தமிழ்நதியின் பார்த்தீனியம்

Wednesday, 21 March 2018 18:23 - நடேசன் (ஆஸ்திரேலியா) - நூல் அறிமுகம்
Print

தமிழ்நதியின் பார்த்தீனியம்தமிழ்நதிஇரண்டு விதமான எழுத்தாளர்கள் உண்டு. ஒருவகையினர் நரிகள் மாதிரி அவர்களுக்கு முழுக்காடும் பாதுகாப்பை அளிக்கும். எங்கும் நுளைந்து வருவார்கள். மற்றவர்கள் முள்ளம்பன்றிபோல். அவர்களது பாதுகாப்பு அவர்களது முட்கள் மட்டுமே. ஆனால் அது வலிமையாகவிருக்கும். இந்த உதாரணம் ஈழத்து மற்றும் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொதுவானது. பெரும்பாலானவர்களது பேசுபொருள் ஈழப்போராட்டமே.போர் முடிந்தாலும் இந்த போர் நிழலாகத் தொடர்ந்து வருகிறது. போரைவைத்து சிறப்பாக பலர் இலக்கியம் படைத்திருக்கிறார்கள். நெப்போலியனது படையெடுப்பு நடந்து நூறு வருடங்கள் பின்பாகவே டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் எழுதப்பட்டது. இதனால் இன்னமும் தொண்ணுறு வருடங்களுக்கு போர்காலத்தை நம்மவர் எழுதக்கூடும். இலங்கைப்போரால் ஈழத்தமிழர்கள் களைத்து சோர்ந்தாலும் சினிமாவில் மட்டும் போரைப் பார்த்த தமிழகத்து உறவுகளுக்கு ஈழப்போராட்டம், திருநெல்வேலி அல்வா மாதிரி. சில செவ்விகளையும் கட்டுரைகளையும் பார்த்தபின் ஈழப் போராட்டம் முடிந்ததே தெரியாமல் தமிழக சஞ்சிகையாளர்கள் உள்ளார்களா என எனக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. சமீபத்தில் நான் படித்த தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் 500 பக்கங்கள் கொண்டது. படிக்கும்போது தொடர்சியாக வாசிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. அதில் உள்ள சம்பவங்கள் விடுதலைப்புலி இயகத்தினரால் நடத்தப்பட்ட உண்மையான சம்பவங்களாக இருந்ததே அதன் காரணம். சம்பவங்கள் நாவலாசிரியரால் நகர்த்தப்படாது, விடுதலைப்புலித்தலைவர் பிரபாகரனால் நாவலில் நடத்தப்படுகிறது. கிரேக்க மொழி அறிவு மட்டுமல்ல, படிப்பே இல்லாத மத்தியூவிற்கு புதிய விவிலியத்தை எழுதும்போது துணை நின்ற தேவதை போன்று விடுதலைப்புலிகள் தமிழ்நதிக்கு துணை நிற்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் முகாம்கள் இந்தியாவில் இருந்தபோது கேள்விப்பட்டவை. அதை நிர்வகித்தவர்களில் முக்கியமாக பொன்னம்மான், ராதா என்பவர்கள் என் கல்லூரித்தோழர்கள். அவர்களைப் பல முறை இந்தியாவில் சந்தித்ததால் அவர்கள் பற்றிய விடயங்கள் வாசிப்பதற்கு சுவையாக இருந்தது. பின்பகுதிகள் இந்திய சமாதானப்படையினரால் நடந்த விடயங்கள்.அறிந்தவை. நமது நாட்டுச் செய்திகள் தொகுக்கப்பட்ட கதை என்பதால் சுவாரசியமாக வாசிக்க முடிந்தது.உண்மையான சம்பவத்தில் பாத்திரங்களை நடமாடவிட்டிருப்பது வாசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அந்தவிதத்தில் தமிழ்நதியின் மொழி ஆளுமையும் நன்றாக உள்ளது. ஒரு விதத்தில் தமிழ் காட்டாறாக ஓடுகிறது. பாரத்தீனியத்தில் குறைகள் இருந்தாலும் நாம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம். பொதுவான அபிப்பிராயத்தின் அப்பால் நாவலை உட்புகுந்து பார்ப்போம்

