மீனவர் ஆற்றிய கோயில் தொண்டு

Sunday, 26 January 2020 11:53 - சேசாத்திரி ஶ்ரீதரன் - கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
Print

திருக்குவளை சிவன் கோவில்

நீரும் நீர் சார்ந்த நெய்தல் திணை வாழ் மக்களான மீனவர் எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும் தமது இயலுமைக்கு தகுந்தபடி கோயில் தொண்டு புரிந்துள்ளனர் என்பதற்கு சில கல்வெட்டுச் சான்றுகள் உள. இக்கல்வெட்டுகளில் மீனவர் சிவன்படவர் என்று குறிக்கப்படுகின்றனர். இதன் மற்றொரு வடிவம் தான் செம்படவர் என்பது. மீனவர் தீண்டத்தகாத மக்கள் பிரிவினர் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது. 63 நாயன்மாருள் ஒருவரான அரிபத்த நாயனார் ஒரு சிறந்த சிவபக்தர். இவர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த ஒரு மீனவத் தலைவர்.  இவருக்காக திருக்குவளை சிவன் கோவிலில் சிலை நிறுவி அமுதுபடி செய்வதற்காக ஆலன் என்ற மீனவர் காசு கொடுத்த செய்தி இடம் பெற்றுள்ளது. இனி கல்வெட்டும் அதன் விளக்கமும் கீழே :

நாகபட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், தியாகராச சுவாமி கோவிலின் மகாமண்டப வடக்கு, மேற்கு ஜகதிப்படை வெட்டப்பட்ட 19 வரிக் கல்வெட்டு

நாகபட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், தியாகராச சுவாமி கோவிலின் மகாமண்டப வடக்கு, மேற்கு ஜகதிப்படை வெட்டப்பட்ட 19 வரிக் கல்வெட்டு:

1.   ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள்
2.   ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 4
3.   வது மார்கழி மாதத்தொரு நாள் உ
4.   டையார் திருக்கோளிலி உடை
5.   யார் கோயிலில் முன்னாளில் சிவ[ன்]
6.   படவரில் ஆலன் எழுந்தருளிவித்த
7.   அதிபத்த நாயனார்க்கு திருப்படி மா
8.   ற்றுக்கு இவன் தன் சாதியார் பக்க
9.   ல் இரந்து பெற்ற காசாய்
10.            காலசேரி ஐய்யனையப் பட்டன்
11.           மகன் தாமோதரபட்டன் பக்கல்
12.           நெல் பொலிசைக்கு குடுத்த காசாய்
13.           இவன் ஒடுக்கின காசு 2100. இக்கா
14.           சு இரண்டாயிரத்தொரு நூறும்
15.           கைக்கொண்டு திருப்படி மாற்றுக்
16.           கு நாள் ஒன்றுக்கு இருநாழி அரிசி
17.           அமுதபடிக்கு அளப்போமாகவு
18.           ம் நாங்கள் இப்படி செய்வோ
19.           மாக ஸம்மதித்தோம்.

திருப்படி மாற்றுக்கு – படையல் சோறு ஆக்குவதற்கான பண்டம்; பக்கல் – இடம், ஐந்தாம் வேற்றுமை; இரந்து – கெஞ்சி கேட்டுப் பெற்ற அல்லது பிச்சை எடுத்துப் பெற்ற; ஒடுக்கின - கட்டிய, paid

