நூல் அறிமுகம்: ராஜாஜி ராஜகோபாலனின் "ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்" சில இரசனைக் குறிப்புக்கள்........

Saturday, 31 January 2015 19:52 - வேலணையூர்-தாஸ் - நூல் அறிமுகம்
Print

நூல் அறிமுகம்: ராஜாஜி ராஜகோபாலனின் "ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்" சில ரசனைக் குறிப்புக்கள்........ - வேலணையூர்-தாஸ் -ராஜாஜி ராஜகோபாலன் ஈழத்தில் இருந்த கனடாவுக்குச் சென்று அங்கு வசித்த வருபவர்.  அவருடைய படைப்பாக வளரி எழுத்துக்கூடம் வெளியிட்ட ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம் பற்றி சில குறிப்புக்கள் .  கவிதை என்பது உள்ளத்து உணர்வுகளை வெளிக்கொணரும் மொழியின் ஒரு அழகிய பகுதி . அந்தக்கவிதையை கையிலெடுத்த ராஜகோபாலன் ஈழத்து வாழ்வியலை அதன் பண்பாட்டம்சங்களை அழகிய கவிதைகளாக இத்தொகுதியில் தந்திருக்கிறார். "அம்மாமெத்தப் பசிக்கிறதே" என்ற கவிதை போர் முனையில் சிதைந்த ஒரு சிறுவனின் வாய்ப்பாடாக பின்வருமாறு வெளிப்படுகிறது "வானமே எங்கள் கூரையம்மா. வெண் மணலே எங்கள் கம்பளமாம். வேலிக்கு வெளியே வேறுலகம். வேதனை என்பதே நம்முலகம்.

"மரங்கள் என் நண்பர்கள்" என்ற கவிதை இயற்கையோடு இணைந்து இவர் கவி மனதை வெளிப்படுத்துகிறது. "ஒழுகும் நிழலின் அணைப்பில் அயர்வேன் .தழுவும் இதழ்களில் காதலில் கரைவேன் தேயும் மரங்களின் தியாகத்தை மதிப்பேன் .தாங்கும் தண்டினில் தந்தையை துதிப்பேன்." என தொடர்கிறது அக்கவிதை . "மங்கையராய் பிறப்பதற்கே" என்ற கவிதை பெண்ணடிமைத் தனத்தை யதார்த்தமாக எடுத்துரைக்கிறது. "மாவை அரைக்கிறாய் மாவாய் அரைபடுகிறாய் . உரலில் இடிக்கிறாய் உரலால் இடிபடுகிறாய். பகலில் முறிகிறாய் படுக்கையிலும் முறிகிறாய்." எனத் தொடர்கிறது அக்கவிதை .

"அரசடி வைரவர்" என்ற கவிதையில் இந்து மக்களுடைய ஒரு கிராமிய வழிபாட்டை பாடினாலும் ராஜகோபாலனுக்கே உரிய நக்கலும் நளினமும் சேர்ந்தநடை பல செய்திகளை சொல்லிப்போகிறது."நீ ஒரு பச்சைத்தண்ணி சாமி உ ன் கோயிலுக்கு கோபுரம் கட்டவில்லை என கோவித்திருப்பாயா! உனக்கு தேங்காய் அடிக்கும் கல்லையும் எவனோ திருடிச்சென்று சென்று விட்டான். புத்தருக்கும் உனக்கும் அரசமரத்தை விட்டால் ஒதுங்க இடமில்லையோ! உன் திண்ணையில் பரீட்சை நாட்களில் கற்புரம் எரித்த காலமும் போய்விட்டது."

