1957 இல் எழுத ஆரம்பித்தவர் திரு நீர்வை பொன்னையன் அவர்கள். இவரது முதல் சிறுகதை பாசம் என்பதாகும். இக் கதையானது ஈழநாடு வாரப் பதிப்பில் பிரசுரமாகியுள்ளது. அதனையடுத்து  மேடும் பள்ளமும்  என்ற கதை கலைச் செல்வி இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. தொடர்ந்து தமிழன், வீரகேசரி, தேசாபிமானி, வசந்தம், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இவர் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். 1957 இல் எழுத ஆரம்பித்த திரு நீர்வை பொன்னையன் அவர்கள் 2012 வரையான 65 வருட காலப் பகுதிகளில் 91 சிறுகதைகளை எழுதியுள்ளார். 1961 இல் வெளியிடப்பட்ட இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி மேடும் பள்ளமும் என்பதாகும். உதயம், பாதை, வேட்கை, ஜென்மம், நிமிர்வு, காலவெள்ளம் போன்ற சிறுகதைத் தொகுதிகளை இவர் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். நினைவுகள் அழிவதில்லை என்ற இந்த சிறுகதைத் தொகுதியானது இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினூடாக வெளிவந்துள்ள திரு நீர்வை பொன்னையன் அவர்களின் ஒன்பதாவது சிறுகதைத் தொகுதியாகும்.1957 இல் எழுத ஆரம்பித்தவர் திரு நீர்வை பொன்னையன் அவர்கள். இவரது முதல் சிறுகதை பாசம் என்பதாகும். இக் கதையானது ஈழநாடு வாரப் பதிப்பில் பிரசுரமாகியுள்ளது. அதனையடுத்து  மேடும் பள்ளமும்  என்ற கதை கலைச் செல்வி இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. தொடர்ந்து தமிழன், வீரகேசரி, தேசாபிமானி, வசந்தம், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இவர் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். 1957 இல் எழுத ஆரம்பித்த திரு நீர்வை பொன்னையன் அவர்கள் 2012 வரையான 65 வருட காலப் பகுதிகளில் 91 சிறுகதைகளை எழுதியுள்ளார். 1961 இல் வெளியிடப்பட்ட இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி மேடும் பள்ளமும் என்பதாகும். உதயம், பாதை, வேட்கை, ஜென்மம், நிமிர்வு, காலவெள்ளம் போன்ற சிறுகதைத் தொகுதிகளை இவர் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். நினைவுகள் அழிவதில்லை என்ற இந்த சிறுகதைத் தொகுதியானது இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினூடாக வெளிவந்துள்ள திரு நீர்வை பொன்னையன் அவர்களின் ஒன்பதாவது சிறுகதைத் தொகுதியாகும்.

உழைக்கும் தொழிலாளியான விவசாய மக்களது வர்க்கப் போராட்டங்களை அடிநாதமாகக் கொண்டும், எமது தாயகத்திலுள்ள பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கத்தினதும், தமிழ்ப் போராட்டக் குழுக்களதும் பாசிச நடவடிக்கைகளையும், அழிப்புக்களையும் அம்பலப்படுத்தி எதிர்ப்புக் குரல் எழுப்பியும் இவரது படைப்புக்கள்  யாவும் புனையப்பட்டுள்ளன. இவர் தனியல்லன். சுரண்டலையும், சூறையாடலையும் தகர்த்தெறிந்து ஒரு புதிய சகாப்தத்தை நிர்மாணிப்பதற்காகப் போராடி வருகின்ற முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் முக்கிய மூத்த உறுப்பினர் ஆவார். 

சிறுகதைகளை நல்ல முறையில் படைக்க வேண்டும் என்றால் தலைசிறந்த சிறுகதை ஆசிரியர்களின் கதைகளை நாம் வாசித்திருக்க வேண்டும். அவ்வாறு வாசித்திருந்தால்தான் இளந்தலைமுறையினர் காத்திரமான கதைகளைப் படைக்க இயலும். அவ்வாறானதொரு காத்திரமான தொகுதிகளின் ஆசிரியர் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் விளங்குகின்றார்கள்.

