வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு

Monday, 04 February 2019 02:28 - சேசாத்திரி - கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
Print

வரலாறுதமிழ்நாட்டின் நடுநாடாம் பெரம்பலூர் வட்டம் அசூர் ஊரில் உள்ள அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் முன்மண்டபம் தெற்கு அதிட்டாணம் ஜகதி. 6 வரி கல்வெட்டு.

1.    ஸ்வஸ்திஸ்ரீ ஸகாப்தம்1350 இதன்மேல் செல்லா நின்ற சௌம்ய வருஷம் மார்கழி மாதம் 27 நாள் த்ரயோதஸியும் சனிக்கிழமையும் பெற்ற மூலத்து நாள் திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆன வன்னாட்டு வெண்பாற் நாட்டில் அசுகூரில் வலங்கை தொண்ணூற்று எட்டும் இடங்கை தொண்ணூற்று எட்டும்
2.    நிறைவற நிறைந்து குறைவறக் கூடி உடையார் சொக்கநாத நயினார் கோயிலில் திருக் கட்டளையில் கல்வெட்டினபடி இந்த நாட்டுக்கு பூறுவம் மற்ற மரியாதி பயிர்வழி கடமை இறுக்கும் இடத்து நன்செய்க்கு பாழ், சாவி கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு அன்பது பணமும் புன்செய் வரகு கேழ்வரகுக்கு பாழ் சாவி கழித்து பயிர் கூடின நிலத்திலே
3.    பத்தில்லொன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் இளவரிசை ஆன பல பயிருக்கும் இளவரிசைத் துண்டம் கால்வாசி கழித்து பயிர் கூடின நிலத்திலே பத்தில் ஒன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் வான்பயிர் ஆன செங்கழுநீர் கரும்பு கொழுந்துக்கு நூறு குழிக்கு
4.    அஞ்சு பணமும் வாழை மஞ்சள் இஞ்சிக்கு நூறு குழிக்கு இரண்டரைப் பணமும் கமுகு தென்ன மரத்துக்கு தலை கூடின முதலிலே மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் ஆட்டைக்  காணிக்கைக்கு இருநூற்று இருபது பொன்னும் மகமை தலையாரிக்கத்துக்கு எண்பது பொன்னும் பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வா
5.    ணியர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர் குடிமக்கள் பறையர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டு பணமும்  புன்பயிற் செய்தால் புனத்துக்கு  ஒரு பணமும்  இம்மரியாதி இம்முதல் குடுக்க கடவோமாகவும் இது ஒழித்து வேறு புறமுதல் புதுவரி என்று குடுக்க கடவோம் அல்லவாகவும்
6.    இப்படிக்கு இந்த கல்வெட்டுப்படி செய்யாமல் இருந்தோர்க்கு உடன்பட்டு கல்வெட்டை அழித்து செய்வார்கள் உண்டானால் அவர்களைத் தீர விளங்கி மேற்படக் குத்தி கீழ்ப்பட இழுத்துப்போடக் கடவோம் ஆகவும் இந்த கல்வெட்டை அழித்தவர்கள் கெங்கைக் கரையிலே கபிலையைப் கொன்ற பாபத்திலே போகக் கடவர்கள் ஆகவும் ஸுபமஸ்து.

விளக்கம்: விஜயநகரம் இரண்டாம் தேவராயர் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1428 இல் வெட்டிய கல்வெட்டு. ஆனால் வேந்தர் பெயர் கல்வெட்டில் இல்லை. திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆள வன்னாட்டு வெண்பாற் நாட்டில் உள்ள அசுகூரான அசூரில் உள்ள சொக்கநாத சுவாமி கோயிலில் கூடிய வலங்கை 98 சாதிகளும், இடங்கை 98 சாதிகளும் குறைவின்றி நிறைவே நிறைந்தவராய் தாம் அரசுக்கு செலுத்த வேண்டிய பயிர்க் கடமை(வரி), பல இனத்தார் செலுத்த வேண்டிய பல வரிகள் குறித்து இக் கல்வெட்டு கூறுகிறது. நன்செய் பயிரில் வீணாகிய பாழும் உமி மட்டும் உள்ள சாவியை தவிர்த்து வளர்ந்த பயிரில் வேலி ஒன்றுக்கு ஐம்பது பணமும், வரகு கேழ்வரகு விளையும் புன்செய் பயிரில் வீணாகிய பாழ், உமி ஆகிய சாவி தவிர்த்து வளர்ந்த பயிரில் பத்தில் ஒன்று 1/10 கழித்து வேலி ஒன்றுக்கு 25 பணமும் இவற்றுக்கு கீழான இளவரிசை துண்டில் 4 ல் 1 பங்கான கால்வாசி கழித்து மேலும் 10 ல் 1 பகுதி கழித்து வேலி ஒன்றுக்கு 25 பணமும் வானாவாரி பயிருக்கு 100 குழிக்கு 5 பணமும், வாழை மஞ்சள் இஞ்சி க்கு 100 குழிக்கு 2-1/2 பணமும், முதல் குறுத்து விட்ட கமுகு, தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் தரவேண்டும். ஆண்டு காணிக்கைக்கு 220 பொன்னும், மகமை என்னும் கோவில் வரி, தலையாரிக் காவல் வரிக்கு 80 பொன்னும் தரவேண்டும். பட்டடை குடியான என்பது போர்க் குடிகளை குறிக்கிறது.பட்டடை குடி செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர் ஒருவருக்கு இரண்டரை பணமும் இடையர், வலையர், கண்மாளர், பறையர் ஒருவருக்கு, தலைக்கு இரண்டு பணமும் புண்செய் பயிர் செய்தால் புனம் ஒன்றுக்கு ஒரு பணமும் தரவேண்டும்.இவை தவிர்த்து வேறு எந்த புது வரியும் செலுத்த வேண்டாம்.

