நூல் அறிமுகம்: ஆழி பதிப்பகத்தின் 'மரணத்தில் துளிர்க்கும் கனவு' - கவிதைத் தொகுதி பற்றி...

Saturday, 14 January 2012 20:47 - கவிஞர் தீபச்செல்வன் - நூல் அறிமுகம்
Print

முள்ளிவாய்க்கால் என்ற மரண நிலத்தையும் நந்திக்கடல் என்ற மரணக் கடலையும் ஈழத் தமிழினம் மறந்துவிட இயலாது என்று மரணத்தில் துளிர்க்கும் கனவு கவிதை புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.கவிஞர் தீபச்செல்வன்முள்ளிவாய்க்கால் என்ற மரண நிலத்தையும் நந்திக்கடல் என்ற மரணக் கடலையும் ஈழத் தமிழினம் மறந்துவிட இயலாது என்று மரணத்தில் துளிர்க்கும் கனவு கவிதை புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். வரலாற்றின் தொடர்ச்சியாக தொடர்ந்து வாழ்தலுக்காக நீதியையும் அநீதியையும் பதிவு செய்வதற்காக போரையும் குற்றத்தையும் எடுத்தியம்புவதற்காக வெற்றியையும் வீழ்ச்சியையும் விவாதிப்பதற்காக ஈழத்தின் போர் இலக்கியம் தொகுப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஆழி பதிப்பகம் ஈழத்தை சேர்ந்த எட்டு சமகால கவிஞர்களின் கவிதைகளை மரணத்தில் துளிர்க்கும் கனவு என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளது. வருடம் தோறும் தமிழகத்தில் இடம்பெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சி வரிசையில் இந்த ஆண்டு நடைபெறும் 35ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை தொகுத்துள்ள ஈழக் கவிஞர் தீபச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிட்டவை வருமாறு: ஈழத் தமிழினம் வரலாறு காணாத அழிவை சந்தித்திருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் அரசியலையும் வாழ்வையும் பொறுத்தளவில் பெரும் வீழ்ச்சியாக இப்போர் முடிந்திருக்கிறது. அழிவு என்ற பேரிலக்குடன் இந்தப் போர் நடத்தப்பட்டது. இந்தக் காலத்தில் ஈழத் தமிழினம் பேரழிவுக்கு முகம் கொடுத்திருக்கிறது என்பது தாங்க முடியாத மகா துயரம்.

போர் பல்வேறு நோக்கங்களை உடையது. அது அரசியல், பண்பாடு, வரலாறு, இனம், மொழி என்று எல்லா கூறுகளிலும் தாக்குகிறது. ஒரு முக்கியமான வரலாற்றுக் கால கட்டத்தில் வாழ வேண்டிய நிர்பந்தமும் தேவையும் இருக்கிற தமிழ் பேசும் மக்களின் இன்றைய காலத்தை நாம் கடந்து செல்ல வேண்டும்.

இதனால் வார்த்தைகள் நம்பிகையை அளிக்க வேண்டிய பொறுப்பை வகிக்கின்றன. நடந்த துயரங்களைக் குறித்து உரையாடவும் பதிவு செய்ய வேண்டிய கடமையும் இருக்கின்றன. ஈழப்போராட்ட இலக்கியங்களில் போராட்டத்தையும் வாழும் கனவையும் கூர்மையாக்க வேண்டிய படைப்புக்களே இன்று நமக்குத் தேவைப்படுகின்றன.

இப்போர் வாழும் இனத்தை மாத்திரம் அழிக்கவில்லை. இந்த இனத்தின் ஈழ நிலத்தின் பல தலைமுறைகளை அழித்திருக்கிறது. தலைமுறைகளைக் கடந்து பல வகையில் தாக்கம் செலுத்துகிறது. இந்தப் பெரும் அழிவை உலகம் பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த துயரத்தை தடுக்க முடியாமல் சுற்றி அரசியல் மற்றும் அதிகார வேலியிடப்பட்டிருந்தது. இப்போர் மற்றும் அதன் துயரம் இன்னும் எழுதப்படாத கவிதைகள். அவை போர் மக்களின் சாட்சியாக எழுதப்பட வேண்டியவை.

