்காட்டு பாஸ் குடும்பத்துடன் அவன் ,அண்ணர்,அக்கா,தங்கச்சி எல்லாரும் பட்டாணிச்சுப் புளியம் குளத்துப் படிகளில் இருந்து குளிக்கப் போவார்கள்.அண்ணர் ,அவர்களோட வார சாந்தா மூலம் நீச்சலைக் கற்றுக் கொண்டு விட்டான்.சாந்தா, பாஸ்ஸிட மனைவி,சிசிலியக்காவின் தம்பி.அக்காவிற்கு நீச்சல் வரவில்லை.அக்காட வயதான பாஸ்ஸிட தங்கச்சி கெங்காக்கா அந்த மாதிரி நீந்துவாள்.அக்கா சிங்களம் தான் நல்லாப் பேசத் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டாள்.மற்றவர்கள் எல்லாருக்கும் வரவில்லை.அந்த குடும்பம் தமிழ் நல்லாவே பேசுறவர்கள்.பாஸிட குரலில் எப்பவும் அன்பு தேன் போல தவழ்ந்து ஓடும்.

கடந்த வருசத்திலே இருந்து தான் சோதியின் அக்காப் பிள்ளைகளான இவர்கள் இருவரும் அவனோடச் சேர்ந்து அரைச் சைக்கிள்களில் பள்ளிக்கூடம் வரத் தொடங்கியிருந்தார்கள்..இப்ப அவர்களோட போற போதும் கூட‌ ஏற்றிக் கொண்டு தான் வருகிறான்.முருகுக்குத் தான் சைக்கிள் கூட‌ஓடத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் யாரும் ஓ‌ருவரின் சைக்கிள்ளை சந்தி வரையில் ஓடி வர அவர் சோதியின் சைக்கிளில் வந்திருப்பார்.அவனுக்கு சைக்கிள் விடத் தெரியாதை நினைத்து ,நினைத்து மனதில் புழுங்கினான்.சந்தர்ப்பம் தான் வாய்ப்பதாகத் தெரியவில்லை.

குருமண்காட்டிலேயும் சிலபேர்களிடம் தான் சைக்கிள்கள் இருந்தன.இவர்களிற்கு பக்கத்து வீட்டான பவா வீட்டிலே ஒரு சைக்கிள் இருந்தது.முன்வீட்டான துரைச்சாமி வீட்டிலே இருந்தது.வீட்டிலே இருந்த பெரியவர்கள் மாத்திரமே ஓடினார்கள் சிறியவர்களிடம்

அவ்வளவாகக் கொடுப்பதில்லை.நகைகளிற்கு பாவிக்கிற பவுண் போல பாவிக்கப் பட்டது.சைக்கிள் திருத்துற கடைகளும் அருமையாக வீடுகளிலே வைத்திருந்தார்கள்.

தூரத்தில் இருக்கிற நகரப் பகுதிக்குப் போய் உரங்கள்,கிரிமிநாசினிகள்...,சிலசமயம் காய்கறிகளை விற்கவும் கொண்டு செல்லவும் சைக்கிள் அவசியம்.சைக்கிளே பழுது என்றால் எல்லாமே படுத்து விடும்.மாட்டு வண்டில்களில் சென்றது குறைவு தான்.சைக்கிளில் போய் வர அரைநாள் போய் விடும் என்றால் வண்டி கட்டினால் முழுநாளுமே தேவைப்படும்.

கோயிற் திருவிழாக்களுக்கு போக அருமையாக வண்டில் கட்டியிருக்க வேண்டும்.அவனுக்குத் தெரிந்து கோவில்கள் கிட்டத்திலும் எதுவும் இருக்கவில்லை.

அச்சமயம் குருமண்காட்டிலே பத்து குடும்பம் வரையில் தான் இருந்தன. முன் வீட்டு வளவுக்கு முன்னால் வீதியோரம் காட்டுமரமொன்றுடன் கூடிய காட்டுச் செடிகள் தடித்தவை சிக்குப் பட்டுக் கிடந்தது.அப்படியே காடுகளின் சிறுத் துண்டை விட்டு,விட்டு தான் பெரும்பாலோனர் காடுகளை வெட்டி காணியாக்கி இருந்தார்கள். ஆரம்பத்தில் கொட்டில் எழுந்து வீடுகளாக வளர்ந்தாலும் நிழலுக்கு ஒதுங்கிறதுக்காக விட்டு வைத்திருக்க வேண்டும்.காட்டன்றியின் வீட்டிற்கு காட்டுக்கு மத்தியிலிருந்த ஒற்றையடிப் பாதையாலே போய் தான் அவர்களுடைய காணீயிலே கட்டியிருக்கிற வீட்டுற்குப் போக வேண்டும். பவாட காணிக்குக்கு கூட சிறிய காட்டைக் கடக்க உள்ளே பக்கத்து,பக்கத்துக் காணிகளாக விரியிற காணிகளில் ஒன்றாகத் தான் இருக்கிறது.அதிகமாக நிலக்கடலை போட்டிருக்கிறார்கள்.நெற்பயிர்ச் செய்திருக்கிறார்கள்.அவரைப் போடப்பட்டிருக்கிறது..

சந்தியிலிருந்து கொஞ்சம் கிழக்கான பகுதி குவாட்டஸ் எனப்பட்டது.பிறகு காமினி மகாவித்தியாலப் பகுதி, வீதி மேற்கில் மன்னாருக்குச் சென்றது. அந்த பகுதி ஆட்கள் அதிலே விவசாயம் செய்ததாகத் தெரியவில்லை.வேற இடத்தில் இருந்ததோ?அல்லது முருகு வீட்டார் போல உத்தியோகம் மட்டும் பார்த்தவர்களோ?தெரியவில்லை.அரச வேலைகளில் இருப்பவர்களிற்கே குவார்ட்டஸ் வீடுகள் கிடைக்கிறவை.

பவாவிற்கு அண்ணைமார் சைக்கிள் ஓட பழக்கி இருந்தார்கள். இருந்தாலும்,அவர்கள் கண் எதிரே மட்டுமே ஓடவும் அனுமதித்தார்கள்.மிச்சப்படி சந்திக்கடைக்குப் போக வேண்டும் என்றாலும் அவன் நடந்தே போய் வருவான்.அவனை நம்பி சைக்கிள்ளை எல்லாம் கொடுத்து விட மாட்டார்கள். முருகவேலுடைய அப்பா நிலவளவையாளராக இருந்தார்.அவருக்கு சைக்கிள் விடத் தெரியாது. வளர்ந்த காலங்களில் சைக்கிள் இருக்கவில்லையோ? பழகாமலேயே விட்டு விட்டார். அதனாலேவீட்டிலே சைக்கிள் இருக்கவில்லை.