நினைவுகள் அழிவதில்லை என்ற இத்தொகுதியில் பத்து சிறுகதைகள் இடம்பிடித்திருக்கின்றன. நீர்வை பொன்னையன் அவர்கள் தன் இளமை வயது தொடக்கம் தனக்கென்ற தனிக் கொள்கையுடன் வாழ்ந்தவர், வாழ்ந்து வருபவர் என்பதை அவரது பல சிறுகதைகள் சுட்டி நிற்கின்றன. தலைசிறந்த ஒரு தலைவராக, மனித நேயம் மிக்க ஒரு மனிதராக அவர் இன்றும் எம்மத்தியில் காணப்படுகின்றார். அவரது கதைகளில் வரும் பாத்திரப் படைப்புக்கள் கூட, கோழைகளாக வாழாமல் துணிச்சல் மிக்க வீரர்களாக வாழ வேண்டும் என்ற அச்சமின்மையை வாசகர்களிடம் தோற்றுவிக்கின்றது.

நினைவுகள் அழிவதில்லை என்ற முதல் கதையானது ஒரு ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையிலான உரையாடலாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. கதையின் வர்ணனைகளில் அலாதி சிறப்புக்கள் காணப்படுகின்றன. முதலாவது மொழிநடை. அடுத்து உவமானங்கள். மொழிநடைகள் ஏனையவர்களின் சிறுகதைகளிலிருந்து மாறுபட்டதாக காணப்படுகின்றது.  அதாவது இந்திய சிறுகதைகளை வாசிக்கும் உணர்வை இக்கதை ஏற்படுத்துகின்றது. நமஸ்கார் பாபுஜி என்ற முதல் சொல்லாடலே அக்கருத்தை வலியுறுத்திவிடுகின்றது. அதுபோல 'கடலலையாய் நீண்டு வளர்ந்த கூந்தல்' என்ற உவமானம் சற்று வித்தியாசமான ரசனையை தோற்றுவிக்கின்றது. கார்மேகக் கூந்தல் என்பதுதான் வழமையான உவமானமாக இருப்பதால் மனதில் இது பதிந்துவிட்டதெனலாம். மெல்லிய காதல் உணர்வுகள் இக்கதையில் இழியோடியபோதும் கூட, இறுதியில் தோழமை உணர்வினால் அது இல்லாமல் போவதை உணர முடிகின்றது.

குருஷேத்திரம் என்ற கதை மிகவும் நயக்கத்தக்கதாகவும், ஹாஸ்ய உணர்வு கலந்ததாகவும் எழுதப்பட்டுள்ளது. கந்த புராணப் படிப்புப் போட்டி ஒன்றிற்காக இரண்டு தரப்பினர் கலந்து கொள்கின்றனர். முதல் தரப்பினர் பல வருடங்களாக அந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று வருபவர்கள். இரண்டாவது கூட்டத்தினருக்கு இந்த முறை அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சந்தர்ப்ப வசத்தால் கிடைக்கின்றது. கிடாய் விசுவன் பெரிய தைரியசாலி போல போட்டியில் கலந்து கொள்வதற்காக செல்கின்றார். ஏனையோருக்கு அச்சம். என்ன நடக்கப்போகிறதோ என்ற அவஸ்தையில் அவர்கள் தவித்திருக்க விசுவன் ஒரே ஒரு விடயத்தைத்தான் எதிரணியிடம் கேட்கின்றான். அதாவது, 'என்னையா? சீ இப்படியா பாட்டை வாசிக்கிறது? அந்தப் பாட்டைத் திருப்பி வாசியும்' என்கின்றார். இதுவரை காலமும் முதலிடம் பிடித்து வந்த குழுவினர் திகைக்கின்றனர். அவர்களுக்கு வியர்த்துவிடுகிறது. வெற்றிப் புன்னகையுடன் விசுவன் தன் நண்பர்களை நோக்கி வருகின்றான்.

