முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.'நிறங்களின் மொழி' ,'நிறங்களின் உலகம்' என்ற புதினம் இரு ஆளுமைகளின் இரண்டு படைப்புகள் அடங்கியது. இதனை, ஆனந்த விகடன் ஒரு தொகுப்பினுள் முன் பாதி, பின் பாதியாக ஓவியங்களுடன் வெளியிட்டுள்ளது. நிறங்களால் மொழியையும் உலகத்தையும் படைத்துள்ள படைப்பாளர்களின் ஓவியங்கள் அட்டையில் இடம் பெற்றுள்ளன.

மனோகர்தேவதாஸ் ஓவியம் வரைவதில் வல்லவர். பார்வை இழந்த நிலையிலும் இவரது தூரிகை மிக நேர்த்தியாக வண்ணங்களைக் காட்சிப்படுத்துகிறது. வண்ணங்களை வடிவங்களாக்கி தனது நினைவு மண்டலத்திற்குள் வசப்படுத்தியுள்ள இவரது ஓவியங்கள் அத்தனையும் அருமை.

பார்வை இருந்த போது தான் கண்ட இடங்கள் பழமையான, மதுரை ஆட்சியர் அலுவலகம், மாநகர வீதி, உயர்ந்த மாடங்கள், மயில், மயிலிறகு, வண்ணத்துப் பூச்சிகள், மல்லிகைப் பூக்கள், மாடுகள், நாய், கழுதை, இயற்கைக்காட்சிகள் எனப் பல்வேறு பரிமாணங்களில் பார்வையற்றபோதும் இவரது தூரிகையின் 'நிறங்களின் மொழி’யால் நம்மை வசப்படுத்துகின்றன.

'நிறங்களின் உலகம்', தேனி சீருடையானுடையது. இவர் தனது நிறங்கள் அற்ற உலகின் நினைவுகளைப் புதினமாக்கியுள்ளார்.

பாண்டி இரண்டாம் வகுப்பு படிக்கும் போது கண் பார்வை இழக்கிறான். குடும்ப வறுமை காரணமாக கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலவில்லை. படிப்பில் ஆர்வம் உள்ள பாண்டி, மாமாவின் உதவியோடு சென்னையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து படிக்கிறான். இப் பள்ளியில் படிக்கும் போது பாண்டிக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஏராளம், அங்குப் பலதரப்பட்ட நபர்களைச் சந்திக்கிறான். ப்ரெயிலில் நிறைய வாசிக்கிறான். படிப்பிலும் முதல் மாணவனாக விளங்குகிறான். பள்ளியில் படிக்கும் போது நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இம்மாணவர்கள் ஈடுபடுவது வேடிக்கையானது.

பள்ளிப் படிப்பை முடித்து பாண்டி, தேனி வந்த பிறகு இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பார்வை கிடைக்கிறது .
பள்ளிச்சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய செல்கிறான். பார்வையற்றவர் பிரிவில் பதிவதில் சிக்கல் எழுகிறது. பாண்டி தனக்கு எந்த வேலையும் வேண்டாம் என்று முடிவு செய்து கடலை விற்கச்செல்கிறான். பின்னர் தேனி பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்து பிழைப்பு நடத்துகிறான். பாண்டி துன்பம் வரும் போது துவளவில்லை. ஏதிராத்துப் போராடி வெற்றி பெற்றுள்ளான்.

தேனி சீருடையான்வாழ்க்கை வரலாற்றுப் புதினம் நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாகும். மனோகர் தேவதாஸ் பார்வை இருந்து ஒளி இழந்தவர். தேனி சீருடையான் பார்வை இழந்து ஒளி பெற்றவர்.

வாழ்க்கையில் அனைத்தும் இருந்தும் நாம் அதைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை. ஏதாவது ஒன்றை இழந்த பிறகு இழந்ததை எண்ணிப் பெரிதும் வருந்துவோம். கிடைத்தற்கு அரிய பொருளை நாம் பெற்றவுடன் கிடைக்கும் மகிழ்ச்சி வார்த்தைகளில் வடிக்க இயலாது. இப்படி இரு நிகழ்வையும் இப்புதினத்தில் நாம் பார்க்கிறோம்.

இருவரும் தான் பெற்ற இழந்த இன்ப துன்பங்களைப் படைப்புகளில் வெளிப்படுத்தியிருப்பது வரவேற்பிற்குரியது. இவைகளை ஒருசேர படிக்க கிடைத்திருப்பது வெகு சிறப்பு. இருவரும் வாழ்க்கையில் பெரும் துயரங்களைச் சந்தித்த போதும் நம்பிக்கை இழக்கவில்லை. இருவரையும் ஒரு சேர இணைத்த ஆனந்த விகடன் பிரசுரம் பாராட்டிற்குரியது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.