நெய்தல் நிலத்துக் கவிதைகள்: மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத்தொகுதி குறித்த ஒரு பார்வை. மு.புஷ்பராஜன்போர் என்பது ஒரு பிரதேசத்தில் பிரவேசித்து விட்டால் அந்நிலமானது மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிடுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். கூடவே இழப்புக்களும் இடப்பெயர்வுகளும் கூட அங்கு நியதிகளாகவும் நிரந்தரங்களாகவும் மாறி விடும். இத்தகைய மரணங்கள் மலிந்த பூமியிலிருந்து இன்னல்களுடனும் இழப்புக்களுடனும் இப்பூமிப்பந்தெங்கும் சிதறிப் போன பல லட்சம் ஈழமக்களினது சாட்சியங்களாகவும் குரல்களாகவும் மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்‘ எனும் கவிதைகளின் தொகுதியொன்று வெளிவந்துள்ளது.

மு.புஷ்பராஜன் நாடுகள் கடந்த கவிஞர், விமர்சகர், ஆய்வாளர். அத்துடன் கலை, இலக்கியம், திரைப்படம் எனப் பல்வேறு தளங்களிலும் இயங்குபவர். இவரது நூல்களாக ‘அம்பா’ என்ற மீனவர் பாடல்களின் தொகுப்பும் ‘வாழ்புலம் இழந்த துயரம்’ என்ற கட்டுரைத் தொகுப்பொன்றும் இதுவரை வெளிவந்துள்ளது. ஈழத்தில் ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் மட்டுமே வெளிவந்தாலும் ஈழ இலக்கிய உலகில் பலத்த அதிர்வுகளையும் எதிர்வினைகளையும் ஆற்றிய ‘அலை’ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். ஈழம், தமிழகம், புகலிடம் என்ற முக்கோணத் தளப் பரப்பில் உயிர்ப்புடன் இயங்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.  இது இவரது முதலாவது கவிதைத்தொகுதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்று பல நூறு கவிஞர்களால் இயங்குகின்ற நவீன தமிழ் கவிதை உலகில் மு.புஷ்பராஜன் அவர்கள்  முற்றிலும் வேறுபட்டவராக காணப்படுகிறார். இதற்கு இவரது இந்த மரபு குறித்த அறிதலும்  புரிதலுமே  முக்கிய காரணமாக விளங்குகின்றது. நவீன தமிழ் கவிதை மரபானது 150 வருடங்களுக்குள் மட்டுமே உட்பட்ட மிகக் குறுகிய ஆயுட்காலத்தை கொண்டதாக இருப்பினும் இது  உலக அரங்கில் தனக்கென ஒரு தனியான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளமைக்கு, இம்மரபானது தன்னகத்தே ஒரு மூவாயிரம் வருட பழமையும் செழுமையும் வாய்ந்த ஒரு கவித்துவ பாரம்பரியத்தையும் மரபையும் கொண்டிருப்பதே ஒரு முக்கிய காரணமாகும். இம்மரபு குறித்த புரிதலும் அறிதலும் கொண்டவர்களே ஒரு சிறந்த கவிஞராக இருக்க முடியும் என்பது இன்று நிதர்சனமான உண்மையாகிவிட்டது. இதனால்தான் என்னவோ எந்தவிதமான மரபு சார்ந்த அறிவோ எண்ணங்களோ  இன்றி மேலைத்தேய சிந்தனையில் மட்டும் தடம் புரண்டு எழுதும் இன்றைய பல கவிஞர்கள் அவர்களது கவிதைகளை படிமங்கள் என்னும் பம்மத்துக்களால் மட்டும் காட்சிப் படுத்துகின்றனர். இத்தகைய பயமுறுத்தும்  கரடு முரடான காட்சிப் படிமங்களின்றி மிக எளிமையானதும் சிக்கல்கள் இல்லாததுமான  சொற்களால் மட்டுமே இக்கவிதைத் தொகுதி நிரம்பியிருக்கின்றது.

ஒரு கடலோரக் கிராமமொன்றிலிருந்து மேற்குலகில் உள்ள ஒரு துயரம் நிறைந்த தொலைதூர நகர் ஒன்றிட்கு இடம்பெயர்ந்த கவிஞரது  வாழ்வுடனேயே இவரது கவிதைகளும் பயணிக்கின்றன. இதனால் இவரது ஆரம்ப காலக் கவிதைகள் அந்நெய்தல் நிலத்தையே பகைப்புலமாகக் கொண்டு, வீசும் உப்புக் காற்றினதும் வலைகளினதும் சாதாளை தாவரங்களினதும் வாசங்களை சுமந்து வருகின்றன. கூடவே இந்நெய்தல் நிலமானது காலப் போக்கில் ஒரு போர் நிலமாக மாற்றம் பெறுகையில் அந்த இரக்கமற்ற போரின் கொடுமைகளையும் கொடூரங்களையும் கோபாவேசத்துடன் பதிவு செய்கின்றது. கொடுமையான இனசங்காரங்கள் நிறைந்த ஈழப் போரானது ஆரம்பம் முதல் இறுதி வரை குமுதினிப் படகு படுகொலைகளில் இருந்து முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வரை கடலும் கடல் சார்ந்த நிலத்தையும்  வாழ்விடமாகக் கொண்ட நெய்தல் நில மக்களையே அதிகம் பலி கொண்டுள்ளதை நாம் மறுக்கமுடியாது. எனவே இந்நெய்தல் நில மக்களின் அவலக் குரலே இலங்கைத் தீவெங்கும் அதிகம் எழுப்பப் பட்டதையும் அதற்கெதிரான கலகக் குரல்களையும் அவர்களே அதிகம் எதிரொலித்தனர் என்பதையும் கூட நாம் இங்கு நினைவு படுத்தியேயாக வேண்டும்.  இதற்குமப்பால் இடப்பெயர்வு ஏற்படுத்திய கொடுந்துயரம் கவிஞரை அவரது வாழ்நாள் முழுவதும் வாட்டி வதைக்கின்றது. இக்கொடுந்துயரின் அனுபவங்களின் தரிசனமாகவே இவரது பிற்காலத்தில் எழுதிய, இத்தொகுப்பில் உள்ள அநேகமான கவிதைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. 