சந்திக்கு, சிறிது கிட்டவாக பங்களா வீட்டுடன் கூடிய விவசாயப் பண்ணை ஒன்று ஏழு.எட்டு ஏக்கர் காணியில் இருந்தது.அந்த வளவுக்குள் நெசவுசாலை ஒன்று இருந்தது.விவசாயத்தைப் பார்க்கிற இந்திய குடும்பத்திற்கு என்று தனியாக வீடொன்றும் இருந்தது.ஆடுமாடும் வளர்த்தார்கள்.வேலை செய்வதற்கும் வேலையாட்கள் சிலரும் இருந்தார்கள்.டேவிட் என்கிற இளைஞன் ,மணமாகதவர் முகாமையாளராக பங்களாவில் வசித்தார்.அண்னரை விட 5,6 வயசு அதிகமானவராக இருப்பார் போல இருக்கிறது அவர் ஒரு எம்.ஜி.ஆர் பித்தர்.நகரப் புறத்தில் இருக்கும் படமாளிகைகளில் எம்.ஜி.ஆர் போஸ்டர் ஒன்றை வாங்கி அதை அவரள‌வு உயர மரப்பலகையில் வைத்து ஒட்டி கைவேலை தெரிந்த ஒருவரின் மூலம் எம்.ஜி.ஆரை அழகாக வெட்டி எடுத்து,அந்த எம்.ஜி.ஆரின் தோளின் மீது கை போட்டுக் கொண்டு பல‌ போட்டோகள் எடுத்திருக்கிறார்.

பங்களாவிற்கு போற நேரமெல்லாம் அந்த மட்டை உருவத்தைப் பார்க்கலாம். அவருடைய காணியிலே வேலி ஓரமாக சடைத்து உயர்ந்த கூலாம்பழ மரம் ஒன்று நிற்கிறது.முரலிப் பழத்தை விட பெரிய பழம்.அதைவிட சதைப்பிடிப்பு கூட‌. ஆனால், கூலாக புளிப்பு,இனிபுடையதாக ,என்ன சுவையாக இருக்கும்.கனக்க ஆசையிலே சாப்பி ட்டு விட்டால் நாக்கிலே வெட்டுகள் விழுந்து விடும். அமிலம் கூட இருப்பதால் நாகரிப்பும் கூட‌.விழாங்காய் அதிகம் சாப்பிட்டால் நாக்கு அரிக்குமே அதைப் போல இங்கேயும் தான்.இரண்டு நாளிலே மாறிவிடும் தான். அவனும் நாககிற்கு அடிமை. கூலாம்பழம் என்கிற போதே இப்பவும் முருகுவிற்கு நாக்கு ஊறுருது.

. அவரிடமும் சைக்கிள் ஒன்று இருந்தது. சில விடுமுறை நாட்களில், டேவிட் அப்பரோடு சேர்ந்து தண்ணீ அடிப்பார்.அப்பா அண்ணர் போல அவர்க்கு தெரிந்திருக்க வேண்டும்.எனவே,பங்களாவிற்கு வரவேற்று கதைத்துக் கொண்டிருப்பது இருக்கிறது.அப்பாவோடு செல்கிற‌ அண்ணர்,அல்லது அக்கா,அங்கிருக்கிற சைக்கிள்ளை டேவிட்டிடம் கேட்டு,எடுத்து விழுந்து,விழுந்து ஓடி ஒரு மாதிரி ஓடப் பழகி இருந்தனர். இதை விட குருமண்காட்டுச் சந்திக்கு நேரே கீழே இறங்கிற பாதையிலே இருக்கிற சவுந்தர்நாயகம் மாஸ்ரர்,பிள்ளைகளிற்கும் அரைச் சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார்.பெடியள் மகாவித்தியாலயம் வாரதெல்லாம் அந்தச் சைக்கிளில் தான்.அவரும் அங்கே படிப்பித்தாரா எனத் தெரியவில்லை.அவர் பள்ளிகூடம் போனது பெரிய அவருடைய‌ சைக்கிளில் தான்.

வவுனியாவில் சைக்கிள் அத்தியாவசிய வாகனம்.வசதியானவர்கள் வைத்திருந்தனர். குருமண்காட்டுச் சந்திக்கு கிட்டவாக இருந்து வேறும் சில ரீச்சர்மார்களும் மகாவித்தியாலயம் சென்றார்கள்.பெண் ஆசிரியைகளான அவர்கள் எப்படிப் சென்றார்கள்? என அவனுக்குத் தெரியவில்லை?

ஒரு அருமையான வாகனம் சைக்கிள்.சில்லுகள் பொறுத்திய சப்பாத்துக்கள்,சில்லுகள் பொறுத்திய மட்டைகள்...எல்லாவற்றையும் தயாரித்தும் கூட‌, இப்படித் தூர இடங்களிற்குப் போறதுக்கு பள்ளிக்கூடத்திலேயே உடற்பயிற்சிப் பாட வேளையில் மாணவர்களிற்கு பழக்கி இருந்தால்நல்ல‌உடற்பயிற்சியாக இருந்தும் இருக்கும்.உடம்பும் திடப் பட்டிருக்கும். அதனால் கூடுதலான தொகையினர் கூட‌பள்ளிகூடம் வந்திருப்பார்கள்.இனத்துவேச பாகுபாடு காட்டுறது...இரண்டு பக்கத்திலும் தான் சீரழிவுகளை வளர்த்துக் விடுகின்றன.இவற்றிற்கான தயாரிப்புச் செலவுகளும் சைக்கிள்ளை விட பலமடங்கு குறைவானவை.திருத்தச் செலவுகளும் குறைவானவை. அடிமைப்பட்ட நாட்டில் மூளை வளர்த்தியும் இருப்பதில்லை தான்.

அவனுக்கு வவுனியாவில் இருக்கும்வரையில் சைக்கிள் பழகுறது கைகூடி வரவே இல்லை.

