சித்தர்கள் …… வைதீகர்களே!

Monday, 12 March 2018 14:16 - முனைவர் சு. காந்திதுரை, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை – 9. - கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
Print

சித்தர்கள் …… வைதீகர்களே!இந்தியாவில் வைதீக சமயம் தனக்கானக்கட்டமைப்பை எல்லாப் படிநிலைகளிலும் உருவாக்கிக் கொண்டுள்ளது. வைதீகம் வேதங்களையும் உபநிடதங்களையும் முதன்மையாகக் கொண்டு அதையே கடைபிடித்து, சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து வாழ்தலே வைதீகத்தின் உள்ளார்ந்த பொருளாகும். “இந்துமதம் என்றொரு மதமோ, கொள்கையோ, ஒருதத்துவமோ அந்த மதத்திற்கென்று தத்துவ நூலோ கிடையாது.  வடமொழி, வேதத்தினை மட்டும் ஏற்றுக்கொண்டு சாதி அடுக்கினைச் சரிந்துவிடாமல் பேணிக்கொண்டு தங்கள் சாதி மேலாண்மையினைக் காப்பாற்றிக் கொள்ளத் துடித்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தனி ஒரு தத்துவ நூலும் ஆகமங்களும் உடைய சைவ வைணவ மதங்களை விழுங்கிச் செரித்துக் கொண்டு அரசதிகாரத்தின் துணையோடு மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது” எனத் தொ. பரமசிவன் கூறுகிறார். (தொ.பரமசிவன் சமயங்களின் அரசியல்,ப.63) இச்சமய அவதானிப்பில் இருந்த நெருடல்களைக் கண்டு வெகுண்டு ஒதுங்க நினைத்தவர்கள் சித்தர்கள். இவர்கள், காலங்காலமாக நம்மிடையே பழகிப்போன வழக்கத்தில் இருந்த நாட்டுப்புற வழிபாட்டு மரபின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கலாம்.  சமூகத்தின் மீது இருந்த அக்கறையும் சமயத்தின் மீது இருந்த பற்றையும் பொது அடையாளமாக வெளிக்காட்டவும் முனைந்தவர்கள்.

சமூகத்தின் மீது அக்கறை கொண்ட – சித்தர்கள் யார்? – எங்கிருந்து வந்தார்கள்? – கலகக் குரலுக்குரியவர்களா? – அவர்களுடைய குரல் யாருக்கான குரல்? - சமயப்புறந்தள்ளிகளா? - இயற்கை வாழ்வியல் விரும்பிகளா? – புது வழிபாட்டு முறையை உருவாக்கியவர்களா?  – சமூக சிந்தனையாளர்களா? – என்பன போன்ற வினாக்களை எழுப்பிக்கொண்டு, சித்தர்கள் வைதீக மரபை தக்கவைக்க புறப்பட்ட வைதீகர்களே என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு சித்தர்களின் இலக்கியப் பதிவுகளின் வழியாக விடைகாண முயல்கிறது இக்கட்டுரை.

சித்தர்களின் காலம்
சித்தர்களின் காலத்தைச் சரியாக வரையறைசெய்ய இயலவில்லை.  அறிஞர்கள் பலரும் பலவிதமாக கருத்துக் கூறுகின்றனர். சதாசிவ பண்டாரத்தார் கி.பி. 5, 6 ஆம் நூற்றாண்டே சித்தர்கள் காலம் என்கிறார்; வி. செல்வநாயகம் கி.பி. 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் என்று குறிப்பிடுகிறார்.  எம்.எஸ். பூரணலிங்கம்பிள்ளை 8 முதல் 14ஆம் நூற்றாண்டு வரை சித்தர்கள் காலம் என்கிறார். மு. அருணாசலம் மற்றும் மு. இராதாகிருஷ்ணன் இருவரும் கி.பி. 14ஆம் நூற்றாண்டு என்று கூறுகின்றனர்.  நீலகண்ட சாஸ்திரி, ஹண்டர், கால்டுவெல், தெ.பொ.மீ. போன்றோர் 16ஆம் நூற்றாண்டு என்கின்றனர்.  ஆனால், கி.பி. 14 முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சித்தர்கள் காலமாகக் கொள்ளலாம்.  இக்காலகட்டம் சித்தர்கள் பெருமையாக பேசப்பட்ட காலப்பகுதியாகும்
.
மேற்கண்ட முரண்பட்ட கூற்றுகளால் சித்தர்களின் காலத்தை உறுதிசெய்ய இயலவில்லை.  ஆனால், சமயவாதிகளின் கருத்து ஒற்றுமை காரணமாகச் சமூகம் சார்ந்த நிலையிலும், ஆன்மீக நிலையிலும் இறைவனைஅடைவதற்குரிய நெறிமுறைகளைச் சொன்னவர்கள் சித்தர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

