தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்

Monday, 12 November 2018 08:00 - சேசாத்திரி - கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
Print

தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தரின் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் ஆகும்.  இது வேலூர்  மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் திருவடியிலிருந்து நீர் ஊறுவதால்  திருஊறல் என்று இத்தலம் பெயர் பெற்றது. கோவில் அருகே கல்லாறு பாய்கிறது என்பது மட்டுமல்ல  கூவமும் கொசத்தலையும் பிரிகின்ற கேசாவரம் அணையும்  4 கி.மீ .தொலைவிலுள்ளது. இக்கோவில் கருவறை சுற்றி பல்லவர்கால உருளைவடிவத் (cylindrical) தூண்களை பெற்றுள்ளது. கருவறை புறச்சுவரில் பல அரசர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன்றி  பிரகார நெடுஞ்சுவரிலும் பல கல்வெட்டுகள் நிறைந்துள்ளன. இத்தலம் காஞ்சிபுரத்தில் இருந்த்து 30 கி.மீ. தொலைவிலும் அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ.தொலைவிலும் உள்ளது.                          


கருவறைசுற்று உருள்வடிவத்  தூண் / கல்வெட்டு சுவர்

S.I.I. Vol 12 Pg 53 No 104 தக்கோலம் ஜலநாத ஈசர் மேற்கு கருவறைப் புறச்சுவர்

1.  ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு நாலவ
2.  து சோழநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து புலியூ
3. ர் புலியூருடையான் நாராறுங்கப் போனரயன் திருவூ
4. றல் மஹாதேவர்க்கு ஒரு நொந்தாவிளக்கு எரிப்பதற்
5. க்கு வைத்த ஆடு _ _ _ _

விளக்கம்: கூற்றம் என்ற சொல்லை வைத்து பார்க்கும் போது 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு போலத் தெரிகின்றது. சோழவேந்தன் யார் என்று தெரியவில்லை. (இராசராசன் இராசகேசரி எனப்பட்டான். இராசேந்திரன் பரகேசரி என்று அழைக்கப்பட்டான்). ஆனால்அவனது 4 ஆம் ஆட்சி ஆண்டில் சோழநாட்டின் வண்டாழை வேளூர் கூற்றத்தில் அடங்கிய புலியூரைச் சேர்ந்த புலியூருடையான் நாராறுங்கப் போனரயன் என்ற மூன்றாம் அதிகாரப் பொறுப்பு அரசன் திருவூறல் ஈசனுக்கு நந்தா விளக்கு எரிப்பற்கு கொடுத்த ஆடு 90 அல்லது 96 என்ற எண் பகுதி சிதைந்துள்ளது. தேவார காலத்தில் திருவூறல் என்று மட்டுமே இருந்தது பின்பு தக்கோலம் என்ற பெயரும் சேர்ந்து கொண்டது.

S.I.I. Vol 3 எண் 166

தக்கோலம் ஜலநாத ஈசுவரர் சன்னதி வடக்கு சுவர் கல்வெட்டு

1.   ஸ்வஸ்தி ஸ்ரீ
2.   கோப் பா(ர்த்தி)
3.   வேந்த்ர பன்மற்
4.   கு யாண்டு (3)
5.   ஆவது உட(யா)
6.   ர் தேவியார் அ
7.   ரு மொழி நங்
8.   கையார் த
9.   க்கோலத்து (தி)
10. ருவூதல் ஆள்வார்க்கு வைய்த்த திரு(ப்ப)
11. (ள்)ளிக்கட்டில் ஒ(ன்று)க்கு (கு)டுபித்தோம் நகரத்தோம்
12. பொலிசை செகுத்து ஒன்பதின் மஞ்சா
13. டி பொன் பெற ஆட்டொருமிப் இடு
14. வோமானோம் (மூ)ன்றாவது முதல் சந்த்ரா
15. தத்திவற்

கருவறைசுற்று உருள்வடிவத்  தூண் / கல்வெட்டு சுவர்

- கருவறைசுற்று உருள்வடிவத்  தூண் / கல்வெட்டு சுவர்-

விளக்கம்: பார்த்திவேந்திர வர்ம பல்லவனுக்கு 3 ஆவது ஆட்சி ஆண்டில் (972-973) உடையார் பார்த்திவேத்திரது தேவி அருமொழி நங்கையார் தக்கோலத்து ஈசுனுக்க வைத்த திருப்பள்ளிக் கட்டில் ஒன்றுக்கு வட்டியாக ஆண்டு ஒன்றுக்கு ஒன்பது மஞ்சாடி பொன் தர ஒப்புக்கொண்டோம். இது மூன்றாம் ஆண்டு முதல் சந்திராதித்த உள்ளவரை தொடரும் என்று உறுதியளித்தனர் நகர்த்தாராகிய வணிகர். இந்தக் கட்டில் தங்கத்தில் செய்ததாக இருத்தல் வேண்டும் இல்லாவிட்டால் ஆண்டிற்கு 9 மஞ்சாடி பொன்னை வட்டியாகப் பெறமுடியாது.

S.I.I. Vol 3  எண் 173   கருவறை வடக்கு புறச்சுவர்

1.    ஸ்வஸ்தி ஸ்ரீ கோப் பா(ர்த்தி)
2.     வேந்த்ர பர்மற்கு யாண்டு
3.     4 ஆவது மாராயபாடி
4.    த் தாழகொட்டி சாமுண்ட
5.    ஸ்வாமி மகன் கேசவையனா
6.    கிய பல்லவன் ப்ரஹ்மாதராய
7.    ன் தக்கோலத்து திருவூறலா
8.    ழ்வார் கோயிலுள்ளெழுத்தரு
9.    ளி நிற்கும் _ _ _ படாரிக்கு நொ
10.   ந்தாவிளக்கொன்றினுக்கு வை
11.   த்த ஆடு 96 ஆ(று இதன்)
12.   நெய்(ய)ட்டகடவான் ம
13.   துராந்த(க) கடுத்தலைமன்
14.   றாடி குமரனாகிய வி
15.   ராணுக்க மன்றாடி(யே)ன்.

விளக்கம்: பார்த்திவேந்திர வர்ம பல்லவனுக்கு 4 ஆவது ஆட்சி ஆண்டில் (973-974) மாராயபாடியைச் சேர்ந்த தாழக்கொட்டி சாமுண்டஸ்வாமி மகனான கேசவய்யன் என்ற பல்லவன் பிரம்மாதராயன் ஆகிய பிராமணன் தக்கோலமான திருவூறல் ஈசர் கோவிலில் எழுந்தருளி இருக்கும் படாரி அம்மனுக்கு ஒரு நந்தா விளக்கு ஏற்ற 96 ஆடுகளை கொடுத்தான். இவற்றிலிருந்து மதுராந்தக கடுத்தலைமன்றாடியின் மகன் குமரனாகிய விரோணுக்க மன்றாடி நெய் எடுத்து அளந்து தர ஒப்புக கொண்டான்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 12 November 2018 08:11