இந்தப் போர் எங்கள் மக்களை, எங்கள் கவிஞர்களை குரல் அற்றவர்களாக்கியிருக்கிறது. கவிதைகளை அழித்திருக்கிறது. இலக்கியங்களை இல்லாமல் செய்திருக்கிறது. இவைகள் ஒரு சில கவிஞர்களிடம் மட்டும் உள்ள கவிதைகள். இவைகள் ஒரு சில கவிஞர்கள் மட்டும் எழுதிய கவிதைகள்.

இப்போர் பற்றி முழுமையான கவிதைகளும் முழுமையான இலக்கியமும் தொகுக்கப்பட வேண்டும். இந்தப் போர் சரித்திரத்தில் முக்கியமானது. வாசிக்கப்படவும் ஆராயப்படவும் வேண்டியது. அதனூடாக ஈழ மக்களின் வாழ்வை வரலாற்றை நகர்த்த வேண்டியுள்ளது.

வரலாற்றின் தொடர்ச்சியாக தொடர்ந்து வாழ்தலுக்காக நீதியையும் அநீதியையும் பதிவு செய்வதற்காக போரையும் குற்றத்தையும் எடுத்தியம்புவதற்காக வெற்றியையும் வீழ்ச்சியையும் விவாதிப்பதற்காக இந்தப் போர் இலக்கியம் தொகுப்பட வேண்டும். ஈழ இலக்கியம் வெறும் கண்ணீர்ப் பிரதிகள் அல்ல. வெறும் இரத்தப் பிரதிகள் அல்ல.

லட்சம் உயிர்கள் அசையும் பிரதிகள். வாழ்வை வாழ விரும்பும் சனங்களின் ஏக்கங்கள். அவர்கள் சொல்ல விரும்பிய கதைகள். அவர்கள் சொல்லாது சென்ற கதைகள். ஈழ மக்களின் வாழ்வு. அந்த வாழ்க்கை பல்வேறு கோணங்களில் காண விரும்பும் கனவுகள். ஈழ நிலத்தில் இந்த ஏக்கமும் கனவும் நெடியதாய் விளைந்திருக்கிறது.

எண்பதுகளில் ஈழத்து கவிஞர்கள் பதினொருபேர் எழுதிய மரணத்துள் வாழ்வோம் என்ற கவிதைத் தொகுப்பு வெளியானது. அதன் பிறகு ஈழத்து கவிஞர்களின் பல்வேறு தொகுப்புக்கள் வெளிவந்து விட்டன. எண்பதுகளில் மரணத்தில் வாழ்ந்து கொண்டு எழுதப்பட்ட இந்தக் கவிதைகளுக்கும் இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளுக்கும் இடையில் சுமார் மூன்று தசாப்த்தங்கள் கிழிந்திருக்கின்றன. முப்பது ஆண்டுகள் ஆகிப்போயிருக்கின்றன. இப்பெரும் கால கட்டத்தில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்துவிட்டன. ஈழப் போராட்டத்தில் 2009 பெரும் ஊழி நடந்ததொரு காலம்.  தொடர்ந்தும் ஈழ நிலத்தில் வாழ்ந்து கொண்டு போரையும் அதன் துயரத்தையும் எதிர்கொள்ளும் கவிஞர்கள் இந்தக் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள்.

இக்கவிதைகளுக்கு இடையில் வேவ்வேறான வாழ்வுச் சூழலும் தவிப்பும் அனுபவங்களும் இருக்கின்றன. எல்லாக் கவிஞர்களிடத்திலும் வாழ்க்கை பற்றிய ஏக்கமும் காதலும் பெரும் எதிர்பார்ப்புக்களாய் இருக்கின்றன. போரையும் காதலையும் வௌ;வேறு கோணங்களில் இந்தக் கவிஞர்கள் பார்க்கிறார்கள்.

இத்தொகுப்பில் ஈழத்தின் கிழச்கைச் சேர்ந்த அனார், அலறி மற்றும் வடமேல் மகாணத்தைச் சேர்ந்த பஹீமஜஹான் ஈழத்தின் வடக்கில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சித்தாந்தன், துவாரகன், வன்னியில் கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் முதலியோரின் கவிதைகள் இடம்பெறுகின்றன.