பார்த்தீனியம்- அரசியல்
விடுதலைப்புலிகள் சார்பாக எழுதியவர்கள் குறைவாகவே உள்ளனர். தமிழினி, வெற்றிசெல்வி மற்றும் சாத்திரி போன்றவர்களின் நூல்களை படித்தபோது அவர்கள் ஒருவரும் விடுதலைபுலிகளைப் பாராட்டவில்லை. அவர்கள் இறுதிவரையும் உள்ளிருந்து நுனிக்கரும்பையும் ருசித்ததால் அவர்கள் தங்களது எழுத்தை உள்ளக்கிடக்கையை வெளிக்கொணரும் கதாற்றிக் ( Cathartic) எழுத்தாக வைக்கிறார்கள். ஆனால் தமிழ்நதி தனது எழுத்தில் புறநானூறு பாடியிருக்கிறார்.

“எழுபத்திரண்டு மணிகள் கழிந்தன . இரண்டு வாரங்கள் உதிர்ந்தன. மாதங்கள் மறைந்தோடின. சண்டை நிற்கவில்லை. சாறங்கட்டிய பையன்கள் எனக்கேலி செய்யப்பட்டவர்கள் நிலத்தைப்பிளந்துகொண்டு வந்து வெடித்தார்கள் கரும்பச்சை வலையால் மூடப்பட்ட இரும்புத்தொப்பிகள் தெருக்களில் இரத்தம் தோய்ந்து கிடந்தன.”

மேலே உள்ள பந்தி கதாபாத்திரத்தின் வார்த்தையோ அல்லது எண்ணமோ அல்ல. கதை சொல்லியவரின் கூற்று. மற்ற இயக்கங்களை விடுலைப்புலிகள் கொன்ற இடங்களை நல்லவேளையாக தலையாலங்கானத்தில் செருவென்ற நெடுசெழியனின் வேள்விக்கு உயர்த்தவில்லை என்பது நெஞ்சுக்கு ஆறுதலே. விடுதலைப்புலிகளது பக்கத்திற்கு சார்பாக நாவலை நகர்த்திய விதம் எனக்குப் பிடித்திருந்தது. அவர்களது குறைகளை தவிர்த்து இந்திய இராணுவத்தின் கொடுமைகளை வெளிப்படுத்தியதில் மிகவும் சிறந்த வக்கீலின் திறமை தெரிந்தது. இந்தளவு திறமையாக விடுதலைப்புலிகளை ஆதரித்து எழுதியவர்களை நான் 2009 முன்னரோ பின்னரோ பார்க்கவில்லை

இந்திய இராணுவம் வன்கொடுமை செய்வதற்காகவே திட்டமிட்டு வடக்கு கிழக்கில் வந்து இறங்கினார்கள் என்ற எண்ணம் வாசிக்கும்போது மனத்தில் உருவாகிறது. வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களை தத்துரூபமாக உருவாக்கியதன் மூலம் இந்திய இராணுவத்தினரை மட்டுமல்ல அவர்களை அங்கு அனுப்பிய அரசியல் தலைவரைக்கூட கொலைசெய்வது நியாயமென்று வாசகர்கள் சிந்திக்கும் நிலையை உருவாக்குவது மிகத்திறமானது.

கடலைஎண்ணை மணம், பார்த்தீனியம் எனச் சொற்கள் குறியீடுகளாக பாவித்தது-மதத்தை பிரசாரம் செய்ய குருசை துணைக்கெடுத்த மதப்பிரசாரகர்களின் உத்தி போன்ற ஒரு திறமையான விடயம். முழுப்புத்தகமும் ஒரு விதத்தில் சீசர் கொலை செய்யப்பட்டபோது ரோம மக்களைத் தன்பக்கம் திருப்ப மார்க் அண்டனியின் பேச்சாகத் தெரிந்தது.