முதல்சித்தர்
தான் நினைத்ததை நினைத்தவாறே முடிப்பவன் சித்தன்.  முருகப்பெருமானின் ஆயிரம் நாமங்களில் சித்தனும் ஒன்றாகும்.  சிவன், முருகன், அருகன், திருமூலர், அகத்தியர் போன்றோரை முதல் சித்தர் என்று மரபு வழக்கில் கூறுவதுண்டு. “சித்தமார்க்கத்துக்கு வழிபடு கடவுளாகிய மூலமூர்த்தி முருகப்பெருமானே என்பது நூல் மரபு.  முருகப்பெருமானது முதல் மாணாக்கராக விளங்கிய அகத்தியரே சித்தர்களில் முதலானவர்” என மு.வ. குறிப்பிடுகிறார் (மு.வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு, ப. 280) சித்துவேலையைச் செய்யும் ஆற்றல் உடையவர்கள் சித்தர்கள் என்றும், இவர்கள் எல்லாச் சமயத்திற்கு உட்பட்டும், பின்னர் அப்பாற்பட்டும் விளங்கிய சைவ சமய சன்மார்க்கிகள் என்று சி.எஸ். முருகேசன் குறிப்பிடுகிறார்.

சித்தர்கள் யார் ?
சித்தர்கள் முழுமையும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள்.  கடவுள் இல்லை என வலியுறுத்தவில்லை;  சமூக வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிச் சென்றவர்கள்;  ஆனால், ஆன்ம வேட்கை கொண்ட அருளாளர்கள்; மனதை வென்றவர்கள்; சித்திகளைப் பெற்றவர்கள்;  பரிபூரண நிலையை அடைந்தவர்கள்;  சமூகத்தின் மீது இருக்கமும், சமயத்தின் மீது பற்றும், கடவுள் நம்பிக்கையும் உடையவர்களாக இருந்தார்கள்.  ஆனால், நிறுவனச் சமயமான வைதீக மரபில் தங்களுக்குப் பிடிக்காத கூறுகளை வெறுத்து ஒதுக்கிப்பாடினார்கள்.  இவற்றில் சாதிகள், வேதங்கள், சடங்குகள், வழிபாடுகள், பூசைகள், ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். காலந்தோறும் தொடர்ந்து சொல்லப்பட்டு, வலியுறுத்தப்பட்டு வரும் கூறுகளுக்கு எதிரான மனநிலையில் உருவானவர்களைச் ‘சித்தர்கள்’ என ஒற்றைச்சொல்லில் அழைத்தார்கள்.   கடவுளைக் காண முயன்றவர்கள் பக்தர்கள். இறைவனைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் எனக் கூறலாம்.  திருமூலர்,

“தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்உள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல் தெவ்வாறே”         (திருமந்திரம் 129)

என உடம்பில் சிவலோகத்தைக் கண்டவர்கள் சமாதிநிலையில் பேரின்பத்தை தன்னுள்ளே அனுபவித்தவர்கள்.  இந்நிலையை “கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை” எனக் கூறலாம்.