அம்மாவிற்கு மாற்றம் ஏற்பட்டு யாழ்ப்பாணத்திலிருக்கிற அராலிக் கிராமத்திற்குச் சென்ற பின்பும் கூட அவனுக்கு அதிருஸ்டம் வாய்க்க‌வில்லை.

வவுனியாப் போல இல்லாமல் யாழ்ப்பாணத்தில் சைக்கிள் இல்லாத வீடே இல்லை என்பது போல சைக்கிள்கள் மலிந்து இருந்தன.நிறைய சைக்கிள்த் திருத்தக் கடைகளும் ஊர்பட்டன‌.இருந்தன.யாருமே சைக்கிள்ளை பவுண் போல கருதுவதில்லை.சைக்கிள்ளை ஒருக்காய் தாரீங்களா?என்று கேட்டால் எடுத்துக் கொண்டு போ,பின்நேரம் எனக்கு வேண்டும் .மறக்காதே"என அலட்சியமாக சொல்லிக் இரவலாகக் கொடுத்து விடுவார்கள்.ஆனால் ,அவனுக்குத் தான் ஓட வராதே.யாரும் பழக்காமலும் ..ஓட வராதே.

நேரமும் கூடிக் கனியவில்லை.அண்ணரும்,அக்காவும் நகரத்திலிருந்த அம்மம்மா வீட்டிலே இருந்து நகரப் பள்ளிகூடத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள். அக்கா சைக்கிள் ஓடுறதை விட்டிருந்தாள் .அண்ணர் ஒரு பழைய சைக்கிள்ளை வாங்கி வைத்து ஓடிக் கொண்டிருந்தான்.சிலவேளை, விடுமுறை நாட்களில் அராலிக்கு வருவான்.பழைய சைக்கிள். எடுத்து ஒட விட மாட்டான். காலையிலே கிராமத்து நண்பர்களைப் பார்க்க கிளம்பி விடுவான்.

எட்டாம் வகுப்பின் போதே, நீண்ட பள்ளி விடுமுறையின் போது அண்ணரோடு அமலனும் தனிச் சைக்கிளில் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அமலன் அம்மாவோடு ஒரே வகுப்பில் படித்த‌ பால்ய சினேகிதி ஒருத்தியின் மகன்.அம்மாவிற்கும் சினேகிதிக்கும் அந்த நேரம் ஒரு பந்தயம் இருந்தது.யாழ்ப்பாணக் கடைத்தெருவில் திரிகிற போது,காட்சிக்கு வைத்திருந்த எவர்சில்வர் தட்டும்,டம்ளருமான உள்ளடக்கியது இருவரையும் கவர்ந்தது விலையை விசாரித்து விட்டு கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அம்மா சொன்னார்." பங்கஜம் ,நீ முதல் கல்யாணம் கட்டினால் நான் இந்த செட்டை உனக்கு வாங்கி பரிசளிப்பேன்.எனக்கு நடந்தால் நீ எனக்கு பரிசளிக்க வேண்டும்.என்ன?"என்றாள்."ஓம்"என்று அவரும் ஒப்புக் கொண்டார். அம்மாவிற்கு முதலில் கல்யாணம் நடந்தது.பரிசளித்திருந்தார். அந்த பெரிய ஓவல் தட்டில், வீட்டில், "நான் சாப்பிடுவேன்"என அவர்களிற்கிடையில் சண்டைகள் நடைபெறுகிறது.அந்த சினேகிதியின் மகன் அமலன் அம்மாவால் உவப்புடன் வரவேற்கப் படாமல் இருப்பானா?. மில்க் டொபி எல்லாம் செய்து வீடு மணந்து கொண்டிருந்தது.

அண்ணரும் அமலன் வீட்டிற்குப் போற போது வீட்டுப் பிள்ளையாகக் கருதி பாசத்தைப் பொழிகிறவர்கள். சினேகிதிக்கும் இந்த வீட்டைப் போல ஐந்து பிள்ளைகள்.மூத்த இருவர் பெடியள்,பிறகு இரண்டு பெண்கள்,கடைசி பெடியன்.அந்த வீட்டில் அவன் அமலன் வயசு அண்ணன். அண்ணர், குளம், குட்டை ,குருவி,பறவை எல்லாம் பார்த்து,ரசித்து கவிதைகளும் எழுற பிரகிரிதி கூட. அமலனோடு சேர்ந்து சுற்றிப் பார்க்க கிளம்பி விடுவான்.


இரண்டாம் நாள் "குணம் ,தம்பி தனிய தானே வீட்டிலே நிற்கிறான்.அவனும் எங்கள் கூட வரட்டுமே"என்று கேட்டான்.அண்ணரும் "ஓம் "எனச் சம்மதித்தான்.அமலனின் சைக்கிளில் தொத்திக் கொண்டு முருகுவும் வரச் சென்றார்கள்.இருவரும் கதைத்துக் கொண்டு வந்தவர்கள்,நீண்ட நேரம் முருகு மெளனமாக வந்ததை உணர்ந்த அமலன் "முருகு,நீ சைக்கிள் ஓடுவாயா?"என்று கேட்டான்.'இல்லை'என்று தலை ஆட்டினான்."அப்ப, நீ பெடல் பண்ணு,நான் கான்டிலைப் பிடித்திருக்கிறேன்"என்று முதலில், ஒரு காலை எடுத்து விட்டு பாரிலே இருந்த வாக்கிலே பெடல் பண்ண விட்டான்.வயல்வெளியை அடைந்த போது,"என்ன குளிர்மையான காற்று.டேய், நீ தான் இரண்டு காலாலும் பெடல் பண்ணப் போறாய்"என்றான்.அவன் அண்ணனை பார்த்தான்."பெடல் பண்ணேன்.நீயும் ஓடப் பழகத் தான் வேண்டும்"என்றான். அமலன் சீட்டிலே இருந்து கொண்டு ,கான்டிலைப் பிடித்தவாறு இரண்டு காலையும் பறக்க விட ,ஓட்டவீரனைப் போல இவனும் கான்டிலை பிடித்துக் கொண்டு உழக்கினான்.


