சிவபுரம் இராஜராஜேஸ்வரம்

Saturday, 03 November 2018 20:15 - சேசாத்திரி - கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
Print

 தென்கிழக்கு நோக்கில் கோவில். சோழ அரச குடும்பத்தார் தனிப்பட கவனம் செலுத்தி வந்த கோவில் கூவம் ஆற்று ஓட்டத்தை அண்மித்து அமைந்த ஊரடகம் சிவபுரம் மகாதேவர் கோவில் ஆகும். இக்கோவில் இராசராசப் பெருவேந்தனால் அவன் பெயர் இட்டு கட்டப்பட்டதால் இராஜராஜேஸ்வரம் என கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டு உள்ளது. இந்த சிவபுரம் இராஜராஜேஸ்வரம் கடம்பத்தூர் – பேரம்பாக்கம் - தக்கோலம் செல்லும் வழியில் பேரம்பாக்கத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இடம் கொண்டுள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து நடக்கும் தொலைவில் தான் இக்கோவில் உள்ளது. கூவம் ஆறு பிரிகின்ற கேசாவரம் அணை இங்கிருந்து வடகிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தலத்திற்கு அண்மையில் தான் நரசிங்கபுரம், திருஇலம்பையங் கோட்டுர், திருவிற்கோலம் ஆகிய தேவாரப் பாடல் பெற்ற தலங்களும் உள்ளன. இந்த சிவபுரம் இராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் கோவிலுக்கு தெற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ள திருவிற்கோலமான கூவம் ஏரியில் இருந்து கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வந்த செய்தி இக்கோவில் கல்வெட்டில் பதிவாகி உள்ளது. இக்கோவிலின் புறச்சுவர் முழுவதும் மேல் சுவர்முதல் அடிச்சுவர் வரை கல்வெட்டுகளாகவே நிரம்பி உள்ளன. கல்வெட்டு, தொல்லியல் ஆர்வம் உள்ளவருக்கு இக்கோவில் நல்லதொரு பயிற்சிக் களம் எனலாம்.

இக்கோவில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கான அறிவிக்கைப் பலகையும் இங்கே காணமுடிகிறது. இக்கோவிலைச் சுற்றி மண்மேடு எழுப்பி அதில் தோட்டம் அமைத்து பேணி வந்ததற்கான குறியீடுகள் தென்படுகின்றன. ஆனால் இப்போது தோட்டம் மட்டும் பேணப்படுவிதில்லை என்பது ஆங்காங்கு ஒழுங்கற்று வளர்ந்துள்ள செடிகளால் அடையாளப்படுகின்றது. இரு கல்வெட்டுகளும் கிழக்கு சுவரில் வலப்பக்கம் இடப்பக்கம் என இடம்பெற்றுள்ளன. இனி கல்வெட்டுப்பாடம்

1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமன்னி வளர இருநில மடந்தையும் போற் செயற்பாவையுஞ் சீர்த்தினிச் செல்வியும்
2. தன் பெருந்தேவியராக்கி இன்புற நெடுதியலூழி உள் இடைதுறைநாடு துடர்வனவேலிப்
3. படர்வன வாசியும் கள்ளி சூழ் மதிள் கொள்ளிப்பாக்கையும் கருமுரண் மண்ணை
4. க்கடக்கம்மும் பொருகடல் ஈழத்தரையர் தம் முடியும் ஆங்கவர் தேவியரோங்கெழில் முடி
5. யும் முன்னவர் பக்கல் தென்னவன் வைய்த்த சுந்தர முடியும் இந்திரனாரமும் தெண்டிரை ஈழ
6. மண்டலமுழுவதும் எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடுங் குலதனமாகிய பலர்புகழ்
7. முடியுஞ் செங்கதிர் மாலையுஞ் சங்கதிர் வேலைத் தொல்பெருங்காவற் பல்பழந்தீவிற் செரு
8. வில் சினவில் இருபத்தொருகாலரை களைகட்ட பரசுராமன் மேல் வருஞ்சாதிமற்றியவரண் கருத இரு
9. த்தி செம்பொற்றிருத்தகு முடியு மாப்பொருதண்டாற்கொண்ட கோப்பரகேசரி பன்மரான ஸ்ரீராஜேந்த்ர சோ
10. ழ தேவற்க்கு 8 ஆவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து மணயிற்கோட்டத்துப் புர....நாட்டு ஊரடகத்..
11. து ஸ்ரீராஜராஜஈச்வரமுடைய மஹதேவர்க்கு உடையார் ஸ்ரீராஜேந்த்ரசோழ தேவர் வைய்த்த திரு நந்தாவிளக்கு இரண்டினா(ல்)
12. ஆடு நூற்றெண்பது

விளக்கம்: ஒன்று முதல் ஒன்பது முடிய உள்ள மெய்கீர்த்தி பகுதி பொதுவானது என்பதால் அச்சிட்ட நூலில் இருந்து தரப்பட்டுள்ளது. இதை யாரும் ஒத்தி ஒட்டி (copy & paste) பயன்படுத்தலாம். இக்கல்வெட்டு பெரு வேந்தன் இராசேந்திரச் சோழனால் இக்கோவிலுக்கு இரண்டு நந்தாவிளக்கு ஏற்ற 180 ஆடுகள் வழங்கப்பட்டதை தெரிவிக்க அவனது 8 ஆம் ஆட்சி ஆண்டில் (1020 AD) வெட்டப்பட்டது.