விளக்கம்: சோழவேந்தன் மூன்றாம் ராசராசனின் 4- ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1219) நாகை மாவட்டம் திருக்கோளிலி என்னும் திருக்குவளை தியாகராச சுவாமி கோவிலில் ஆலன் என்ற மீனவன் சில ஆண்டுகள் முன்பு மார்கழி மாதத்தே ஒரு நாள் தான் எழுந்தருளச் செய்த அதிபத்த நாயனார் படிமைக்கு படையல் செய்வதற்கான அரிசிக்கு வேண்டிய நெல்லைப் நாள்தோறும் பெறும் ஏற்பாடாக தன் சாதி மீனவர்களிடம் பிச்சை எடுத்துப் பெற்ற 2100 காசுகளை வட்டிக்குவிட்டு அந்த வட்டிப்பணத்தில் (பொலிசை) இதனை மேற்கொள்ளும் வகையில் காலசேரி ஐய்யனையப் பட்டன் மகன் தாமோதரப் பட்டனிடம் கொடுத்தான். இந்த 2100 காசுகளைப் பெற்றுக் கொண்டு நாள் ஒன்றுக்கு இருநாழி அளவு அரிசியை அளந்து அமுதுபடிக்காக இட்டு படையல் ஆக்கி படையல் காட்டுவோம் என்று ஒப்புக் கொண்டார்அவர். இது கோவில் சிவபிராமணர் சார்பில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஆகும். இதில் இடம்பெறும் சிவன்படவர் ஆலன் அகநாட்டு மீனவராஅல்லது கடற்கரை மீனவரா என்று தெரியவில்லை.

பார்வை நூல்:
நாகபட்டின மாவட்டக் கல்வெட்டுகள், பக்கம் 93 – 94, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

கரூர் மாவட்டம், கரூர் வட்டம், திருமுக்கூடலில் உள்ள 36 வரிக் கல்வெட்டு.

1.   ஸ்வஸ்தி ஸ்ரீ கோராசகேசரி பன்மரான 
2.   திரிபுவனச் சக்கரவத்திகள்
3.   ஸ்ரீவீரபாண்டிய தேவற்கு
4.   யாண்டு 15-வது தட்டையூர்நாட்டு
5.   திருமுக்கூடல் ஆளுடைய நாயனார்க்கு
6.   இரண்டுகரைநாட்டு சிவன்படவரோம்
7.   தென்கரை அல்லூர்
8.   பெருவழிக்கு மேற்குள்ள
9.   சிவன்படவரோம். மேற்கு முடிகொண்டத்துக்கு
10.           கிழக்கு உள்ள சிவன்படவரும்
11.           வடகரை சென்னகர் முறியான
12.           பெரியவளவன் பரத்தலைக்கு
13.           மேற்குள்பட்ட சிவன்படவரும்
14.           மேற்கு மணப்பள்ளி உள்பட கிழக்குள்ள
15.           சிவன்படவரோம் இந்நாட்டு
16.           உள்ப்பட்ட சிவன்படவரோம்
17.           இத்திருமுக்கூடல் ஆளுடைய நாயனாற்க்கு
18.           ஆறாம் திருநாளுக்கும்
19.           ஆளுடைய பிள்ளையாரை எழுந்தருள
20.           பன்னவும் சாத்துப்படிக்குப் பூச்சுப்படி
21.           அமுதுபடி கறியமுது உப்பமுது
22.           மிளகமுது நெய்யமுது பால் அமுது
23.           அடைக்காய் அமுது இலையமுது
24.           பந்தம் திருவிளக்கெண்ணை திருப்பள்ளித்தாம
25.           உள்ளிட்ட வற்கத்துக்கு பணம் 20. இப்பணம் இருபதும்
26.           திருநாள்கள்தோறும் குடுக்கக்கடவோமாகவும்
27.           தூபம் தீபம் கொம்பு திருச்சின்னம் இவையும் எங்கள்
28.           தன்மமாக இடக்கடவோமாகவும் இவை தாழ்வுபட்டால்
29.           மண்கலந்தும் வெண்கலம் எடுவித்தும் தடுத்துவந்த்தும்
30.           வீரபத்திரர்கள் வெட்டிக் கொண்டும் தண்டக்கடவார்களாகவும்
31.           இத்தண்டவந்தவர்களுக்கு சோறு பாக்கு இட்டு உபசரிக்கக்கடவோமாகவும்
32.           இன்நாட்டில் சிவன்படவர் ஒருகுடி இருக்கிலும்
33.           நாடு சோறு போட்டுப் பணம் தண்டி வந்து ஒருகடவோமாகவும்
34.           இப்படி சம்மதித்து கல்வெட்டிக் குடுத்தோம்
35.           உடையார் திருமுக்கூடல் ஆளுடைய நாயனார்க்கு இரண்டுகரை நாட்டு
36.           சிவன்படவரோம். இந்த தன்மம் மாற்றினார் உண்டாகில் வழி எழுச்சமறுவான்.