அப்படி ஒரு கிழமை வரையில் காலையில் வெளிக்கிட்டு விடுவார்கள்,பத்திரகாளி அம்மன் கோவிலில்,தெற்கராலியில் இருக்கிற மாதிரியான‌ பெரியக் கேணியின் கட்டில் இருந்து சுற்றயல்களை வேடிக்கைப் பார்ப்பார்கள்.கோயிலுக்கு உள்ளே போய் அண்ணர்,தூண்களையும் சிற்ப வேலைப்பாடுகளையும் கூட பார்ப்பான். இவர்களும் பார்ப்பார்கள்.அந்த நேரம் அந்தக் 'கேணி பால் நிற‌மாக மாறியது'என்ற பேச்சும் இருந்தது.சுண்ணாம்பு நீர் எங்கையாவது கசிந்து இருக்கலாம்.துப்பரவாக இருக்கவில்லை.கலங்கலாக வே இருந்தது.சமயக்காரர்கள் ,புத்த பிக்குகளைப் போலை ஒன்றை பத்தாக்கிறவர்கள் தானே. “சிலபேர்கள் அலகு குத்தி காவடி கூட எடுத்திருக்கிறார்கள்” என்று ஐயர் கூறக் கேட்டார்கள். மாயாஜால விசயங்களைக் கதைக்கிறதன்றால் எல்லா மததவகளின் முகத்திலும் பக்திக் ‘களை’ச் சொட்டும்.


துணவிப் பகுதிக்குள்ளாலே வந்து வழிக்கியாறுக் கட்டிலே சைக்கிள்ளை உருட்டிக் கொண்டு வந்தார்கள். பாழடைந்த குட்டிக் கோவில் ஒன்றையும் உள்ளே குட்டி,குட்டிச் சிலைகள் நிறைய இருந்ததையும் பார்த்தார்கள். உள்ளே போய்ப் பார்க்கத் தயக்கம் தான். பாம்பு.கீம்பு இருந்தாலும் இருக்கும்.பூஜை,கீஜை எல்லாம் கை விடப் பட்டு அனாதரவாக கிடந்தது.வயல் வெளியின் மத்தியில் நீர் நிறைந்த ஓரளவான குளம் ஒன்று இருந்தது.முருகு வந்ததால் கள்ளு குடிக்க முயலவில்லையோ?தேத்தண்ணிர்க் கடையில் வடையும் தேத்தண்ணீரும் வாங்கி குடித்து இளைப்பாரினார்கள்."நாளைக்கு நவாலிப்பக்கமாக சென்று பாலத்தடியை எல்லாம் பார்த்து வருவோம்"என முடிவெடுத்து விட்டு வீடு திரும்பினார்கள்.சாப்பிட்டு விட்டு,வீட்டு வளவே மாம்மரம்,சப்படில்லா மரம்,தென்னைமரம்..என நிழல்கள் உள்ள பெரிய வளவு, இருவரும் மாம்மரத்திற்குக் கீழே கதிரையும், ஈசிச்சியாரையும் போட்டு விட்டு...பத்தும் பலதையும் இரை மீட்டி கதைத்துக் கொண்டிருந்தார்கள்.முருகு குட்டித் தூக்கம் ஒன்று போட்டும் எழும்பி விட்டான்.

ஒவ்வொரு நாளும் உழக்க,உழக்க நாளும் கழிந்து கொண்டிருந்தது.அமலன் போவதற்கு முதல் நாள் “குணம்,நான் இவனை வீதியிலே தனிய சைக்கிள்லை ஓட விட்டுப் பார்க்கிறேன்"என்றான்.அவனும் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தான்."சரி" என்றான்.வீட்டுக்கு வெளியே இருந்த மண் ஒழுங்கையில் "முருகு,பயப்படாமல் ஓடு.நான்,உன் சீட்டை பிடித்துக் கொண்டு ஓடி வாரேன்.பின் பக்கம் திரும்பிப் பார்க்காமல் ஓட வேண்டும் .சரியா?"என்றான்.ஒட கூட ஓடி வந்தான்.பிடிக்கிறான் தானே, என ஓடி வந்தவன் ,எதிர்த்தாற் போல கார் ஒன்றும் அந்த குச்சொழுங்கையில் வர,கை இரண்டும் அங்க,இங்க என ஆட,அமலண்ணை சைக்கிள்ளை நிறுத்துங்கோ"என கத்தினான்.கையிலே இருக்கிற பிரேக்கை பிடிக்கத் தெரியவில்லை.பின்னுக்கு அமலன் நின்றால் தானே!சைக்கிள் விழ அவனும் விழுந்தான். ஞாயமான தூரத்திலே கார்க்காரன் நின்றிருந்தான். "பழகிறாயா?பார்த்துப் பழகு"என்று விட்டு இவன் சைக்கிள்ளை ஓரமாக ஒதுக்க ஓட்டிச் சென்றான்."இப்படித் தான் பழகிறது.நான் எத்தனை தடவை விழுந்திருக்கிறேன்,தெரியுமா?"கிட்ட வந்த அமலன் சொன்னான்.

சைக்கிள்ளை எடுத்து கான்டிலைத் திருப்பி நேராக்கி விட்டு,"பதற்றப் படாதே,ஓடு,இந்த முறை நான் உன்னுடனே வருகிறேன்"என ஓட ,ஓட சீட்டைப் பிடிக்கிறதும்,விடுறதுமாக ஓடி, ஓடி அவனும் வந்தான்.அங்க,இங்க வெட்டி,வெட்டி ஓடக் கொஞ்சம் பிடித்திருந்தான்.இந்த தளும்பல் ஓட்டம் அமலன் போன பிறகும் கனநாளைக்கு இருந்தது.சைக்கிள்களைக் கேட்டால் ரெஜி,பாலா...என நண்பர்கள் தந்து விடுவார்கள்.எப்படித் தான் வீதிக்குப் பக்கத்திலே இருக்கிற கட்டிலே நேரே கொண்டு போய் இடிக்கிறானோ? அவனுக்கே தெரியவில்லை.