இத்தனைக்கும் விசுவன் ஒரு எழுத்துத் தானும் படித்தவனில்லை என்பதை 'ஒருவரி கூட உனக்கு வாசிக்கத் தெரியாது. அப்படிப்பட்ட உன்னாலை இதை எப்படி சாதிக்க முடிஞ்சுது?' என்ற நண்பர்களின் கேள்வி மூலம் கதாசிரியர் வாசகருக்கு உணர்த்துகின்றார். வெற்றி எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு விசுவன் இவ்வாறு விடையளிக்கின்றான். 'அவை கையாண்ட யுக்தியைத்தான் நான் அவையளுக்கெதிராய் பாவிச்சன்'.

இன்றைய சூழ்நிலையில் மக்கள் நீதி நேர்மை, கடமை என்ற எல்லாவற்றையும் மறந்து விட்டிருக்கிறார்கள். அன்பு, பிணைப்பு என்பதற்கெல்லாம் இன்று சக்தியே இல்லாமல் போய்விட்டது. பணம்தான் அனைத்து தரப்பினரையும் ஆட்சி செய்கின்றது. நீதி என்ற கதையும் அவ்வாறு அநீதி இழைக்கப்பட்ட ஒரு விடயம் பற்றியே பேசுகிறது.

பேதிரிஸ் முதலாளியின் மதுக்கடைக்கும், பேரம்பலம் முதலாளியின் நகைக் கடைக்கும் இடைநடுவே ஐந்தடி நீளமும், மூன்றடி அகலமும் கொண்ட ஒரு பரப்பில் வேலு என்பவன் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகின்றான். முதலாளிமார் இருவருக்கும் வேலுவை எப்படியாவது இவ்விடத்திலிருந்து அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணம். பலவாறு முயற்சி செய்தும் அது கைகூடவில்லை. தருணம் பார்த்து அவர்கள் காத்;திருக்கின்றனர். ஒருநாள் மழை பொழியும் நேரம். பேதிரிஸ் முதலாளி வேலுவை அழைத்து தனது கடையின் பெயர்ப் பலகை சரிந்துள்ளதாகவும், அதை சரிசெய்துதரும் படியும் கூறுகின்றார். அதற்கு வேலு தற்போது மழை பெய்கிறது என்பதால் கூரை ஈரலிப்பாக இருக்கும் என்பதாகவும், தான் நாளைக்கு அதை சரி செய்து விடுவதாகவும் கூறுகின்றான். அதிகார வர்க்கம் எல்லா இடங்களிலும் இருக்கின்றதுதானே. இப்போதே பலகையை சரி செய்து விடுமாறும், இல்லையேல் வேறு வழியை, தான் பார்ப்பதாகவும் பேதிரிஸ் முதலாளி மிகவும் கடுப்பாக கூறியதால், வேலு வேறு வழியின்றி கூரைக்கு மேல் ஏறுகின்றான். சற்று நேரத்தில் மின்சாரம் தாக்கியதால் கதறிக்கதறி வேலு இறந்துவிடுகின்றான்.

இதை அறிந்த வேலுவின் மகன் மாதவன் பொலிஸில் முறைப்பாடு செய்யும் போது அவனுக்கு நஷ்டஈடு தருவதாக பொலிஸ் அதிகாரி பேதிரிஸ் முதலாளிக்கு சார்பாக பேசுகின்றார். கதையின் இறுதிக் கட்டம் மனதை சல்லடையாக்குகின்றது. நெஞ்சுக்குள் வலியெடுக்கின்றது. 
'நகைக் கடையை உடைத்துத் திருட முயன்ற செருப்பு தைக்கும் தொழிலாளி வேலு மின்சாரம் தாக்கி மரணம்' என பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் செய்திப் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இந்தக் கதை என்னை மிகவும் பாதித்தது. யதார்த்தங்கள் இப்படித்தான் இருக்கின்றன என்பதை கதாசிரியர் நன்கு உணர்த்தியிருக்கின்றார்.