 "விடுங்கோ ஆரோ வருகினம்" என்ற கவிதை யாழ்ப்பாணத்தமிழில் கிராமிய காதலை யதார்த்தத்தில் சொல்லுகின்ற ஓரழகிய கவிதை . நகைச்சுவை உணர்வு வெளிப்பட எழுதப்பட்டிருக்கும் இக்கவிதை படிப்பவர் மனதை அள்ளுகிறது. "எப்ப பார்த்தாலும் இழுக்கிறதும் இடுப்பில கைய வைக்கிறதும் இதான் உங்கட விருப்பம் என்டா இப்பவே சொல்லுங்கோ நான் போறன் . ஊருக்கு பயந்தால் உங்களுக்கு என்னட்டை வரவே உரிமையில்லை ஆருக்கு விடுறியள் விடுகையெல்லாம் உங்கடை ஆக்களைப் பற்றி நானறிவன்" இவ்வாறு கிராமிய மொழியும் காதலின் உண்மையும் கலந் து சொற்தேனாறாக ஓடுகிறது.

 "கவிதை பயிலாத பாடங்கள்" எனும் கவிதையில் தமிழரின் வாழ்வியல் நிலமையை அவர்களின் கடந்த காலத்தை அக விமர்சனம் செய்வதாக அமைகிறது. "மேகங்களே மொழியுங்கள் விடுதலையை எப்படி வெற்றி கொள்ளலாமென்று விலங்கொடிக்க தெரியாத வீணர்களானோம். இணைந்து வாழத்தெரியாத அற்பர்களானோம். எமக்குள்ளே ஒற்றுமைக்கு நாமே எதிரியானோம் ஒன்றாய் வாழ்தல் எப்படியென்று ஒழி க்காமல் சொல்லுங்கள்." "யாரடி அம்மா ராசாவே" எனும் கவிதையும் தமிழரின் கடந்த கால வாழ்வியல் துயரின் ஒரு சுட்டுவதாக அமைகிறது. தன் கணவன் காணாமல் போக காத்திருக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை சொல்கிறது இக்கவிதை . "எத்தனை பெண்கள் கற்பிழந்தார் எத்தனை கணவர் உயிரிழந்தார். எத்தனை இளைஞர் தலைமறைந்தார் எத்தனை வேதனை நீ இழைத்தாய் அறிவாய் மன்னா அரசு பிழைத்தாய் அறமே உனக்கு கூற்றாகும்" என முடிகிறது. அக்கவிதை

பருத்தித்துறை வடை போல சுவைக்கிறது இவரது வடைபற்றிய  கவிதை "உள்ளங்கையில் மாவானாய் அடுப்பிலே கொதிக்கும் நெய்யில் பொன்னானாய் பருப்புக்களை நொருக்கும் போது பாகானாய் பல்லிடுக்கில் புகுந்து கொண்டால் நோவானாய்."

 "ஓர் கார் வாங்கப்போனேன்" என்ற கவிதை காரை பெண்ணாக உருவகித்து எழுதப்பட்ட கவிதை . பெண்மையின் லாவகத்திற்கேற்ப ராஜகோபாலனின் தமிழும் இங்கே வளைகிறது. "அவள் உடலின் நெழிவுகள் மேடுகள் மிதப்புக்கள் கைக்குட்டையை எடுத்து அவளைத் துடைப்பதில் வரும் இதம் இருக்கையில் இருந்து அவள் மேல் தலைசாய்க்கும் போது உடம்பெல்லாம் ஊரும் சுகம்" என்ற வரிகள் நோக்கத்தக்கது.

"மரங்களை நேசிப்போம்" நல்லதோர் சமூக உணர்வுள்ள ஒரு கவிதை "நீ நடும் ஒவ்வொரு மரத்திற்கும் உன் சந்ததி நாளைக்கு நன்றி சொல்லும்" என்று கூறுகின்ற ராஜகோபாலன் "எல்லாருக்கும் பயனுள்ளவனாக நீஇருக்க வேண்டுமென விரும்பினால் அடுத்த பிறப்பில் மரமாக பிறந்து விடு"

இவ்வாறு இலக்கிய நயமும் சமூக நீதிக்கருத்துக்களும் கொண்ட வழிப்போக்கனின் வாக்குமூலம் தமிழ்க்கவிதை உலகில் ஓர் பயனுள்ள வரவு.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 31 January 2015 19:59