தானா. விஷ்ணுவும் பொன். காந்தனும் முள்ளிவாய்க்கால் போர்த்துயரத்தை இறுதிவரை அனுபவித்து மீண்டவர்கள். இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை இவர்கள் மிக முக்கியமான சாட்சிகள். இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்கள் ஈழப் போராட்டத்திலும் ஈழ மக்களின் வாழ்க்கையின் இன்றைய கால கட்டத்தில் பல்வேறு நகர்வுகளுடன் தொடர்புடையவர்கள். இந்தக் கவிஞர்கள் தொண்ணூறுகளிலிருந்து இன்று வரை எழுதிக் கொண்டிருப்பவர்கள்.

ஈழப்போரட்டம் மிகப் பெரிய எழுச்சியையும் வீழச்சியையும் இந்த இருபது ஆண்டுகளில் கண்டிருக்கிறது. இந்த எழுச்சியோடும் வீழச்சியோடும் இந்தத் கவிஞர்கள் பயணித்திருக்கிறார்கள். அதனுடன் நெருங்கியிருந்திருக்கிறார்கள். அழிவின் விளிம்புவரை பயணித்திருக்கிறார்கள். எல்லாவிதமான பார்வைகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் இப்போராட்டத்தை எதிர்நோக்குபவர்கள். இதற்காய் பங்களித்திருக்கிறார்கள்.

அனார் ஈழப்பெண் கவிதைகளில் நவீன முகமாய் முக்கியம் பெறுபவர். பெண்ணுடல் பெண்மொழி என்று தனித்துவமிக்க திசையில் அவரது கவிதைகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. பஹீமாஜான் அரசியல் சர்ரந்த பார்வையும் புரட்சித்தனமும் கொண்ட கவிஞர்.

ஈழத்து கவிதைகளில் அவர் தனக்கான தனியிடத்தை உருவாக்கியிருக்கிறார். நம்பிக்கையையும் வலிமையையும் இவரது கவிதைகள் தருகின்றன.

துவாரகனும் சித்தாந்தனும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணம் மூடுண்டு இராணுவ வலயமாகிய பொழுது இவர்களது கவிதைகள் அந்த வாழ்க்கையை அச்சமும் இருளுமாக பதிவு செய்தது. வார்த்தைகள் தடை செய்யப்பட்ட காலத்தில் குரல்கள் முறிக்கப்பட்ட காலத்தில் இவர்களின் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

அச்சம் மிகுந்த வாழ்வின் குரூரத்தை சித்தாந்தன் சித்திரித்திருக்கிறார். அதே வாழ்வை துவாரகன் கேலி செய்கிறார். இந்த இரண்டு அணுகுமுறைகளும் இக்கவிஞர்களின் கால கட்ட அரசியலின் எதிர்வினையாகவும் மெனளமாகவும் கேலியாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

கிழக்கு மகாணத்தின் மண்வாசனையையும் இயற்கையையும் யுத்தம் உருவாக்கிய பயரங்கர சூழலையையும் பற்றி அலறி எழுதுகிறார். இத்தலைமுறையில் அலறி முக்கியமானவர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த நான் வன்னியில் போர்ச் சூழலிலும் பின்னர் யாழ்ப்பாண இராணுவ பிரதேசத்திலம் வாழ்ந்த பொழுது இந்தக் கவிதைகளை எழுதியிருந்தேன். யுத்தம், வாழ்வு, கொலை, இரத்தம், அச்சம் முதலிய சூழலில் நான் வாழ்ந்திருந்த பொழுது அந்த வாழ்க்கையை இக்கவிதைகளில் எழுதினேன்.

முள்ளிவாய்க்கால் என்ற மரண நிலத்தையும் நந்திக்கடல் என்ற மரணக் கடலையும் ஈழத் தமிழினம் மறந்துவிட இயலாது. அவை ஈழத்தின் அரசியல் குறியீடுகள். மனசாட்சியுள்ள எந்த மனிதர்களும் மறுத்துவிட முடியாது. கொல்லப்பட்ட மக்களுக்காக வாழும் விடுதலையை வாழும் கனவை அவாவிக் கொண்டிருக்கிறோம். மரணத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை மீள கட்டி எழுப்ப வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

வாழ்வது என்பது எங்களின் மாபெரும் கனவு. வாழ்வதற்காகவே இத்தனை துயரங்களை கடந்தோம். இத்தனை துயரங்களைச் சுமந்தோம். இப்பெரும் துயரினதும் மனிதப்படுகொலையினதும் பின்னர் மரணத்தில் துளிர்க்கும் கனவாக ஒன்றாய் வாழ்தலுக்கான குரலாய் ஈழத்தின் தமிழ் பேசும் சமூகத்திடமிருந்து இந்தக் கவிதைகளை ஒன்றாய் தருகிறோம் என்று தீபச்செல்வன் குறிப்பிட்டார்.