இந்த ஏற்பாட்டிற்கு உடன்படாமல் கல்வெட்டை அழிப்பவர்கள் நன்றாக வாட்டி வதைத்து தலையில் குத்தி கீழே இழுத்துப் போடுவோம் என்று எச்சரிக்கின்றனர்.வலங்கை இடக்கையில் இடம்பெறாமல் இருப்பதால் தான் செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர், இடையர், வலையர், கண்மாளர், பறையர் என்போர் தனித்து கல்வெட்டில் காட்டப்பட்டார்களோ? அல்லது இவர்கள் நிலமின்றி பிறரிடம் ஊழியத் தொழில் ஆற்றுவோர் என்பதால் அதிக பணம் கேட்க முடியாது என்பதால் இவர்கள் குறைவான வரி செலுத்தினால் போதும் என்று தனியே காட்டப்பட்டார்களா? என்று தெரியவில்லை. 

மொத்தத்தில் இக்கல்வெட்டில் பறையர் பிற சாதிமாரோடு இதாவது போர்க்குடியோடும், ஆயர், மீனவர், கம்மாளரோடும்  சரிநிகராக வைத்து ஆண்டிற்கு தலைக்கு இரண்டு பணம் வரி செலுத்தக் கடவராக இருந்தது 15 ஆம் நூற்றாண்டில் பறையர்கள் தாழ்த்தப்படவோ, ஒடுக்கப்படவோ இல்லை. தீண்டாமைக்கு ஆட்படவும் இல்லை எனத் தெரிகின்றது.   

பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி III பக்கம் 15, 2010, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

வல்லமையில் இக்கட்டுரை http://www.vallamai.com/?p=90405

பிற தளங்களில்
http://thevar-mukkulator.blogspot.com/2015/04/blog-post.html
வலங்கை படையினர்(வலங்கை வேளைக்கார்கள் ): இவர்கள் மட்டுமே வலங்கை பழம் படையினர் என தங்களை குறிப்பிட்டு கொள்கின்றனர். இவர்களுள் பறையர்,நத்தமான்,வேடன்,மலையன் போன்றவர்கள் தங்களை வலங்கை வேளைக்காரர் என்றும் புது படைகளை சேர்க்கும் போது அதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இடங்கை படையினர்(இடங்கை வேளைக்காரர் ): பள்ளிகள்,பள்ளர்கள்,சக்கிலியர்,கன்னட வேட்டுவர்கள் அனைவரும் தங்களை இடங்கை வேலைக்காரர்கள் என குறிப்பிட்டு கொள்கின்றனர். இதில் பள்ளி,சக்கிலியர் பெண்கள் வலங்கையை சார்ந்ததாக கூறப்படுகின்றது. 
https://m.facebook.com/permalink.php?id=353306181531838&story_fbid=415630761966046


ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீமந் மஹாமண்டலீஸ்வரந் ஸ்ரீ அரியஇராய விபாடபாஷைக்குத் தப்பு / வராயர் கண்ட மூவராயர் கண்ட ஸ்ரீஅரியராய குமார புக்கண்ண உடையார் / க்குச் செல்லா நின்ற சித்ரபாநு [வரு]ஷம் தை 15 திருவகத்தூர் கைக்கோளர் கற்றை /வட வாணியர் சேனைக்கடையார் செக்கு உட்பட பட்[ட]டை நூல் ஆ / யம் ஆட்டைச் சம்மாதம் கையேற்பு அதிகை மாத / மாத இரட்டி கண்ணாயக்கர் மகமை மற்றும் ஆயத்தை நோக்கிக்  கொ / ள்ளூம் பல உபாதிகளும் உட்பட மலையாங்கட்டுக் குத்தகை வளையில் சுற்று / அரசர் அருளி செய்யி பூறுவ மற்ற மரிஆதி ஆண்டு ஒன்றுக்கு கைக்கோளர் போக்கு / கொள்ளும் 70 கற்றை; வட வாணியர், சேனைக்கடை செக்குப் பட்டடை உட் / கொள்ளும் 30  ஆக 100 இப்பணம் நூறுமே கொள்ளக் கடவது ஆகவும் இது / ஒழிந்து வேறு ஒன்றும் சொல்லக் கடவது அல்ல ஆகவும் இதுக்கு அழிவு / சொன்னார் உண்டுஆனால் கெங்கை கரையில் காராம் பசுவைக் கொன்றான் புக்க / நரகம் புக்க கடவன் ஆகவும் இப்படிக்கு இவை வில்லவராயன் எழுத்து இது பன்மாஹேஸ்வர ரஷை.  