சிரித்திரன் பத்திரிகையிலே ஒரு காட்டூண் வரும் .கார் ஓடுறவர்.கால்பந்து மைதானம் போல இருக்கிற வளவில் மத்தியில் ஒற்றைப்பனை நிற்கும் .அதிலை சரியாய்ப் போய் இடித்து, காரின் முன்மூடி திறந்திருக்க, புகையோடு சிறு வட்டமாக மூச்சு விடுவதை ,ஓடினவர் இறங்கி, ஆறுதலாக‌ நின்று , ஏதோ குற்றம் நடந்த காட்சியைப் பார்க்கிறது போலப் பார்ப்பார். அப்படி அவனுடைய விபத்துகள் .‌ இருந்தன‌. முதலில், ‘ரிம்’மைத் தான் செக் பண்ணுவான்..காற்று நிரம்பிய நல்ல டயராக இருப்பதால் அது ‘பம்’பண்ணி சேதமுறுவதில்லை.யாருமில்லாத போது,பெரிய வாகனமொன்று வர வீதியோரம் இருந்த கட்டுக்கு மேலாக ஏறி ,காற்றிலே பறந்து போய் வயலுக்குள் ளே விழுந்திருந்தான். நல்ல காலம்.மழைநீர் நின்றதால் காற்சட்டை ,சேர்ட் தான் நனைந்தன.குத்திக் கித்திப் போடவில்லை.

கை நடுக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து விழுத்தியடிக்காமல் ஓடுவான் எனத் தேறினான்.இனி என்ன ?,சொந்தமாக ஒரு சைக்கிள் வேண்டும். சைக்கிள் கனவெல்லாம் உடனடியாக‌ நிறைவேறும் போல அவனுக்குத் தோன்றவில்லை. வீட்டுக் குடும்பம் பெரியது.ஐந்து பிள்ளைகள்.அவர்களின் படிப்புச் செலவுகளிற்கு,மற்றும் இதரச் செலவுகளிற்கு அப்பா,அம்மாவின் சம்பளம் போதவில்லை.உயர்வகுப்பில் அமலனும்,அண்ணரும் வேற,வேற உயிரியல்,கணிதம் எனன் பிரிவுகளை தெரிந்தெடுத்து வகுப்புகள் பிரிந்து விட்டார்கள்.அமலனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படிக்கக் கிடைக்க,அண்ணருக்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கக் கிடைத்திருந்தது. அவனுக்கான செலவால் வீட்டிலே பாரம் கூடி விட்டிருந்தது."அம்மா,சைக்கிள் வாங்கித் தாரியா?"எனக் கேட்க முருகுவிற்கு துணிவு எழவில்லை. வருச இறுதி நீள விடுமுறையில் அவன் ஆய்வுக் கட்டுரை எழுத வேண்டும் என்று அண்ணன் யாழ்ப்பாணத்திற்கு வந்து அம்மம்மா வீட்டிலே இருந்து கொண்டு வேறு அலைந்து கொண்டிருந்தான். அராலி வீட்டிற்கு வரவில்லை அம்மா அடிக்கடி யாழ்ப்பாணம் போய் வாரவர்.அப்பா,அப்படிப் போய் வாரவர் இல்லை..

வழக்கம் போல முருகு,கிராமத்து நண்பனான கருணாவிடமே தன் மனக் குமுறல்களைக் கொட்டினான்.."டேய், முருகு நான் ஒன்று சொன்னால் கேட்பியா?"கேட்டான்."சொல்லன்"முருகு."உனக்குத் தெரியும் தானே,சில்வஸ்டார் விளையாட்டுக் குழுவில் நான் கோலியாக இருக்கிறது.சப்பாத்து,காலுறைகள்,மஞ்சள் ஜேர்சி டிசெர்ட்..இதெல்லாம் எப்படி வாங்கினேன், தெரியுமா?" என்றான்."தெரியாது "என்றான்."கழகம் நல்ல முறையில் இயங்கிறது தான்.அதற்காக விளையாடுறவர்களிற்கு எல்லாம் வாங்கிக் கொடுக்கிற நிலையில் அது இல்லை.நாங்கள் மாதத்திற்கு கொடுக்கிற சந்தா ஒரு ரூபாவால் அதற்குப் பணம் சேராது.கால்பந்தாட்டம் பழக்கிறதுக்கு நாவாந்துறை ஆட்டக்காரர்களை பணம் கொடுத்து தான் கூப்பிடுகிறது.நான் கோலியாக இருந்தாலும்,பிரதியாக விளையாடுறதுக்கு இருவர் தயாராக இருக்க வேண்டும். மற்றவர்களிற்கும் கணிசமான ஆட்டக்காரர் இறங்காமல் எப்பவும் விளாஇயாடுறதுக்காகத் தயாராக இருப்பினம். பாரேன் !,எல்லாருக்குமான செலவை?நாமெல்லாரும் மேசன் வேலைக்கு போய்த் தான் சமாளிக்கிறோம்.உனக்கு சைக்கிள் வேண்டும்.என்னுடைய காலுறையும் கிழிந்து விட்டது புதிதாக வாங்க வேண்டும்.விடுமுறை நாள் தானே.நான் மேசன் வேலைக்கு போறதுக்கு இருக்கிறேன்.நீயும் வாரதென்றால் வாவன்"என்றான்.சம்மதித்தான்.

மேஸ்திரி நாகரத்தினம் அண்ணையிடம் அவன் சொல்லி வைத்திருந்தான்.முருகு,காலையிலே வெளிக்கிட்டால் பின்னேரம் தான் வீட்ட போய்க் கொண்டிருந்தான்.முதலில் வீட்டிலே சொல்லாமலே இருவரும் சென்ற குழுவிலே ஒவ்வொருத்தர் சைக்கிளிலே தொற்றிக் கொண்டு வேலைக்குப் போய் வந்தார்கள். கருணா "ரீச்சருக்குச் சொல்லாமல் வாரது நல்லதாய்ப் படவில்லையடா.வீட்டிலே உண்மையைச் சொல்லு.விட்டால் வா,இல்லாட்டியும் பரவாய்யில்லை "என்றான்.மாலை ஆறு மணிக்கே போய்ச் சேர்ந்தான்."எங்கடா போனாய்?"என்று அப்பா உறுக்கிக் கேட்டார்."மேசன் வேலைக்கு"என்று பதிலளித்தான்.அப்பாவுக்கும்,அம்மாவுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது.பிறகு தணிந்து,அப்பா வந்து "ஏன் போனாய்?"என்று விசாரித்தார்."பழையச் சைக்கிள் ஒன்று நூற்றி அறுபது ரூபாவிற்கு விலைக்கு இருக்கிறது.இரண்டு கிழமை போய் வந்தால் வாங்க‌ முடியும்.நாகலிங்கம் மாஸ்ரர பிள்ளைகளும் இப்படிப் போய்த் தான் விளையாடுறதுக்கு சப்பாத்து எல்லாம் வாங்கினவயள்"என்றான்.நாலு கிழமை விடுமுறை நாட்கள் இருந்தன.அப்பா யோசித்தார்.பிறகு"வீடு கட்டுறதும் அறிவியல் வேலை தான்.சரி , உன் மனதிலே சைக்கிள் ஆசையும் விழுந்து விட்டது. இரண்டு கிழமைக்குப் பிறகு ,நீ வேலைக்குப் போகக் கூடாது,என்ன?"என்றவர்,அம்மாவைப் பார்த்து," அவனும் வேலை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளட்டும்"என்றவர், "அம்மாட்ட அனுமதி கேள் என்று விட்டு உள்ளே போய் விட்டார். "போகத் தொடங்கி விட்டாய். கேட்கவா போறாய்.சரி !, இனி மேல் இப்படி குழப்படி செய்யாதே"என்று விட்டு அவரும் உள்ளே போய் விட்டார்.