விடுதலைபுலிகள் இந்திய இராணுவத்தோடு பிணக்கிடும் சம்பவங்கள், இலங்கை அரசோடு தேனிலவு கொண்டாடி ஆயுதம் பெறுதல், கந்தன் கருணைப் படுகொலை, அநுராதபுரப்படுகொலை என்பன வரலாற்றில் இல்லையா? புனைவு எழுத்தாளர் தடைகளைத் தாண்டிப் பாய்வது போல் சில விடயங்களை புறந்தள்ளுவது அவரது உரிமை. ஆனால் வரலாற்றைத் திரிப்பது அறமற்ற விடயம்.

ஏற்கனவே நான் எழுதியது பார்த்தீனியம் வெளிவருமுன்பாக https://noelnadesan.com/2014/12/23/வெளிநாட்டுத்-தமிழர்களின/

“அப்பொழுது ஏற்கனவே இயக்கங்களிடையே உரசல் தொடங்கிவிட்டது. ஏற்கனவே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இயக்கத்தில் இருந்த ஒருவரை வவுனியாவில் விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்றிருந்த தகவல் எனக்கு தெரிந்திருந்ததால் ‘நரேன் அது சரி நீங்கள் எல்லாம் ஓன்றாக சேர்ந்து இருக்கிறீர்கள் மேலும் ஈழவிடுதலை என்ற நோக்கம் பொதுவானது என்கிறீர்கள் ஏன் வவுனியவில் ஈபிஆர் எல் எவ் காரரை சுட்டீர்கள்’என்றபோது நரேன் என்னைப்பார்த்து புன்னகைத்தபடி சொன்னான் ‘தம்பி சொன்னதால் சுட்டோம்’

எனக்கு அதிர்ச்சியால் உடல் குலுங்கியது. ஒரு கணம் எதுவும் கண்ணுக்குத் தெரிய மறுத்தது. மனிதர்களது கொலைகளை இவ்வளவு எளிதாக எடுக்கும் மனிதனாக இவன் எப்போது மாறினான்? பாடசாலைக்காலத்தில் மடிப்பு குலையாத சேட்டை முழங்கைக்கு சிறிது கீழே மடித்து விட்டு கிரிக்கட் – உதைப்பந்தாட்டம் எல்லாம் விளையாடியபடி இந்துக்கல்லூரியில் பல மாணவர்களுக்கு ஹீரோவாக இருந்தவன், இப்படியான வார்த்தையை எப்படி உதிர்த்தான்? இவன் என்னோடு பல வருடங்கள் படித்தவன். நண்பனாக இல்லாமல் இருந்தாலும் ஒரே ஒழுங்கையில் பல வருடங்கள் இருந்தவன். குறைந்த பட்சம் கொலையை நியாயப்படுத்தியிருக்கலாம். கொலை செய்யப்பட்டவன் சமூகவிரோதி அது இது என்று வழமையான காரணத்தை சொல்லியிருக்கலாம்.

நடைப்பிணமாக வங்கியுள்ளே சென்று பணத்தை மாற்றி கொடுத்து விட்டேன். அதன் பின்பு எதுவும் பேச மனமில்லை. அப்பொழுது நினைத்தேன் எமது சமூகம் நஞ்சுண்ட சிவனாகி விட்டது என்று. தொண்டையுடன் ஆலகால விஷத்தை தடுத்து நிறுத்த உமாதேவி அங்கிருந்தார் இங்கு யாருமில்லையென— ”