பெருவழி – நெடுஞ்சாலை (highway) ; முறி – நகர்பகுதிஅல்லது சேரி; சாத்துப்படி – திருமேனி அலங்காரம்; திருப்பள்ளித் தாமம் – திருமேனிக்கு சாற்றும் மாலை; திருச்சின்னம் – ஊதுகுழலுள்ள இசைக்கருவி; அச்சம் – வாரிசு.

விளக்கம்: கொங்கு பாண்டியனான வீரபாண்டியனின் 15-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1280) தட்டையூர் நாட்டில் அமைந்த திருமுக்கூடல் இறைவர்க்கு இரண்டுகரை ஊர்களிலும் வாழும் மீனவரான சிவன்படவர் இதாவது, தென்கரையிலுள்ள அல்லூர் நெடுஞ்சாலைக்கு மேற்கில் வாழும் சிவன்படவரும் மேற்கே முடிகொண்டத்துக்கு கிழக்கில் வாழும் சிவன்படவரும் அதேபோல் வடகரையில் சென்னகர் பகுதியான பெரியவளவன் பரத்தலைக்கு மேற்கில் அடங்கிய சிவன்படவரும் அதேபோல் மேற்கு மணப்பள்ளிக்கு உட்பட்ட கிழக்குப்பகுதியில் வாழும் சிவன்படவரும் ஆகியோர் உள்ளிட்ட இந்த நாட்டுச் சிவன்படவர் யாவருமாக இத்திருமுக்கூடல் இறைவர்க்கு ஆறாம் உற்சவ நாளில் ஆளுடையபிள்ளையாரை (ஞானசம்பந்தர்) எழுந்தருளச் செய்து திருமேனி அலங்காரத்திற்கும், பூசனைப்படி, அமுது படையல், பொறியல், உப்புச்சோறு, மிளகுச்சோறு, நெய்ச்சோறு, பால்சோறு, பாக்குச் சோறு, வெற்றிலை, தீப்பந்தம், விளக்கேற்ற எண்ணெய், திருமேனிக்கு சாற்றப்படும் மாலை ஆகிய செலவினங்களுக்கு இருபது பணம் ஒவ்வொரு ஆண்டின் உற்சவத்தின் போதும் கொடுப்போம் என்றும, இஃது அல்லாமல் தூபம், தீபம், கொம்புஊதல், திருச்சின்னம் எனும் ஊதுகுழல் இசைக்கருவியை ஆர்த்தல் ஆகியனவும் எங்கள் தர்மமாகச் செய்வோம் என்றும் இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தால் வீரபத்திரர்கள் வெட்டிக் கொண்டும், மண்கலந்தும், வெண்கலம் எடுத்தும், தடுத்து வந்தும் அப்பணத்தை திரட்டிக் கொள்ளலாம் என்றும், இப்படி திரட்டுபவர்களுக்கு சோறுபோட்டு வெற்றிலைப் பாக்கு கொடுத்து உபசரிப்போம் என்றும் இந்நாட்டில் ஒரேஒரு சிவன்படவர் வாழ்ந்தாலும் சோறுபோட்டு பணத்தை திரட்டி வந்து செலுத்துவோம் என்றும் இரண்டுகரைநாட்டு வாழ் சிவன்படவரும் திருமுக்கூடல் இறைவர்க்கு கல்வெட்டி உறுதி அளித்தோம். இந்த தர்மத்தை மாற்றுகின்றவன் ஏழு தலைமுறைக்கு பிள்ளை இல்லாமல் போகுவானாக என்று கூறுகின்றனர். இவர்கள் அகநாட்டு மீனவர்கள் ஆவர். 

பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 301. A.R.I.E.p 1917. B.No. 197 ஆசிரியர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 20 May 2020 08:50