பிறகு, செல்வராசா மாஸ்ரரும் வீட்டிற்கு தேயிலை தருவதற்கு வந்த போது "ரீச்சர்,நான் கூட சின்ன வயசிலே ...போய் இருக்கிறேன்.இது தவறில்லை"என்று கருத்து தெரிவித்திருந்தார். அவர் மலையகத்தில் இருக்கிற தங்கச்சி வீட்டிலே இருந்து திரும்பிய அடுத்த நாள் வாரவர்.அவர் மூலம் ருசியான தேயிலை கிடைப்பது வழக்கம்.

அப்படியாக கருணாவோடு சேர்ந்து இரண்டு கிழமைகள் போய் வாரது ஏற்பட்டது.பிரேக் நேரத்தில், இரண்டு தடவைகள் கட்டிட வீட்டாரிடமிருந்து 'டீ' வரும்.மத்தியானம் சாப்பிடுறதுக்கு ஐந்து ரூபா நாகரத்தினமண்ணை கொடுத்து விடுவார். பக்கத்திலிருக்கிற தேத்தண்ணீர்க் கடையில் இடியப்பம்,தோசை வாங்கிச் சாப்பிடுவார்கள்.போறவர்களோடு சைக்கிளில் தொற்றி போவார்கள்;வருவார்கள்.அது தங்குவேலை இல்லை.ஒரு சிறிய தண்ணீர் தாங்கி கட்டுற வேலை. அவனுடைய காலமும் முடிய தாங்கியும் கட்டி முடிந்து விட்டது.அவன் விரும்பிய நூற்றி அறுபது ரூபாவை அவன் கையிலே நாகரத்தினமண்ணை கொடுத்தார்.

சைக்கிள்ளை வாங்குவதற்காக சனிக்கிழமை,அகிலனுடன் அவன் சித்தங்கேணியில் உள்ள வட்டுக்கோட்டைத் தபால்கந்தோரில் வேலை பார்த்த ராமநாதன் வீட்டிற்குச் சென்றான்.அச்சமயம் ராமநாதன் பக்கத்து வீட்டிலே இருந்தான்.தங்கச்சிக்காரி போய் கூட்டி வந்தாள்.சைக்கிள்ளைக் காட்டிய போது,வீட்டிலே உள்ள அனைவரும் கண்ணீர் மல்க அதைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

அகிலனுக்கும்,அவனுக்கும் புரியவில்லை. இருவருக்கும் இப்படி சைக்கிளுக்கு பிரியாவிடை கொடுப்பது ஆச்சரியமாக இருந்தது. அகிலன் "ராமண்ணை ஏதாவது பிரச்சனையா?"என மெதுவாகக் கேட்டான்."எவ்வளவு நேரம் சைக்கிள்ளைப் பார்ப்பீர்கள்.உள்ளே போங்கள்.போ,அம்மா"என்ற போது அவன் குரலும் உடைந்திருந்தது."தம்பி"என்றார்."அது தான் அம்மா விற்கிறதுக்கு முடிவெடுதேன்.வீட்டிலே இருந்தால் தம்பி பக்கத்திலே நிற்கிறது போல இருக்கிறது அம்மா"என்றான். தொடர்ந்து"போனால் தான் நிம்மதி.ஐயரைப் பிடித்து ஒரு பூஜையும் செய்து விட்டால் அவனும் நல்லபடியாய் போய் விடுவான்"என்று மேலே காட்டினான்."இந்தப் பிள்ளையும் என்ரப் பிள்ளை தான்"என்று விட்டு அம்மா உள்ளே போய் விட்டார்.

"என்னண்ணை என்னம் பிரச்சனையா? நீங்க நூற்றி அறுபது தானே சொன்னனீங்கள்.கூடவெல்லாம் கொண்டு வரவில்லை"என்றான் முருகு. "நூற்றி அறுபதில்லை நூற்றி ஐம்பதிற்கே தருகிறேன்"என்றான் அவன் . அந்த துயரத்திலும் அவன் முகம் சோகச் சிரிப்பைக் காட்டியது. இவர்கள் இருவருக்கும் மர்மம் தலையை வெடிக்க வைத்துக் கொண்டிருந்தது.புரிந்து கொண்டு "வாருங்கள் அந்த திண்ணையிலிருந்து கதைப்போம்"என்றவன், "அம்மா தேத்தண்ணி வைய்யன்"என்று உள்ளுகுப் பார்த்து கத்தி விட்டு வந்தமர்ந்தான்.

"ஆறு மாசத்திற்கு முன்பு ஆமிச் செக்கிங் நடைப்பெற்ற‌து தெரியும் தானே ?"கேட்டான்.யாழ்ப்பாணக்கல்லூரி மைதான பபிலியனில் ஆமிக்காம்,வட்டுக்கோட்டையில் ஒன்று,சித்தங்கேணியில் ஒன்று என தரித்திருந்து ஊரடங்கு பிரகடனப்படுத்தி விட்டு நடத்தி இருந்தார்கள்.பொன்னாலை பெருமாள் கோவிலுக்கு வணங்க வந்த மேஜர் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் என பல பெடியள்களின் படங்கள் சேர போஸ்டர்கள் யாழ்ப்பாணத்து மூலை முடக்கெல்லாம் ஒட்டப்பட்டிருந்தன.பல இடங்களில் தற்காலிக ஆமிகாம்களை நிறுவி விட்டு வானொலியில் தீடீர் தீடீரென ஊரடங்குச் சட்டம் அறிவித்து விட்டு ஊர்மனைக்குள் பல தேடுதல்கள் நடைபெற்றன.பல இளைஞ‌ர்களும் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டார்கள்.