மேலே சொல்லப்பட்ட சம்பவம் நடந்தது, லெபனானில் பயிற்றப்பட்டு வவுனியாவில் கொலை செய்யப்பட்ட ஈபிஆர் எல் எவ் றீகன், மாத்தையாவால் மட்டுமே கொலைசெய்பட்டார். அதைத்தடுக்க கிட்டு பலமாக முயற்சித்தார். அத்துடன் பிரபாகரனுக்கு எதுவித சம்பந்தமுமில்லை என்ற சங்கதி பேசாப்பொருளாக பார்த்தீனியத்தில் வருகிறது. யோகி என்ற நரேன் என்னிடம் சொன்னது பொய்யா? கிட்டுவோ அல்லது பிரபாகரனோ இதைப்பற்றித் தமிழ்நதியிடம் கூறினார்களா? பல இடங்களில் மாத்தையா தவறானவராக காட்டப்படுவது அவரது பிற்காலக் கொலையை நியாயப்படுத்தும் நடவடிக்கைபோலத் தெரிகிறது. வரலாற்றை எழுதுபவர், அன்ரன் பாலசிங்கமாக சமாதிகளுக்கு வர்ணமடிக்கும் தொழிலில் இறங்கவேண்டுமா?

இதை விட இன்னமும் ஒன்று, ரெலோவில் உள்ள அண்ணனைக் கொலை செய்தபோது தம்பி அதைப்பார்த்து ஜன்னி வந்து மூளை குழம்பியவன் வைத்தியசாலைப் படுக்கையில் அலறியபடி இதுவரையில் இயக்கங்களால் கொலை செய்யப்பட்டவர்களை எண்ணிப்பார்க்கிறான். அதைவிட மோசமான கற்பனை ரெலோ தனது வடமராட்சி தளபதி தாசைக் கொன்றது சரியா என்று என அவனது அக உணர்வில் கேட்பது. இதைவிட கிளைமாக்ஸ்- அவனது ஜன்னிவந்த அகம் – ‘இது நீயா நானா என்ற போட்டியல்ல நாங்கள் அவங்களை அழிக்காவிடில் அவங்கள் எங்களை அழிப்பார்கள்’ ‘ என்று கொலை செய்யப்பட்டவன் தம்பி அரற்றுவது. தமிழ்நதியின் சிந்தனைகள் பாத்திரத்தின் தலைக்குள் புகுந்து வரலாம். அது எழுத்தின் உத்தி. ஆனால் நம்பும்படியாகப் பாத்திரத்தில் வரவேண்டும். அண்ணனை இழந்தவன் பழிவாங்கும் சிந்தனையில் இருப்பதோ குறைந்தபட்சம் கோபத்தில் இருப்பதோ நம்பமுடியும். ஆனால் அண்ணனைக் கொலை செய்ததால் அதிர்ந்து மூளை குழம்பியவன், இப்படி புலிசார்பாக சிந்திப்பான் என்பது நம்பமுடியாது. நாவல் இலக்கியம் என்பது யதார்த்தம் மற்றும் நம்பகத்தன்மை கொண்டிருப்பதே.

பார்த்தீனியம்- நாவல் இலக்கியம்.

வரலாற்று நாவலாக எடுத்துப்பார்க்கும்போது – குறைந்தது 25 அல்லது 50 வருட முந்திய நிகழ்வு – வரலாறுகளை உள்வாங்கி அதன்மீது பாத்திரங்களை உலாவவிடுவதே நடைமுறை. நடந்த வரலாற்றில் இருந்து பாத்திரங்கள் ஒன்றோ, இரண்டு புதிய கதையை நமக்கு சொல்லவேண்டும். இதை ஆங்கிலத்தில் பிறேம் நரேற்ரிவ் என்பார்கள் (Frame Narrative)

அப்படியில்லாமல் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் அடிக்கடி வரும்போது அதுவே வரலாறாகி விடுகிறது. அங்கு நாவலாசிரியர் அரைவாசி தொலைந்து விடுகிறார். வரலாற்று நிகழ்சியின் தொகுப்பென எடுத்தால் முக்கியமானது வரலாற்றை எழுதும்போது சம்பவங்கள் பாரபட்சமற்று வந்தாலே அது வரலாறாகும். வரலாற்றை எழுதுவது மிகவும் கடினமான விடயம்.