விளக்கம்: திருவண்ணாமலை செய்யாறு நகர் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப தெற்கு சுவர் கல்வெட்டு. இதில் போர்க்குடிகள் செலுத்த வேண்டிய வரி குறித்து பொறிக்கப்பட்டுள்ளது. இதில் அசூர் கோவில் கல்வெட்டு போல் வரிகள் தலைக்கு அல்லாமல் ஒட்டு மொத்த சாதியும் தாம் ஆக்கும் பொருள்களுக்கு செலுத்த வேண்டிய ஆண்டு வரி என்ன என்று உள்ளது.

கைக்கோளர் வெளியே எடுத்துச் சென்று விற்கும் தம்பொருள்களுக்கு 70 பணமும் கயிறு விற்கும் வாணியர், எண்ணெய் விற்கும் சேனைக்கடையார் 30 பணமும் ஆக 100 பணம் மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கும் கூடுதலாக பணம் செலுத்தச்சொல்லக் கூடாது ஆகவும் இந்த ஏற்பாட்டை அழிக்கச் சொல்பவர் நரகம் புகுவார் என்று வில்லவராயன் ஆணையாக எழுத்தில் பதிவு செய்கிறார். சித்திரபானு  1402-1403 ல் நிகழ்வதால் இரண்டாம் அரியராயர் மகன் புக்கனைக் குறிக்கின்றது.    

இந்த 100 பணம் கோவிலுக்கு கொடுக்க ஏற்பாடாகி இருக்கும் போல் தெரிகின்றது ஆனால் அதுபற்றிய குறிப்பு ஏதும் கல்வெட்டில் இல்லை. கோவிலுக்கு இல்லாவிட்டால் இக்கல்வெட்டு கோவிலில் இடம் பெற்றிருக்காது என்பதை ஊகிக்க முடிகின்றது. ஆணை வெளியிட்ட வில்லவராசன் அரசர் என்று தெரிகின்றது.    

பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி XI, பக். 104.

விசயநகர ஆட்சி ஏற்பட்டபின் 15 ஆம் நூற்றாண்டில் வரிசெலுத்தும் முறையில் எதோ மாற்றம் ஏற்பட்டது போல் தெரிகின்றது. அதனால் வரிகட்டவேண்டிய சாதிகளின் பெயர் குறிப்பிட்டு கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. அப்படியொரு கல்வெட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தீர்த்தம் என்ற ஊரில் சிவன் கோவில் அதிட்டானத்தில் காணப்படுகிறது. இது 15 ஆம் நூற்றாண்டினது. முற்பகுதி வரிகளும் பிற்பகுதி வரிகளும் சிதைந்து உள்ளன.

கல்வெட்டு:
- - - -ட்டை பறைச்சேரி முதல் பட்டடை கண்ணா(ல)ம், எருது, பசு கொள்மாறு வெள்ளாயம் குதிரை மற்று எப்பேற்பட்ட உள்ள ஆயம்முள்ளது -- --    
-- - (த்து) உதகம் பண்ணிக் குடுத்தேன்  தாநமா(க)  நம் - - - - மரியாதி  இன்த தம்(மம்) சந்த்ராதிதவரை செல்லக்கடவது இத் தம்மம் மாறினவன் - - -

விளக்கம்: பறைச்சேரி வாழ் மக்களிடம் திரட்டப்படும் வரி, போர்க்குடி (பட்டடை கல்யாணம்) வரி,   எருது பசு குதிரை வரி  வெள்ளாயம் போன்ற எப்பேர்ப்பட்ட வரி வருவாயையும் நீர்வார்த்து தானமாக கொடுத்தேன்.இந்த தருமம் ஞாயிறும் நிலவும் நின்று நிலைக்கும் வரை செய்வதாகவும் இதற்கு மாறாக நடப்பவன் அழிவான் என்று மன்னன்  ஓலை வழங்கியுள்ளான்.  இந்த கல்வெட்டும் பறையர், படைக்குடியார்  வரிசெலுத்தியதை உறுதி செய்கிறது

பார்வை நூல்: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள், பக். 61, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2007

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 29 March 2019 07:07