- முனைவர் பி.ஜோன்சன் -நூல்:  பிம்பச் சிறை - எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்
எழுத்தியவர்:  எம்.எஸ்.எஸ். பாண்டியன் (பூ.கொ. சரவணன்)

தமிழகத்தின் மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் அஇஅதிமுக-வினை நிறுவிய எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய நூலே இது. The Image Trap: M G Ramachandran in Flims and Politics என்ற ஆங்கில நூலினைத் தமிழில் பூ.கொ. சரவணன் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலின் முற்பகுதி எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கையையும், அதன்மூலம் மக்களின் மனங்களில் அவர் எவ்வாறு பதிவானார் என்பதையும் காட்டுகிறது. பிற்பகுதியில் அவரின் அரசியல் பயணமும்,, அதிகார வர்க்கத்தின் தலைமையாக இருந்தும், மக்களின் பொதுபுத்தியில் ஏழைகளின் பங்காளனாக அவர் எவ்வாறு பரிணமித்தார் என்ற செய்தியும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. சாதிய ஒடுக்கத்திற்கு ஆளான மக்களின் வாழ்க்கையை நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய போக்கு, பிற்காலத்தில் திரைக்காவியங்களாக உருமாற்றம் பெறத்தொடங்கியது. அதில் வரும் கதைத்தலைவனான எம்.ஜி.ஆர். அவரின் உடைகளிலும், தான் ஏற்கும் பாத்திரங்களிலும் அதற்கேற்றாற்போல் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். அவர் நடித்த பல திரைப்படங்களில், விவசாயி, தொழிலாளி, ஓட்டுநர், மீனவர், படித்த கிராமத்து ஏழை என இது போன்ற அடித்தட்டு மக்களின் மனங்கவர்ந்தவராகக் காட்சிப்படுத்தப்பட்டார். அவ்வாறு திரைக்கதை அமையவில்லை எனில், தானே அதனை அவ்வாறாக மாற்றியும் அமைத்துள்ளமையும் நோக்கத்தக்கது. பாடல்களின் மூலமும் தன்னுடைய எண்ணங்களை வெளிக்கொணர்ந்தவர். தன்னுடைய உடல் கவர்ச்சியையும், தன்னுடைய பிம்பத்தைக் கட்டமைக்கவும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். இவைபோன்ற பலவும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன (சில ஆய்வுகள் வெளிவராமல் கூட போயிருக்கின்றன).

திரையில் இவரின் பங்களிப்பை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய திமுக அதனை வைத்தே தன்னுடைய தேர்தல் பணிகளைக் கவனிக்கத் தொடங்கியது. இவருக்காகவே சில கதைகள் எழுதப்பட்டன. இவருடைய பல்வேறு படங்களில் திமுக-வினுடைய கொடியும், சின்னமும் காட்டப்பட்டன. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அஇஅதிமுக என்ற கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்ததும் திரைத்துறையின் மூலமே என்பது நினைவுகூரத்தக்கது. அரசின் எந்தவொரு திட்டமும் தொடங்கும்போது, அது ஏன் தொடங்கப்பட இருக்கிறது என்பதைத் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மூலம் மக்களிடம் தெரிவிப்பது அவருடைய நடைமுறையாக இருந்தது (எடுத்துக் காட்டு: சத்துணவுத் திட்டம்).

எம்.ஜி.ஆர் ஓர் அழிக்க முடியாத ஓர் அழியாத சக்தி எனத் தமிழக அடித்தட்டு மக்கள் நம்பவைக்கப்பட்டனர். அவருக்காகப் பல்வேறு இடங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டன. இவருடைய திரைத்துறையின் சாதனையைப் பயன்படுத்தி வெற்றிகண்ட திமுக அதனை உடைக்க எடுத்த முயற்சிகள் ஏராளம். எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஏராளமான கட்டுக்கதைகள் புற்றீசல்கள்போல் கிளம்பின. அனைத்தும் அவரைப் பற்றிய புகழுரைகள் என்பது நோக்கத்தக்கது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், திரைப்படங்களில் அவர் தோன்றி பேசும் வசனங்களையும் மக்கள் ஒன்றாக வைத்து எண்ண மறந்து (மறுத்தும்) விட்டார்கள். அவர்களின் பொதுபுத்தியில் இருந்தவை அனைத்தும் அவருடைய திரைக்காவியங்களே.

தமிழக மக்களின் மனநிலையையும், அதனைப் பயன் துய்த்துக் கொண்ட கதை நாயகனையும் பற்றிய விளக்க நூலாகவே இது அமைகிறது. இறுதியாக, “எம்.ஜி.ஆர். நாற்பது ஆண்டுகாலம் தமிழ்ச் சினிமாவை ஆண்டார். பத்து ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்” என்று பாரதி கிருஷ்ணகுமார் பேசியதாகப் பதிவு உள்ளது. அது எவ்வளவு உண்மை என்பது இந்நூலினைப் படித்தால் உணர்ந்துகொள்ள முடியும். இதன் மூலம் திரைப்பிம்பம் கட்டுடைக்கப்படும் என்பது நிதர்சனம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.