செப்டெம்பர் பதினொராம் திகதி மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரையிலான காலப்பொழுதில் ‘குவியம்’ அறிமுக விழாவை இலண்டன் ஈலிங் அம்மன் கோவிலின் அரங்கில் நடாத்தி வைத்தனர். புரட்சிக் கவிஞன் பாரதியார் பிறந்ததினமாகிய அன்று ‘குவியம்’ என்றொரு இலக்கியம் சார்ந்த அமைப்பை எழுத்தாளரும் கவிஞருமான நிலா துவங்கியுள்ளார்.

அந்த விழாவை குவைத்திலிருந்து வந்திருந்த எழுத்தாளரும் கவிஞருமாகிய திரு வித்தியாசாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்து வைத்தமை மகுடமாக அமைந்தது. திருமதி யமுனா தருமேந்திரனின் தொகுத்து வழங்கலில் அமைந்த விழா மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

அக வணக்கத்தைத் தொடர்ந்து விழாவின் ஒருங்கிணைப்பாளர் நிலா குவியத்தின் செயற்பாடுகள் பற்றி பேசுகையில் மனிதர்களிடையே வாசிப்புப்பழக்கம் அதிகரிக்க வேண்டியது இன்றியமையாதது என்றும் அந்தப் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மாதாமாதமோ இரண்டு மாதத்துக்கு ஒருமுறையோ சந்திப்புகளை ஏற்படுத்தி பலரையும் ஒருங்கிணைப்புக்குள்ளாக்கி குவியம் செயற்படும் என்றும் இந்த சந்திப்புகளில் வாசிப்புப் பழக்கமுள்ளவர்கள் தாங்கள் வாசிக்கும் நூல்களை அறிமுகப்படுத்தலாம் எனவும் அதன் உட்பொருளை சுவாரசியமாகப் பகிரலாம் எனவும் இப்படியாக இலக்கிய சந்திப்புகள் பலருக்கும் மனமகிழ்வைத் தரும் வாய்ப்புகள் உண்டெனவும் அது மட்டுமல்ல முடிந்தால் வருடாவருடம் பாரிய அளவிலான கலை சார்ந்த மாலையை உருவாக்க ஏதுவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

முக்கியமாக இளஞ்சந்ததியினர் தமக்கு தெரிந்ததை மற்றவர்க்குப் பரிமாறுவதால் அவர்கள் தங்கள் ஆற்றலை வளர்ப்பதோடு மற்றவர்களின் ஆற்றலையும் வளர்க்க முடியும் என்று உரையாற்றினார். அவரது உரையைத் தொடர்ந்து   உரையாற்றிய திரு வித்யாசாகர் குவியம் அமைப்புக்குத் தன் வாழ்த்தை வழங்கியதோடு ஒரு கதையைக் கூறி குவியத்துவக்க விழாவைச் சிறப்பித்தார்.

பேராசிரியர் மு நித்தியானந்தன் தன் வாழ்த்துரையில் இன்னும் வாசிப்புப்பழக்கம் இலத்திரனியல் வளர்ச்சியில் பேணப்பட்டே வருகின்றது என்பதைக் குறிப்பிட்டு தன் வாழ்த்தையும் தெரிவித்தார். ஈலிங் வாசகர் வட்டத்தினர் சார்பாகத் திரு தருமேந்திரன் வாழ்த்துரையை வழங்க, நன்றியுரையுடன் இனிதே விழா நிறைவுக்கு வந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.