"நான் காலையிலே வேலைக்குச் சென்று விட்டிருந்தேன்.என்னைத் தேடி தம்பி குலம் சைக்கிளில் கந்தோருக்கு வந்திருக்கிறான்.காலை ஒன்பது மணியிலிருந்து ஆறு மணி வரையில் ஊரடங்கு அமுலாகிறது என வானொலியில் அறிவித்தது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.வானொலியில் அறிவித்ததைக் கேட்டு நான் கந்தோரிலே இருந்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.அம்மா கேட்டார்."தம்பி உன்னட்டை வந்தான் .காணவில்லையா?"என்று."என்னம்மா சொல்கிறாய்?ஏன் வந்தான்?".எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது.எங்க வீட்டிலேயும் வானொலிப் பெட்டி கிடையாது.பக்கத்து வீட்டிலே தான் கேட்பது வழக்கம்.

அவனுடைய நண்பர் வீட்ட எல்லாம் ஓடி,ஓடி விசாரித்தேன். ஒருத்தர் வீட்டிலேயும் இல்லை.அப்படி போற போது ஊரடங்கில் சில பெடியள்களை பபிலியனில் இருக்கிற ஆமிக்காரர் சுட்டு ,டயர் போட்டு எரித்து விட்டினம்"என்ற வதந்தி,சேச்சே, பிடித்து தான் வைத்திருப்பார்கள்"என்று நம்பினான் . வீட்டிலே வந்து எதுவும் சொல்லவில்லை.எட்டு மணிக்கு திரும்ப ஊரடங்கு அமுலாகிறது.இரவு முழுதும் நித்திரை இல்லாது தவித்துக் கொண்டிருந்தோம்.

அடுத்த நாட்காலையிலே ஊரடங்கு விலத்தப் பட்ட நேரத்திலே ஆமிக்காம்பிற்கே நேரிலே போய் வீசாரிக்க ராமநாதன் சைக்கிளில் சென்றான். உள்ளே காப்பாற பயம் தான்."தம்பியை நேற்றிலிருந்து காணவில்லை.பிடித்து வைத்திருக்கிறீர்களா?"என்று விசாரித்தான்.'யாரையும் பிடித்து வைத்திருக்கவில்லை'என்று கையை விரித்தார்கள்."பயங்கரவாதிகள் ஐவரை சுட்டுக் கொன்றோம்.உன் தம்பி பயங்கரவாதியா?"என ஒருவன் கேட்டான்."இல்லை.அவன் பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுத இருக்கிறவன்"என்று சொல்லிப் போட்டு திரும்ப, கிடந்த சைக்கிள் குவியலில் தம்பிட இந்த சைக்கிளிலும் கிடந்தது."இந்த சைக்கிள் தான் தம்பியுடையது.பிடித்து வைத்திருக்கிறீர்களா?"திரும்பி வந்து கேட்டான்."ஓ!,அப்ப உன் தம்பி பயங்கரவாதி இல்லையா?"என்று தலைவர் தரத்தில் இருந்தவர் கேட்டார்."இல்லை.அவன் என்னைப் பார்க்க தபால் கந்தோருக்கு வந்தவன்"என்றான்."ஊரடங்கு போடப் பட்டிருப்பது தெரியாதோ ,உங்களிற்கு ?"என்று உருக்கிக் கேட்டான்."வானொலியில் மட்டுமே அறிவிக்கப்படுகிறது.இங்கே எல்லார் வீட்டிலேயும் வானொலி இல்லை.அறிவிக்கப்படுறதும் உடனே தெரியிறதில்லை,தளர்த்தப் படுறதும் தெரியிறதில்லை." என்று அழுகுரலில் ராமநாதன் பதிலளித்தான்.ஆமித் தலைவருக்கு ஆச்சரியமாக போய் விட்டது."இங்கே,எல்லா வீட்டிலேயும் வானொலிப் பெட்டி இல்லையா?,கொழும்பிலே எல்லா வீட்டிலேயும் இருக்கிறதே,இங்கேயும் இருக்கத் தானே வேண்டும்" என்றார்."இல்லை.எங்க வீட்டிலே இல்லை.பக்கத்து வீட்டிலே இருக்கிறது.அதிலை வைத்து தான் தளர்த்தப்பட்டதை அறிந்து தான் இங்கே வந்திருக்கிறேன்.தாபால் கந்தோரில் இருக்கிறது.அதிலைக் கேட்டு நேற்று வெளியிலே போகாமல் இருந்து விட்டு வீட்டிற்குச் சென்றேன்."என்று சொல்ல அவனுக்கு சங்கடமாய் போய் விட்டது.

"அப்ப சுட்டது பயங்கரவாதி இல்லையா?அவங்கள் சுட்டுப் போட்டு உடனேயே எரித்துப் போட்டாங்களே.இந்த பயங்கரவாதச் சட்டம் இருக்கிறது தெரியும் தானே.அது எரிக்கவும் அனுமதி தருகிறது.நீ சைக்கிள்ளை எடுத்துக் கொண்டு போ"என்று விட்டு அவன் சோகமாகப் பார்த்தான்.ஆமிலேயும் உயர் வகுப்பில் படிக்கிற பெடியள் பலர் சேர்ந்திருந்தார்கள்.அவர்களிடம் மனிதாபிமானம் இருந்தது. "என்னாலும் ஒன்றும் செய்ய முடியாது.ஒன்று வேலை செய்ய வேண்டும்.இல்லை என்றாலும் வீட்டிற்குப் போக விட மாட்டார்கள்.உங்கட தலைவர்கள் ஏன் துரையப்பாவைக் கொன்றார்கள்? , இப்பத்தான் தொடங்கி இருக்கிறது.எங்கே போய் நிற்கும் எனத் தெரியவில்லை? இங்கே பார்.உன் தம்பி இறந்து விட்டான்.ஏற்றுக் கொள். எந்த முயற்சியிலும் இறங்காதே , போ" என்றான். இந்தளவிற்காவது இவன் கதைத்தானே !