“மண்ணின் ஈர்ப்பை உதைத்து
விண்ணில் விரைகிறது விமானம்.
மேகமண்டலங்கள் திறந்த புதிய பயணம்.
யன்னலின் கீழாய் ஆழத்தில் வழிகிறது
மின்குமிழ்களின் ஒளியாறு.
சிறுது நேரத்தில் அதுவும் மறந்து விடும்
நான் விட்டு விட்டு வந்த
கடலோரக் கிராமம் போல்.”

 

என்று தனது தேசம் நீங்கிய இடப்பெயர்வின் ஆரம்ப கணங்களை நினைவேற்றும் கவிஞர்

“இலைகளை இழந்த கிளைகளின் நடுவே
சிறகுகள் கோதும் மைனாவே.
பனியுறை நாட்டில் உறவுகள் நினைந்து
தனிமையில் குமையும் எனக்காய்
நீயோர் தூது செல்லாயோ?”


என்று பனியுறைந்த நாட்டிலிருந்து தனது தாயகம் நோக்கிய ஏக்கங்களையும் பெருமூச்சுக்களையும் பதிவு செய்கிறார். போர், புலம்பெயர்வு இவற்றுக்கும் அப்பால் அன்பு, பாசம், நம்பிக்கை, பிரிவு, காதல், காமம்  என ஒரு கவிஞருக்குரிய ஆசாபாசங்கள் அனைத்துமே இக்கவிதைத் தொகுதியில் வெளிப்படுத்தப் படுகின்றது. அனைத்துக்கும் அப்பால் இயலாமைகளையும் சோர்வுகளையும் மட்டுமே பதிவுகளாக்கும் மற்றைய புகலிடக் கவிதைகளில் இருந்து வேறுபட்டு நம்பிக்கைகளையும் மானிட நேயங்களையும் வெளிப்படுத்தும் கவிதைகளாக இவை அமைந்துள்ளன.

மேலும் ஒரு கத்தோலிக்க பாரம்பரிய குடும்பமொன்றிலிருந்து இவர் கவிஞராக உருக்கொண்டதால் வியாகூலமாதாவும் தேவாலய மணியோசைகளும் மெழுகுவர்த்தி வெளிச்சங்களும் அடிக்கடி காட்சிப்படுத்தப் படுகின்றது. அத்துடன் பரிசுத்த வேதாகமத்தில் அதிக பரிச்சயமும் வாசிப்பும் உள்ளதாலோ என்னவோ முள்முடியும் சிலுவைகளும் ஏழாம் தூதர்களின் எக்காளத் தொனிகளும் மிக அதிகமாகவே இக்கவிதைகளில் வெளிப்படுத்தப்படுகின்றது.

வாழ்வின் வெவ்வேறு எல்லைகளைத் தொடும் இக்கவிதைகள் ஆனது எமது வாசிப்பு அனுபவங்களின் எல்லைகளையும் தரிசனங்களையும் வெவ்வேறு தளங்களுக்குள் இட்டுச்செல்கின்றது. இதனை வாசிக்கும்போது சிலவேளைகளில் சங்க காலக் கவியொருவர் காலம் தப்பி எமது காலத்தில் பிறந்து விட்டாரோ என்ற சந்தேகத்தையும் எம்மிடையே  ஏற்படுகின்றது. 

இன்று விமர்சனம், ஆய்வு, என்று பல்வேறு தளங்களிலும் தடம் பதித்துள்ள மு.புஷ்பராஜன் அவர்கள் இப்போதெல்லாம் அதிகமாகக் கவிதை எழுதுவதில்லை போல் ஒரு தோற்றம் எம்முன் எழுகின்றது. எனவே இவர் கொஞ்சம் அக்கறையும் சிரத்தையும் எடுத்து தொடர்ந்தும் கவிதைகளைப் படைத்து நவீனத்தமிழ் கவிதையுலகிற்கு சிறப்பினை சேர்க்கவேண்டும் என்பது எமது வேண்டுதலும் விண்ணப்பமும் ஆகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.