பார்த்தீனியம் நாவலில் ஓரிரு சம்பவங்களை மட்டும் வைத்து கதாபாத்திரங்களால் கதைசொல்லப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இங்கு 83 இல் இருந்து 90 ஆண்டுவரையில் வடக்கில் நடந்த சம்பவங்கள் எல்லாம் வரிசையாகும்போது நாவலாசிரியர், நமது டி பி ஸ் ஜெயராஜ் ஆகிறார். ஆனால் டி பி ஸ் ஜெயராஜ் தொடர்ச்சியாக எமக்கு இருபக்க வரலாற்றைத்தந்தவர்.

வரலாறு என்பது தேய்ந்த குறுந்தட்டல்ல விட்டு விட்டு பாடல் ஒலிபரப்ப?

அரசன் இறந்தான். பின்பு அவனது ராணி இறந்தாள் என்பது இரு சம்பவம். ஆனால் அரசன் இறந்தான் அந்தக் கவலையில் ராணி இறந்தாள் என்னும்போது இறப்பிற்கான காரணம் தெரிகிறது. காரணமே கதைகளின் சம்பவத்திற்கு உருக்கொடுத்து சிறந்த இலக்கியமாகிறது. சம்பவங்களின் காரணங்கள் வரலாற்று நாவலில் முக்கியமானவை. இந்தியப் படையுடன் விடுதலைப்புலிகள் மோதிய காரணமோ, மற்ற இயக்கங்களை அழித்த காரணமோ மருந்துக்கு கூட நாவலில் இல்லாததால் சம்பவங்களின் தொகுப்பாகத் தெரிகிறது. அதாவது இலக்கிய உதாரணத்தில் அரசன் இறந்தான் பின்பு ராணி இறந்தாள் என்று.

பாத்திரங்களது சம்பாசணைகள், அவர்களது நினைவுகளைக் கற்பனையாக எடுத்துப் பாத்திரங்களைப் பார்த்தாலும் குறைகள் தெரிகிறது. காதலியை நிராகரித்து, இயக்கத்திலிருந்து துண்டு கொடுத்துவிட்டு விலகும் பரணி, மீண்டும் காதலியை அழைப்பதும் யதார்த்தமானதாகவில்லை. அதற்குத் அக புறக்காரணிகள் தேவையான அளவு வைக்கப்படவில்லை.

வானதியின் பாத்திரம் அழுத்தமாக விழுகிறது. ஆனாலும் காதலித்தவன் இயக்கத்தில் இருந்து வெளிவரும்போது நிராகரித்ததின் காரணம் போதாமல் தெரிகிறது.

ஜீவாநந்தம் என்ற ஒரு பாத்திரமாவது நாவலில் மாளிகையில் எலியோடுவது போன்று மனச்சாட்சியின் குரலாக இருப்பது ஆறுதலான விடயம். வானதியின் பெற்றோர் அருமைநாயகம், தனபாக்கியம் யதார்த்தமான பாத்திரப்படைப்பு.

நாவலின் மொழி
இந்த நாவலில் நான் சுவைத்தது செறிவான தமிழை. அதற்காக பல இடங்களில் நிறுத்தி வாசித்தேன். இது மழையைப் பற்றிய பகுதி அழகான வர்ணனை கல்கியை நினைவுக்கு கொண்டு வந்தது.

“மூன்று நாட்களாக இடைவிடாத மழை. ஊரையே கரைத்துவிட உன்மத்தம்கொண்டதுபோல சில சமயம் அடித்துப் பொழிந்தது. சிலசமயம் அரற்றுவதுபோல் மசமசவெனத் தூறியது. அப்படி வேகம் குறைந்த பொழுதுகளும் அடுத்த பெருமழைக்கான முன்னெடுப்புகளாகத் தோன்றின. வான்முகட்டுக்குள் உறுத்தலோடு உலாத்திக்கொண்டிருந்தது. இடி, இருந்தால்போலொரு கணத்தில் ஆங்காரம்பொங்க தலைக்குமேல் தடதடவென்றொடியது. மின்னல், வெள்ளிச்சாட்டையாக வானத்தைத் சொடுக்கியது. ”