நான் இரத்தமும் சதையுமாக ஈழ ஆதரவு இயக்கங்களில் வளர்ந்தவன் பதிப்பாளர் செந்தில்நாதன் இரத்தமும் சதையுமாக ஈழ ஆதரவு இயக்கங்களில் வளர்ந்தவன் நான் என்று மரணத்தில் துளிர்க்கும் கனவு புத்தகத்தை பதிப்பித்த ஆழி பதிப்பகத்தைச் சேர்ந்த பதிப்பாளர் செந்தில்நாதன் தெரிவித்தார். ஆழி பதிப்பகம் ஈழம் தொடர்பாக பல நூல்களை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்: தனிப்பட்ட முறையிலும் இதில் எனக்கு பொறுப்பிருப்பதாக நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் மிகச்சிறிய வயதிலிருந்தே ரத்தமும் சதையுமாக ஈழ ஆதரவு இயக்கங்களில் வளர்ந்தவன் நான். விடுதலைப் புலி ஆதரவு மாணவர் செயல்பாடுகள் மூலம் ஒரு காலத்தில் எனது வாழ்க்கையே திசைமாறிப்போனது. ஆனால் அதுதான் நான் இன்று விரும்பும் வாழ்க்கையின் அடித்தளமாக இருந்துவருகிறது.

ஈழ மக்கள் விடுதலையின் மீது நூறு சதவீத அக்கறை கொண்டது ஆழி. இது முள்ளிவாய்க்கால் பெரும்சோகத்துக்குப் பின் ஈழம் தொடர்பான ஐந்து நூல்களை வெளியிட்டது.

யோ.திருவள்ளுவரின் ஈழம் - இனப்படுகொலைக்குப் பின் என்கிற நூல் மிகவும் பரவலாக படிக்கப்பட்டது. கவிதைகள் எனில்,. கவிஞர் குட்டிரேவதி தொகுத்த முள்ளிவாய்க்காலுக்குப் பின் என்கிற தொகுப்பு சுமார் 60 ஈழக்கவிஞர்களின் கவிதைகளைக் கொண்டிருந்தது. கவிஞர்கள் தமிழ்நதியின் தொகுப்பு ஒன்றும் வா.ஐ.ச. ஜெயபாலனின் தொகுப்பு ஒன்றும் வெளியாயின. இப்போது இதே நிலையில் தீபச்செல்வன் தொகுத்திருக்கும் எட்டு ஈழக் கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு. முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய சுமார் 300-400 கவிதைகள் மொத்தமாக இவற்றில் இடம்பெற்றிருக்கின்றன என்பது வரலாற்றின் இலக்கியப் பதிவாக முக்கியத்துவம் பெறுகிறது. இதில் பங்கு பெற்ற அனைத்து கவிதை உள்ளங்களுக்கும் ஆழி நன்றியை பகிர்ந்துகொள்கிறது.

ஈழப் படைப்புகளை தொடர்ந்து வெளியிடுவதில் ஆழி முனைப்பாக இருக்கும். இந்தக் கவிதைகளை வெறும் பதிப்பாளனாக நான் வெளியிடவில்லை. ஈழ மக்களின் விடுதலைக்காக தமிழ் நாட்டில் 80களின் இறுதியில் ஓர் அணிற்பிள்ளையைப் போல எனது பங்களிப்பைச் செய்திருக்கிறேன். வீடு வீடாக கல்லூரி கல்லூரியாக ஈழ ஆதரவு அறிக்கைகளை விநியோகித்திருக்கிறேன். அந்த நிகழ்வுகளின், நினைவுகளின் தொடர்ச்சியாகவே இந்த நூல்களை வெளியிடுவதையும் பார்க்கிறேன் என்றார் ஆழி பதிப்பகத்தின் பதிப்பாளர் செந்தில்நாதன்.

அனுப்பியவர்: சு.குணேஸ்வரன்   This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 15 January 2012 18:10