இன்றைய மாணவர்கள் மட்டுமல்ல அக்காலத்து மாணவர்களும் சேட்டை மிகுந்தவர்கள் என்பதை அவன் என்ற கதை சொல்கின்றது. வீரசிங்கம் என்ற மாணவன் வகுப்பில் குழப்படியாயிருந்து பின்பு பொலிஸ் அதிகாரியாக ஆன கதையை சுவாரஸ்யமாக எழுதியிருக்கின்றார் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள். வளரும் பயிரை முளையில் தெரியும் என்றாலும் காலம் யார் யாரை எப்படி மாற்றும் என்பது யாருக்கும் தெரியாது. நன்றாக படித்தவர்கள் திருடர்களாக இருக்கின்றார்கள். குறும்புத்தனமாக இருந்தவர்கள் பொறுப்பான பதவியில் இருக்கின்றார்கள். எனவே யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை இக்கதை வலியுறுத்துகின்றது.

வெளிநாட்டு மோகத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு கதையை அக்கரைப் பச்சை என்ற சிறுகதை விளக்குகின்றது. மிகவும் கஷ்டப்பட்டு, கடன்பட்டு மகனை கனடாவுக்கு அனுப்பி வைக்கின்றார் தேவநாயகம். பிறகு மகனின் அன்பு வற்புறுத்தலால் அவரும், மனைவியும், ஒரே மகளும் கனடாவுக்கு செல்கின்றனர். மகள் அங்குள்ள சுப்பர்மார்க்கட் ஒன்றில் தொழில் புரிகின்றாள். சில காலத்தின் பின் கனடா அரசாங்கத்தில் அகதிக் காசு வாங்குவதற்காக மூவரையும் தன் காரில் அழைத்துச் செல்கின்றான் மகன். தந்தை தேவநாயகம் அந்த அகதிக் காசை பிச்சைக் காசாகவே எண்ணுகின்றார். மனம் ரணமாகின்றது. வெட்கம் அவரை பிடுங்கித் தின்கின்றது. மனைவியும், மகளும் மீண்டும் சொந்த நாட்டுக்கு வருவதில் அக்கறை காட்டாதிருக்கவே தேவநாயகம் மீண்டும் தாயகம் திரும்பி விடுகின்றார். வீட்டுத் திறப்பு முன்வீட்டு ஓடிட்டரிடம் இருக்கின்றது. அவர் வெளியில் சென்றிருப்பதால் தேவநாயகம் ஒடிட்டர் வரும் வரை காத்திருக்கின்றார். அப்போது எதிர்பாராத விதமாக தேவநாயகத்தின் சகோதரியும், அவளது கணவனும் வருகின்றனர். அவர்கள் கூறிய கூற்றிலிருந்து, தன்னை எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள் என்ற உண்மை தேவநாயகத்துக்கு விளங்குகின்றது.

அதாவது தேவநாயகத்தின் மனைவியின் பெயரில் இருந்த காணியை, அவள் தேவநாயகத்துக்கு தெரியாமல் ஓடிட்டருக்கு விற்றுவிட்டாள். தற்போது அவளும், மகளும் கனடாவில் மகனுடன் இருக்கின்றனர். அவர்களது வெளிநாட்டு மோகம் தேவநாயகத்தை அநாதையாக்கி விடுகின்றது. உழைப்பை நம்பி வாழும் அவரது சகோதரியும், மச்சானும் இவரை அழைக்கின்றனர். அவர்களுடன் தேவநாயகம் புறப்படுவதாக கதை நிறைவடைகின்றது.

இன்று இவ்வாறான பல சம்பவங்கள் நிகழ்கின்றன. எல்லா விடயங்களும் இலக்கியத்தில் வெளிப்படுத்தப்படுவதில்லை. சமூக அவலங்கள் இவ்வாறு வெளிப்படுமானால் அதுவே சிறந்த சிறுகதைகளுக்கு உதாரணமாகும். திரு நீர்வை பொன்னையன் அவர்கள் இன்னும் பல நூல்களை வெளியிட வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

நூலின் பெயர் - நினைவுகள் அழிவதில்லை
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - நீர்வை பொன்னையன்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
விலை - 200 ரூபாய்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.