எனக்குப் பிடித்த சில சொல்லாடல்கள்
பக்கம் 22 கடவுளாலும் கைவிடப்பட்டதுகள்.
பக்கம் 66 அறளை பேந்த வானொலி எந்த நேரமும் பெருங்குரலெடுத்து பாடிக்கொண்டிருக்கும்.
பக்கம் 154 வெக்கை குடித்த மயக்கத்தில் சுருண்டு கிடந்தன இலைகள்.
“பரணியின் கண்களை பார்த்து அவளால் கதைக்க முடியவில்லை. இரவில் வெட்கம் கரைந்து போகிறது . பகலில் கண்கூசப் பண்ணுகிறது ”

சில நேரத்தில், சில இடங்களில் தேவைக்கு அதிகமான வசனங்கள் மற்றும் இடங்களில் ஆடம்பரமான வைரமுத்துப்பாணி -(Purple prose)
இவைகளுக்கப்பால் மொழி இலகுவாக தமிழ், தமிழ்நதியோடு விளையாடுகிறது.

சில விடயங்கள் முக்கியமற்றவை. கூர்ந்து படித்தபோது கண்ணில்பட்டது- அடுத்த பதிப்பில் திருத்தமுடியும்.

“கடுகி விரைந்து சென்றாள்”
கடுகி என்பதும் விரைந்து என்பதும் ஒரே கருத்தை அளிப்பன

பக்கம் 18 கேப்பை மாட்டின் திமில் ”
கேப்பை மாடென்பது பிரித்தானியர் காலத்தில் தென்ஆபிரிக்காவின் கேப் டவுனை சுற்றி வந்த கப்பல்களில் வந்த மேற்கத்தய மாடுகள் (bos taurus breeds). திமில் இருப்பது இந்திய அல்லது சூட்டுப்பிரதேச(Bos Indicus)மாடுகள்

கீதபொன்கலன் எழுதிய கடிதத்தில் ‘அன்புள்ள தனஞ்சயன் எனத்தொடங்கி இறுதியில் பிரியமுடன் தனஞ்சயன் என முடிகிறது.

முடிவாக
அரசியலை வைத்து இலக்கியம் எழுதுவது இலகுவான விடயமல்ல. அத்துடன் அரசியல் நீரோட்டங்கள் மாறும்போது அவை புறக்கணிக்கப்படும். அதுவே தற்பொழுது சோசலிச சார்பு இலக்கியங்களுக்கு நடக்கிறது. திறமையான எழுத்தாளராகிய எஸ்.பொ ஈழத்தேசியத்திற்கு முண்டுகொடுக்க எழுதிய மாயினியே பேசுவாரற்று மூலைக்குச் சென்றுவிட்டது.

புலிமயக்கத்தில் தனக்குத் தெரிந்ததை எல்லாம் நாவலில் கொண்டுவர நினைத்ததால் ஏற்பட்ட குறைபாடே நான் கூறியவை. இலக்கியமென்பது குழப்பமான வாழ்க்கையில் இருந்து தீர்க்கமான ஒன்றை உருவாக்குவது. அதாவது கரடுமுரடான கல்லில் இருந்து அழகான சிலையை செதுக்குவது.

என்னைப்பொறுத்தவரையில் பார்த்தீனியம் நல்ல புத்தக எடிட்டரால் பார்க்கப்பட்டு பக்கங்கள் குறைத்து முடிவிலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் 250 பக்கத்தில் சிறந்த நாவலாக வந்திருப்பதற்கான சகல தன்மைகளும் கொண்டது.

தமிழ்நதிக்கு எதிர்காலத்தில் நல்லதொரு நாவலை எழுதுவதற்கான சகல தன்மைகளும் இருப்பதை பார்த்தீனியம் உறுதிப்படுத்துகிறது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 30 September 2019 23:52