அடுத்த கல்வெட்டுப் பாடம் – மேலுள்ள 9 வரி மெய்க்கீர்த்தியை தொடர்ந்து...

ஸ்ரீ ராஜேந்த்ர

1.   சோளதேவற்கு யாண்டு 7 ஆவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து மணவிற்கோட்டத்து  க
2.  ன்றூர்  நாட்டு கூவமான மதுராந்தக நல்லூர் ஊரோம் எங்களூரோடும் ஏறின சிற்றணயாபூதூ(ரான ப)
3.  ராந்தக சேரிய் ஏரிய்க்கு  பாலாற்றின் நின்(று)ம் பா[ய்]ந்த வாய்க்காலுக்கு  கீழ்பாற்கெல்லை   சிற்றணயா பூதூரான (பரா)
4.  ந்தகச் சேரி எல்லைய்க்கு  மேற்க்கும் தென்பாற்கெல்லை ஸ்ரீராஜராஜ ஈச்வரமுடையார்  தேவதானம்   ஊரடகத்..  (எ)
5.  ல்லைக்கு   வட க்கும் மேல்பாற்கெல்லை இவ்வூர் ஊரடகத்து எ(ல்லை) க்கு   கிழக்கும் வடபாற்கெல்லை ஊரடகத்
6.  து எல்லைக்கு தெற்கும் ஆக இன்னான்கெல்லை உள்ளும் அகப்பட்ட சிற்றணயாபூதூர் ஏரிய்க்கு பாய்ந்த      யூடறுக்கால்  ஸ்ரீராஜரா
7.  ஜ ஈச்வரமுடைய மாஹாதேவற்கு இறைஇலி தேவதானமாக உதகபூர்வஞ் செய்து சிலாலேகை   செய்து குடுத்தோம் கூவ
8.  மான மதுராந்தக நல்லூர் ஊரோம். ஊரார் சொல்ல  எழுதினேன் கருங்கணங் கிழவன் ..னேன் இவையென்
9.  எழுத்து

குறிப்பு :     இக்கல்வெட்டில், ஏரி, எல்லை, சேரி   ஆகியன ஏரிய், எல்லைய்,  சேரிய்  என யகர ஒற்று இறுதியில் அமையுமாறு எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு எழுதும் முறை, பிராமிக் கல்வெட்டுகளில் காணக்கூடிய ஓர் அமைப்பு.  (எடுத்துக்காட்டு :   பளி ->  பளிய்)

யூடறுக்கால் என்பது ஊடறுத்துப்போன வாய்க்கால்  என்பதைக் குறிக்கும். கொடை நிலத்தின் எல்லையை விளக்கும்போது ஊடறுத்துப்போன  வாய்க்கால்  என்னும் தொடர் அடிக்கடி வருவதைக் காணலாம்.    <  கோவை துரை சுந்தரம்.

விளக்கம்: சிவபுரம் ராஜராஜேஸ்வரம் அடங்கிய ஊரடகம் ஊரின் தெற்கேயும் கிழக்கேயும் அமைந்த சிற்றணயாபூதூரின் ஏரிக்கு பாய்ந்த பாலாற்று நீரின் கால்வாயை ஊடறுக்கும் மற்றொரு கால்வாய்ப் பகுதி நிலத்தை கூவமான மதுராந்த நல்லூரைச் சேர்ந்த ஊரார் ராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர்க்கு தேவதானமாக நீரட்டிக் கொடுத்ததை கல்வெட்டி பதிந்தனர். அதை நாலாம் அதிகார கருங்கணம் கிழவன் ஓலை எழுதி ஆவணம் செய்தான். இன்றைய கூவம் ஆறு அக்கால் பாலாறு என்று வழங்கப்பட்டதும் போலும். அது பராந்தகன் காலத்தில் ஏற்படுத்திய சேரியின் ஏரிக்கு வாய்க்கால் மூலம் செலுத்தப்பட்டதும் தெளிவாகின்றது. அந்த வாய்க்காலை ஊடறுத்து செல்ல மற்றொரு வாய்க்கால் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மகாதேவர் கோவிலுக்கு நீர் செல்ல ஏற்பாடுஆகி இருந்ததால் மதுராந்தக நல்லூர் மக்கள் அந்நிலத்தை தேவதானம் செய்தனர். இக்கல்வெட்டு நான் கூறும் ஆற்றோர கோவில்ஊர் அமைப்பு என்ற கருத்திற்கு வலுவான சான்றாகின்றது. இக்கல்வெட்டு இராசேந்திர சோழனின் 7 ஆம் ஆட்சி ஆண்டில் (1019 AD) வெட்டப்பட்டுள்ளது.

எனது கல்வெட்டு வாசிப்பில் திருத்தம் செய்து கொடுத்த திரு. துறரை சுந்தரத்திற்கு என் நன்றி.

 


1. தென்கிழக்கு நோக்கில் கோவில்.

 தென்கிழக்கு நோக்கில் கோவில்.

2.வடமேற்கு நோக்கில் கோயில்.


3. 180 ஆடு கல்வெட்டு.

4. கால்வாய் கல்வெட்டு.

கால்வாய் கல்வெட்டு.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 03 November 2018 20:28