கலகக் குரலுக்கு உரியவர்களா?
பதிணென் சித்தர்களின் இலக்கியப் பதிவுகளில் சமூகச் சாடல்களையும், சாதி சமய பூசல்களை எதிர்ப்பதையும் காணமுடிகிறது.  “சித்தர்களின் மற்றொரு வகையினர் சிலை வழிபாடு, பூசை, பார்ப்பனர் புனிதமாகக் கருதப்பட்ட வேதம், கோயில், குளம், சாதிய ஒடுக்குமுறை என எல்லா வகை நிறுவனங்களையும் எதிர்;த்துக் கலகக்குரல் எழுப்பி இருக்கின்றனர்.” (தொ. பரமசிவன், அறியப்படாத தமிழகம், பக். 116) என்கிறார் தொ. பரமசிவன். சித்தர்களின் குரலை; தனக்கான அடையாளம் மறுக்கப்படுகிறபோது, தன்னை முதன்மைப்படுத்த முடியாமல், கீழ்உள்ளவர்களுக்குப் பாடுபடுவதுபோல் தனக்கான அடையாளத்தைத் தக்க வைக்கும் முயற்சியாகவே பார்க்க இடமுள்ளது.

“சாத்திரங்கள் ஒதுகின்ற சட்டநாத பட்டரே
வேரிரைப்பு வந்துபோது வேதம் வந்துதவுமா?”
“குலம்குலம் என்பதெல்லாம் குடுமியும் நூலுந்தானா?”
“கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா?”
முதலிய பாடல்களை சித்தர்களுக்கான அடையாளமாகப் பார்க்கலாம்.

யாருக்கான குரல்?
பதிணென் சித்தரில் 11க்கு மேற்பட்டோர் வேத அடுக்கில் இருந்து புறந்தள்ளப்பட்ட கீழ்த்தட்டு மக்களாவர்.  ஆனால், இவர்களின் குரலை சமூக விடுதலைக்கான குரலாக அடையாளம் காண இயலவில்லை. சமூகப்படிநிலையில், தனக்கான இருக்கத்தைக் கட்டமைத்துக்கொண்டு வேறு விதமான வழிபாட்டுமுறைகளைச் சொல்லி சாமானியர்களைச் (பாட்டாளிகளைச்) சமயத்தின்பால் வெறுப்பு கொள்ளாமல் இருக்கக் காரணமாக இருந்தார்கள். சித்தர்கள் நெறி, சமயம் கடந்த எல்லா சமயத்துமான அடிப்படையான நெறிகளைக் கொண்டது.  இதனை, 

“அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோரட்சரமாய்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமான்”

எனப்பட்டினத்தாரின் புலம்பல் தெளிவுபடுத்துகிறது.  “தமிழகச் சித்தர்களும் சீர்திருத்தம் பேசி மக்களுக்கு நல்வழிகாட்டினார்கள்.  சமயங்களின் அடிப்படை கொள்கைகளிலிருந்து சமரச ஒருமைப்பாடு கண்டனர்.  சித்தர்களில் சைவர், வைணவர் என எல்லா நிலையிலும் இருந்தார்கள்” (இரா. சாரங்கபாணி, சித்தர் இலக்கியங்களில் திருக்குறள், ப. 8) என்பதை அறியலாம். இவர்களின் குரல்கள், சமயப்பாதுகாப்புக்கான குரலாகவே இருந்தன என்பதற்கு,

“குற்றமற்ற சிவனுக்கு குண்டல மானாய்
கூறும் திருமாயனுக்குக் குடையானாய்
கற்றைக் குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்
கரவாமல் உளங்களித்து ஆடுபாம்பே”

எனப் பாம்பாட்டிச்சித்தர் கூறுவது பொருத்தமாக உள்ளது. இக்குரலை, இவர்களுக்கான அடையாளக் குரல்கள் என்பதோடு சமயத்தின் பாதுகாப்பிற்கான குரல் என்றே கருதலாம்.

சமயப் புறந்தள்ளிகளா?
சித்தர்கள், சமயத்தில் இருந்து புறந்தள்ளப்பட்டவர்களா? என்றால் இல்லை என்றே விடை கிடைக்கும்.  சமயத்தையும், அதனுடைய பூசை முறைகளையும் மேற்போக்கச் சாடுவதாகவே இருக்கிறது.  சித்தர்கள் பலராதலின் அவர்தம் சிந்தனையும் வாழ்வியல் நெறிகளும் பலவாகவே இருந்தன.  அவரவர் காட்சிக்கு அவரவர் கொண்டதே கருத்து என்ற சமயச் சார்புநிலையிலும் ஒன்றி இருந்து மாறுபட்டு வெளிப்பட்டவர்கள். ஆனால், சமயத்தைச் சார்ந்த குறைகளைச் சொல்லி – நாட்டுப்புற மக்களிடையே செல்வாக்கு பெறவும், வைதீக சமயத்தைப் பாதுகாக்கவும் மறைமுகக் காரணியாக விளங்கினார்கள்.

