ஒரு தகாப்சத்தை கடந்து.. முத்துக்குமார் பற்றிய நினைவலைகள்..

Wednesday, 22 January 2020 12:19 - ராஜி பட்டர்சன் - நிகழ்வுகள்
Print

தியாகி முத்துக்குமார்முத்துக்குமார். 1982-ம் ஆண்டு நவம்பர் 19  அன்று   தூத்துக்குடியில் பிறந்த இவன் தன் இனத்தை உயிராய் நேசித்த தன்மான தமிழன்.  தமிழகத்தில் யாரும் இந்த தியாகியை மறந்திருக்க முடியாது.  தமிழ் ஈழத்தில் நடந்த கொடூர யுத்தத்தில்  குழந்தைகளும் பெண்களும்  உட்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் ஈவு இரக்கமின்றி அநியாயமாக கொல்லப்பட்டதை  எதிர்த்து எந்த அரசியல் வாதியும் குரல் கொடுக்க முன் வராத நிலையில் இந்த இளம் எழுத்தான்   ஜனவரி மாதம் 29-ம் திகதி 2009 அன்று  தன்மீது பெட்ரோலை ஊற்றி தன்னையே ஆகுதியாக்கி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தான்.   தான் எதற்காக  தீக்குளிக்க முடிவு செய்தான்  என்பதை கடிதம் ஒன்றில் பதிவு செய்து விட்டு தன் உடலை வைத்து  போராடி இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி,  தனது உடலை ஆட்சியாளர்களோ காவல்துறையோ கைப்பற்றி அடக்கம் செய்ய விடாமல் தனது உடலை ஒரு துரும்புச் சீட்டாக வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டு திரிந்து மாணவர்கள் இளையோர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராடுமாறு கூறி, அப்போராட்டத்தை தொடருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தான் அந்த மாவீரன். 

ராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக காட்டி இந்தியாவே பழிவாங்கும் நோக்கில் ஈழத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது என்று தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தான் இந்த உணர்வாளன்.   அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்ட கல்லூரி மாணவர்களோடு அனைத்து மாணவர்களும்  இணைந்து  கொண்டு ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்டு, அகிம்சை வழியில்  போராட வேண்டும் என்ற வேண்டுகோளுடன்  தீயில் கருகினான்.     தமிழ் நாட்டில் வாழும் பிற இனத்தவரின் ஆதரவையும் சர்வதேச சமுகத்தின் கவனத்தையும் இறைஞ்சி, பதினான்கு கோரிக்கைகளை முன்வைத்து தீயில் வெந்து தீய்ந்தான்.  அம்மாவீரனின் வேண்டுகோளை நிறைவேற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற  அதேவேளை, கொந்தளித்த மாணவர்களை ஒடுக்கும் முயற்சியை அன்றைய தமிழக அரசு வெற்றிகரமாக செய்ததை மறந்து விட்டிருக்க முடியாது. கொஞ்சம் கூட மனச்சாட்சியின்றி எல்லாமே மறைக்கப்பட்டது , மறுக்கப் பட்டது. 

நான் இவ்வாறான தற்கொலை மரணங்களை ஆதரிப்பதில்லை என்றாலும், அடிக்கடி இம்மாவீரன் மனதில் வந்து போவது என்னவோ உண்மைதான். பலவேளைகளில் இம்மாவீரனின் தியாகம் வீணாகி விட்டதோ எண்ணத் தோன்றினாலும், வீழ்ந்த விதை விருட்சமாகும் என்பது பொய்த்து போகாது  என்ற நம்பிக்கை விடியலை நோக்கி காத்து நிற்க வைக்கிறது. 

ஒரு இனத்தின் விடுதலை என்பது தனி நாடு என்பதை கடந்து அடிமைத்தனங்கள்,  மூட நம்பிக்கைகளில் இருந்து பெறும்  விடுதலையையும் குறிக்கிறது. இந்த நூற்றாண்டிலும் மேலோங்கி இருக்கும்  சாதி, மத   வெறி தீண்டாமையில் இருந்து எப்படி விடுதலையடைய போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் நாம், தெளிந்த புத்தியுள்ள, கல்வி கற்ற  ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டிய கடமை எம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதையும்  மறந்து விடலாகாது. 
எங்கே எம்மை தொலைத்துள்ளோமோ அங்கேயே எம்மை முதலில் தேட வேண்டும்.  எம் ஒவ்வொருவருக்குள்ளும் மாற்றத்தை தேடுவோம். எப்போதுமே மற்றவரை பார்த்து குற்றம் கண்டு பிடிப்பதை நிறுத்தி விட்டு, முன்னுதாரணமாக நாமே செயற்படுவோம்.  எம்செயல்களால் மற்றவர் கவரப்படும் போது நிச்சயம் அங்கு ஒரு மாற்றம் வரும்.     பலர் நம்மோடு கைகொடுப்பார்கள்

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்.  இளைஞர்களுக்குள் ஏற்படுத்தப்படும் எழுச்சி அக்கினி சுவாலையாய் பரவி பற்றியெறியும் தன்மை வாய்ந்தது.  ஆகவே போதை பொருளுக்கும், சினிமாவிற்கும் அடிமைப்பட்ட  சமூகத்தை தகர்த்து, நல்லறிவும் தெளிந்த புத்தியும் உள்ள தலைவர்கள் உருவாக வேண்டும்.

இந்த தமிழ் நாட்டு மண்ணிலே விதையாய் விழுந்த தியாகி முத்துக்குமார் மடியவில்லை.  ஒருநாள் நிச்சயமாக, தன்னையே தீப்பிழம்பாக்கி   எல்லோர் மனமும் உருக உயிரை அச்சமின்றி மாய்த்த அந்த இடத்தில் இருந்து அந்த விதை முளைத்து கொடியாய் பற்றி படரும் காலம் வரும்.  அம்மாவீரனின் கனவு நனவாகும். 

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 22 January 2020 12:22