இவனையும் பயங்கரவாதி என பிடித்து வைக்காமல் விட்டது, அன்று நின்ற‌ ஆமித் தலைவன் நல்லவனாக இருந்ததால் தான். வீட்டிற்கு வந்து சொல்லிய போது ஒப்பாரியாகியது.

வீட்டிலே, சைக்கிள் கிடந்து அழுகையை கூட்டுகிறது.முடிவெடுத்து நண்பன் ஒருவனிடம் சொன்னது,வெல்ட் பண்ணி ஒட்டிய நடு அச்சாகக் கிடந்ததால் வாங்கப் படாதிருக்க,அகிலனின் மச்சான் மூலம் கேள்விப் பட்டு,அகிலனுடன் தபால் கந்தோருக்கு முருகு வ‌ந்திருந்தான் "நான் வாங்கிறேன்.ஆனால், மூன்று கிழமையாகும்"என்றான்.அவனும் "ஓம்" என்றான்.

இரண்டு கிழமைக்குப் பிறகு வாங்க வந்திருக்கிறார்கள்.

குட்டித் தங்கச்சி இருவருக்கும்” டீ” கொண்டு வந்து தந்தாள்.திரும்பவும் போய் ராமநாதனுக்கும் கொண்டு வந்து கொடுத்து விட்டு ஒரமாக நின்றாள்.ராமநாதன்"வாங்க விருப்பமில்லா விட்டாலும், ஒன்றும் நினைக்க மாட்டேன்,உங்களைப் பொறுத்தது"என்றான்."அதில்லை ,உங்களின் பெரிய துக்கம் தான் ஒரு மாதிரி இருக்கிறது. எனக்கு சைக்கிள் அவசியம் வேண்டும்"என்றான் முருகு. அந்த வீட்டிலிருந்து ஒரு பேயைக் கூட்டி வருவது போல சைக்கிள்ளை எடுத்தார்கள்.

அகிலன் அவனுடையதில் ஓடி வர இவன் இதிலை ஓடி வந்தான்.பிரேக் சரி வரப் பிடிக்கவில்லை."தம்பிக்காரன் எப்படியடா பிரேக் பிடித்திருப்பான்?"கேட்டான்."ஒருவேளை ,ஆமிக்காரன் குரல் கொடுக்க ,இவன் சைக்கிளை நிறுத்த முயற்சித்திருப்பான்.அது ,நிற்காமல் ஓடியிருக்கும். அதனாலே சுட்டிருப்பானோ?"அகிலன் சுளியன் ,சரியான காரணத்தை பிடித்து விட்டான்.ஆமிக்காரர் இனத் துவேசம் பிடித்தவர்கள் தான். அதோடு பயத்தையும் காப்பற கட்டிக் கொண்டு நிற்கிறவர்கள்."நில்"என்றால்,நிற்க வேண்டும்.இல்லாவிட்டால் பயத்தில் ஏதோ பிளானில் ஓடுகிறான் என்று அஞ்சி கண்டறிமாட்டுக்கு சுட்டுத் தள்ளி விடுபவர்கள். நடுக்கமுற்ற வாழ்க்கை அவர்களுடையது.

முருகுவிற்கு கொஞ்சநாளாய் இனவாதம் குறித்தும் இப்படியும் யோசனை எழுகிறது. அவன் இவ்வளவு நாளும் சிங்கள மதக் கொள்கைகளிலே துவேசம் நிரம்பி வழிகிறது என்று நம்பி இருந்தான். பிரெஞ்சுப் புரட்சி என்ற நூலை வாசித்த பிறகு, இவன் நம்பிய சிங்களக் கொள்கைகளையே பிரெஞ்சுக்காரர்களும் காலனியாட்சியில் அப்படியே பிரயோகித்திருக்கிறது தெரிந்தது. அவை, இந்த நாட்டுக்கு இறக்குமதியான கொள்கைகள் தான் என்று புரிகிறது. இலங்கைக்கு ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்த ஜே.ஆர்.,"பிரெஞ்சு ஜனாதிபதி முறையைக் கொண்டு வருகிறேன்" என்றே அறிவித்திருந்தார். மற்ற விதிகளையும் பாடமாக்கிக் கொண்டு இறக்குமதி செய்திருக்கிறார். புரிகிறது. இலங்கையின் இனத்துவேசத்தின் ஆணிவேர்களில் ஒருவர் இந்த‌ ஜே.ஆர்.! இவனுக்கு அந்த புத்தகத்தை வாசிக்க  ,வாசிக்க வயிற்றைக் குமட்டியது. அரசாட்சிக்கெதிராக அவர்களின் புரட்சி என்னவோ முற்போக்கு தான். சகோதரத்துவம்,சமத்துவம்.., இன்னொன்றும் சொன்னார்கள்.எல்லாம் ஒரு மொழி பேசுற மக்கள் மத்தியில் மட்டுமே அந்த ஜனநாயகம் முற்போக்கானது.

அவர்கள் காலனிக்குட் படுத்திய நாடுகளில் எல்லாம்...வேண்டாமே ,சிங்களவருக்கு அவர்கள் குருப் பீடத்தில் வீற்றிருந்திருக்க தகுந்தவர்கள் அவர்கள் புரிந்த கொடூரங்களிலிருந்து இன்னமும் இரத்தம் வடிந்து கொண்டு தான் இருக்கின்றது. அழகான மொழி, நளினமான மொழி ...எப்படி இருந்தால் என்ன ?, கொலைவெறியர்களிற்கு உலகில் மரியாதை கிடையாது தான்.

சோசலிச ஜனநாயகம் தான் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி,மதப் பிரிவினை உடைய நாடுகளிற்கெல்லாம் அமைதியை தர வல்லது. மார்க்சிசம் தான் களங்கரை விளக்காக நிற்கிறது.அடிமைப் பட்ட இனங்களில் ஒன்றாக அழுந்திப் போய் கிடக்கிற தமிழருக்கும் கூட சோசலிச ஜனநாயகம் என்ன என்பது புரியவும் இல்லை.புரிந்து கொள்ளவும் கூட‌முயற்சிக்கவும் இல்லை. .அதனால் தானோ, தமிழ்த் தரப்பும் பாவ மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கிறார்களோ?என்றும் நினைக்கவும் தோன்றுகிறது.

கடைசியில், சைக்கிள் கிடைத்த பின்பும் கூட‌மகிழ்ச்சி இல்லை பார்த்தீர்களா?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.