சமயவாதிகள், இவ்வுண்மை நிலை அறியாமல் இவர்களைப் புறக்கணித்தார்கள், சித்தர்கள் இலக்கியத்தைப் பாதுகாக்க மறுத்துத் தீயிட்டு அழித்த வரலாறுண்டு. இதில், சமயவாதிகளுக்கும், சித்தர்களுக்கான முரண் மட்டுமே வெளிப்பட்டது. ஆனால், குறியீட்டுநிலையில் மெய்ஞானத்தேடல் நிலையில் வைதீகமாதலை ஏற்றுக் கொண்டவர்கள்.  சில குறைகளை பதிவு செய்யவிரும்புகிறார்கள். ஆனால், பழிக்கவுமில்லை, குறைகளைச் சொல்லவுமில்லை; அப்படியென்றால் சித்தர்கள் வைதீகமாதலை ஏற்றனர் என எண்ணத்தோன்றுவதற்கு இடம் உள்ளது.

“ஆடுபாம்பே! தெளிந்தாடு பாம்பே! சிவன்
அடியினை கண்டோமென்றாடு பாம்பே!”             (பாம்பாட்டிச்சித்தர்)
“ஆலமுண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலனென்று சொல்லுவீர்! கனவிலும் அஃதில்லையே!”    (சி.வா. 12)

“ஐயர் திருப்பாதம் - பசுவே! அன்புற்று நீ பணிந்தால்
வெய்ய வினைகளெல்லாம் விட்டோடும் கண்டாயோ – பசுவே!”(இ.சி. 41)

“அளிந்து நின்றாலும் - அகப்பேய் அஞ்சார்கள் சொன்னேனே;
புரிந்த வல்வினையும் - அகப்பேய்    போகாதே உன்னை விட்டு.” (அ.சி. 31)

சமயப்பிணக்குகளில் இருந்தும் விடுபட்டவர்களாகக் சித்தர்களைக் கருதலாம்.  சித்தர் பாடல்களில் சமயம் சார்ந்த நியாயமில்லாத தாக்குதல்களைக் காணமுடியவில்லை.  சித்தர் இலக்கியம் முழுவதிலும் ஒரு குறிப்பிட்ட சமய பழிப்புக்கு இடம்தரவில்லை. சைவத்தில் திருஞானசம்பந்தரின் பாடல்களில்  பதிகம்தோறும் 10வது பாடலில் சமண பௌத்தக் காழ்ப்புணர்ச்சி தெரியும்.  இதற்கு மாணிக்கவாசகரும் விதிவிலக்கல்ல.

வைதீக சமயத்துக்குள்; சைவமும் வைணவமும் ஒன்றையொன்று தாக்கிப்பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையினை சைவத்திருமுறைகளிலும், நாலாயிரதிவ்விய பிரபந்தத்திலும் பரவலாகக் காணமுடிகின்றது. இதில் நம்மாழ்வார்,

“சிவன் அயன் இந்திரன் இவர் முதல்
அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கைதொழக்
கிடந்த தாமரை உந்தித்தனிப் பெரு நாயக” (நா.தி.ப., 2578)

என திருமாலை சிவன் அயன் இந்திரன் முதலான தேவர்கள் வணங்கியதாக பதிவுசெய்துள்ளார்.

கொங்கணவர் “சித்தி விநாயகன் காப்பே” எனத் தொடங்கி இருக்கிறார். “பாரதி வாலைப்பெண் வாழியவே!” எனப் பராசக்தியை குறிப்பிடுகிறார். சைவத் திருமுறைகளில் திருமால் சிவனை வணங்குவதாகவும், வைணவப் பாசுரங்களில் சிவன் திருமாலை வணங்கியதாக ஏராளமான பதிவுகள் இருக்கின்றன.  ஆனால், சித்தர்கள் வைதீக சமயத்தை பழிக்கவில்லை ஏன் ? சித்தர்கள் வைதீக விரும்பிகள் என்பதற்கு,

“தங்கம் ஒன்று ரூபம்வேறு தன்மையான வாறு போல்
செங்கண்மாலும், ஈசனும், சிறந்திருந்த தும்முளே”
என சிவவாக்கியர் குறிப்பிடுவதிலிருந்து உணர்ந்துகொள்ளமுடிகிறது.

இயற்கை வாழ்வியல் விரும்பிகளா?
சித்தர்கள், சமூக வாழ்வியலைக் கடந்து காடுமலைகளில் தேசாந்திரியாக இயற்கையாக வாழத் தலைப்பட்டவர்கள்.  கோயில், உருவவழிபாடு, பூசை முறைகள், சடங்குகளில் இருந்து தன்னை அன்னியப்படுத்திக் கொண்டவர்கள் என்றே சொல்லாம்.  சமயம் சில நிலைகளில் மனிதனைப் பக்குவப்படுத்தாமல் பிற்போக்கான நிலைக்கு இட்டுச்செல்வதாக எண்ணியவர்கள் சித்தர்கள்.

சித்தர்களின், யோகநெறி, பக்திநெறி இரண்டுக்குமே மனக்கட்டுப்பாடு அவசியமாகும்.  இக்கட்டுப்பாட்டை விரும்பியவர்கள் இயற்கை விரும்பிகளாக வாழத்தலைப்பட்டார்கள்.  சித்தர்களுக்கு உலகியல் ஆசை கிடையாது.  உலகத்தோடு ஒட்டாமல் வாழும் இயற்கைவாழ்வியல் வழியைச் சொல்கிறார்கள்.

புது வழிபாட்டுமுறையை உருவாக்கியவர்களா?
சித்தர்களைக் கருத்தியல் நிலையில் வைதீக சமயம், இவர்களைக் கலகக்காரர்கள் என்று தள்ளிவைத்தது. ஆனால், இவர்கள் சமயச்சார்பைக் கடந்தவர்கள்; கடவுள் இருப்பை மறுதலித்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்.  இத்தகைய கருத்தியல் சூழலில் இவர்கள் புதுமுறையை வகுத்தார்கள்.  இறைவனை புறத்தே தேடாதே! உந்தன் உள்முகமாகத் தேடிக் கண்டடைய முயற்சிசெய்! என்று அறிவுறுத்தினார்கள்.  சித்தர்கள் உலகியல் வாழ்க்கையில் இருந்து விலகி, தனிமையை விரும்பினார்கள்.

“மனமென்னும்  மாடு அடங்கில் தாண்டவக்கோனே!
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே!”
என இடைக்காட்டுச்சித்தர் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.  சித்தர்கள் வைதீகசமய வழிபாட்டிலிருந்து புதுவழிபாட்டு முறையை உருவாக்கியவர்கள்.

சமூக சிந்தனையாளர்களா?
சித்தர்களுக்குச் சமூகத்தின் மீது அக்கறை என்பதைவிட சமயங்களின் திணிப்பை எதிர்க்கமுனைந்தவர்கள் என்பதே பொருந்தும். ஆனால், அம்முணைப்பினைப் பலருக்கு எப்படிச்சொல்வது எனத் தெரியவில்லை.  தீவிர மதப்பற்றுடையவர்கள் மனதுக்குப் பிடிக்காத தம்மால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றை ஏற்றுக்கொள்ளச் சொல்லி மறைமுகமாகத் திணிப்பதை எதிர்த்தனர்.  இதன்வழி சமூகத்தின்பால் கொண்ட அக்கறையையும் தனக்கான எதிர்ப்பையும் அடையாளத்தையும் முன்வைத்தார்கள். மக்களிடையே சித்தர்கள் மரியாதைக்குரியவர்களாக கருதப்பட்டார்கள்.  அதற்குக் காரணம் அவர்களின் பற்றற்ற வாழ்க்கையும், மருத்துவ குணங்களுமாகும். செல்வத்திற்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்படாதவர்கள்;.  சமானியர்களின் (பாட்டாளிகளின்) தோழனாகச் சமூக விடுதலை தேடுபவர்களின் உணர்வுக்கு இவர்களின் உரிமைக்குரல் முதலாக ஒலித்தது. “சித்தர்கள் பிராமணர் அல்லாதோர் என்பதும் உறுதியாகத் தெரிகிறது.  சித்தர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருக்க வாய்ப்புண்டு.  இது பொது யூகம், யார், யார் என்ன சாதி என்பதை நிர்ணயிக்க அகச்சான்றுகள் இல்லை”(ச. மாடசாமி, பாம்பாட்டிச்சித்தர், ப. 33) என்று கூறுகிறார்.

சித்தர்கள் அருளாளர்கள்தான் ஆனால் சமூகத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள்.  மனித நேயம்மிக்க செயல்களையும் சமூகக் குறைகளையும் இங்கு ஒன்றும் அங்கொன்றும் பதிவு செய்து இருக்கிறார்கள். இக்காலகட்டத்தில் வேறுயாரும் அதுவும் பதிவுசெய்யவில்லை என்பது உண்மை.  இப்பதிவும் பாம்பாட்டிச்சித்தர், சிவவாக்கியார், குதம்பைச்சித்தர், பத்திரகிரியார் ஆகியோரிடம் மட்டுமே காணமுடிகிறது.  “சாதிப்பிரிவினில் தீயை மூட்டுவோம்”  எனப் பாம்பாட்டிச் சித்தரும்,  “சாதி ஆவதேதடா?” எனச் சிவவாக்கியாரும், “சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பதெக்காலம்?” எனப் பத்திரகிரியாரும், “சாதி பேதமில்லை” என அகப்போய் சித்தரும், சாதிசமயக் கொடுமைகளைப் பதிவுசெய்கிறார்கள். இதில் பெரும் வெற்றி பெற்றார்கள் எனச் சொல்வதற்கில்லை.  சித்தர் என்றால் எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்தது சிவவாக்கியரின்,

“பறைச்சியாவது ஏதடா? பனத்தியாவது ஏதடா?
இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ…”

என்ற கேள்வி, இவர்களைச் சமூக சிந்தனையாளர்களாக அடையாளப்படுத்தும் முன்னெடுப்பாகும். “சித்தர்கள் ஓர் இயக்கமாய் இணைந்து குறிக்கோளுடன் செயல்படாததால் அவர்களால் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய முடியாமல் போயிற்று” என க. கைலாசபதி குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும். (க. கைலாசபதி, ஒப்பியல் இலக்கியம், ப. 192)

முடிவாக சில
தமிழ்ச் சமூகத்தில் சித்தர்மரபு குறிப்பிடத்தக்கது.  சித்தர்கண்ட, சமூக சமய கற்பிதங்களைத் தம் இலக்கியங்களில் பதிவு செய்கின்றார்கள்.  நிறுவன சமயங்கள் வலியுறுத்தும் வைதீக நெறியின் முரண்பட்ட கூறுகளை மட்டுமே சித்தர்கள் விமர்சித்தார்கள்.  மாறாக வைதீக சமயமே வேண்டாம் என்பது போன்ற பதிவுகள் இவர்களின் இலக்கியப் பதிவுகளில் இடம்பெறவில்லை. எனவே, சித்தர்களின் காலங்காலமாக விளங்கிய - நாட்டுப்புற தெய்வ மரபின் வளர்ச்சியைத் தன்னுற் உள்வாங்கிக் கொண்ட வைதீக சமயத்தின் சாதி, மதம், வேதம், சடங்கு, வழிபாடு, பூசைகள் போன்றவற்றை எதிர்க்கின்றனரேயொழிய கடவுள் இருப்பை எதிர்க்கவில்லை.

சித்தர்களில் பெரும் பகுதியினர், சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாகவே இலக்கிய பதிவுகள் இருக்கின்றன.  இப்பதிவுகளில் சிவன், பார்வதி, முருகன், திருமால் ஆகிய தெய்வங்களும் மந்திரச் சொற்களும் இடம்பெறுகின்றன.  இவர்கள் சைவ சமயக்கொள்கைகள், வைணவ தத்துவங்களைப் பழித்துரைக்கவில்லை.  காரணம் சித்தர்கள் வைதீகத்திற்கு எதிராகப் பேசியே, அச்சமய பாதுகாப்பிற்குக் காரணியாக விளங்கினார்கள்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கட்டுரையாளர் _ - முனைவர் சு. காந்திதுரை, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை – 9. -

Last Updated on Monday, 12 March 2018 14:20